டொரிங்டன் தோட்ட இரட்டைச் சகோதரிகளின் மரணத்துக்கு யார் பொறுப்பு? | தினகரன் வாரமஞ்சரி

டொரிங்டன் தோட்ட இரட்டைச் சகோதரிகளின் மரணத்துக்கு யார் பொறுப்பு?

அக்கரப்பத்தனை டொரிங்டன் அலுப்புவத்தை தோட்டமே இன்று சோகமயமாக காட்சியளிக்கின்றது. காலையில் பாடசாலை சென்று மாலையில் வீடு திரும்பிக்கொண்டிருந்த இரட்டை சகோதரிகள் இடை நடுவில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளமை அக்கரப்பத்தனை டொரிங்டன் அலுப்புவத்தை தோட்டத்தை மாத்திரமல்ல முழு இலங்கையையுமே சோகத்திலும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது. கடந்த வியாழக்கிழமை 18.7.2019 மாலை முதல் மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையினால் மலையகத்தில் பெரும்பாலான பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கின. இந்நிலையில் டொரிங்டன் பாடசாலையில் தரம் 7 இல் கல்வி கற்றுவந்த இரட்டை சகோதரிகளான மதியழகன் லெட்சுமி (வயது12), மதியழகன் சங்கீதா (வயது 12) ஆகிய இரு மாணவிகளும் அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவனுமாக வழமைபோன்று பாடசாலை நிறைவடைந்து வீட்டுக்கு செல்லும் வழியில் ஒரு நீரோடை யைக் கடந்தே வீடுசெல்ல வேண்டும். ஆனால் அன்று அந்நீரோடை பெருக்கெடுத்தோடியது. மாணவிகளுடன் சென்ற மாணவன் ஒருவாறு வீதியை கடந்து அக்கரைக்கு சென்றுள்ளான். இதன்போது இரு மாணவிகளும் தங்கள் கைகளை கோர்த்தவாறு வீதியை கடக்க முற்பட்டபோது இருவரும் ஒன்றாக நீரோடைக்குள் விழுந்து நீரில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சம்பவமறிந்த பிரதேச மக்கள் மற்றும் அக்கரப்பத்தனை பொலிஸார் ஆகியோரின் கடுமையான தேடுதல்களின் பின்னர் மதியழகன் லட்சுமி அன்று மாலை 6 மணிளவில் 1 கிலோ மீற்றர் தூரத்தில் பள்ளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.  அவரது உடல் அக்கரப்பத்தனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. மதியழகன் சங்கீதாவைத் தேடும் நடவடிக்கையில் அக்கரப்பத்தனை பொலிஸார், விசேட அதிரடி படையினர் மற்றும் பொது மக்கள்  இரண்டு நாட்களாக ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் குறித்த மாணவியின் சடலம் கொத்மலை நீர்தேகத்திற்கு நீரேந்தி செல்லும் டொரிங்கடன் தோட்ட கால்வாய் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் 300 மீற்றர் தூரத்தில் மாணவியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.  

டொரிங்டன் பிரதான வீதியிலிருந்து பாலம் ஒன்றினூடாக ஆற்றை கடந்து செல்லும்போது 5 தோட்ட பகுதிகளைக் கடக்க வேண்டும். இங்கு 400 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த தோட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் ஆரம்ப காலத்திலிருந்தே பிரதான போக்குவரத்துக்கு இந்த குறுக்கு வீதியையே பயன்படுத்தி வருகின்றனர். பாடசாலை மாணவர்கள் முதல் இதர தொழில்களுக்கு செல்லும் அனைவரும் இந்த பாலத்தை கடந்தே செல்ல வேண்டும். இந்த பாலத்தில் சிறிய மழை பெய்தாலே பாலத்திற்கு மேலே தண்ணீர் நிரம்பி ஓடும். காரணம் பாலத்திற்கு அடியில் மிக குறுகிய இடைவெளி காணப்படுகின்றமையினால், தண்ணீர் அதிகமாக ஓடுவதற்கு வழி இல்லாமையினால் நீர் நிரம்பி பாலத்திற்கு மேலேயே ஓடும். இருந்தும் கடந்த புதன்கிழமை முதல் மலையகத்தில் பெய்து வரும் பலத்த மழையினால் நீர் மட்டம் அதிகரித்திருந்தது. இதற்கு அரசியல்வாதிகளை குறை கூறுவதற்கு ஒன்றுமில்லை. மக்கள் இந்த பிரச்சினையை அரசியல்வாதிகளிடமோ சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கோ இதுவரை கொண்டு செல்லாமையே இந்த உயிரிழப்புக்கு காரணம் என சிலர் கூறுகின்றனர். சரியான நேரத்தில் இதற்கான தீர்வுகளை மக்கள் பெற்றிருக்க முடியும் காலம் கடந்தமையும் ஒரு காரணமே. அரசியல்வாதிகளின் பிரதிநிதிகள் பலர் இப்பிரதேசத்தில் இருந்தாலும் அவர்கள் இந்த பிரச்சினையை அரசியல்வாதிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லாமை அவர்களின் அறியாமையை காட்டுவதாகவும் மக்கள் சிலர் குற்றம் சுமத்துகின்றனர். இங்குள்ள டொரிங்டன் பாடசாலையில் தரம் 9 வரை கல்வி நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த பாடசாலைக்கு இந்த ஐந்து தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த பிள்ளைகள் கல்வி கற்க வருவதற்கு இந்த பாலத்தையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த விடயம் தொடர்பில் தோட்ட நிர்வாகத்திற்கும் அரசியல்வாதிகளுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கும் பலமுறை இப்பிரதேச மக்கள் கொண்டுவந்துள்ளனர்.  மக்களுக்கு சேவை செய்வதற்காகவே மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் செல்லுகின்றனர். ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறும்போது முழு பொறுப்பு கூறவேண்டிய கடப்பாடு மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளுக்கே உள்ளது. பெரும்பான்மை சமூகத்தை பொறுத்தவரையில் இவ்வாறான பிரச்சினைகள் மிகவும் குறைவாகவே பதிவாகியுள்ளன. அவர்களின் அடிப்படை பிரச்சினைகள் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளினால் ஓரளவாகவே  பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மலையகத்தில் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமலே உள்ளன. உதாரணத்திற்கு தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை, பெருந்தோட்ட பகுதிகளில் குண்டும் குழியுமாகவே காட்சியளிக்கும் வீதிகள், உட்கட்டமைப்பு வசதிகள் என்பன மலையகத்தில் முழுமைபெறவில்லை. எமது மக்கள் காலம் காலமாக இவ்வாறான பிரச்சினைகளுக்கே முகம் கொடுத்து வருகின்றனர். எத்தனை அரசியல்வாதிகள் புதிது புதிதாக உதித்தாலும் மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு என்று விடிவு பிறக்குமோ தெரியவில்லை.

இவ்வாறான உயிரிழப்புகள் இனிமேலும் வேண்டாம். எமது பிள்ளைகளின் எதிர்காலங்கள் கேள்விக்குறி ஆகாமல் விடை காண முயற்சியுங்கள். மலையக மக்கள் எதிர்பார்ப்பு ஒன்றே.  இனிமேலும் இவ்வாறான மரணங்கள் வேண்டாம். நாளாந்தம் பெருந்தோட்ட தொழிலாளர்களை பயன்படுத்தி பல ஆயிரக் கணக்கில் வருமானத்தை தேடிக்கொள்ளும் பெருந்தோட்ட கம்பனிகளும் தொழிலாளர்களின் வடிகால் அமைப்பு, உட்கட்மைப்பு போன்றவற்றிற்கு கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். தொழிலாளர்களை பயன்படுத்தி கம்பனிகளை இலாபத்தில் திகழ்ச் செய்யும் தோட்ட முகாமையாளர்கள் தொழிலாளர்களின் அடிப்படை பிரச்சினைகளையும் கம்பனிகளுக்கு எடுத்து சென்று தீர்வுகாண முன்வரவேண்டும். 

மழைக்காலங்களில் தமது பிள்ளைகள் பாடசாலைக்கோ வெளி இடங்களுக்கோ செல்லும்போது பெற்றோர்கள் அவதானம் செலுத்த வேண்டும். மேலும் அவர்களுக்கு நல்ல அறிவுரைகளை கூற வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கே உண்டு. அதேபோல் பாடசாலை நிர்வாகமும் ஆசியர்களும் மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். மலைக்காலங்களில் பாடசாலைகளில் மேலதிக வகுப்புகளை நடத்துவதை தவிர்க்க வேண்டும். அதிக மழை பெய்தால் பாடசாலை நிர்வாகம் பெற்றோருக்கு அறிவித்தல் கொடுத்து பெற்றோர்கள் பாடசாலைக்கு வந்து பாதுகாப்பான முறையில் மாணவர்களை கூட்டி செல்லுவதற்கு வழி செய்ய வேண்டும். மழைக்காலங்களில் எதோ ஒரு வகையில் மலையகத்தில் உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றது. எனவே பொதுமக்கள் அனைவரும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வுகள்ஏற்படுத்தப்பட வேண்டும்.   

தலவாக்கலை பி. கேதீஸ்   

Comments