மலையக வாழ்வியல் மேம்பாட்டுக்கு தோட்டங்களை விட்டு வெளியேறுவது தீர்வாகாது! | தினகரன் வாரமஞ்சரி

மலையக வாழ்வியல் மேம்பாட்டுக்கு தோட்டங்களை விட்டு வெளியேறுவது தீர்வாகாது!

'தோட்ட குடியிருப்பு, அதனோடு இணைந்த சுற்றுப்புறங்கள், விவசாயக் காணிகள்,  பாதைகள், பாலங்கள்,  நீர்நிலைகள், விளையாட்டிடங்கள், வழிபாட்டிடங்கள்,  இயற்கை வளங்கள் போன்றவைகளை தனியார் நிர்வாகத்திடம் தொடர்ந்தும் விட்டுவைப்பது சரியானதல்ல'

ஒரு காலத்தில் இரும்புத்திரை போடப்பட்ட நிலப்பிரதேசங்களாக பெருந்தோட்டங்கள் கையாளப்பட்டதும் உண்டு. அரசியல் தொழிற்சங்க ரீதியான எழுச்சி இந்த இரும்புத்திரை  தர்பாறை சிறுகச்சிறுக நெகிழ்வுபடுத்தவே செய்தது. இதில் தொழில் ரீதியாக மட்டும் இம்மக்களை பாதுகாப்பது என்ற நிலைமைக்குத் தொழிற்சங்க அமைப்புகள் வந்தன. இது அவைகளுக்கு சரியானவையாகவும் அமைந்தன. இதே நேரம் இடதுசாரி சிங்கள சிந்தனையாளர்கள் பெருந்தோட்ட மக்கள் மத்தியில் பிரசன்னமாகி கொள்கை முழக்கம் செய்யத் தலைப்பட்டனர். இது தோட்டங்களில் தொழிற்சங்கங்களை நடாத்திக் கொண்டிருந்தவர்களுக்கு முகம் சுழிக்க வைத்த காரியமாகவே இருந்தாலும் பின்னாட்களில் இதையொட்டியே இவர்களும் அரசியல் கட்சிகளை ஆரம்பிக்கத் தலைப்பட்டது வேறு கதை.  

மலையகத்தைத் தழுவி தொழிற்சங்கங்கள் வளர்ந்தன. அரசியல் அமைப்புகள் தளம் கொண்டன. இருந்தும் இவைகளால் காலத்துக்கேற்ற வாழ்வியல் மாற்றங்களை எற்படுத்த முடிவதாய் இல்லை. தொழில் ரீதியான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு ஏறக்குறைய 100வருடங்கள் கழிந்த பின்னரே தொழிற்சங்கங்கள் உதயமாக முடிந்தது. அத்தனை இறுக்கம். இத் தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலோடு எழும் பிரச்சினைகளோடு சம்பந்தப்பட்டவை. 1817களில் இந்நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்  ஏறக்குறைய 11மாவட்டங்களில் 1920  - 1047வரையிலான காலப்பகுதியிலேயே நிலைபேறாயினர்.

ஜனத்தொகை வளர்ச்சி கணிப்பீட்டின் அடிப்படையில் இன்றைய நிலையில் சுமார் 30இலட்சமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அது 15இலட்சமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது இப்போதைக்கு. 1964களிலான ஸ்ரீமா- சாஸ்திரி ஒப்பந்தம் போன்ற இன சுத்திகரிப்பு நடவடிக்கைகளால் இந்த இனம் திட்டமிடப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை மறுப்பதற்கு இல்லை. பெருந்தேசிய ஆதிக்கவாதிகள் இதுபற்றி எப்பொழுதாவது இதயம் திறந்து ஒரு துளி கண்ணீர் விடத்தயரில்லை. இன்றைய நாகரீக உலகமயமாக்கலின் பின்னணியில் இறக்குமதி செய்யப்படும் சிந்தனைகளில் குளிர்காய்வோர் பெருந்தோட்ட மக்களுக்கு வாழ்விட உரிமை வழங்குவதை எதிர்க்கவே செய்கின்றார்கள்.  

இவ்வாறான சக்திகளின் முதலாவது இலக்கு பெருந்தோட்ட சமூகத்தின் கலை கலாசார பண்பாட்டு விழுமிய தடங்களை இல்லாதொழிப்பதேயாகும். ஏனெனில் இவை எந்தவொரு சமூகத்தினதும் இனத்துவ அடையாளங்கள். ஏற்கனவே தொழில் ரீதியில் ஆகக்கூடிய ஆளணி வளம் கொண்ட அமைப்பாக இருந்த பெருந்தோட்டத்துறை சிறுகச்சிறுக அந்த பெருமையை இழந்து கொண்டு இருக்கின்றது. ஒரு கட்டத்தில் 15இலட்சம் வரையிலான தொழிலாளர் தொகை இன்று 1,60,000ஆக குறைவடைந்து போயுள்ளது. இது எதிர்காலத்தில் 50ஆயிரமாக குறையும் அபாயமும் இல்லாமல் இல்லை.  

பெருவாரியான தோட்டக் காணிகள் கைவிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால் வேலை வாய்ப்பு குறைவடைந்துள்ளது. தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் ஒன்றில் வேலையை கைவிட்டு வேறு வேலை தேடி வெளியேறிக் கொண்டிருக்கின்றார்கள். அல்லது வேலையில்லாப் பிரச்சினைக்கு முகம் கொடுக்க முடியாமல் போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கிறார்கள்.  

ஆக இங்கு மீண்டும் ஒரு புலம்பெயர் சிந்தனையோட்டம் தலையெடுக்க ஆரம்பித்துள்ளது. இது வரவேற்புக்குரியதா? பெருந்தோட்டக் கட்டமைப்பிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று மலையக புத்திஜீவிகள்  எழுப்பும் குரலுக்கும் இவ்வாறான ஆளணி வெளியேற்றங்களுக்கும் இடையில் ஏதாவது புரிந்துணர்வு இருக்குமா? புத்திஜீவிகளின் எதிர்பார்ப்பு இதுதானா? அண்மையில் ஒருவார கால மருத்துவமனை அனுபவம் துய்க்க வேண்டி நேர்ந்தது.

இருபக்க கட்டில்களில் ஒருவர்  சிங்களவர். அடுத்தவர் நம்மவர். நம்மவரோடு பேசியபோது முன்னைய குழப்பங்களுக்கு ஒரு பிடி கிடைப்பது போலிருந்தது. அவருக்கு மூன்று பிள்ளைகள். மூவரும் பெண்கள். மூன்று பெண்களுக்கும் படிப்பறிவில்லை. இருபது வயதினைத் தாண்டியிருந்தாலும் மூன்று பெண்களையும் வேலைக்கு அனுப்ப விருப்பமில்லை. அதேநேரம் திருமணம் செய்து கொடுத்தாலும் வேலைக்குப் போகவிடுவது இல்லை என்பது தகப்பனாரின் தீர்மானம். இது ஒருவகைப் பாசம். மூத்தப்பெண் திருமணமாகியதும் அருகிலுள்ள நகரில் வீடொன்றை வாங்கி இருவரும் குடியேறினர். எல்லாம் விவசாயத்தால் வந்த வாய்ப்பு. 

இப்பொழுது அடுத்த இரண்டு பெண்களுக்கும் திருமணம் நிச்சயமாகிவிட்டது. ஆனால் நிச்சயம் செய்யப்பட்ட மணமகன்களுக்கு தோட்டத்தில் வாழவிருப்பமில்லை. ஆக மொத்த குடும்பமுமே தோட்டத் தொழிலை கைவிட்டு விட்டது. தோட்ட விவசாய காணியைக் குத்தகைக்குக் கொடுத்துவிட்டு வீட்டுக் கதவை இழுத்து மூடிவிட்டு நகருக்கே வந்துவிட்டார்கள். திரும்பிப் போக உத்தேசம் இல்லையா? என்றால்  புள்ளைகளுக்கு விருப்பமே இல்லீங்க என்கிறார்.  

வாழ்விடங்களைப் பாதுகாக்க வேண்டுமானால் இங்கு குடியிருத்தல் முக்கியமாகிறது. ஏற்கனவே தோட்டக்காணிகள் கைவிடப்படுவதாலும் துண்டாடப்படுவதாலும் மறைமுக வாழ்விட நில இழப்பு நடைபெறவே செய்கின்றது. இதனால் வாழ்விட அடையாளங்கள் பறிபோவது நிச்சயம். 

ஏற்கனவே உள்ளூராட்சி தேர்தல் எல்லை நிர்ணயம் சில தோட்டங்களை சிங்களக் கிராமங்களோடு இணைக்க வைத்துள்ளது. எதிர்காலத்தில் இன்னும் என்னென்ன ஆகுமோ தெரியாது. தோட்டங்கள் கண்டபடி துண்டாடப்படுவதால் ஏற்கனவே இரத்தினபுரி, அவிசாவளை, கண்டி, காலி, களுத்துறை போன்ற மாவட்டங்களில் பல தோட்டங்கள் தனிமைப்படுத்தப்பட்டு அண்டிய கிராமங்களோடு இணையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. 

இங்கு வாழும் தோட்ட மக்கள் பெயர்களை மட்டுமே தமிழ் மொழியில் தரித்துக் கொண்டுள்ளவர்களாக மாறிக்கொண்டிருக்கின்றார்கள். சிங்கள கிராம பாணியில் ஆடை அணிகின்றார்கள். மரணச் சடங்குகளை பெளத்தமத ரீதியில் செய்ய வற்புறுத்தப்படுகின்றார்கள். தோட்டங்கள் தோறும் இந்து கோவில்கள் உண்டு. குட்டிக்குட்டி வழிபாட்டு இடங்களும் உள்ளன. இவ்வாறான இடங்களில் இந்துச் சின்னங்களை இடித்தழித்துவிட்டு பெளத்த சின்னங்களைப் பதிக்க ஒரு கூட்டம் திரிகிறது.  

இந்துக் கோவில் திருவிழாக்களை பெளத்தமத குருமார்களின் பரிவுடனேயே நடாத்த வேண்டியுள்ளது. இவ்வாறான விழாக்களில் பெளத்த கலை, கலாசார நடனங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றது. 

இதுவே பெருந்தேசிய ஆதிக்கவாதிகளுக்கு அதி விருப்பமான சங்கதி. பெருந்தோட்ட மக்களின் வரலாறு, தொழில் அரப்ப ணம், அவர்களின் கலை கலாசார பெருமிதங்கள், நாட்டார் இலக்கியம், வாழ்வியல் சவால்களை திரம்பத் திரும்பப் பேசிக் கொண்டு தான் இருக்க வேண்டுமா? எழுதிக் கொண்டுதான் இருக்க வெண்டுமா?. மேடைபோட்டு ஆடிப்பாடி அரங்கேற்றத்தான் வேண்டுமா? என்றெல்லாம் சிலர் எம் காதுபடவே கேட்கிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை சமகால மாற்றத்தையும் அதில் காணப்படும் எதிர்கால உத்வேகத்தையும் மட்டுமே இனம் கண்டால் போதும். அதை ஆதரித்தால் போதும் என்னும் கருதியலை உள்வாங்கிக் கொண்டிருப்பவர்களாகவே காணப்படுவது உண்மை. 

மீண்டும் மருத்துவமனை ஞாபகம். மறுபக்கமாகத் திரும்பி அந்த சிங்கள நோயாளருடன் பேசினேன். தீவிர பெளத்தமத அனுட்டானி என்பது புரிந்தது. அரச திணைக்களமொன்றில் முகாமையாளராக பணியாற்றி ஓய்வு நிலைக்குப்பின் முழுநேர பெளத்தமத பணிக்குத் தன்னை அர்ப்பணித்திருப்பதாகக் கூறினார். அப்படி அவர் என்ன பணி செய்கிறார் என துருவினோம். பெளத்த சிங்கள பாரம்பரிய கலை, கலாசார நடனங்களைப் பிள்ளைகளுக்குப் பயிற்றுவிக்கிறாராம். அவை தொடர்பான போதனைகளை வழங்குகிறாராம். 

பெளத்த சிங்கள பாரம்பரிய கலை, கலாசாரங்களை உன்னிப்பாக கவனித்தால் அதற்குள் அரச, பிரபுத்துவ ஆக்கிரமிப்புகள் காணப்படுவதைக் காணலாம். இவை கெளதம புத்தர் மன்னர் குடும்பத்திலிருந்து வந்ததால் ஏற்பட்டவை அல்ல. மாறாக பண்டைய காலத்தில் இலங்கையை ஆட்சி செய்த பெளத்த சிங்கள மன்னர்களின் கரிசனையால் விளைந்த பாதிப்புகளாகவே பார்க்க வேண்டியுள்ளது. தவிர பெளத்தர்கள் தமது மதம் மீது தம்மை ஆண்ட மன்னர்கள் மீது கொண்டிருந்த பக்தி. மரியாதையின் நிமித்தமாகவே இன்றும் அக்கலைகளை கட்டிக்காப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இதில் பெளத்த புத்திஜீவிகள் தம்மை தன்னார்வ தொண்டர்களாக ஈடுபடுத்திக் கொள்வது எவ்வளவு சிறப்பு! 

மலையக கலாசார பண்பாட்டு விழுமியங்களைக் காக்க வேண்டும். ஆவணப்படுத்தப்பட வேண்டும். வரும் தலைமுறையும் அதைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் எனும் கோரிக்கையை வெறும் தர்க்கமாக எடுத்துக்கொள்ள துணியும் எம்மவர் சிலரை இந்தப் பெளத்த செயற்பாட்டாளர்களோடு ஒப்பீடுசெய்ய முடியுமா?  

பெருந்தோட்ட சமூகம் அக்கட்டமைப்பை உடைத்துக் கொண்டு வெளியே வரவேண்டும் என்பதை சிலர் பிழையாக விளங்கிக் கொண்டிருப்பதாகவே தெரிகின்றது. 

பெருந்தோட்டக் கட்டமைப்பு இரண்டு கிடுக்குப்பிடிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. ஒன்று தொழில் ரிதியிலான முழுமையான அதிகாரம். அடுத்தது அத்தொழில்சார் சமூகத்தின் வாழ்வியல் ரீதியிலான வரைமுறைகளை தாமே வகுக்கும் உரிமை. இதில் முதலாவது அதிகாரம் இம்மக்களின் வாழ்வாதாரத்தை அம்மக்கள்ின் தேவைக்கேற்ப அன்றி தமது வசதிக்கேற்ப நிர்ணயம் செய்ய கைகொடுக்கின்றது. உபயம் கூட்டு ஒப்பந்தம். இரண்டாவது உரிமையின் அடிப்படையில் பெருந்தோட்ட அபிவிருத்தி பணிகளில் தமது செல்வாக்கை மட்டும் பிரயோகிக்கும் வாய்ப்பு. 

ஆக, தேசிய அரசு இயந்திரம் என்பது பொருந்தோட்டத்துறையை பொறுத்தவரை மூன்றாவது தரப்பாகவே இருக்கின்றது. இதைத்தான் தவறு என்கிறார்கள் புத்திஜீவிகள்.  

தோட்ட குடியிருப்பு, அதனோடு இணைந்த சுற்றுப்புறங்கள், விவசாயக் காணிகள், பாதைகள், பாலங்கள், நீர்நிலைகள், விளையாட்டிடங்கள், வழிபாட்டிடங்கள், இயற்கை வளங்கள் போன்றவைகளை தனியார் நிர்வாகத்திடம் தொடர்ந்தும் விட்டுவைப்பது சரியானதல்ல என்பது இவர்கள் வாதம்.  

சுருங்கக்கூறின் தோட்டக் கம்பனிகள் வெறும் தொழில் தருனர்களாக மட்டுமே இருக்க வேண்டும். அவர்களுக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்குமான உறவு வேலை வழங்குவோர், வேலை பெறுவோர் என்ற மட்டிலேயே இருக்க வேண்டும் என்பதே இதன் அடிப்படை. 

இதுதான் பெருந்தோட்ட கட்டமைப்பில் இருந்து தோட்ட மக்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதன் வெளிப்பாடு. புலம் பெயர்வோ பாரம்பரிய கலை கலாசார மரபுகளை இருட்டடிப்புச் செய்வதோ இதற்கு எந்தவிதத்திலும் பொருந்தாது. கற்றவர்கள் எப்பொழுதும் யதார்தத்தோடும் ஒப்பீட்டளவிலும் சிந்திப்பதே மலையகத்துக்கு நல்லது.   

பன். பாலா

Comments