ஹஜ்ஜின் தியாகத்தை வாழ்வில் கடைப்பிடிப்போம் | தினகரன் வாரமஞ்சரி

ஹஜ்ஜின் தியாகத்தை வாழ்வில் கடைப்பிடிப்போம்

தியாகம் என்றால் தனது உள்ளத்தை எப்பிரதிபலனையும் எதிர்பாராது இறைதிருப்திக்காக மாத்திரம் அர்ப்பணிப்பதாகும். அதுஉயிரால், உடலால், உள்ளத்தால், பொருளால், சிந்தனையால், எழுத்தால், நேரத்தால் அவரவர் சக்திக்கு ஏற்ப இடம்பெறவாய்ப்புண்டு.

ஜ்ஜுப் பெருநாள் நெருங்கும் போதே   தியாகம் பற்றிப் பேசஆரம்பித்து விடுவார்கள். ஆனால் தியாகத்தின் அடிப்படையில் வளர்க்கப்பட்ட தீனுல் இஸ்லாத்தில் வாழும் நம் வாழ்நாள் பூராகவும் பல தியாகங்கள் செய்து விளைவுகளைக்காண  முன்வர வேண்டும்.

இதற்கு முன்னுதாரணமாக வாழ்ந்தவர்கள் நபிமார்கள், ஸஹாபக்கள், தாபியீன்கள், ஸலபுஸ் ஸாலிஹீன்கள் இவர்களது அயராத முயற்சியும் அர்ப்பணிப்புமே உலகெங்கும் தீன் பரவுவதற்குக் காரணமாயிற்று.

இப்பாதையில் பலநேரங்களையும் காலங்களையும் பணங்களையும் குடும்பங்களையும் விட்டுக் கொடுப்புக்களையும் தியாகம் செய்துள்ளார்கள்.

தியாகம் என்றால் தனது உள்ளத்தை எப்பிரதிபலனையும் எதிர்பாராது இறைதிருப்திக்காக மாத்திரம் அர்ப்பணிப்பதாகும். அதுஉயிரால், உடலால், உள்ளத்தால், பொருளால், சிந்தனையால், எழுத்தால், நேரத்தால் அவரவர் சக்திக்கு ஏற்ப இடம் பெறவாய்ப்புண்டு.

தியாகம் செய்வது பற்றி அல்-குர்ஆன்,அல்ஹதீஸ் குறிப்பிடுகையில்; 'உங்களில்  இருந்து தியாகிகளை (ஷுஹதாக்களை) ஆக்கிவிடுகின்றான்'   (அல்குர்ஆன்  3:140)

தன்னுயிரை அர்ப்பணிப்பதில் முன்னுதாரணமாக உங்களிலிருந்து சிலரை அல்லாஹ் தேர்ந்தெடுக்கின்றான். அந்த ஸஹாபாக்கள் சன்மார்க்கத்திற்கு உதவுவதிலும் இறையழைப்பை ஏற்றிவைப்பதிலும் தங்களைத் தியாகத்தில் ஆக்கிக் கொள்கின்றார்கள். அல்லாஹ்வுக்காக எதை இழக்க நேரிட்டாலும் தன்னைத் தியாக நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என இறைமறை ஞாபகமூட்டுகின்றது.

'தர்மம் செய்வது பொருளாதாரத்தைக் குறைப்பதில்லை, பிறரை மன்னித்தால் அல்லாஹ் கௌரவத்தை அதிகரிக்கின்றான், அவனுக்காக தன்னை ஒருவர் தாழ்த்திக் கொண்டால் அவரை உயர்வடையச் செய்கின்றான்' என அண்ணல் நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.  ஆதாரம் முஸ்லிம்.

வறுமைக்கு அஞ்சாது தான தர்மத்தில் ஈடுபடுவது உண்மையில் தியாகத்தை அடிப்படையாகக் கொண்டது. அதேபோல் பிறரை மன்னிப்பதற்கும் மனோநிலை ஏற்படவேண்டும். எதையும் எதிர்பாராது தன்னைப் பணிவுத்தன்மைக்கு ஆளாக்கும் போது அல்லாஹ்வின் உயர்வும் அந்தஸ்தும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நடந்துகொள்வது தியாகத்தின் மூலம் பலபாக்கியங்களைப்  பெறமுடிகின்றது என மேற் கூறப்பட்ட ஹதீஸ் உணர்த்துகின்றது.

துல்-ஹஜ் மாதத்தில் எமது தந்தை ஸெய்யித்னா இப்றாஹீம் (அலை) அவர்களது வரலாறுபெரிதும் சித்தரிக்கப்படுகின்றது. ஏ​ெனனில் பலசோதனைகளுக்கும் ஆளாகி தியாகம் செய்து வெற்றிகள் பல கண்டுள்ளார்கள்.

'இப்றாஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளைக் கொண்டுசோதித்தான். அவற்றைஅவர் முழுமையாக நிறைவேற்றினார்'   (அல் குர்ஆன் 2:124) 

அல்லாஹ்வின் ரிஸாலத் பணியினை நிறைவேற்றுவதில் பலதியாகங்களும் பல இழப்புக்களும், பாரிய சோதனைகளும் தன் குடும்பத்திலும், சமூகத்திலும் ஏற்பட்டதை நாம் அறிவோம்.

பாரிய நெருப்புக் கிடங்கு எவ்வளவு ஆபத்தானது என்று தெரிந்தும் அசையாத நம்பிக்கையால் அதனையும் ஏற்றுமேலும் எவ்வாறு மரணித்தவர்களை உயிர்ப்பிக்கின்றாய் என இறைவனிடம் வினவியதற்கு தள்ளாடும் வயதிலும் நான்கு பறவைகளை அறுத்து மலையில் ஏறி அதனை வைக்க வேண்டும் என்ற கட்டளையும்,மேலும் தனது மனைவியையும், பிள்ளையையும் குறைந்த உணவு, நீருடன் விவசாயம் மரம் செடிகொடி இல்லாத இடத்தில் தனிமையில் விட்டுச்சென்றதும் அத்தோடு அருமையாக மிகநீண்டநாட்களின் பின் தனக்குக் கிடைத்த வாரிசு அதுவும் ஒருநபியாக அனுப்பப்படும்; வாய்ப்பிருக்கும் நிலையில் சிறுவர் இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுத்துப் பலியிடக் கண்ட கனவும், அதனை நிறைவேற்றுவதும் காத்திரமான செயற்பாடுகளே என்பதை எம்மால் புரிய முடிகின்றது.

இவ்வாறான தியாகங்கள் எம்மால் புரியமுடியுமா? அவர்கள் நபிமார்கள், ஸஹாபாக்கள் நாம் சாதாரணமானவர்களே! என்ற கேள்வி எம்மத்தியில் எழுவதும் நியாயமானது. இதற்கான பதில்களைக் கூறுவதனால்  இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்களது உம்மத் ஏனைய உம்மத்தினரை விட அல்-குர்ஆனில் சிறப்புப் பட்டம் பெற்றுள்ளது.

அதற்கான நியாயம் யாதெனில்,  நபிமார்கள் புரிந்த அறப்பணியாகிய நல்லதைக் கொண்டு ஏவித் தீயதைத் தடுப்பதாகும். இப்பணியினை நாம் மேற்கொள்வதை அல்-குர்ஆன் சுட்டிக் காட்டுகின்றது. இதுகாலத்தின் தேவையாகும்.

நாம் ஒவ்வொருவரும் நபியின் பணியினை மேற்கொள்ள வேண்டும்.  நபிமார்கள் அனுப்பப்படாத காலத்தில் அப்பணியினை நாம் மேற்கொள்வதினால் மார்க்கம் நிலை நிற்கும். அதற்காக இப்புவி மீதில் பல தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் நிறைவேற்றித்தான் ஆக வேண்டும் என்ற உண்மைபுலனாகின்றது.

தியாகத் திருநாளில் ஆடு,மாடு,ஒட்டகங்களை அறுப்பதனால் அல்லது பல இலட்சம் ரூபாக்களை செலவு செய்து புனித ஹஜ்ஜை நிறைவேற்றுவதால் மாத்திரம் தியாகம் செய்கின்றோம் என்ற நிலைக்கு நாம் வரக்கூடாது.

வாழ்வில் பலகட்டங்களில் எதையும் அல்லாஹ்வுக்காக இழந்து அர்ப்பணிக்கவேண்டும்.

ஏ​னெனில் எமது தந்தை இப்றாஹீம் (அலை) தனது அருமைப் புதல்வரையே அல்லாஹ்வுக்காக அறுத்திடமுன்வந்துள்ளார்கள். அந்நிலைக்குநாம் செல்லாவிட்டாலும் அதன் சாயலிலேயாவது நாம் தீனைப் பாதுகாக்க, சமூகநலன்காக்க, பெண்களின், சிறுவர்களின் உரிமைகளைப் பேண, எமது கலாசாரத்தையும், நாகரிகத்தையும் நிலை நிற்கப் பாடுபடுவது மிகமுக்கியமான தியாகமாகும்.

உலமாக்கள் மத்தியில் பலவிட்டுக் கொடுப்புக்களும்,உடன்பாடுகளும் சமுதாய ஒற்றுமையின் நலனுக்காக,நாட்டின் நலவுக்காக புரிந்துணர்வு, சகிப்புத் தன்மைகளோடு நடந்துகொள்வதும் தியாகத்தின் உச்சகட்டமேயாகும்.

இஸ்லாத்தைமுன்வைத்து ஒற்றுமைப்படவேண்டுமே தவிர இஸ்லாத்தைக் காட்டி பிரிந்து செயலாற்றலாகாது. அது தியாகமுமன்று.

நபி (ஸல்) அவர்கள் குறைஷியர் மத்தியிலும் ஸஹாபாக்கள் மத்தியிலும் பலவிட்டுக் கொடுப்புக்களையும் தியாகங்களையும்,சகிப்புத் தன்மையையும் கட்டிஎழுப்பியதால் பலவெற்றிகள் சமூகத்தின் மத்தியில் வெளிவந்தன. ஸஹாபாக்கள் முரண்படும் போது இதற்காகவா? நான் அனுப்பப்பட்டுள்ளேன்  என வெட்கமாக நபியவர்கள் கேட்டுக் கண்டித்துக் கொள்வார்கள்.

மௌலவி
ஆர்.ஏ.ஷாஜஹான்...
(பலாஹி)  பீ.ஏ.
காத்தான்குடி

Comments