பால்மா, நீங்கள் நினைப்பதுபோல பசும்பால்தானா ? | தினகரன் வாரமஞ்சரி

பால்மா, நீங்கள் நினைப்பதுபோல பசும்பால்தானா ?

இறக்குமதி செய்யப்படும் பால்மா தொடர்பில் அவ்வப்போது சர்ச்சைகள் வெடிக்கும். பின்னர் அவை தணிந்து பிரச்சினைகள் அடங்கி விடுவது வாடிக்கையாகி விட்டது.இலங்கை உட்பட அநேக தெற்காசிய நாடுகளில் காலையிலும் மாலையிலும் கட்டாயம் தேநீர் பருகுவது வழமையான ஒன்று. அதேபோன்று சிறுகுழந்தைகளின் போசாக்கிற்காக பால்மா தான் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் முழு ஆடைப்பால்மாவில் உடல்நலனுக்கு கேடான பதார்தங்கள் இருப்பதாக வரும் செய்திகள் பெரும் அச்சத்தை தோற்றுவித்து வருகிறது.  

நாட்டின் மொத்த பால்மா தேவையில், 10 வீதம் மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. 90 வீதமானவை நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்தே இறக்குமதியாகிறது, என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் உடல் நலனுக்கு பாதகமான மெலமைன், பாம் எண்ணெய் போன்றவை அடங்கியுள்ளதாக பொது வான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இதனை உறுதி செய்ய உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டு பால்மாவில் எந்த கேடும் வராது என அறிவிப்பு வருவதோடு சர்ச்சைகள் சில காலத்திற்கு அடங்கிவிடும்.  

இவ்வாறுதான் கடந்த பெப்ரவரி மாதமும் பால்மா பிரச்சினை தலைதூக்கியது. இறக்குமதி செய்யும் பால்மா வகைகளில் உடல் நலனுக்கு கேடான பதார்த்தங்கள் கலந்திருப்பதாக வர்த்தக வாணிபத்துறை பிரதி அமைச்சர் புத்திக பதிரண பாராளுமன்றத்தில் சர்ச்சையை கிளப்பினார். இது சீக்கிரமாக அடங்கி விடவில்லை. இதன் உண்மைத் தன்மையை அறிவதற்காக சுயாதீனமான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சபாநாயகரும் துறைசார் மேற்பார்வை குழுவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு பணித்திருந்தது. இதற்கமைய பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.எம்.பௌஸர் அடங்கலான அறுவரடங்கிய குழு நியமிக்கப்பட்டு சுகாதார அமைச்சு, தரநிர்ணய சபை, அரச பகுப்பாய்வுத் திணைக்களம், சிறுவர் நோய் தொடர்பான அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், அணுசக்தி அதிகார சபை, இலங்கை மருத்துவ சபை அதிகாரிகள் பல்கலைக்கழக பேராசிரியர்கள் உட்பட தொடர்புபட்ட பலரினதும் கருத்துகள் பெறப்பட்டு அறிக்கை தயாரானது. மருத்துவர் சங்கம், பால்மா குறித்த கடந்த கால ஆய்வு அறிக்கைகள்,பாவனையாளர்களின் கடிதங்கள், பால்மா கம்பனிகளின் விளக்கங்கள் என்பன குறித்தும் குழு கவனம் செலுத்தியிருந்தது.  

நீண்ட முன்னெடுப்புகளின் பின்னர் பால்மா சர்ச்சை குறித்த இடைக்கால அறிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.இறக்குமதி செய்யும் பால் மா தொடர்பில் அதிர்ச்சிகரமான பல தகவல்கள் இதனூடாக அம்பலமாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மட்டுமன்றி காலத்துக்குக் காலம் எழும் சர்ச்சைகள் ஏன் மூடி மறைக்கப்பட்டன என்பதற்கு நியாயமான சந்தேகங்களையும் இந்த அறிக்கை ஏற்படுத்தியிருக்கிறது.  

இறக்குமதி செய்யப்படும் முழு ஆடைப்பால்மா, சிறுவர் பால்மா மற்றும் யோகட், சீஸ், பட்டர் என்பவற்றின் உள்ளடக்கம், கலக்கப்படும் பதார்த்தங்கள் குறித்து துல்லியமான பரிசோதனைகளுக்கான அவசியத்தையும் பல்தேசிய கம்பனிகள் தந்திரோபாயமாக எம்மீது விசத்தை தொடர்ச்சியாக திணித்து வருகிற போதும் சம்பந்தப்பட்ட எல்லா தரப்பினரும் கண்டுகொள்ளாமல் இருப்பதன் மர்மம் குறித்து ஆராய வேண்டியதன் முக்கியமும் இந்த அறிக்கையூடாக தலைதூக்கியிருக்கிறது.  

பணத்திற்காகவும் விளம்பரத்திற்காகவும் இறக்குமதி செய்யும் பால்மாக்களில் இருக்கும் பாதிப்பை யார் மூடி மறைக்கிறார்கள் என்ற சந்தேகமும் இதனூடாக எழவே செய்கிறது.  

இந்த நிலையில் பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபை பிரதானமான 4 விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்தி பால்மா சர்ச்சைக்கான விளக்கத்தை தேடியுள்ளது.  

நாட்டுக்கு கொண்டு வருவதற்கு முன்னர் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் தரம் தொடர்பில் பரிசோதிக்கப்படுகிறதா? அதில் வேறு பொருட்கள் கலக்கப்படுகிறதா என்பது குறித்து ஆராய்தல்.  

​கேள்வி: இறக்குமதி செய்யப்படும் பால்மா ஆரோக்கியமற்றதா?  

பதில்: பால்மாவில் பாம் எண்ணெய், பன்றி எண்ணெய் கலக்கப்படுகிறதா? பால்மாவில் இயற்கையாக இருக்கக் கூடாத பொருட்கள் உள்ளனவா என பரிசோதித்தல்  

கேள்வி: வேறு திரவங்கள் கலக்கப்பட்டதன் பின்னர் செயற்கையான பால்மா உற்பத்தி செய்யப்படுகிறதா?  

பதில்: ஆகிய விடயங்களின் அடிப்படையில் பரந்தளவிலான ஆய்வுகள் இடம்பெற்றிருந்தது. துறைசார் நிபுணர்கள் குழுவுடன் பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபை கலந்துரையாடல்களை நடத்தி இந்த சர்ச்சையுடன் தொடர்புபட்ட அனைத்து தகவல்களையும் திரட்ட முழு முயற்சி மேற்கொண்டது.  

ஏதாவது ஒரு நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் உணவுவகைகள் தொடர்பில் செயற்படுவதற்கு அதிகாரம் கொண்ட நிறுவனமாக சுகாதார அமைச்சின் கீழுள்ள உணவுக் கட்டுப்பாட்டுப்பிரிவு காணப்படுகிறது.

இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகள் உயர், நடுத்தர மற்றும் குறைந்த ஆபத்துள்ளவை என வகைப்படுத்தப்படும். இதில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகள் உயர் ஆபத்துள்ள (High risk) வகைக்குள் அடங்குவதாக பிரதி சுகாதார சேவைப்பணிப்பாளர் எல்.ரீ.கம்லத் சுட்டிக்காட்டியுள்ளார். நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாக்கள் தொடர்பில் அந்த நாட்டு ஆரம்பக் கைத்தொழில் அமைச்சினாலே தரநிர்ணய அறிக்கை வழங்கப்படுகிறது. சகல பால்மா கொள்கலன்களுக்கும் தனித்தனியாக இந்த அறிக்கை வழங்கப்படும்.

சர்வதேச தர நியமங்களுக்கு அமைவாகவே பால்மா உற்பத்தி செய்யப்பட்டுள்ளது எனவும், ​வேறு வகை கொழுப்புகள் உள்ளடக்கப்படவில்லை எனவும் இதனூடாக உறுதிப்படுத்தப்படுகிறது. இது தவிர அந்நாட்டு ஆய்வுகூடத்தினூடாகவும் அறிக்கை வழங்கப்படுகிறது. இவ்விரு அறிக்கைகள் வழங்கப்பட்டதன் பின்னரே இலங்கையில் பால்மாக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக கூறியிருக்கும் அவர்,பால்மா சந்தையில் விநியோகிக்கப்படுவதற்கு முன்னரும் பால்மா மாதிரிகள் ஆய்வு கூட பரிசோதனைக்குட்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டியிருக்கிறார். அத்தோடு நின்று விடாது அணுசக்தி அதிகார சபை, இலங்கை கட்டளைகள் நிறுவனம், சுகாதார தேசிய நிறுவனம், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் என்பவற்றிடம் இருந்து பெறப்படும் அறிக்கைகளின் பின்னரே பால்மா கொல்கலன்கள் விடுவிக்கப்படுகிறது எனவும் பிரதி சுகாதார பணிப்பாளர் விளக்கமளித்துள்ளார்.  

இத்தனை ஆய்வுகள் நடத்தியும் இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் எவ்வாறு ரசாயனப் பதார்த்தங்கள் இருக்க முடியும். இது மக்களை வீணாக அச்சமூட்டும் சதி முயற்சி என எவருக்கும் நினைக்கத் தோன்றும். ஆனால் சுகாதார அமைச்சு இவ்வாறு கூறினாலும் சோற்றுக்குள் முழு பூசணிக்காயை மறைப்பது போன்று பால்மாவுக்குள்ளும் பல ரகசியங்கள் மறைக்கப்பட்டிருப்பதை மருத்துவ அதிகாரிகள் சங்கமும் நிபுணத்துவ மருத்துவர்களும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலரும் இது பற்றிய ஆய்வின்போது அம்பலப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களின் கருத்துகளும் பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையின் இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பித்தக்கது.  

இந்த விவகாரம் தொடர்பில் மருத்துவ அதிகாரிகள் சங்கம் அமைச்சிற்கும் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கும் எழுத்து மூலம் சில ஆதாரங்களை முன்வைத்துள்ளது. பால்மா உற்பத்தி செய்யும் நியூசிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் பால்மா பருகுவதில்லை என்று மருத்துவ அதிகாரிகள் சங்கம் சார்பில் விளக்கமளித்துள்ள நிபுணத்துவ மருத்துவர் ஹெரிஸ் பதிரண குறிப்பிட்டிருக்கிறார். நியூசிலாந்தில் உற்பத்தி செய்யப்படும் பால்மாவில் 98 வீதமானவை இலங்கை போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்கு சிறிதளவுதான் பயன்படுத்தப்படுகிறது என புள்ளிவிபரங்களுடன் தெளிவுபடுத்திய அவர், சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரைக்கும் தொற்றாநோய் ஏற்படுவதற்கு பால்மா பிரதான காரணமாக அமைகிறது என்ற அதிர்ச்சி தகவலையும் அவர் இங்கு வெளியிட்டிருக்கிறார். இலங்கையில் கூடுதலாக பயன்படுத்தப்படும் சிறுவர்களுக்கான பால்மாவானது குழந்தை பிறந்தது முதல் 6 வயது வரை வழங்கப்படுகிறது. இந்த பால்மாவில் பாம் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், சோயா என்பன கலக்கப்படுகிறதாம்.  

இது தவிர மருத்துவர் சங்கம் மற்றொரு உண்மையையும் போட்டுடைத்துள்ளது. இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் பால்மாவுக்கு அதிகம் செலவிடும் வசதியுள்ளவர்கள் குறைவாக இருப்பதால் சந்தையில் கொள்வனவு செய்யக்கூடிய விலைக்கு பால்மா தயாரிப்பதற்காக பாம் எண்ணெய் கலக்கப்படுகிறது என மருத்துவர் சங்கம் தகவலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபைக்கும் நிபுணர் குழுவுக்குமிடையிலான சந்திப்பில் மருத்துவர் சுமித் வன்னியாரச்சி முக்கியமாக சில தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார். இது குறித்தும் இந்த இடைக்கால அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

பால்மாவில் உள்ள கொழுப்பின் அளவை 40 வீதத்தினால் குறைத்து அதில் வேறு பொருட்கள் கலக்கப்பட்டாலும் அது குறித்து பால்மா பெட்டியில் குறிப்பிடப்படுவதில்லை. ஆய்வினூடாக கூட பாம் எண்ணெய் போன்றன கலக்கப்படுவதை கண்டுபிடிக்க முடியாதிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

பால்மாவிலுள்ள கொழுப்பு அகற்றப்பட்டு, பாம் எண்ணெய் அதற்குப் பதிலாக சேர்க்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், ஒரு நாடு தனது நாட்டு உற்பத்தி தொடர்பில் சான்றிதழ் வழங்குவதால் மாத்திரம் அதுபற்றிய நம்பகத்தன்மை ஏற்பட்டுவிடாது எனவும் தெளிவுபட கூறியுள்ளார். உலக சந்தையில் பட்டர் ஒரு கிலோ 14 டொலருக்கு விற்கப்படுகையில் பாம் எண்ணெய் வெறும் 0.80 டொலருக்கே விற்கப்படுகிறது. எனவே இலங்கைக்கு உயர் தரத்திலான பால்மா கிடைப்பதற்கு ஏற்றவாறு பாவனையாளர் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.  

இலங்கைக்கு கொண்டுவரப்படும் பால்மாக்கள் மாதிரிகள் கதிரியக்க பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை என்ற விடயமும் நிபுணத்துவ குழுவுடனான சந்திப்பில் அம்பலமாகியுள்ளது.  

இந்த கலந்துரையாடல்களுக்கு மத்தியில் பால்மாவின்  உள்ளடக்கம் அதில் கலந்துள்ள திரவங்கள் குறித்து ஜெர்மனியில் ஆய்வு செய்யப்பட்டது. இதற்கு முன்னர் பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையினால் பால்மா பற்றி ஆய்வு செய்வதற்கு ஆய்வு நிறுவனமொன்றுக்கு பால்மா மாதிரிகள் அனுப்பப்பட்ட போதும் சில நாட்களின் பின்னர் அந்த நிறுவனம் ஆய்வு செய்ய மறுத்துவிட்டமையும் பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையின் சந்தேகத்தை வலுப்படுத்தியிருந்தது. பால்மா உற்பத்தி செய்யும் நாடுகள் பரிசோதனைகளில் தலையீடு செய்கிறது என்ற நியாயமான சந்தேகம் இதனூடாக ஏற்பட்டுள்ளது.  

நிபுணத்துவ குழு கலந்துரையாடல்கள் ஆய்வுகள் என்பவற்றின் அடிப்படையில் பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபை பின்வரும் அவதானிப்புகளை மேற்கொண்டுள்ளது.  

இறக்குமதி செய்யும் பால்மா உயர் ஆபத்து வகைக்குள் உள்ளடக்கப்படுகிறது.  

பால்மா மற்றும் ஏனைய உற்பத்திகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யும் போது கதிர் பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டும்.  

உணவு ஆலோசனைச் சபையில் அணுசக்தி அதிகார சபையின் பிரதிநிதித்துவத்தையும் உள்ளடக்க வேண்டும்.  

சுங்கத்தில் மரக்கறிகள் தவிர பால்மா உற்பத்திகளுக்காக கதிரியக்க அறிக்கை பெறாமையினால் சுகாதார ரீதியான பிரச்சினைகள் எழலாம்  

இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் தொடர்பில் சுகாதார அமைச்சினால் மாத்திரமே மேற்பார்வை செய்ய முடியும். பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையும் இதில் இணைத்துக் கொள்ள வேண்டும்.  

பாலில் இயற்கையாக உள்ளடங்கியுள்ள கொழுப்பினை தவிர வேறு பதிலீட்டுக் கொழுப்புகள் உள்ளடக்கப்பட்டிருந்தால் அவற்றை உறுதி செய்வதற்கு உகந்த ஆய்வு கூட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.  

இறக்குமதி செய்யப்படும் பால்மா தொடர்பில் பக்டீரியா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்  

பால்மா உள்ளிட்ட உணவு வகைகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக உணவுச் சட்டத்தை திருத்த வேண்டும்.  

முழு ஆடை நீக்கி பாம் எண்ணெய் சேர்க்கப்படும்போது இது பற்றி லேபில்களில் குறிப்பிடாமல் மறைக்கப்படுகிறது.  

பால்மா கம்பனிகள் விஞ்ஞான ரீதியான சுரண்டல் மேற்கொள்வதோடு பால்மாவின் தரம் குறைக்கப்படுதல் தொடர்பான தொழில்நுட்ப அறிவு போன்ற இரகசியங்கள் அனைத்தும் குறித்த நிறுவனங்களிடமே உள்ளன. இந்த நிலையில் வியாபார நோக்கத்தை அடைவது மட்டுமே அவற்றின் நோக்கம் என்பது தெளிவாகிறது.  

பால்மா தொடர்பான பிரச்சினை எழும்போதெல்லாம் நியூசிலாந்து அரசியல்வாதிகளும் இராஜதந்திரிகளும் உயர்ஸ்தானிகராலயமும் தலையிட்டு இதனை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது. முழு சமூகத்தின் மீதும் தாக்கம் ஏற்படுத்தும் பிரச்சினையின் போது சரியாக செயற்பட்டு தீர்வு காண வேண்டும்.  

பால்மா அருந்தாமல் வாழ முடியாது எனும் அளவிற்கு பலமான கருத்தினை பல்தேசிய கம்பனிகள் சமூகமயப்படுத்தி வருகின்றன என்ற விடயம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.  

பால்மா என்பது அத்தியாவசிய உணவல்ல அதற்கு பதிலாக மரபுரீதியான உள்நாட்டு உணவுவகைகளை பழக்கப்படுத்திக் கொள்வது உகந்தது. சிறு பராயம் முதல் இது தொடர்பில் அறிவூட்டல் வழங்க வேண்டும்.  

போன்ற முக்கிய அவதானிப்புகளை பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபை மேற்கொண்டு முக்கிய தீர்மானங்களையும் பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது  

பால்மாவில் வேறு கொழுப்புகள் சேர்க்கப்படுவதில்லை என பரி​சோதனை அறிக்கைளில் மேலோட்டமாக கூறப்பட்டாலும் புத்துஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளது போன்று பால்மாவின் தரம் குறைக்கப்படுதல் எனும் விடயம் இனங்காணப்பட்டுள்ளது. இது குறித்து பொருத்தமான பொறி முறையூடாக பரிசோதனை நடத்த வேண்டும்.  

பால்மா தொடர்பான சிக்கலை தீர்ப்பதற்காக அனைத்து கட்சி மக்கள் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி தெரிவுக் குழுவொன்றை அமைத்து துரித தீர்வு காண வேண்டும்.  

பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையில் சுயாதீன சான்றிதழ் அளிக்கப்பட்ட ஆய்வு கூடம் உருவாக்க வேண்டும்.  

இறக்குமதி செய்யப்படும் பால்மா  உயர் ஆபத்து கொண்டவை என்பது குறித்து மக்களை விழிப்பூட்ட வேண்டும்.  

பால்மாவின் தரத்தினை குறைப்பதற்காக பயன்படுத்தப்படும் கலப்பட பொருட்கள் குறித்து பகுப்பாய்வு செய்ய புதிய தர நியமங்கள் உருவாக்க வேண்டும்.  

கொழுப்பு பிந்திய கட்டங்களில் நிரப்பப்பட்ட பால்மா இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும்.  

என்பது உட்பட பல முக்கிய பரிந்துரைகள் பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையின் இடைக்கால அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன.  

கடந்த காலத்தில் சிகரெட் தொடர்பான கட்டுப்பாடுகள், மருத்துப்பொருட்களின் விலைக்குறைப்பு தொடர்பான பிரச்சினைகளின் போது பல்தேசிய கம்பனிகளின் தலையீடு அதிகளவில் இருந்தது. அவற்றுடன் மோத வேண்டிய நிலை ஏற்பட்டது. கோடிகளுக்கு வாயை அடைத்துவிடும் முயற்சிகளால் இறக்குமதி செய்யப்படும் பால்மாவினூடாக ஏற்படும் மோசமான பாதிப்புகள் மூடி மறைக்கப்படலாம். விளம்பரத்திற்காக ஊடகங்கள் இந்த உண்மைகளை மறைப்பது புதிய விடயமல்ல. அரசியல்வாதிகளை கூட பல்தேசிய கம்பனிகள் தமது பொக்கெட்டுக்கள் திணித்து வாயை மூடவைக்கக் கூடும். ஆனால் பணம் பாதாளம் வரை சென்றாலும் மக்கள் பலம் அதனை முறியடிக்கக் கூடியது என்பது திண்ணம். மக்கள் உண்மை நிலையை உணர்ந்து இதற்கு எதிராக செயற்படுவது இன்றியமையாதது. கண்ணை மறைக்கும் விளம்பரங்களுக்கு ஏமாந்து இனியும் வெள்ளை பால்மாவுக்குள் மறைந்திருக்கும் கறுப்பு பிசாசை அடையாளங் கண்டு எமது எதிர்கால சந்ததியை காப்பாற்ற இப்பொழுதே தயாராகுவது காலத்தின் கட்டாயமாகும்.    

ஷம்ஸ் பாஹிம்   

Comments