மலையக வீடமைப்புத் திட்டம்; நீண்ட பயணத்தின் ஆரம்பம் | தினகரன் வாரமஞ்சரி

மலையக வீடமைப்புத் திட்டம்; நீண்ட பயணத்தின் ஆரம்பம்

மலையகத்தில் வீடமைப்புத் திட்டம் என்றாலே சிக்கலும் பிக்கலுமாக விளங்குவது என்னவோ வாஸ்தவமாகிவிட்ட சங்கதி. அமரர் ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் அவர், ஏகப்பட்ட வீடுகளைக் கட்டி சிங்கள மக்களின் வீடில்லாப் பிரச்சினைக்குத் தீர்வு தேடினார். ஆனால் பெருந்தோட்டப் பக்கம் அவர் பார்வை படாமலே போனது. சந்திரிகா குமாரதுங்க  25 ஆயிரம் வீடுகளை கட்டும் திட்டமொன்றை உருவாக்கி அமரர் சந்திரசேகரனிடம் ஒப்படைத்தர். அவரால் 6 ஆயிரம் வீடுகளைக் கட்டவே முடிந்தது. இது ஒரு கடனுதவி திட்டம். வீட்டுப் பயனாளிகள் அக்கடனைக் கட்டி பல வருடங்களாகி விட்டன. ஆனால் இன்னும் அந்த வீடுகளுக்கான உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை. 

பின்னர் இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராக இருந்தபோது மாடிவீட்டுத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தார். லயவரிசை வீடுகளுக்கு எந்த வகையிலும் இந்த மாடி வீட்டுத்திட்டம் மாற்று தீர்வாகாது என்னும் ஆய்வுகள் புலப்படுத்த அத்திட்டமும் கைவிடப்படலானது. இத்திட்டம் மூலம் கொஞ்சம் நாகரிகமான வாழ்விட வசதியை ஏற்படுத்தும் என்னும் எதிர்பார்ப்பு தீய்ந்து போனது. ஆனால் நாளடைவில் இம்மாடி வீடுகளில் வசிப்போர் அசெளகரியங்களையே அனுபவிக்கலாயினர். குறிப்பாக இடவசதியின்மை சுகாதார  சீர்கேடு பயன்பாட்டுக்கு உதவாத மலசல கூடங்கள் என்று பழையபடி நெருக்கடி. இந்த மாடி வீடுகளின் பிரச்சினைகள் பற்றி தோட்ட நிர்வாகங்கள் காதில் போட்டுக்கொள்வதே இல்லை. 

இந்தப் பின்புலத்திலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த ஆட்சி பெருந்தோட்ட மக்களின் தனி வீட்டுத் தேவையை நிறைவேற்ற உருப்படியான வேலைத் திட்டமொன்றை உருவாக்கி அமைச்சர் பழனி திகாம்பரத்திடம் ஒப்படைத்தது. அத்துடன் இந்திய அரசாங்கத்தின் 14 ஆயிரம் வீட்டுத்திட்டம் நடை முறையில் உள்ளது. இதுவரை சுமார் 8 ஆயிரம் வீடுகள் வரை நிர்மாணிக்கப்பட்டுள்ளன. நூற்றுக் கணக்கான வீடுகள் வரை அமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த வீடமைப்பு குறித்து முழுவதுமாக திருப்தி அடையாதவர்களும் இருக்கின்றார்கள். இவர்களில் மாற்றுக் கருத்துகொண்ட எதிரணியினரும் உள்ளனர். இந்தத் திட்டத்தின் பெறுமதியை உணராதவர்களும் அடங்குகின்றார்கள். சொந்தமாக காணி இல்லாதவர்கள், வீடில்லாதவர்கள் இவ்வீடமைப்புத் திட்டத்தினால் புதிய முகவரி பெறுகின்றார்கள்   என்பதை முதலில் நாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். லயக்காம்பிராவில் எந்தவொரு வசதியுமின்றி உரிமையும் இன்றி இருந்தவர்களுக்கு இந்தத் தனி வீட்டுத்திட்டம் பெரிய வரப்பிரசாதம். தோட்டப்புறங்களில் நவீன கிராமங்களை நிர்மாணிக்கும் பணியில் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் முனைப்பு குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல. வீடுகளோடு சேர்த்து அந்த வீடுகளுக்கான நில உரிமையும் வழங்கப்படுவது நல்ல முன்னேற்றம். 

ஆனால் அந்த மாற்றத்தின் அருமை பெருமை குறித்து பயனாளிகளும் சரியாக புரிந்துகொள்வதாய் இல்லை. சக தொழிலாளர்களும் உள்வாங்கிக் கொள்வதாகத் தெரியவில்லை. குறையைப் பெரிதுபடுத்துவதில் காட்டப்படும் ஆர்வம் நிறைவை வரவேற்பதில் காணப்படவில்லை. சுருங்கக் கூறின் தமக்கான சொந்தக்காணி சொந்த வீடு என்னும் சமூக அந்தஸ்தை உணர்ந்து அனுபவிப்பதாக கூற முடியாதுள்ளது. இதனால் தொட்டதுக்கெல்லாம் குறைபாடுகளைத் தேடும் குணாம்சங்களே வெளிப்படுகின்றன.

வீடமைப்பில் காணப்படும் மந்த வேக நகர்வுகள் பற்றிப் பேசப்படுகின்றன. இது தவிர்க்கவியலாதது. 200 வருடகால தேவை இந்தத் தனி வீட்டுத் திட்டம். அதை அவ்வளவு அவசரமாக அமைத்து நிறைவு செய்வது அப்படியொன்றும் இலகுவான பணியல்ல. 'பெருந்தோட்ட மக்கள் அனைவருக்கும் வீடு' என்பது தொனி. ஆனால் அது படிப்படியாக தொடர வேண்டிய இலக்கு. எனவே அசுர வேகத்தில் வீடமைப்பு இடம் பெறவில்லை என்னும் குறைகாணலில் முறை இல்லை. இதுபோலவே ஒதுக்கப்படும் 7 பேர்ச் காணி. இது ஏனைய சமூகங்களுக்கு உரித்தாக்கப்படும் நில ஒதுக்கீட்டுக்கு சமமானதல்ல என்பது உண்மை. அவர்களுக்கு 20 பேர்ச் காணி வழங்கப்படுகின்றன. ஆனால் பெருந்தோட்ட மக்களுக்கு 7 பேர்ச் என்பது ஒரு புறக்கணிப்புத்தான். காலப்போக்கில் இதில் மாற்றம் ஏற்படுத்தப்படுவது அவசியம்.  

இனி வீடுகள் முறையாக அமைக்கப்படுவது இல்லை என்பது பொதுவான குற்றச்சாட்டு. பட்டிகள் போன்று கட்டப்படுவதாகக் கூட சிலர் விமர்சிக்கின்றார்கள். அநேகமாக கதவு யன்னல்களுக்கு மேலாக உறுதியாக இருப்பதற்காக விசேட கொங்கீறீட் படையொன்று அமைக்கப்படுவது வழமை. எனினும் பெருந்தோட்டப் பகுதிகளில் அமைக்கப்படும் சில வீடுகளில் சுவருக்கு வைக்கப்படும் புளொக்கல் மாத்திரமே பயன்படுத்தப்படுகின்றதாம். ஓரளவு முறையாக கட்டப்பட்டுள்ள வீடுகளில் கூட ஒரு வீட்டிற்கு 6  அங்குலம் மற்ற வீட்டுக்கு 8 அங்குலம் என கொங்கிறீட் அளவுகள் மாறுபடுகின்றன. அதிகமாக சுமத்தப்படும் ஒரு குற்றச்சாட்டு. இங்கு வீசும் காற்றில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தனி வீடுகளின் கூரைகள் பறக்கின்றன என்பதே. பயன்படுத்துவதற்கு முன்பே பல வீடுகள் பழுதடைந்து போய் விடுகின்றன.  தரம் குறைந்த மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகின்றது. தவிர சில வீட்டுத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலப்பரப்பு பொருத்தமானதாக காணப்படவில்லை.  

கொந்தராத்துக்காரர்கள் சிலர் தமது பொறுப்பைச் சரியாக நிறைவேற்றுவது இல்லை என்றும் கூறப்படுகின்றது. சிலர் இலாபத்தை அதிகமாக அடையும் குறிக்கோளில் மணலுக்குப் பதிலாக கற்களைப் பயன்படுத்துவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. மலைப்பாங்கான இடப் பிரதேசங்களில் கட்டப்படும் வீடுகள் இதனால் பலவீனமானவையாகவே இருக்கப் போகும் அபாயம் தெரிகின்றது. கட்டுமானப் பொருட்களில் கலப்படம் என்பது அச்சறுத்தலான சமாச்சாாரம்.  

பெருந்தோட்டங்களில் காணப்படும் ஆங்கிலேயர் கால லயவரிசை வீடுகள் 200 வருடங்களாக தாக்குப் பிடிப்பது மறுக்க முடியாத விடயம். இதேபோல நீண்டகாலம் பாவனைக்குரிய வகையில் இப்புதிய வீடுகள் அமைக்கப்படுவது அதிமுக்கியமானது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள வீடுகள் அமைந்துள்ள பிரதேசங்களில் மழை நீர் வடிந்து செல்வதற்கான வடிகால் (கான்) அமைப்புகள் முறையாகப் பேணப்பட்டதாகத் தெரியவில்லை. இதனால் வீட்டு முற்றங்கள் வீட்டின் பின்புறங்களில் மண் அரிப்பு, வெடிப்புகள், குழிகள், நிலத்தாழ்வுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததே. 

இதே போது எதிரணியால் முன்வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டுத்தான் பயனாளர்களைத் தெரிவு செய்வதில் பாரபட்சம் காட்டுகின்றார்கள் என்பது. கட்சி தொழிற்சங்க சார்பான வகையிலேயே வீடுகள் வழங்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டை அமைச்சர் பழனி திகாம்பரம் மறுத்தே வருகின்றார். இதில் உண்மையேதும் இருக்குமாயின் அதைச் சரிசெய்வது நல்லது. வீடுகளைப் பெறும் பயனாளிகள் அதை உரியமுறையில் பராமரித்து வருவது முக்கியம். இதுவரை காலமும் பெருந்தோட்டக் கட்டமைப்புக்கூடாகவே சகலதையும் பெறவேண்டிய நிலைமை இருந்தது. குறிப்பாக லய வீடுகளில் வசிப்போர் கூரை கழன்று போனாலும் வீட்டுச் சுவர் பெயர்ந்து விழுந்தாலும் தோட்ட நிர்வாகம் வந்து சரி செய்யட்டும் என்னும் மனோபாவத்தில் ஊறித் திளைத்துவிட்டனர். காரணம் அந்த லய வீடுகள் அவர்களுக்குச் சொந்தமானவையல்ல என்னும் உணர்வே. 

ஆனால்  தனிவீடு பெற்ற பின்னரும் அதே மனப்பான்மையைக் கொண்டிருப்பது நியாயமானதல்ல. சின்னச்சின்ன குறைபாடுகளைக் கூட பெரிதுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுவது அரசியல் கட்சிகளின் பழக்கம். மக்கள் அதற்கு அடிமைப்பட்டுவிடக்கூடாது. ஏனெனில் கிடைத்திருப்பது சொந்த வீடு. சுயமான காணி உறுதி. இனி இந்த வீடுகளின் உரிமையாளர்கள் தோட்ட மக்கள். அதைப் பாதுகாப்பது அவர்கள் கடமை. காலத்துக்கு தோட்ட நிர்வாகங்களின் அனுசரணையையோ அமைச்சர்களின் அவதானங்களையோ கோரி நிற்கமுடியாது. 

வீட்டை வாங்கிய கையோடு அதனை அடுத்தவருக்கு விற்பனை செய்யவோ அல்லது கூலிக்குக் கொடுக்கவோ சில பயனாளிகள் முற்படுவதாக தகவல்கள் இருக்கின்றன. இப்படியானவர்கள் புதிய வீடுகளைத் தமது பெயரில் வாங்கிவிட்டு பழையபடி லயத்துக்கே சென்று வாழ நினைப்பதாகவும் தெரிகின்றது. இவ்வாறான செயல்கள் முறையானவையல்ல. இதேநேரம் புதிய வீடமைப்புத் திட்டங்கள் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் சகட்டுமேனிக்கு நிராகரிப்பது நியாயமானதல்ல. அவைகளில் நிஜங்களைத் தேடுவது நல்லது. குறைகள் இருப்பின் நிவர்த்தி செய்வது வரவேற்கக்கூடியது. ஏனெனில் வீடமைப்புக்குச் செலவிடப்படும் நிதி எந்தவொரு கட்சியினதும் சொந்தப் பணம் அல்ல. அது அரச நிதி. பொதுமக்களின் வரியால் வருபவை. அதை முறையாக கையாள வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் கடமை. எனவே வீடுகளைக் கட்டுவது மட்டுமே தம் பணி என்று அசட்டையாக இருந்துவிட முடியாது.

நிர்மாணப் பணிகளை அவதானிப்பது, பரிசீலிப்பது, பராமரிப்புக்கான அறிவுறுத்தல்களைப் பயனாளிகளுக்கு வழங்குவது எல்லாமே முக்கியமானது. காணும் குறைபாடுகளுக்கு எல்லாம் காழ்ப்புணர்ச்சியே காரணம் என்று கண்டு கொள்ளாமல் விடப்படக்கூடாது என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. ஏனெனில் சுமார் 1.60000 வீடுகளை நிர்மாணிக்க வேண்டிய பாரிய சவால் எதிரே பார்த்துக் கொண்டிருக்கிறது. அதை எதிர்கொள்ளும் தொலைநோக்கும் மன உறுதியும் வந்தே ஆகவேண்டும். இது வெறும் ஆரம்பம் மட்டுமே!   

பன். பாலா

Comments