நாள், கோள், நற்பலன் | தினகரன் வாரமஞ்சரி

நாள், கோள், நற்பலன்

மேஷம் 

மேஷ ராசி அன்பர்களே, நல்லவைகள் ஒரே நாளில் உருவெடுத்துப் பலன் தருமோ என்னவோ தெரியாது, ஆனால் தீயவைகள் மட்டும் உடனே முளைவிட்டு வளர்ந்து பூதாகாரமாய் வெடித்துச் சிதறுவதைப் பார்த்து மயங்கிப் போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்பது மட்டும் உறுதி. நினைக்காதது, சொல்லாதது போன்றவைகள் ஏன் இப்படி வீண் சச்சரவுகளையும், பொல்லாப்புகளையும் தருகின்றன என்பதும் விளங்காக புதிராகத்தான் தோன்றும். ஆனால் அவைகள் கண்னெதிரே கவலைகள் தரும் வகையில் உங்களைப் பழி வாங்குவது மட்டும் உண்மையே. வருவாய்களிலும், வணிகத்திலும் உங்களின் நிதானமான போக்குகள் நல்ல பலனைத் தரும். எடுக்கும் முயற்சிகள் ஓரளவு சாதகமாகவே முடியும். உத்தியோகங்களிலும், தனியார் துறைகளிலும் தொழில் செய்வோர் வேண்டிய மட்டும் பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள்.  

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே, என்னை விஞ்ச யாரும் இல்லை என்று வெற்றிகளைக் கொண்டாடும் வேகத்தில் இருக்கிறீர்கள். திங்கள் மாலை 03.08வரை எச்சரிக்கையாக இருங்கள். சந்திரன் அட்டம ராசியில் இருக்கிறார். இளைய சகோதரர்களும், உடல் நலமும் சற்று நலிவடையக் கூடும். சிறு நோய்களும் உங்களை எட்டிப் பார்ப்பதும் விடை பெறுவதுமாக இருக்கும். சங்கடங்களைச் சந்திக்க நேர்கின்ற போதிலும், இலக்குகளை எளிதில் அடைவதினால் மற்றவர்களைப் பார்த்து இவர்களுக்கு என்ன முடியும் என்று யோசிக்கவும் இடமுண்டு. சில தோல்விகளும் வரும், ஆனால் வெற்றிக் கொடி கைகளில் இருக்கும் போது கீழே விழுந்தாலும் வலிப்பதில்லைதானே? திருமண முயற்சிகள் இருபாலருக்கம் நன்மையாக இருக்கும். புதன் கிழமைக்குப் பின் பல எதிர் பாராத லாபங்கள் தேடி வரவும் வாய்ப்புண்டு. 

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே, ஏற்ற இறக்கங்கள் மிக சகஜமாகிப்போய் விட்ட நிலையில், சிரமங்களைச் சமாளிப்பது இப்போது பழகிப் போன சமாச்சாரமாய் இருக்கும். யாரிடமும் எதையும் எதிர் பார்க்காது தன்னை மட்டுமே நம்பும் உறுதி மனதில் ஊன்றிப் போய் வளரத் தொடங்கும். ஆதலால் உலகமே மிகச் சின்னதாக, எளிதாகக் கையாளக் கூடியதாகத் தெரியும். நீங்கள் புத்தம் புதிய மனிதராக உருவெடுக்கப் போவதின் ஆரம்பம் இங்கேதான் இருக்கிறது. இனிமேல் யாரும், எதுவும் ஒரு பொருட்டாகத் தெரிய வாய்ப்பே இல்லை. திங்கள் மாலை 03.09முதல் புதன் நள்ளிரவு 00.12வரை சந்திரன் அட்டம ராசியில்; இருப்பார். பணப் பட்டுவாடா, வாக்குறுதிகள் கொடுப்பது, முதல், கடன் சம்பந்தமாக யாருடனும் கலந்துரையாடுவது போன்றவைகளைத் தவிர்க்கவும்.  

கடகம்

கடக ராசி அன்பர்களே, தோல்விகள், தொந்தரவுகள் அடிக்கடி தலைகாட்டினாலும் நினைத்ததைச் சாதிக்கும் வல்லமை ஒரு புறம் பயன்களைத் தரத்தான் செய்கின்றன. புதன் நள்ளிரவு 00.38மணி முதல் வெள்ளி நள்ளிரவு 00.12மணிவரை அட்டம ராசியில் சந்திரன் சஞ்சரிக்கிறார். இது உங்கள் இலக்குகளை அடையும் முயற்சிகளுக்கு இடைஞ்சலாக இருக்கும். உடல், மன சோர்வு வந்து சேரும். சமாளித்துக் கொள்வதே திறமையாகும். கல்யாண விருப்பம் உள்ள இருபாலருக்கும் சுப செய்திகள் வரும். அடிமனத்து ஆசைகளை வெளியே சொல்லி வையுங்கள். தொழில் முயற்சிகளில் ஈடுபாடு உடையவர்கள் முழுமனத்தோடு இறங்கினால் வெற்றிகள் எளிதில் கிட்டும். உங்களைத் தவறாகப் புரிந்து கொண்டவர்கள் பக்கம் வந்தால் உதறித் தள்ளி விடாதீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே, பணப் புழக்கங்கள் சுமாராக இருக்கும். தொழிலில் வருமானங்களில் பாதிப்புகளுக்கு இடமில்லை. ஆனால் புதிதான முயற்சிகள் பெரும் பயன்களைத் தரும் வாய்ப்புகள் குறைவே. அடக்கி வாசித்தால் சபை களைகட்டும், நிம்மதியாகத் தொழில் நடத்தலாம். வெள்ளி நள்ளிரவு 00.12மணிக்கு மேல் சனிக் கிழமை வரை சந்திரன் அட்டம ராசியில் இருப்பார். செலவுகள் கழுத்து வரை உயரும், நிச்சயமாக மூழ்கிப் போக மாட்டீர்கள். தவிர்க முடியாத, தடுக்க முடியாதவைகளாக அவைகள் அமையும். மேலும் சுப விரயங்களும் உண்டு. சந்தோஷமாக ஏற்றுக் கொண்டால் மனதிலும், குடும்பத்திலும் நிம்மதி நிலவும். உதவ வருகிறார்கள் என்று உறவுகளை எதிர் பார்க்காதீர்கள், முடிந்த அளவு முட்டுக் கட்டைகளை உண்டாக்கி விட்டுத்தான் போவார்கள். பெருமூச்சு விட்டுக்கொண்டு சமாளியுங்கள், வேறு வழியில்லை.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே, அபாரமான ஆற்றலும், லாவகமாகப் பேசி எதையும் சாதிக்கும் வல்லமை கொண்ட நீங்கள், இப்போது தடுமாறி முரண்பட்டும், தட்டிக் கழித்தும், அடைய எடுத்துக் கொண்ட இலக்குகளில், இழுபறி நிலையில் இருப்பது சற்றும் முன் யோசனையின்றி செயல் படுவதையே காட்டுகிறது. குடும்ப சலசலப்புகளை மனதில் நிறுத்தினால் துல்லியமான இயக்கங்கள் தடை படுவதில் ஆச்சரியம் இல்லையே. முட்டாள் பட்டம் தானாகத் தேடி வந்து விடுமே. உடனுக்குடன் தீர்மானிக்க வேண்டிய இக்கட்டான நிலைமைகளை இழுபறியாக இழுத்துக் கொண்டுபோனால் முடிவுகள் விடிவுகளைத் தர சந்தர்ப்பங்கள் இல்லையே. சில விவகாரங்களில் பொல்லாப்புகள் வந்தாலும் மனத் தைரியத்தை இழந்து விட்டால் வழி பிறக்க வழி இல்லாமல் போய் விடாதா? உத்தியோகங்கள்,

துலாம்

துலா ராசி அன்பர்களே, பணப் புழக்கம் வார ஆரம்பத்தில் நன்றாக இருக்கும். மனம் விரும்பிய வகைகளில் முதலீடுகள் செய்யலாம். புதிய தொழில்கள் ஆரம்பிக்கவோ, செய்தொழிலை அபிவிருத்தி செய்யவோ முயலலாம். வசதியான இடங்களை, வீடுகளைத் தேர்தெடுத்து குடி புகலாம். வயது வந்தவர்களுக்குத் திருமணம் பேசி முடிக்கலாம். கல்யாணத்திற்குக் காத்திருப்பவர்கள் பெண், மாப்பிள்ளை தேட முன்வந்தால் பலன் கிடைக்கும். ஊர்ப் பெரியவர்களின் உதவிகளை, வழி காட்டல்களை எளிதில் பெற்றுக்கொள்ளலாம். பொருளாதார உதவிகளுக்கு யாரையும் நெருங்கலாம். கோவில் தரிசனங்களும், தீர்த்த யாத்திரைகளும் நல்ல பலனளிக்கும். சான்றோர் ஆசிர்வாதங்கள் மனச் சாந்தி தரும். உத்தியோகங்கள், பதவிகள் வகிப்பவர்கள் தயங்காமல் மேலதிகாரிகளை நெருங்கி உதவிகளுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே, தாம் செல்லும் இடங்களில் வரவேற்பும், மரியாதையும் சற்று குறைவாகவே இருக்கிறதே, மிகக் காத்திருந்தும், பொறுத்திருந்தும் பயனில்லாமல் திரும்ப வேண்டி இருக்கிறதே என்று தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்காதீர்கள். உங்களுக்கு எதிராகக் குந்தகம் விளைவிக்க எவரும் கங்கணங் கட்டிக்கொண்டு முன்வரவில்லை, காலம் போர்க்கோலம் பூண்டிருப்பாதால் வரும் அவலங்கள் தான் இவைகள். வீண் விவாதங்களில் ஈடுபடாமல் இருப்பதும், ஒதுங்கிப் போவதும் மட்டுமே தற்போது செய்யக் கூடிய காரியங்களாகும். சரியாகக் கூட சிந்திக்கும் திறன் மழுங்கிப்போய்விட்ட நிலைதான் இப்போது இருக்கும். இப்படி இருக்கும் போது எப்படி மற்றவர்களுடன் போட்டியிட்டு வெல்லப் போகிறீர்கள்? பயங்களும், சோகங்களும் மனதை உலுக்கியபடி இருக்கும். பொறுத்திருப்பதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. 

தனுசு

தனுசு ராசி அன்பர்களே, கேள்விக் குறியிலேயே வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. குறிக்கோள்களை எட்டுவதில் இருக்கும் குளறுபடிகளால் கைக்கு எட்டியது அந்த அளவிலேயே நின்று போய் விடுகிறது. இடையூறுகளும் இன்னல்களும் அடுத்தடுத்து வந்து நிம்மதியைச் சீர்குலைக்கும். கை கூட வேண்டியவைகளும் கை நழுவிப்போவது வேதனைகளை விளைவிக்கும். குடும்பத்தவரும், உறவினர்களும் சொல்வதை நம்பாததும் சோதனையாகவே இருக்கும். உறுதியான முடிவுகளை எட்ட முடியாமலும், கிடைக்கும் வெற்றிகளினால் வரும் நன்மையை அடைய முடியாத சுற்றுச் சூழலே இருக்கும். எல்லாமே விளங்காத மர்மமான கசப்புணர்வளாக இருக்கும். 

மகரம்

மகர ராசி அன்பர்களே, உங்கள் இலக்குகளை அடைய முயற்சிகளில் காட்டும் மும்முரம் மிகப் பெரிய பயன்களை வழங்கும். தேவைகள் பூர்த்தியாவதுடன் சமுதாயத்தில் அங்கீகாரம் கிடைக்கும். உற்றமும் சுற்றமும் உதவிகள் செய்ய முன்னிற்கும். வளரும் வருமானங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியையும், ஒற்றுமையையும் உண்டு பண்ணும். எதிரிகள் வசப்படுவர். அவர்களாலும் லாபங்கள் கிடைக்கப்பெறும். அளவு கடந்த செலவுகள் வந்தாலும் அதற்கேற்ற வரவுகள் இருப்பதினால் எதுவும் பாதிப்புகள் இல்லை. தேக சுகம் அவ்வளவு சோதனைக்கு உட்படாது, ஆனால் வாக்குவாதங்கள் இடம் பெறும். இதனால் மனக் கசப்புகளும் விரோதங்களும் உருவாகும். இயன்ற அளவு வேண்டாத வாதங்களில் ஈடுபடாது இருப்பது நலமாகும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே, வேகத்தைவிட விவேகமாகச் செயல் படுவதே உத்தமம் என்ற எண்ணம் மனதில் உதிக்கும். இழுபறியில்; இருந்த ஏராளமான விவகாரங்ளை ஒவ்வொன்றாகத் தீர்க்க முனைவீர்கள். பொருளாதார விருத்தி ஏற்பட பொன் பொருள் சேரும். குடும்பத்தினரும், நண்பர்களும், உறவினர்களும் பெண்களும் உறுதுணையாய் இருப்பர். கிடைக்கும் சகாயங்கள் பல பாரிய அபிவிருத்திகளைத் தர இடமுண்டு. ஆனாலும் புதிய இடமாறுதல்கள் அவ்வளவு நன்மைகள்; பயக்காது. அப்படியான எண்ணங்கள் மனதில் எழுந்தாலும், பிறர் மூலம் வந்தாலும் பல முறை சிந்தித்துச் செயலாற்றுங்கள். பாதிப்புகளுக்கப் பதில் சொல்ல வேண்டியவர்கள் தாங்கள்தான் என்பதை மறவாதீர்கள். நீண்ட காலத்திற்குப் பயன்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளனவா என்று ஆராயவும்.

மீனம்

மீன ராசி அன்பர்களே, திடீர் திருப்பமாக மதிப்பு மரியாதைகள் சிறப்பாக அமையும். அவப் பெயர் மறைய, சிறப்பாகப் புகழ் பெருகும். விலகி ஓடிப் போனவர்கள் தேடி வருவார்கள். மகிழ்ச்சியும், குதூகலமும், மனைவியின் அன்பு, பிள்ளைகளால் பெருமை, வாழ்க்கையின் சகல வசதிகள் அமைய இடமுண்டு. திருமணத் தடைகள் இருந்தவர்களுக்கு சுப வேளை வந்தமையும். சுப நிகழ்ச்சிகளும், காத்திருந்தவர்களுக்குக் குழந்தை பாக்கியமும் கிடைக்கும். ஏராளமான வருமானங்களும், தாராளமான செலவுகளும் இருக்கும். பொருளாதார விருத்தியோடு வளங்கள் பெருகி, புதிய வீடுகள், வாகனங்கள் வந்து சேரும். அல்லது வசதியான வீட்டிற்குப் போகவும் கிடைக்கும். மனதில் உற்சாகமும் நிம்மதியும் உண்டாகும். தடைகள் விலகும், எதிரிகளைத் தேடிச் சென்று ஒழிக்கவும் ஆர்வம் பிறக்கும்.பொறுப்பான பதவிகளை வகிப்போர்களுக்கு மேலும் அதிகாரமும் பொறுப்பகளும் கிடைக்கும்.

Comments