பெருந்தோட்டங்களில் வெட்டி விற்பனையாகும் மரங்கள் | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தோட்டங்களில் வெட்டி விற்பனையாகும் மரங்கள்

தொழிலாளர்களுக்கான 10சதவீதத்தை தொழிற்சங்கங்கள் கேட்டுப்பெற வேண்டும்!

பெருந்தோட்டங்களில் காணப்படும் தரிசு நிலங்களில் மீள் காடு வளர்ப்புச் செய்வதற்கான திட்டம் ஒன்று அரசின் கவனத்தில் இருப்பதாக தெரியவருகின்றது. ஒரு காலத்தில் அடர்ந்த காடுகளாக காணப்பட்ட பிரதேசங்கள் இந்திய வம்சாவளித் தமிழர்களின் உழைப்பினால் விளை நிலங்களாக விலாசம் பெற்றன. காடுகளை அழித்து கோப்பி, தேயிலை, கறுவா, இறப்பர் தென்னை என்று  அம்மண்ணை பொருளாதார தேட்டமாக மாற்றிய பெருமை அவர்களுக்கே  உரியது.  

காடுகளை மையமாகக் கொண்டே மலைச்சார்ந்த பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை ஆரம்பமானது. இன்றும்கூட காடுகள் சுற்றுலாப் பயணிகளைக் கவரவே செய்கின்றன. குறிப்பாக பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைப் பிரதேசங்களும் அதை அண்டியுள்ள காடுகளும் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதை மறந்துவிட முடியாது. ஆனால் காடுகளை  துவம்சம் செய்து மனித வாழ்வாதாரத்துக்கு வளம் சேர்க்க வழிவகுத்த ஆங்கிலேயர் தோட்டங்கள் தோறும் மரங்களை வளர்க்கத் தவறவில்லை.  

எமக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. வெள்ளைக்கார கம்பனி நிர்வாக காலத்தில் தோட்டத்திலிருந்த சிறிய சவுக்கு மரத்தில் ஒரு சின்ன வாதை (கிளை) வெட்டிய தொழிலாளி ஒருவருக்கு ஒருவாரம் வேலை நீக்கம் செய்தது அன்றைய நிர்வாகம்.  இதேபோல் தேயிலைச் செடியைக் கவ்வாத்துச் செய்யும்போது செடியின் அடிப்பகுதியில் காயம் ஏற்படுத்திய காரணத்துக்காக (கவனயீனத்துக்காக) ஒரு தொழிலாளிக்கு மீண்டும் கவ்வாத்து வெட்டும் தொழிலை வழங்கவும் மறுத்தது. இது அடக்குமுறை போல பட்டாலும் ஆங்கிலேய கம்பனிகள் மரங்களையும் தேயிலைச் செடிகளையும் பாதுகாப்பதில் காட்டிய கரிசனையை இங்கே கவனிக்க வேண்டும்.   

ஆனால் இன்று என்ன நடக்கின்றது? 

காடுகளைப் பாதுகாக்க நாட்டில் கனதியான சட்டங்கள் இருக்கின்றன. காடுகளை அழிப்போருக்கு தண்டனை வழங்க இடமும் இருக்கின்றது. வனப்பகுதிகளில் இதற்கான எச்சரிக்கை அறிவிப்புகளும் வைக்கப்பட்டுள்ன. ஆனால் எந்தவொரு பிரஜையும் இதையெல்லாம் கண்டுகொள்வதே கிடையாது. அபிவிருத்தி என்ற பெயரில் அரசாங்கமே வனங்களை அழிப்பதுண்டு. கள்ளத்தனமாக காட்டு மரங்கள் வெட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. விறகுக்காக, வீடுகள் அமைப்பதற்காக, தரிக்கப்படுகின்றன. போதாக்குறைக்கு       தீ வைத்து பொசுக்கப்படுகின்றன. இதனால் இந்நாட்டின் வனவளம் குன்றி வருகின்றது. இயற்கையும் நெடிதுயர்ந்த மரங்களும் நீர் நிலைகளும் மாசற்ற வளியும் எமக்குக் கிடைத்த வரப்பிரசாதங்கள். 

தேயிலையும் இறப்பர்  தென்னையும் பிற பயிர்களும் காலநிலைக்கூடாக  தீர்மானிக்கப்படும் வர்த்தகப் பயிர்கள் என்பது ஆய்வாளர்களின் பார்வை. எனினும் இன்று இயற்கையின் நியதிகள் மீறப்படுவதும் அது சவாலுக்கு உட்படுத்தப்படுவதும் சர்வசாதாரண சங்கதிகளாகிவிட்டன. இத்தகைய நடவடிக்கைகளால் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை பெரிதும் பாதிக்கப்படுகின்றது. இங்கு முறையாக வளர்க்கப்பட்ட பயன்தரு மரங்களை வெட்டி காசாக்குவதிலேயே குறியாய் இருக்கின்றன தோட்டக் கம்பனிகள். ஆங்கிலேய கம்பனிகள் மரங்களை வளர்த்தது, காலாகாலத்தில் வெட்டிக் காசாக்குவதற்காக அல்ல. மண் பாதுகாப்புக்காகவும் மண்ணரிப்பைத் தடுப்பதற்காகவும் பயிர்ச்செய்கைக்கு உகந்ததான காலநிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்குமாகவே மரம் வளர்ப்பில் கவனம் செலுத்தப்பட்டது.  

ஆனால் அந்த நியாயங்கள் இன்று புறக்கணிக்கப்படுகின்றன. தோட்டங்களில் வளர்ந்துள்ள பாரிய மரங்கள் பச்சைப் பச்சையாய் வெட்டி விற்பனைக்காக அகற்றப்படுவதாக ஆதங்கப்படுகின்றார்கள் இயற்கையை நேசிப்பவர்கள். இதனால் தோட்டக் கம்பனிகளுக்குக் கொள்ளை இலாபம். பெருந்தோட்டங்கள் இக்கம்பனிகளுக்குக் குத்தகைக்கே வழங்கப்பட்டுள்ளன. விற்பனை செய்யப்படவில்லை. இவற்றின் உரித்துக்கள் (சொத்துக்கள்) விற்றுக் காசாக்கப்படும்போது வரும் இலாபத்தில் 10சத வீதத்தை தோட்டத் தொழிலாளரின் நலன்புரி சேவைக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்னும் விதி இருக்கின்றது. இருந்துமென்ன அப்படி நடைமுறையில் ஏதும் நடப்பதாய் இல்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு இயற்கை வளங்களைப் பேணும் கொள்கையில் பிடிப்புள்ளவராகக் காணப்படுகிறார். தமது சொந்தக் காணியில் சாதாரண ஒரு குடிமகன் ஒரு மரத்தை வெட்டுவதற்கு அலையாய் அலைந்து அரசு அனுமதியைப் பெற வேண்டியுள்ளது. ஆனால் பெருந்தோட்டங்களில் கணக்கு வழக்கின்றி மரங்களை வெட்டி ஏற்ற முடிகின்றது. 

தோட்டங்கள் தனியார் கைக்கு விடப்பட்ட 1992களில் இருந்தே இக்கைவரிசை ஆரம்பமானது. எனினும் இதுவரை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இது பற்றிக் கவலைப்படுவதாய் இல்லை. இத்தனைக்கும் அவர்கள் இந்த மரங்களின் பெறுமதி பற்றி அறியாதவர்கள் அல்ல. அவற்றின் அவசியம் பற்றி உணர்வுபூர்வமாக  உள்வாங்கிக் கொண்டவர்கள். கம்பனிகள் பெருந்தோட்டக் காணிகளை குத்தகைக்கு பெற்றபோது அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள், தோட்ட உத்தியோகத்தர்கள். விளைச்சல் தரக்கூடிய தேயிலைச் செடிகள், தரிசு நிலங்களுடன் பாரிய மரங்களும் அதில் அடங்கியிருந்ததை அவதானிகள் சுட்டிக்காட்டுகிறார்கள். தொழிலாளர்களைக் கொண்டு உற்பத்தி மூலம் இலாபம் அடைந்ததைத் தவிர அத்தொழிலாளர்கள் மீது அக்கறையேதும் காட்டியதில்லை. இக்கம்பனிகள் விளைச்சல் நிலங்களை பாதுகாக்கவோ மரங்களைப் பேணி வளர்க்கவோ கரிசனையேதும் கொண்டபாடில்லை. இதனாலேயே இத்துறை இன்று சிறுகச் சிறுக சின்னாபின்னமாகி வருகின்றது. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இங்கிருந்த இயந்திரங்கள் பலவும் கழற்றி அகற்றப்பட்டு விட்டன. இரும்புகள்,   தளபாடங்கள்   விற்கப்பட்டிருக்கின்றன. பெறுமதிவாய்ந்த பாரிய மரங்கள் வெட்டப்பட்டு நவீன கனரக வாகனங்களின் உதவியுடன் லொறிகளில் ஏற்றப்படுவது

அங்கிங்கோனாதபடி தோட்டப்பகுதி எங்கும் அடிக்கடி காணும் காட்சி. இவையெல்லாவற்றையும் யாரைக்கேட்டு வெட்டுகிறார்கள். எங்கே கொண்டு போகிறார்கள். எவ்வளவு தொகைக்கு விற்கின்றார்கள்   என்பதெல்லாம் சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம்.  

தவிர, கிடைக்கும் வருமானத்துக்கு என்ன நடக்கின்றது? முறைப்படி கிடைக்கும் பணத்தில் 10சதவீதம் தோட்டத் தொழிலாளரின் நலன்புரி சேவைகளுக்காக செலவிடப்பட வேண்டும் எனும் கொள்கை என்னானது? தோட்டத் தொழிலாளருக்கு மட்டுமன்றி கம்பனிகளின் உயர்மட்ட அதிகாரிகளைத் தவிர வேறு எவருக்குமே இது பற்றித் தெரிந்துகொள்ள வழியில்லை. ஆனால் மரவிற்பனையோ மளமளவென்று நடந்து கொண்டிருக்கின்றது. தொழிலாளர்கள் எவ்வித பயனையும் பெறமுடியாது. ஒரு பக்கச் சார்பாக கம்பனி தரப்பு மட்டும் காசைக் கையாள்வது என்ன நியாயமோ? ஆய்வுத் தகவல்களின்படி இப்படி வெட்டப்படும் பெருந்தொகை யான மரங்கள் புகையிரதப் பாதைக்குப் பயன்படுத்தப்படும் சிலிப்பர் கட்டைகள் தயாரிப்பதற்காக விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. ஒவ்வொரு மரமும் இலட்சக்கணக்கான ரூபா பெறுமதியானவை என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் கோடிக்கணக்கில் வருமானம் வரும் சூழ்நிலையில் தோட்டத் தொழிலாளி மட்டும் பயனேதும்  பெற்றதாக இல்லை. 

மரங்கள் சாரிசாரியாக வெட்டி சரிக்கப்பட்டாலும் இழப்பைச் சரிக்கட்ட   மீள்நடுகை ஏதும் நடப்பதாக இல்லை. ஆகையினால் கம்பனிகளின் இந்நடவடிக்கை சுயநல நோக்கிலான மரம் அழிப்பு மட்டுமே. குத்தகைக்குக் கொண்டுள்ள சொத்தினை மொத்தமாக விழுங்கி ஒரு சிலர் மட்டும் ஏப்பம் விடுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய சமாச்சாரமாகப் படவில்லை. இவையெல்லாவற்றையும் கருத்திற்கொண்டு நோர்வூட்  பிரதேச சபை புதிய யோசனையொன்றை நிறைவேற்றியிருப்பதாக கிடைக்கும் ஊடகத் தகவல்கள் கவனத்தை ஈர்க்கின்றன. 

தோட்டங்களில் வெட்டி விற்பனை செய்யப்படும் மரங்களுக்கு 5சத வீத வரி அறவிடுவதே அதன் தீர்மானம். 2018ஆம் அண்டு 30ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்திருத்ததின்படி பெருந்தோட்ட முகாமைத்துவத்தின் மீது இச்சபைகள் செல்வாக்குப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

 இதனால் தமது பிரிவுகளில் வரி அறவிடும் அதிகாரத்தைக் கொண்டுள்ள பிரதேச சபை ஊடாக மரங்களை வெட்டி விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும். வருமானத்தில் 5வீதத்தை பிரதேச சபைக்கு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்த பிரதேச சபை சட்டத்தின் மூலம் இடமுண்டு. இது நல்லதொரு முன்மாதிரி. 

இனி இதன் தொடர்ச்சியாக தோட்ட மரங்களை வெட்டி விற்பனை செய்வற்கான விபரங்கள் பெறல், வரும் வருமானத்தில் 10வீதம் தோட்ட மக்களின் நலன்புரி நடவடிக்கைகளக்காக செலவிடப்பட வெண்டும் என்னும் நியதியை பின்பற்றல் போன்றவற்றை வலியுறுத்தி பெருந்தோட்ட மக்களுக்கு தோட்ட ஆதாயத்தில் இருக்கும் பாத்தியதையை நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டிய தார்மீக கடமையும் பொறுப்பம் மலையக தொழிற்சங்கங்களுக்கு இருக்கவே செய்கின்றது. அவை துணிந்து இறங்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.   

 

Comments