மனோவின் சிக்ஸர்ஸும் கூட்டமைப்பின் விக்கட் டவுணும் | தினகரன் வாரமஞ்சரி

மனோவின் சிக்ஸர்ஸும் கூட்டமைப்பின் விக்கட் டவுணும்

கன்னியா வெந்நீரூற்று, முல்லைத்தீவு – நீராவியடிப் பிள்ளையார் ஆலயம், கந்தப்பளை முனியாண்டி கோயில், வெடுக்குநாறி மலை போன்ற இடங்களைப் புனிதப்பிரதேசங்களாகப் பிரகடனப்படுத்திப் பௌத்த மயமாக்க முற்படும் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறார் அமைச்சர் மனோ கணேசன். மட்டுமல்ல, இந்தமாதிரியான இடங்களைப் புனிதப்பிரதேசங்களாகப் பிரகடனப்படுத்திப் பௌத்த மயமாக்க முற்படும் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தின் நோக்கத்தையும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளார்.

இதற்கு மனோ கணேசன் எடுத்த புத்திபூர்வமான அதிரடித் தீர்மானமே காரணம். இந்த இடங்களில் மக்கள் நடத்துகின்ற போராட்டங்களை அரசு கண்டு கொள்ளவில்லை என்பதால் இதற்கு மாற்று உபாயமொன்றை மனோ வகுத்தார். ஜனாதிபதியின் வழிகாட்டலில் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களமே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்று கூறப்படுவதால் இதைக்குறித்துப் பேச வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கேட்டார் மனோ. “ஓ.. தாராளமாகப் பேசலாமே” என உடனடியாகவே ஜனாதிபதியும் நேரம் ஒதுக்கிக் கொடுத்தார்.

ஜனாதிபதியின் சம்மதம் கிடைத்தவுடன் அனைத்துத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு அழைத்தார் மனோ. கட்சி வேறுபாடுகளில்லாமல் தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஒரு முகப்பட்டு நின்று இந்தப் பிரச்சினையைக் குறித்து ஜனாதிபதியுடன் பேசுவது நல்லது. அப்படிப் பேசினால் அது வலுவானதாக இருக்கும் என்பது மனோவின் கோரிக்கை.

தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் கலந்து கொள்ளும் கூட்டம் என்பதால் அவர்களுடைய வருகைக்காக முற்பகல் 11.30க்கு ஆரம்பமாக வேண்டிய சந்திப்பு அரை மணித்தியாலம் தாமதித்து 12மணிக்கே ஆரம்பிக்கப்பட்டது. தனது வேண்டுகோளுக்காக ஜனாதிபதி தமது அறையில் அரை மணிநேரத்துக்கு மேலாகக் காத்திருந்தார் என்று சொல்கிறார் மனோ கணேசன். அப்படியிருந்தும் பலரும் சந்திப்பில் பங்கேற்கவில்லை.

மனோவின் அழைப்பை தமிழ்த்தேசியக் கூட்டமைப்புப் பொருட்படுத்தவில்லை. விஜயகலா மகேஸ்வரன், அங்கஜன் ராமநாதன், சுவாமிநாதன் போன்றவர்கள் அமைதியாகவே இருந்து விட்டனர். தம்மால் கலந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டது என வருத்தம் தெரிவித்திருக்கிறார் டக்ளஸ் தேவானந்தா. சித்தார்த்தன், சரவணபவன், சிறிதரன் போன்றவர்களும் இவ்வாறு காரணம் கூறியிருக்கின்றனர். ஆனால், அவர்கள் கூட்டமைப்பின் தலைமையை மீறிச் செல்ல முடியவில்லை என்பதே உண்மை. சிவசக்தி ஆனந்தன் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று தெரியவில்லை!

ஆனாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களான மனோகணேசன், ப.திகாம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாழேந்திரன், எம்.திலகராஜ், வேலு குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். கூடவே தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் மாண்டாவேல, இந்து சமய கலாசார திணைக்களப் பணிப்பாளர் உமா மகேஸ்வரன், அமைச்சர் மனோ கணேசனின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி கணேஷ்ராஜா ஆகியோரும் பங்கேற்றனர்.

கன்னியா வெந்நீரூற்றுப்பகுதி உள்ளிட்ட இடங்களில் நடந்து கொண்டிருக்கும் சம்வங்களைப் பற்றியும் அங்கே மக்கள் நடத்துகின்ற போராட்டங்களைப் பற்றியும் ஜனாதிபதிக்கு விளக்கினார் மனோ. இந்த மாதிரியான அணுகுமுறை தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நாட்டின் அமைதிக்கும் எதிரானவை என்பதையும் சுட்டிக்காட்டினார் அவர்.

இதனைக் குறித்து தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் மாண்டாவேலவிடம் விசாரித்தார் ஜனாதிபதி. தொடர்ந்து இது பற்றிப் பல்வேறு விடயங்களும் பேசப்பட்டன.

இறுதியில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக மனோ கணேசன் தெரிவித்தார்.

1. கன்னியாவில் புதிய பௌத்த விகாரை கட்டுமானப்பணிகளை உடன் நிறுத்துதல்

2. 32பேர் கொண்ட தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் வழிகாட்டல் ஆலோசனை சபையில் இருக்கின்ற சிங்கள பெளத்த வரலாற்றாசிரியர்கள் என்ற நிலைமையை மாற்றி, மேலதிகமாக ஐந்து தமிழ் வரலாற்றாசிரியர்கள் நியமிக்கப்படுதல். இது மேலும் விரிவுபடுத்தப்பட்டு முஸ்லிம் தரப்பிலிருந்து ஒருவரும் மலையகத்தரப்பிலிருந்து ஒருவருமாக ஏழு பேர் நியமிக்கப்படுவர்.

3. இந்த தமிழ் வரலாற்றாசிரியர்களின் பங்களிப்புட னேயே எதிர்காலத்தில் புராதன சின்னங்கள் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சர் மனோ கணேசன் அடுத்த அமைச்சரவையில் சமர்ப்பிப்பார்.

4. கன்னியா பிரதேசத்துக்குள் தமிழ் இந்துக்கள் நுழைவதைத் தடைசெய்ய தொல்பொருளாராய்ச்சி திணைக்களத்துக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது. இந்தத் திணைக்களத்தின் சிற்றூழியர்கள் சிலர் இத்தகைய அடாவடி நடவடிக்கையில் ஈடுபடுவதை திணைக்களப் பணிப்பாளர் தன் திணைக்கள மட்டத்தில் உடன் தடைசெய்ய வேண்டும்.

5. கன்னியா வெந்நீரூற்றுக் கிணறுகளைப் பாரமரிக்க, தொல்பொருளாராய்ச்சி திணைக்களத்துக்கு அதிகாரமில்லாததால் அவற்றை அந்தப் பிரதேச சபையிடம் கையளிக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட செயலாளர் புஷ்பகுமார கூறுகின்றார். இந்தநிலையில், வெந்நீரூற்றுக் கிணறுகளைப் பாரமரிப்பது யாரெனத் தீர்மானிக்க ஜனாதிபதி விரைவில் விசேட கூட்டத்தைக் கூட்டி முடிவெடுப்பார்.

6. முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் மற்றும் அங்கு விகாரை அமைந்துள்ள பகுதியில் எந்தவித புராதன சின்னங்களும் அடையாளம் காணப்படவில்லை. அங்கே புராதன சின்னங்கள் இருப்பதாக விகாரை தேரர் சொல்வது உண்மைக்குப் புறம்பானது என தொல்பொருளாராய்ச்சி திணைக்களப் பணிப்பாளர் ஏற்றுக் கொண்டார்.

7. மலையகத்தின் கந்தப்பளை – கோட்லோஜ் தோட்டத்தில் அமைந்துள்ள முனி கோவிலில் பெளத்த கொடியை அங்குள்ள விகாராதிபதி ஏற்றியது பிழையானது. பெளத்த பிக்குகள் சட்டத்தைக் கையில் எடுப்பது பிழை. இந்தப் பிக்குக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தத்தீர்மானங்கள் இனி நடைமுறைக்கு வரவேண்டும். இலங்கைச் சூழலில் அளிக்கப்படும் வாக்குறுதிகளும் எடுக்கப்படும் தீர்மானங்களும் முழு அளவில் நடைமுறைப்படுத்தப்படுவது குறைவு. அல்லது காலதாமதமாகும். அதிலும் இந்த மாதிரிச் சர்ச்சைக்குரிய – சிக்கலுக்குரிய விசயங்களின் கதை இன்னும் மோசமானது. ஆகவே இவை எந்த அளவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று நோக்க வேண்டியது அவசியம். அதோடு புதிதாகச் சேர்த்துக் கொள்ளப்படும் ஐந்து தமிழ் வரலாற்றறிஞர்களும் உறுதியாகச் செயற்படுவார்களா? என்பதும் கேள்வியே. தமது பதவிகளுக்காக இணங்கிப் போவேரே அதிகம் என்ற சூழலில் இப்படிப் போராடிப் பெறும் நியமனங்களைத் தனிப்பட்டவர்களின் லாபங்களுக்காக அனுமதிக்க முடியாதென்பதையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

இருந்தாலும் இது முதற்கட்ட வெற்றியே. இந்த முயற்சிக்காக நாம் மனோ கணேசனைப் பாராட்டி வரவேற்க வேண்டும். பேச வேண்டியதைப் பேச பேசவேண்டியவர்களோடு பேச வேண்டிய சந்தர்ப்பத்தில் பேச வேண்டும். அப்படிச் செய்யாமல் கதவைச் சாத்திக் கொண்டிருப்பது எந்த வகையிலும் தீர்வைத்தராது.

“தட்டுங்கள் திறக்கப்படும். கேளுங்கள் கிடைக்கும்” என்ற அடிப்படையில் எதைப்பற்றியும் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பதை விட, பிறர்மீது குற்றம் கண்டு பிடித்துக் குறை சொல்லிப் புலம்பிக் கொண்டிருப்பதற்குப் பதிலாக ஆக வேண்டியதைப் பார்ப்பதே நல்லது. செய்யக் கூடியதைச் செய்வதே சிறப்பு என்பது மனோ கணேசனுடைய நிலைப்பாடு. அவருடைய அரசியல் பாணியே இதுதான். துணிந்து முன்செல்வது. அதிரடியாக நடவடிக்கைகளை மேற்கொள்வது. அரசியலில் ஈடுபடத் தொடங்கிய காலத்திலிருந்தே மனோவிடம் இதை நாம் அவதானிக்கலாம்.

நெருக்கடி மிகுந்த நாட்களில் காணாமலாக்கப்பட்டோருடைய போராட்டங்கள், மனித உரிமை மீறலுக்கெதிரான செயற்பாடுகளென்ற வழிகளிலேயே தன்னுடைய அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர் மனோ. இது றிஸ்க்கான வழியே. ஆனால், இதுதான் அவரைக் குறுகிய காலத்தில் மேலுர்த்தியது. இப்பொழுதும் ஏறக்குறைய அவர் இந்த முறைமையையே கையாண்டு வருகிறார். வெற்றி கிடைக்குமா கிடைக்காதா என்று தடுமாறிக் கொண்டு நிற்பதற்குப் பதிலாக முயற்சித்துப் பார்ப்பது. எதையும் செய்து முடிக்கலாம் என்ற நம்பிக்கையோடு செயற்படுவது. எதிரி, நண்பன் என்ற வேறுபாடுகளுக்குள் தடுமாறித் தேங்கிக் கிடக்காமல் எந்தத் தேவைக்கு எந்தக் கதவைத் தட்ட வேண்டுமோ அதைத் தட்டித்திறப்பது... இதுதான் மனோவின் ஸ்ரைல். ஆனால் இது ஒரு எம்.ஜி.ஆர் விளையாட்டு என விமர்சிப்போரும் உண்டு. இருக்கலாம். இருந்தாலும் மனோவோ இதையெல்லாம் பொருட்படுத்துவதேயில்லை. தனக்குச் சரியெனப்பட்டதை, செய்ய வேண்டும் என்று தோன்றுவதைச் செய்து கொண்டு செல்கிறார்.

என்பதால்தான் அவரால் வவுணதீவுக் காவல் நிலையத் தாக்குதலோடு சம்பந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அஜந்தனின் விடுதலையைப்பற்றிப் பேச முடிந்தது. கல்முனைப் பிரதேச செயலக விடயத்துக்கு நேரில் செல்ல வேண்டியிருந்தது. திருக்கேதீஸ்வரத்தில் இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் தலையிடக் கூடியதாக இருந்தது. வடக்குக் கிழக்கு மக்களுக்கான வீட்டுத்திட்டத்தைப் பற்றிப் பேச முடிந்தது. காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் பாதிக்கப்பட்ட உறவினர்களை அழைத்துச் சென்று அரசோடு பேச வைக்கக் கூடியதாக இருந்தது. இப்படிப் பலவற்றைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இதெல்லாம் மனோ கணேசனுடைய அமைச்சின் பொறுப்புக்குரிய விடயங்கள். ஆகவே அவர் இவற்றைச் செய்துதான் ஆகவேணும்.

                   

அத்தோடு அவர் அரசாங்கத்தின் பொறுப்பு மிக்க அமைச்சர் என்ற வகையிலும் அவருக்கு இதில் பொறுப்புண்டு என்று கூறுவோருண்டு. இருக்கலாம். அப்படியென்றால், வடக்குக் கிழக்கில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் பொறுப்புண்டல்லவா! அதை அவர்கள் சரியாகச் செய்கின்றனரா? என்பதற்கான பதிலை இவர்கள் சொல்ல வேண்டும்.

கூட்டமைப்பினர் செய்திருக்க வேண்டிய பல விடயங்களை அவர்கள் செய்யாத இடத்திற்தான் அவற்றை மனோ கணேசன் செய்திருக்கிறார். செய்து கொண்டிருக்கிறார். இதனால்தான் அவர் கடந்த 16.07.2019அன்று வட்டக்கச்சியில் கலந்து கொண்ட நிகழ்வொன்றில் சிறிதரன் எம்பியைப் பார்த்து “என்னுடைய உழைப்பில் கூட்டமைப்பினர் குளிர்காயக்கூடாது” என்று மனவுழைச்சலோடு பேச வேண்டியிருந்தது.

இதனைச் சகித்துக் கொள்ள முடியாமல் “மனோ கணேசன் நாடகம் ஆடுகிறார்” என்று கூட்டமைப்பு சொல்கிறது. அப்படியாயின் அந்த நடிகருடன் சேர்ந்து தானே கூட்டமைப்பினர் கல்முனைக்கு செல்கின்றனர்? இதில் யார் உண்மையான நடிகர்? தமிழ் அரசியல் தலைமைகள் மக்களுக்கு ஒன்றை தெளிவுபடுத்த வேண்டும். நீங்கள் தமிழ் மக்களுக்கான அரசியல் செய்கிறீர்களா? அல்லது பெரும் பான்மை கட்சி தலைவர்களை சாந்தப்படுத்துகிறீர்களா? என்பதை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என முகப்பதிவர் சாம் வரதன் எழுப்பும் கேள்வியை நாம் கவனிக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் தனியாகத்தான் செய்வதற்கு முடியாது விட்டாலும் பரவாயில்லை. குறைந்தது சேர்ந்து செய்வதற்கு அழைக்கப்பட்ட இந்த விடயத்திலாவது கூட்டமைப்பு இணைந்து செயற்பட்டிருக்கலாம். அதுதான் மக்களுக்குக் கொடுக்க வேண்டிய மதிப்பும் விசுவாசமும். இதைச் செய்யாமல் விட்டு விட்டு, இந்த விடயத்தை மனோ கணேசன் வெற்றியாக்கிய பிறகு ஏற்பட்டிருக்கும் விமர்சனத்தை மறைப்பதற்காக இந்த அவசர அழைப்புக்கு உடனடியாகத் தமது பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து ஒழுங்குபடுத்த முடியவில்லை என மாவை சேனாதிராஜா தெரிவித்திருப்பது புருடாவன்றி வேறென்ன?

ஒக்டோபர் 26இல் ரணில் அரசாங்கத்துக்கு ஜனாதிபதியினால் நெருக்கடி ஏற்படுத்தப்பட்டபோது உடனடியாக அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களையும் கூட்டமைப்புத் தலைமை ஒரே இரவில் கொழும்புக்கு அழைத்து ஒருங்கிணைக்கவில்லையா? அது ரணில் அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கு என்றபடியால் செய்யக் கூடியதாக இருந்தது. இது மக்களுடைய பிரச்சினை என்பதால் அக்கறையற்று விடப்பட்டது. அவ்வளவுதான்.

இதில் ஆச்சரியமொன்றுமில்லை. இத்தகைய அணுகுமுறையையே கூட்டமைப்புத் தொடர்ந்தும் பின்பற்றப்போகிறது. சனங்களுக்கு நன்மைகளைத் தராத, தமக்கு மட்டுமே நன்மை தரக்கூடிய விடயங்களில் மட்டுமே அது அக்கறையோடிருக்கப்போகிறது. இதற்கு மேலும் ஒரு உதாரணத்தை இங்கே குறிப்பிடலாம். இதையும் மனோ கணேசனே பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறார். “முதற்கட்டமாக, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி தமிழ் பாராளுமன்ற ஒன்றியம் ஒன்றை அமைக்க வேண்டும். பின்பு அது தமிழ் பேசும் பாராளுமன்ற ஒன்றியமாக விரிவு படுத்தப்பட்ட வேண்டும் என நான் மூன்று வருடங்களுக்கு முன்னேரே, பகிரங்கமாக யோசனை கூறி இருந்தேன். இந்த ஒன்றியம் கட்சி, தேர்தல், பிரதேச பேதங்களுக்கு அப்பால் எமது பொதுவான பிரச்சினைகளை அரசாங்கம், சிங்கள கட்சிகள், பெளத்த தலைமைகள், சர்வதேச சமூகம் ஆகியவற்றின் மத்தியில் கொண்டு செல்ல வேண்டுமெனவும் கூறியிருந்தேன். மேலும் புதிய அரசியலமைப்பு என்பது நடைமுறையில் வராது. அதற்கான அரசியல் திடம் இங்கே இல்லை எனவும் இந்த அரசாங்கத்தில் இருந்துக்கொண்டே கூறியிருந்தேன். இவையெல்லாம் இன்று உண்மைகளாகி விட்டன” என மனோவின் இந்தத் திட்டம் சரியானது. அவசியமானது. உண்மையில் இதைத் தொடங்கியிருக்க வேண்டியதே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் சம்பந்தன் தலைமையும்தான். அவர்களுக்கே இந்த விடயத்தில் பொறுப்புகளும் அதிகம். மட்டுமல்ல, அரசியல் பாரம்பரியத்தின் அடிப்படையில் இதைக் குறித்த புரிதல் கூட்டமைப்பினருக்கே அதிகமாக இருக்கிறது. ஆனால் இதற்குக் கூட்டமைப்பு முயற்சிக்கவில்லை. அப்படியிருக்கும்போது கையை நீட்டி மனோ இதற்கு அழைப்பு விடுக்கின்றார் என்றால், அதற்குச் சம்மதித்து அவருடைய கையைப் பற்றிப் பிடித்திருக்க வேண்டும். கூட்டமைப்பு அதைச் செய்யவேயில்லை என்பதை மக்களாகிய நாம் கவனிக்க வேண்டும்.

இத்தகைய நிலையில்தான் “இனிமேல் வடகிழக்கின் உரிமைப் பிரச்சினைகள் தொடர்பில் நான் இனி தலையிடேன். இவை தொடர்பில் வடகிழக்கின் மக்கள் பிரதிநிதிகள் எழுத்து மூலமான கோரிக்கைகளை என்னிடம் முன் வைப்பார்கள் எனில் அவற்றை நான் பரிசீலிப்பேன்” என மனோ கணேசன் சலிப்புற்றுத் தெரிவிக்க வேண்டி வந்திருக்கிறது.

மனோ கணேசன் இப்படிச் சடுதியாக எதிர்மறையான முடிவுக்கு வருவது நல்லதல்ல. கூட்டமைப்பின் தவறுக்காக மக்களின் பிரச்சினையைக் கைவிட முடியாது. அது பரந்துபட்ட அளவிலான அரசியல் சிந்தனையை விரித்துச் செயற்படும் ஒரு தலைவருக்குப் பொருத்தமான முடிவல்ல.

இந்தச் சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பின் நழுவல்களுக்கான காரணங்களை நாம் காண வேண்டும். ஒன்று, ஜனாதிபதியிடம் பேசச் சென்றால் அது பிரதமருக்குப் பிடிக்காமல் போய்விடுமோ என்ற அச்சம். இரண்டாவது, ஜனாதிபதியுடன் எப்படிப் பேசுவது? அவர் எதிராளியாச்சே. அவர் சொல்வதை மறுத்துரைப்பவர் அல்லவா என்ற குழப்பங்கள். மூன்றாவது, பிரச்சினைகள் தீர்ந்து விட்டால் பின்னர் எதை வைத்து அரசியலை மேற்கொள்வது? என்ற சுயநலத்தின்பாற்பட்ட உள்நோக்க அரசியல். நான்காவது மனோ கணேசனின் ஏற்பாட்டில் எப்படித் தாம் இணைந்து கொள்வது என்ற தலைமைத்துவத் தடுமாற்றம். இதுபோன்ற காரணங்களினால்தான் அது தனக்குக் கிடைத்திருக்கும் மிகமிகப் பெறுமதியான நல் வாய்ப்புகளையெல்லாம் தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில்லே நாம் “இலங்கையின் தமிழ் வெகுசன அரசியலை” தெளிவான இரண்டு பண்பாட்டுக் கோடுகளால் வகுத்து வரையறை செய்ய வேண்டியுள்ளது. ஒன்று புத்திபூர்மான அரசியல். இது சாத்தியங்களின் புள்ளிகளைக் கண்டறிந்து அவற்றின் வழியே அரசியலை முன்னெடுப்பது. இந்த வழிமுறையில் குறிப்பிடத்தக்க வெற்றியை மலையகத் தலைமைகள் பெற்றிருக்கின்றன. சி.வி வேலுப்பிள்ளை, சௌமியமூர்த்தி தொண்டமான் தொடக்கம் இன்றைய மனோ கணேசன் வரையில் இதற்கு உதாரணம். நிலமற்ற, கல்வி மற்றும் பொருளாதார நிலையில் பின்னடைந்திருந்த மலையகச் சமூகத்தினை கடந்த எழுபது ஆண்டுகளில் இவர்கள் முன்னிலைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். தொடர்ந்தும் முன்னோக்கிச் செல்கிறார்கள். இன்று வலுவானதொரு அரசியற் சமூகமாக மலையகத் தரப்புப் பலமடைந்திருக்கிறது. கல்வியிலும் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருப்போராக மலைய சமூகத்தினர் உள்ளனர்.

இந்த அரசியல் முறைமைக்குள் எதிர்மறைப் பண்புகள் நிறைய உள்ளன என்பதையும் கணக்கிட்டே இதனை மதிப்பிடுகிறேன். தொண்டமான், செல்லச்சாமி, பெரியசாமி சந்திரசேகரன், மனோ கணேசன் ஆகியோருக்கு முன்னரே மலைய சமூகத்தின் அடையாளத்துக்கும் இருப்புக்குமான அடித்தளம் போடப்பட்டிருந்தது. கோ. நடேசய்யர், ஏ.அஸீஸ், எஸ்.எம். சுப்பையா, சி.வி.வேலுப்பிள்ளை, கே.ஜீ.எஸ். நாயர், பி.தேவராஜ், எஸ்.நடேசன், ஓ.ஏ.ராமையா, வீ.கே. வெள்ளையன், இராஜலிங்கம் எனப் பெரியதொரு செயற்பாட்டுத் தொடரணி இந்தத் தள நிர்மாணத்தைச் செய்தது. தொழிற் சங்கப் போராட்டங்கள், வெகுஜன அரசியற் செயற்பாடுகள் போன்றவற்றின் வழியே மிகக் கடினமான சாத்தியப் புள்ளிகளை இவர்கள் உருவாக்கினர். இந்தத் தளத்தில் நின்றுகொண்டே தொண்டமானும் சந்திரசேகரனும் இப்பொழுது மனோ கணேசன், திலகராஜ் போன்றோரும் தமது அரசியலை முன்னெடுத்துச் செல்கின்றனர்.

பேரினவாத ஒடுக்குமுறையினாலும் சிங்களப் பெரும்பான்மையினாலும் சுற்றி வளைக்கப்பட்டிருக்கும் மலையக மக்களும் அவர்களுடைய அரசியலும் எப்போதும் அபாய நெருக்கடியின் முன்னிறுத்தப்பட்டிருப்பவை. வடக்குக் கிழக்கு மக்களின் யதார்த்தம் வேறு. மலையக மக்களின் யதார்த்தம் வேறு. இந்த நிலையில் புத்திபூர்வமாகத் தம்மையும் தமது அரசியலையும் உணர்ந்ததன் விளைவே மலையகச் சமூகம் பாதுகாக்கப்பட்டது. அத்துடன் மேலுயர்த்தப்பட்டதுமாகும்.

ஏறக்குறைய முஸ்லிம் சமூகத்தின் அரசியல் சாதுரியங்களும் இவ்வாறான வழிமுறையைக் கொண்டவையே. இதில் போதாமைகள் உண்டென்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் ஒப்பீட்டளவில் இந்த வழிமுறை அந்தச் சமூகங்களின் இருப்பைப் பாதுகாத்து, முன்னேற்றத்தை எட்டுவதற்கு உதவியுள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இத்தகைய சாத்தியப்புள்ளிகளை நோக்கி அரசியலை முன்னெடுத்த வடக்குக் கிழக்குத் தமிழ் தரப்புகளும் உள்ளன. வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையைத் துணிந்து பொறுப்பேற்ற ஈ.பி.ஆர்.எல்.எவ், கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராகச் செயற்பட்ட பிள்ளையான் என்ற சந்திரகாந்தன் மற்றும் நெருக்கடிச் சூழலில் வடக்கில் செயற்பட்ட டக்ளஸ் தேவானந்தா என இந்தப்பட்டியல் உள்ளது. இவர்களுடைய அரசியலில் பல விமர்சனங்கள் உண்டு. குறைபாடுகள் உண்டு. ஆனால், இவர்கள் கண்டறிந்து செயற்பட்ட புள்ளிகளால் உருவாகிய அரசியற் பெறுமானங்களே இன்று மீந்திருப்பவை. இது கூட்டமைப்புப் போன்றவை செய்ததிலும் பார்க்க அதிகம்.

இந்தப் போக்கினை விமர்சனபூர்வமாக அணுகி மேலும் வளர்த்தெடுக்க வேண்டும். பாராளுமன்ற ஜனநாயக வழிமுறையில் பேண வேண்டிய அரசியற் தந்திரோபாயத்தையும் அறத்தையும் உள்வாங்கி, சேதங்களும் சிதைவுகளுமற்ற பாதையை மெய்யான ஜனநாயக விழுமியங்களோடு உருவாக்க வேண்டும்.

இரண்டாவது உணர்ச்சிகரமான அரசியல். இது விளைவுகளைப் பற்றிய மதிப்பீடுகளற்றது. விமர்சனங்களும் ஆய்வுமற்றது. அதாவது அறிவுக்கு எதிரானது. ஒற்றைப்படையாக இனமானத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. அந்த அடிப்படையில் தனக்கான தருக்கத்தையும் நியாயங்களையும் உற்பத்தி செய்து வைத்திருப்பது. தன்னுடைய எதிர்த்தரப்பை உணர்ச்சிகரமாகவே அணுகுவது. அடித்தால் மொட்டை. கட்டினால் குடுமி என்று சொல்வார்களே அதைப்போல ஆதரவோ எதிர்ப்போ இரண்டும் கண்மூடித்தனமாகவே இருக்கும். எதிர்ச்சக்தியையும் நட்புச் சக்தியையும் எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் குழம்பிக் கிடப்பது. இதனால் அரசியற் தந்திரோபத்தைக் கடைப்பிடித்து வெற்றிகளைப் பெற முடியாமல் காலம் முழுவதும் புலம்பிக்கொண்டேயிருப்பது. எந்தப் பிரச்சினைக்குமே தீர்வு காண முடியாமல் தவறுகளை பிறர் மேல் போட்டுவிட்டுத் தப்பித்துக் கொள்ள முற்படுவது. வளர்ச்சியோ மாற்றமோ நிகழாமல் பழைய – புளித்துப்போன வழித்தடத்திலேயே பயணிப்பது. இதனால்தான் தமிழ்ச்சமூகம் எழுபது ஆண்டுகளுக்கு முன்னிருந்த நிலையையும் விடத் தாழ்ந்து போயிருக்கிறது. இன்று வடக்குக் கிழக்குத் தமிழர்கள் உலகம் முழுவதிலும் சிதறுண்டிருக்கிறார்கள். அடுத்த நாற்பது ஆண்டுகளில் இவர்கள் அங்கே அடையாளமிழந்த சமூகத்தினராகி விடுவர். நாட்டில் உள்ளவர்கள் இதே போக்கில் போய்க்கொண்டிருந்தால் அவர்களும் அடுத்த ஐம்பது ஆண்டுகளில் மிகப் பலவீனமான சமூகமாகவே இருப்பர்.

இப்படிச் சொல்லிக் கொண்டு வரும்போதே எந்தத் தரப்புகளுக்கு அல்லது யார் யாருக்கெல்லாம் இது பொருந்தும் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும். அப்படியே தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் மற்றும் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இது பொருந்தும். இவற்றைத் தமது தலைமைச் சக்தியாகக் கொண்டிருப்பதால்தான் வடக்குக் கிழக்குத் தமிழர்கள் தமது அரசியல் முன்னெடுப்பில் ஓரடிகூட நகர முடியாமல் உள்ளனர். இன்று இலங்கைத்தீவிலேயே வெளியாரை அதிகமதிகம் எதிர்பார்த்துக் காத்துக் கிடப்போர் வடக்குக் கிழக்குத் தமிழர்கள் மட்டும்தான். அந்தளவுக்குத் தமது அரசியலில் பலவீனப்பட்டிருக்கின்றனர். அதாவது எதிர்த்தரப்பை முறியடிப்பதற்கான – தந்திரோபாயமாக வெற்றி கொள்வதற்கான எந்த வல்லமையும் இல்லாதவர்களாக வடக்குக் கிழக்குத் தமிழர்களும் அவற்றின் தலைமைகளும் உள்ளன. இவ்வாறு மிகத் தாழ்ந்து பின்னடைந்திருக்கும் நிலையிற்கூடத் தம்மை மீள் பரிசீலனை செய்யவோ, மாற்றியமைப்பதற்கோ தயாரில்லாமல்.

இதை மிகச் சரியாகச் சொன்னால் இந்த உணர்ச்சிகரமான அரசியலானது எதிரியை எப்போதும் தன்முன்னால் வைத்திருக்கவே செய்யும். எதிரி இல்லாமல் இயங்க முடியாது. இதனுடைய உளவியல் அப்படித்தான் உருவாக்கப்பட்டுள்ளது. வில்லன் - கதாநாயகன் என்ற வகையில். தியாகி – துரோகி என. வரலாற்றுக் கற்பிதங்கள் இதற்கு மேலும் துணைப்படும். இது ஒரு பழைய வாய்ப்பாட்டு அரசியல். அவ்வளவுதான்.

ஆனால், இதிலே இந்த உளவியலுக்கு ருஸிகரமாக வேண்டப்படுவது எதிர்த்தரப்பை அடித்து நொறுக்க வேண்டும் என்பதே. இதையே புலிகள் செய்தனர். புலிகள் இல்லாத சூழலில், ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்ட பிறகு, குறைந்த பட்சம் வாயினால் - வார்த்தைகளினாலாவது அடிக்க வேண்டும். இதையே கூட்டமைப்புச் செய்கிறது. கூட்டமைப்பில் கூட யார் அரசாங்கத்துக்கு அதிகமதிகம் சவால் விடுகிறார்களோ அவர்களையே இந்த மனம் விரும்புகிறது. ஆதரிக்கிறது. மாவை, சிறிதரன் போன்றோருக்குள்ள செல்வாக்கு இதன்பாற்பட்டதே.

ஆனால், இதெல்லாம் வெடிக்கவே வெடிக்காத டம்மிகளே. இதனால்தான் மலையகச் சமூகமும் முஸ்லிம் சமூகமும் தம்மை வலுப்படுத்தி முன்னேற, வடக்குக் கிழக்குத் தமிழ்ச்சமூகம் தன்னைப் பலவீனப்படுத்திச் சிதறிக்கிடக்கிறது.

ஆக மொத்தத்தில் வடக்குக் கிழக்குத் தமிழ்ச்சமூகம் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம். முக்கியமாக அறிக்கைப் போரும் அரசியல் தந்திரோபாயத்திற்குமிடையில் உள்ள வேறுபாடுகள் என்ன என்பதை.

கூடவே அரசியலில் தீர்வுகளை நோக்கிச் செல்வதற்கான வழிமுறைகள் எப்படியானவை, அதிலே மனோவின் சிக்ஸர்ஸூம் கூட்டமைப்பின் விக்கற் டவுணும் எப்படி என்பதையும் அறியலாம்.

கருணாகரன்

Comments