நல்லாட்சிக்கு நடந்தது என்ன ? | தினகரன் வாரமஞ்சரி

நல்லாட்சிக்கு நடந்தது என்ன ?

மூன்று தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டு யுத்தத்தினை யுத்தத்தினாலேயே முடிவுக்கு கொண்டுவந்து நாடு பிரிவதைத் தடுத்து பிளவுபட்டிருந்த நாட்டை ஐக்கியப்படுத்தினார்கள் என தென்னிலங்கை பெரும்பான்மை சிங்கள மக்களின் பாராட்டுக்களையும் புகழையும் பெற்றிருந்த முன்னைய ஆட்சியானது, யுத்தத்தின் பின்னரான காலத்தில் முன்னெடுத்த தான்தோன்றித்தனமான நிர்வாகமே அவர்களுக்கு மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொடுத்து பதவி இழக்க காரணமாக அமைந்தது. இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்டவர்களாக செயற்படுவார்கள் என்ற எண்ணமும் எதிர்பார்ப்புமே 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி நல்லாட்சியாளர்களாக தம்மை தாமே அறிமுகப்படுத்திக் கொண்டவர்களை ஆட்சியில் அமர்த்தியது. 

அந்தவகையில், நல்லாட்சியாளர்கள் திருடர்களாக சித்தரித்தவர்களை தண்டித்து அவர்கள் அபகரித்த நாட்டின் சொத்தை மீண்டும் நாட்டுக்கே பெற்றுக்கொடுத்தல், நல்லாட்சியாளர்களை பதவியில் அமர்த்துவதற்கு முக்கிய பங்களிப்பு வழங்கிய வட, கிழக்கு தமிழ் மக்களுக்கு நியாயமான அதிகாரப் பகிர்வையும் அரசியல் தீர்வையும் பெற்றுக்கொடுக்கத்தக்க புதிய அரசியல்யாப்பினை உருவாக்கி சிறுபான்மை தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுத்தல், நாட்டை அழிவுப் பாதையில் இட்டுச் செல்லும் போதைப்பொருள் வியாபாரத்தையும் அதனுடன் தொடர்புபட்ட பாதாள உலகச் செயற்பாடுகளையும் இல்லாமல் செய்தல் மற்றும் இச்செயற்பாடுகள் மூலம் இலங்கையை சுபீட்சத்தின் முன்னுதாரணமாக திகழவைக்கும் வகையில் நல்லாட்சியின் அஸ்திவாரமான கூட்டு அரசாங்கத்தை சிறந்த முறையில் முன்னெடுப்பதன் மூலம் ஜனநாயக விழுமியங்களை மீண்டும் கட்டியெழுப்புதல் ஆகிய விடயங்களுக்கு மிகுந்த முன்னுரிமை கொடுத்து செயற்படுவோம் என்பதே நல்லாட்சிக்காக வாக்களித்த மக்களுக்கு நல்லாட்சியாளர்கள் பெற்றுக்கொடுத்த வாக்குறுதிகளாக அமைந்தன. 

ஆயினும் வெகுசீக்கிரமே மேற்குறிப்பிட்ட நல்லாட்சியின் அஸ்திவாரம் ஆட்டம் காண ஆரம்பித்தது. அதன் உச்சக்கட்ட வெளிப்பாடாகவே ஊடக அமைச்சின் கீழ் இருந்துவந்த தேசிய தொலைக்காட்சியானது இன்று ஜனாதிபதியினால் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டமை அமைகின்றது.  

கடந்த ஆட்சியாளர்களை தோற்கடிப்பதற்கு 2010 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் களமிறக்கப்பட்ட பொது வேட்பாளர் தோல்வி கண்டு பொது பேட்பாளர் என்ற பேச்சிற்கே இனி இடமில்லை என்ற பின்னணியில் இலங்கை அரசியலில் அதுவரை அனுபவித்திராத பலத்த சவால்களுக்கு மத்தியிலேயே தமது உயிரைப் பணயம் வைத்து மைத்ரிபால சிறிசேன பொது வேட்பாளராக களமிறங்கினார். அவரின் அந்த அர்ப்பணிப்புக்கு ஒருபோதும் தம்மைக் களமிறக்கியவர்கள் பங்கம் விளைவிக்க மாட்டார்கள் என்ற திட நம்பிக்கையே அவரது பொது வேட்பாளர் பயணத்தின் பக்கபலமாக அமைந்திருந்தது. ஆயினும் ஜனாதிபதி பதவியை வென்றெடுத்த மறுகணத்திலிருந்தே அவரது அதிகாரங்களை பறித்து, சிறகுகளை வெட்டி, சிறையடைப்பதற்கான முயற்சிகள் திரைமறைவில் நடந்தேறி வருவதை காலப்போக்கிலேயே அவரால் உணர முடிந்தது.

முதற்கட்டமாக 19வது சீர்திருத்தத்தின் கீழ் ஜனாதிபதியின் முக்கிய நிறைவேற்று அதிகாரங்களை இழக்கச் செய்ய வைப்பதன் மூலம் ஜனாதிபதி பதவியை நூல்களைக் கொண்டு ஆட்டிவைக்கும் கைப்பொம்மையாக்க வேண்டுமென்ற திட்டம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தல் எனும் பெயரில் நிறைவேற்றிக் கொள்ளப்பட்டது. 

நாட்டின் சொத்தை அபகரித்த திருடர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்கள் கொள்ளையடித்த சொத்துக்களை இந்த நாட்டுக்கு மீண்டும் பெற்றுக்கொடுப்போம் என்ற வாக்குறுதியை கேலிக்கூத்தாக்கும் வகையிலேயே இந்த நாட்டில் இதுவரை காலமும் இடம்பெற்றிராத மிகப் பெரிய நிதி மோசடியாகிய மத்திய வங்கி பிணைமுறி மூலம் இந்த நாட்டின் பொருளாதாரம் சீரழிக்கப்பட்டது. நிதித்துறை நிபுணர்களால் இந்த நிதி மோசடி மூலம் நாட்டுக்கு ஏற்பட்ட பொருளாதார பின்னடைவிலிருந்து மீள்வதற்கு குறைந்தபட்சம் 30 ஆண்டுகளாவது செல்லும் என கணிக்கப்பட்டிருக்கும் இந்த திருட்டுடன் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்பதைத் தவிர வேறு நிலையில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்ட ஜனாதிபதி, மத்திய வங்கி பிணைமுறி ​மோசடியை விசாரிப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்ததனால் அவரை ஜனாதிபதி பதவியில் அமர்த்திய தரப்பே அவரை தமது பரம எதிரியாக கருதி செயற்பட ஆரம்பித்தமையே நல்லாட்சி அரசாங்கத்தின் அஸ்திவாரம் ஆட்டம் காணுவதற்கு அடிப்படையாக அமைந்தது.  

அதையடுத்து நாட்டின் ஒட்டுமொத்த நிலத்தையும் பணம் படைத்தவர்களுக்கு தாரைவார்த்துக் கொடுப்பதற்கான திட்டத்தை நிறைவேற்றும் காணி வங்கி மற்றும் அமெரிக்காவின் விருப்பு வெறுப்பிற்கு அமைய இந்த நாட்டில் எதையும் செய்யும் வாய்ப்பை அந்த நாட்டுக்கு பெற்றுக்கொடுக்க வழிவகுக்கும் சோபா ஒப்பந்தத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தடுத்து நிறுத்தியமை ஆகியன நல்லாட்சியின் இருதரப்புகளும் ஒருவரையொருவர் கீரியும் பாம்புமாக நோக்கும் நிலைக்கு தள்ளிவிட்டது. அத்தோடு தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமையை பெற்றுக்கொடுக்கும் புதிய அரசியல் அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற விடயம் காலத்தையும் பணத்தையும் வீண்விரயம் செய்த ஏட்டுச்சுரைக்காயாக மாற்றப்பட்டதற்கு அரசியலமைப்பு செயற்குழுவே பொறுப்புக் கூறவேண்டும் என்ற கசப்பான உண்மையை அண்மையில் ஜனாதிபதி பகிரங்கப்படுத்தியமை நல்லாட்சியின் இருதரப்புக்கிடையில் இருந்துவந்த இறுதிப் பிடிப்பையும் இழக்கச் செய்வதை துரிதப்படுத்தியது. 

இவ்வாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அப்பதவியில் அமர்த்தப்பட்ட நாள் முதல் வரலாறு காணாத வகையில் குறிப்பாக சமூக ஊடகங்கள் மூலம் மிக இழிவான விமர்சனங்களும் மானிடத்திற்கு ஒவ்வாத பரிகாசங்களும் முன்வைக்கப்பட்டு வந்த பின்னணியில் ஜனாதிபதியின் நன்மதிப்பை பாதுகாப்பதற்காகவும் அவர் இந்த நாட்டின் நலனிற்காக முன்னெடுக்கும் நற்பணிகளுக்கு குறைந்தபட்ச நேரத்தை ஒதுக்குவதைக் கூட விரும்பாத அரச ஊடகங்களும் ஊடகத்துறையின் பொறுப்பினை ஜனாதிபதியின் கீழ் தக்கவைத்துக்கொள்ளவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தான்தோன்றித்தனமாக செயற்பட்டு வருவதை தொடர்ந்தும் காணக்கூடியதாக இருந்தது. 

இப்பின்னணியிலேயே கடந்த அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் ஊடகத்துறை ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதன்போதும் ஊடக அமைச்சின் அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சுப் பொறுப்பு நல்லாட்சியின் மறுதரப்பிடமே விட்டு வைக்கப்பட்டது.

இதனை வாய்ப்பாகக் கொண்டு அரச நிறுவனங்களின் தலைமைப் பதவிகள் உள்ளிட்ட உயரதிகாரிகளை நியமிப்பற்கான ஜனாதிபதி செயலாளரின் தலைமையிலான தேர்வுக்குழுவின் பரிந்துரைகளை மதியாது தொடர்ச்சியாக இரு தடவைகள் ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் தற்போதைய தலைவரை நீக்கி வேறு நபர்களை அப்பதவியில் அமர்த்துவதற்காக நல்லாட்சியின் மறுதரப்பு மேற்கொண்ட கண்மூடித்தனமான முயற்சிகள் ரூபவாகினி கூட்டுத்தாபனத்தை ஜனாதிபதியின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கு வழிசமைத்துக் கொடுத்திருக்கின்றது.

இந்த விடயமானது நல்லாட்சியின் இருதரப்புகளுக்கிடையில் இருந்துவந்த பிளவினை மேலும் விரிவடையச் செய்வதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது.  

பலத்த சவால்களுக்கு மத்தியில் மிகுந்த சிரமத்துடன் வென்றெடுத்த நல்லாட்சியை நாட்டின் நலனிற்காக உபயோகப்படுத்த வேண்டுமென்ற உண்மையை மறந்து இணைந்து செல்லவேண்டிய பயணத்தை தனித்து செல்ல எடுத்த முயற்சிகளின் பலன்களே இன்று ஒன்றன்பின் ஒன்றாக அப்பட்டமாக வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கின்றன.  

வரலாற்றில் முதன்முறையாக இரு பிரதான எதிர்தரப்பு அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டு அரசாங்கமானது, இந்த நாட்டில் காலங்காலமாக இருந்துவந்த கட்சி அரசியல், தேர்தல் அரசியல் ஆகியவற்றிற்கு அப்பால் சென்று நாட்டிற்கு நன்மை பயக்கும் கொள்கை அரசியலைப் பெற்றுத்தரும் என்ற இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களின் மகத்தான நம்பிக்கையில் உருவாக்கப்பட்ட நல்லாட்சியானது இன்று கேள்விக்குறியாகி இருப்பதன் சுமையையும் நாட்டுமக்களே சுமக்க வேண்டியிருக்கின்றது.

ஆகையால் இதற்கான பரிகாரம் என்ன என்பதே அவர்களது இன்றைய கேள்வியாக இருக்கின்றது.

ஆனந்தன்   

Comments