ஆண்கள் மூத்திரச்சந்துக்கு போவார்கள் பாவம் பெண்கள் எங்கே செல்வார்கள்? | தினகரன் வாரமஞ்சரி

ஆண்கள் மூத்திரச்சந்துக்கு போவார்கள் பாவம் பெண்கள் எங்கே செல்வார்கள்?

நீண்ட தூரப்பயணம் செய்யும் போது உடல் களைப்படைகிறது. உடைகள் கசங்கி தலை கலைந்து தூங்கிவழிந்த முகத்துடன் பஸ்ஸிலிருந்து அல்லது ரயிலில் இருந்து இறங்குகிறோம். இறங்கிய அந்தக்கோலத்துடன் நாம் வெளியே போக விரும்புவோமா? ஒருபோதும் இல்லை. குளித்து, அல்லது முகமாவது கழுவி மலசலங்கழித்து, புதியவர்களாகவே வெளியே வர விரும்புகிறோம். அது உறவினர் வீடுகளுக்கு செல்வதாயினும் ஒரு தொழில் தேடி அதற்கான பரீட்சைக்கு வந்தவராயினும் கோவில் தரிசனத்துக்காக வந்தவராயினும், அதுமிக அவசியமான ஒன்று. 

அட விடுங்கப்பா, குளிப்பு முழுக்கு கழுவல் இதெல்லாத்தையும் விடுங்க, மலசலங்கழிப்பது அதிலும் குறைந்தது சீறுநீர் கழிப்பது எவ்வளவு அவசியம் அவசரம். யாழ்ப்பாணத்திலிருந்தும் கண்டி, மட்டக்களப்பு போன்ற இடங்களிலிருந்து ஒரு கூட்டம், ஒரு நிகழ்ச்சி, ஒரு சந்திப்பு என்பதை மட்டும் கருத்தில் கொண்டு ஒருவர் வந்தால் அவருக்கு கொழும்பில் நண்பர்களோ உறவினர்களோ இல்லாமலிருந்தாலும் வெற்றிகரமாக விடியற்காலையில் ரயில்நிலையத்திலிறங்கி தன்னை புதுப்பித்துக்கொண்டு புத்தம் புதியவராக  அவர் வந்த நிகழ்வுக்கு செல்ல முடிந்திருந்தது ஒருகாலத்தில். 

ஆனால் இப்போது அது முடியாது. ரயில் நிலையத்தில் உள்ள மலசலகூடத்தில் முகம் கழுவுவதே பெரிய அந்தரமாக உள்ளது. புதிய பயணிகள் தமது உடைமைகளை வைத்துக்கொள்ள ஒரு ஆள் தேட வேண்டியுள்ளது. பழையகாலத்தில் ஓய்வு அறைகளில் இருந்த வசதிகளை இந்த நவீன காலத்தில் செய்வது நிர்வாகத்தினருக்கு கஸ்டமா என்ன ? ஒரு கட்டண கழிப்பறையோ குளிப்பறையோ கட்டிவைப்பது இயலாத காரியம் இல்லையே. கடந்தகாலத்தில் கொழும்பின் நிறம் என்னவென்றே தெரியாத அநேகமக்கள் கொழும்புக்கு செல்ல வேண்டியிருந்தது. வெலிக்கட, போகம்பறை, பூஸா, தங்காலை என இலங்கையை தலைகரணமாக சுற்றிய தமிழ்மக்களுக்கு பழைய ஓய்வறைகள் கைகொடுத்தன. இப்போது அவை இடிக்கப்பட்டு வேறு   தளங்களாகிவிட்டது. புதிய பயணிகள் ஒரு வேளை குளிப்புமில்லாமலே செல்ல வேண்டியுள்ளது. மாறாக பேருந்து நிலையத்தில் கழிப்பறைகளுடன் குளிப்பறையும் இருக்கிறது. ஆனால் குளிப்பறை திறந்திருப்பதில்லை. உடைமாற்றவும் சரியான வசதிகள் இல்லை.  

 கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்ல நான் பேருந்தில் ஏறினேன். காலையில் எனது நோய்க்கான மாத்திரைகளை போட்டிருந்தேன். சுமார் ஒருமணிநேரப் பயணத்தின் பின் எனக்கு சீறுநீர் கழிக்க வேண்டும் போன்ற உணர்வு ஏற்பட்டது. ஆனால் பேருந்து எங்காவது நிறுத்தப்படும் என்ற சிந்தனையோடு அடக்கிக் கொண்டிருந்தேன். ம்கும்  முடியவில்லை. மெதுவாக நகர்ந்து சாரதிக்கு கிட்டப்போனேன். எனது நிலையை அவனுக்கு சொன்னேன். அவன் அதை காதில் வாங்கினானா தெரியவில்லை. நான் அவனருகே நின்று கொண்டிருந்தேன். ஒரு கால் மணி நேர ஓட்டத்தின்பின் ஒரு பெற்றோல் நிரப்புமிடத்தில் நிறுத்தி என்னிடம் திரும்பி, 

ஆச்சி அதோ தெரியிற இடத்திற்கு போயிட்டு சீக்கிரமா வாங்க என்று என்னை அனுப்பினான். கழிப்பறைக்கு போய்விட்டு ஓடிவந்தேன். எப்போதும் இப்படி பேருந்தை மறிப்பது சாத்தியமா, அட அப்படி பிரச்சினை உள்ளவர்கள் ரயிலில் பயணிக்கலாமே என்கிறீர்களா? ரயிலில் இரண்டாம் வகுப்பு சீட்டுப்பெற்றவர்களே ஆசனமில்லாமல் மலசலகூட வாசலை அடைத்து படுத்திருந்தே பயணிக்க வேண்டியிருக்கிறதே. அவர்களது தூக்கத்தை கெடுக்க நான் விரும்புவதில்லை. மேலும் தட்டி எழுப்பும் நிலையிலும் பலர் இருப்பதில்லை. 

 ஒரு பேருந்துப் பயணத்திலிருந்து இறங்கியதும், யாருக்கும் தோன்றும் உணர்வு சீறுநீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வுதான். வவுனியா பேருந்து நிலையத்தில் இரண்டு கட்டடங்களின் அந்தத்திலும் மலசலகூடங்களுண்டு. ஆனால் அவை எப்போது திறந்திருக்கும் என்பதோ, அவற்றில் எப்போதும் நீர் இருக்கும் என்பதோ, வெற்றிலையில் மைபோட்டு பார்த்துவிட்டுத்தான் போக வேண்டும். அதற்கென ஒரு கட்டண வசூலிப்பாளர் இருப்பார். அவர்  தான் விரும்பியபடிதான் கட்டணங்களை தீர்மானிப்பார். அகில இலங்கையிலும் ஒரு கட்டணம் இருக்கும் இவருடைய கட்டணம் தனியானதுதான்.  

 சரி கொழும்பிலிருந்து வரும் பேருந்து நான்கு மணித்தியாலங்கள் கடந்து சாலிய என்ற இடத்தில்தான் நிற்கும். அந்த இடத்தில் சகல வசதிகளோடும் பயணிகள் தமது இயற்கை உபாதைகளை நீக்கி தேநீர் சிற்றுண்டி, கடலை சோளம் என விரும்பிய கொறிப்பான்களையும் வாங்கலாம். அதைவிட்டால் வவுனியாவில் இறங்க பயணிகள் விரும்பினாலும் பாதுகாப்பு முடிய மலசலகூடம் செல்ல வசதிப்படாது. அதைவிட்டால்..இடையில் கனகராயன்குளம் முறிகண்டி என இரண்டு உணவுவிடுதிகள் இருந்தாலும், எல்லா சாரதிகளும் அங்கே நிறுத்துவதில்லை.  

நேராக யாழ்ப்பாணம்தான் கிளிநொச்சியில் பேருந்து தரிப்பிடத்தில் மட்டுமல்ல வைத்திய சாலையிலிருந்து பரந்தன் செல்லும்வரை அட, ச்சைக் பரந்தனிலும்கூட பொதுமக்கள் பாவனைக்கென பொது கழிப்பிடம் இல்லை இல்லவே இல்லை. நல்ல காலம் சந்தை கட்டடங்கள் எரிந்தழிந்த புண்ணியத்தில் சந்தைக்குள் மட்டும் ஒரு பொது கழிப்பறை உண்டு. அதை பேருந்துப்பயணிகள் பயன்படுத்த முடியாதவாறு சந்தையின் பின்புறமாக அமைந்துள்ளது. ஆக கிளிநொச்சியில் சினிமாக் கொட்டகையுமில்லை. பொதுக் கழிப்பறைகளும் இல்லை. 

ஆனால் பாராட்டுங்கள். ஆனையிறவில் இராணுவத்தினர் ஒரு நல்ல மலசலகூடத்தை மக்கள் பாவனைக்காக கட்டி வைத்துள்ளனர். தனியார்வாகனங்களில் செல்பவர்கள் இதை பாவித்து ஆறுதலடைகிறார்கள். 

இனி புகழ்பெற்ற தமிழர் தாயகமாம் யாழ்ப்பாணத்தில் உல்லாசப்பயணிகளும் ஊருப்பட்ட பயணிகளும் வந்து பேருந்திலிருந்து இறங்கி சிற்றூர்களுக்கு போகும் வாகனங்களை தேடுமுன் மலசலகூடத்தை தேடினால் அலுவலகத்தை ஒட்டினாற்போல ஒரு கழிப்பறை உண்டு. அது பெரும்பாலான நாட்களில் நிரம்பியிருப்பதால் மூடப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை தாங்கி நிற்கும். நானே அவசரத்தில்  அருகிலிருந்த சந்தை, பழக்கடை பகுதி, என எல்லா இடமும் ஒரு கழிப்பறையை தேடினால் சொல்லிவைத்தாற்போல அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. இதனால்தான் ஆண்கள் ஒவ்வொரு இடத்திலும் மூத்திரச்சந்துகளை உருவாக்குகிறார்கள். பெண்கள் எங்கே செல்வார்கள்? 

காலையில் அடைத்த அல்லது நிரம்பிய ஒர பிரபல பேருந்து நிலையத்தின் மலசல கூடத்தை ஒருமணி நேரத்தில் அல்லது இரண்டு மணிநேரத்தில் சுத்திகரிக்கமுடியாத நிர்வாகம் வெட்கப்பட வேண்டாமோ. இது அத்தியாவசிய சேவையில்லையா? 

தமிழ்க் கவி பேசுகின்றார்

Comments