மாற்றுத்திறனாளிகளின் திறமைகளின் அடிப்படையில் தொழில் வாய்ப்பில் முன்னுரிமை | தினகரன் வாரமஞ்சரி

மாற்றுத்திறனாளிகளின் திறமைகளின் அடிப்படையில் தொழில் வாய்ப்பில் முன்னுரிமை

மாற்றுத் திறனாளிகள் குறித்து பத்திரிகையில் அறிக்கையிடல் தொடர்பில் ஊடகவிலாளர்களுக்கான செயலமர்வொன்றை நீலன் திருச்செல்வம் நிதியம் அண்மையில் கொழும்பிலுள்ள ஜே. ஆர். ஜயவர்தன மண்டபத்தில் நடத்தியது. 

மாற்றுத் திறனாளிகள் சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் இதன்போது ஆராயப்பட்டதுடன், அதனை பத்திரிகைகளில் அறிக்கையிடும் முறை பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது. கடந்த காலங்களில் மிகவும் குறைந்தளவு செய்திகளே வெளிவந்துள்ளமை குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது. 

இது தொடர்பில் திலின சுரத் டி மெல், ரிவாஸ் மொஹமட், எரந்த பெர்னாண்டோ ஆகியோர் மேற்கொண்ட  ஆய்வறிக்ைகயும்   இச்செயலமர்வின் போது கவனத்தில் கொள்ளப்பட்டது.  

ஆய்வுக் குழுவின் பிரதானி சுரத் ​ டி மெல் செயலமர்வை நடத்தினார். சி.பி.எம். அமைப்பின் இலங்கைக்கான பிரதானி வாணி மற்றும் ஆய்வுக்குழுவில் அங்கம் வகித்த எரந்த பெர்னாண்டோ ஆகியோர் மாற்றுத் திறனாளிகள் தொடர்பில் அச்சு ஊடகங்களின் வகிபாகம் பற்றி விரிவுரை நடத்தினர்.  

இலங்கையில் 1.6மில்லியன் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இதேவேளை உலக சனத்தொகையில் 15சதவீதத்தினர் மாற்றுத் திறனாளிகளாவர். எனினும், அவர்களின் தேவைகள் உரிய முறையில் பூர்த்தி செய்யப்படுவதில்லை என எரந்த பெர்னாண்டோ தெரிவித்தார். 

மாற்றுத் திறனாளிகளின் நலனில் அக்கறை காட்டுவதற்காக சர்வதேச சமவாயம் உள்ளது. அதில் 50க்கும் மேற்பட்ட விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை அமுல்படுத்துவதற்காக 177நாடுகள் உடன்பட்டுள்ளன. எனினும் அந்த விடயங்கள் உரிய வகையில் அமுல்படுத்தப்படுவதில்லை. இதனால், மாற்றுத் திறனாளிகள் அன்றாட வாழ்க்ைகயில் பல்வேறு நெருக்கடிகளைச் சந்திப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.​ 

அங்கு உரையாற்றிய சுரத் குறிப்பிடுகையில், 2011ஆம் ஆண்டின் உலக சுகாதார நிலையத்தின் கணக்கெடுப்பின்படி ஒரு பில்லியன் மாற்றுத் திறனாளிகள் காணப்படுகின்றனர். இலங்கையின் 2012ஆம் ஆண்டின் அறிக்கையின்படி 1.6மில்லியன் மாற்றுத் திறனாளிகள் வாழ்கின்றனர். இவர்களுக்கென்று சட்டங்கள் இருந்தாலும் செயற்படுத்தும் போது ஏற்படும் தடைகளே அதிகமாக காணப்படுகின்றன. அத்துடன், பத்திரிகைகளில் அறிக்கையிடும்போது, மாற்றுத் திறனாளிகளை ஓர் அனுதாபத்திற்குட்பட்டவர்களாகவே காட்டப்பட முற்படுவதைவிட்டுவிட்டு அவர்களின் திறமைகளையும், முயற்சிகளையும் வெளிக்கொணருதல் முக்கியமானது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டதுடன், அதிகமான மாற்றுத்திறனாளிகள் தொழில் வாய்ப்பின்மையினால் அதிகமாகவே பாதிக்கப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் இவர்களின் திறமையின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கும் தொழில்வாய்ப்புகளில் முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதினால் இவர்களின் தேவைகளை இவர்களே பராமரிக்கும் தன்மைக்குள் உள்வாங்கப்படுவர். இல்லாவிடின் இவர்கள் மற்றவர்களில் தங்கி வாழக்கூடிய தன்மை உருவாகும். கடந்த காலங்களில் பத்திரிகைச் செய்திகளை ஒப்பிடும்போது மாற்றுத் திறனாளிகள் குறித்து மிகவும் குறைவான செய்திகளே வெளிவந்துள்ளன. அச்செய்திகளில் பெரும்பாலும் இராணுவத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாற்றுத் திறனாளிகள் குறித்ததான செய்திகளே அறிக்கையிடச் செய்யப்பட்டுள்ளன.

போல் வில்சன்

Comments