புதிய அனுபவமாக அமையும் 'மரவள்ளி மா சார்ந்த தொழிற்துறை' | தினகரன் வாரமஞ்சரி

புதிய அனுபவமாக அமையும் 'மரவள்ளி மா சார்ந்த தொழிற்துறை'

இலங்கை மற்றும் சுவீடன் நாட்டின் முகாமைத்துவத்தில் கொழும்பை தளமாகக் கொண்டு இயங்கிவரும் இலங்கையின் விவசாய மருந்தாக்கல் நிறுவனமான ஸ்டார்ச் இண்டஸ்ட்ரீஸ் (பிரைவேட்) லிமிடெட், பொலன்னறுவை மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசமான வெலிகந்தையில் தனது மரவள்ளி பதப்படுத்தல் தொழிற்சாலையை அடுத்த வாரம் ஆரம்பிக்கவிருக்கின்றது. இது இலங்கை விவசாய சமூகத்திற்கு ஒரு புதிய அனுபவமாக அமையப் போகின்றது. 

சேதன மரவள்ளி மா சார்ந்த பொருட்களுக்கான சந்தைவாய்ப்பு உலக அளவில் கணிசமாக அதிகரித்துவரும் பின்னணியிலேயே ஸ்டார்ச் இண்டஸ்ட்ரீஸ் (பிரைவேட்) லிமிடெட் இலங்கையில் பாரியளவிலான ஒரு தொழிற்சாலையை அமைத்து, மரவள்ளி கிழங்குகளை பதப்படுத்தி அவற்றை மாவாக சுத்திகரிப்பதுடன், மரவள்ளி இலைகளிலிருந்து பெறப்படும் சாற்றை இலைச்சாற்று மாவாகவும் காப்ஸ்யூல்களாகவும் தயாரிக்கும் செயன்முறையை முன்னெடுக்கவுள்ளது. 

சேதன மரவள்ளி மற்றும் மரவள்ளி மா உற்பத்தி, பதப்படுத்துதல், விற்பனை மற்றும் ஏற்றுமதி ஆகியனவே ஸ்டார்ச் இண்டஸ்ட்ரீஸின் வர்த்தக நடவடிக்கைகளாகும். 

மரவள்ளி உற்பத்தியில் நீண்ட பாரம்பரியத்தை கொண்ட நாடு என்ற வகையிலேயே சுவீடனை தளமாகக் கொண்ட மா உற்பத்தி நிறுவனம் இலங்கையைத் தேர்ந்தெடுத்திருக்கின்றது. மரவள்ளி பயிர்ச்செய்கைக்கு இலங்கை ஒரு சிறந்த இடமாகவே காணப்படுகின்றது. நாட்டில் நிலவும் ஸ்திரமான அரசியல் சூழ்நிலை, சாதகமான நிதி ஊக்குவிப்பு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான பாதுகாப்பு என்பவற்றின் காரணமாக வெளிநாட்டு நேரடி முதலீடுகளை மேற்கொள்வதற்கு இலங்கை ஒரு சாதகமான இடமாகும் என்பதையே இந்நிறுவனத்தின் முதலீடு எடுத்துக் காட்டுகின்றது. 

பங்களாதேஷ் மற்றும் இந்தியாவுடன் இலங்கையும் உலகில் வேகமாக வளர்ந்துவரும் சந்தைகளில் ஒன்றாகவே காணப்படுகின்றது. ஆகையால் இலங்கையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விவசாயத் தொழிற்துறையை வளர்ச்சியடையச் செய்வதில் தமது பங்களிப்பைச் செய்வதற்கும் இந்நிறுவனம் முன்வந்திருக்கின்றது. 

ஸ்டார்ச் இண்டஸ்ட்ரீஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனமானது, இலங்கையில் சேதன மரவள்ளிக்கிழங்கு பயிர்ச்செய்கை, விற்பனை மற்றும் சீனா, மத்திய கிழக்குகள், ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக மரவள்ளிக்கிழங்கை மாவாக பதப்படுத்துவதுடன், காய்கறியாகவும் ஊட்டச்சத்து உணவாகவும் புற்றுநோய்க்கான மருந்தாகவும் ஆயுர்வேத மருந்தாகவும் விலங்கு உணவாகவும் விற்பனை செய்யத்தக்க வகையில் மரவள்ளி இலைகளை பதப்படுத்தும் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. 

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் கிராமசக்தி செயற்திட்டத்தின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. குறைந்த முதலீட்டில் குறைந்தளவிலான உர மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பாட்டில் விவசாயிகளால் எளிதாக பயிரிடக்கூடிய ஒரு சுதேச பயிரான மரவள்ளியை பயிர்ச்செய்வதற்கு நாடெங்கிலுமுள்ள பயன்படுத்தப்படாத நிலங்களை வினைத்திறனாக பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு காணப்படுவதனால் இந்த நடவடிக்கை நாட்டின் விவசாயத் தொழிற்துறைக்கும் விவசாயிகளுக்கும் ஒரு வரப்பிரசாதமாகவே அமையும். 

காரணம் இலங்கையில் பெறுமதி சேர்க்கப்பட்ட மரவள்ளி மா சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதற்கான பாரிய சந்தை வாய்ப்பை உருவாக்கும் முதலாவது திட்டம் இதுவாகும். இதன்மூலம் முதற்தர மரவள்ளி உற்பத்தி ஏற்றுமதியாளராகவும், உலகத்தரம் வாய்ந்த சேதன விவசாய நிறுவனமாகவும் திகழக்கூடிய வாய்ப்பு எமது நாட்டுக்கு கிடைக்கும்.  

ஸ்டார்ச் இண்டஸ்ட்ரீஸ் (பிரைவேட்) லிமிடெட் (STIN) என்பது பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ச் இண்டஸ்ட்ரீஸ் குளோபல் லிமிடெட் (STIG) நிறுவனத்தின் இலங்கை கிளையாகும். இதன் 10 ஆண்டுகால திட்டம், குறிப்பிடத்தக்க முதலீடு, 300 ஏக்கர் விஸ்தீரணமான நிலப்பரப்பில் இலங்கையின் மிகப் பெரிய மரவள்ளி உற்பத்தியாளராக செயற்படுவதற்கான இயலுமை, பல்வேறு வெற்றிகரமான விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை, இலங்கை அரசாங்கத்துடனான நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் பங்குடைமை ஆகியன STIN நிறுவனம் இலங்கை வரலாற்றில் மிகப் பெரிய விவசாயக் கைத்தொழிற் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு வழிவகுத்திருக்கின்றது.  

அத்தோடு மரவள்ளி மா ஆலை, மரவள்ளி இலை பதப்படுத்தும் தொழிற்சாலை, உயிர் வாயு உள்ளிட்ட எரிவாயு உற்பத்தி நிலையங்கள், நீர்ப்பாசன முறைகள் ஆகியவை இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றது. 

ஸ்டார்ச் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமானது மரவள்ளி பயிர்ச்செய்கை தொழில்நுட்பங்கள் மற்றும் விளைச்சலை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள், ஆரோக்கியமான பயிர்களை உற்பத்தி செய்தல், எதிர்கால தலைமுறை விவசாயிகளை ஊக்குவிப்பதற்கான பயிற்சிகளை வழங்குதல் உள்ளிட்ட புதிய விவசாய தொழில்நுட்பங்களையும் இலங்கையில் அறிமுகப்படுத்தி இருக்கின்றது.

இலங்கையின் ஒரு முன்னணி தொழில் வழங்குனராகவும் உலகச் சந்தைக்கு மரவள்ளி மா உற்பத்திகளை வழங்கும் ஒரு குறிப்பிடத்தக்க உற்பத்தியாளராக திகழும் அதேவேளை, நிலையான வருமானத்தைப் பெற்றுக் கொடுப்பதுடன் விவசாயிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உருவாக்குதல், கிராமப்புறங்களின் பொருளாதார வளர்ச்சியைத் மேம்படுத்துதல் ஆகியன இத்திட்டத்தின் நோக்கமாகும். 

ஸ்டார்ச் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமானது, மரவள்ளி உற்பத்தி சார்ந்த பாரியளவிலான ஒரு தொழில்துறை வளாகத்தை அமைக்கவிருப்பதுடன், கிராமசக்தி மக்கள் இயக்கத்துடன் இணைந்து செயற்பட திட்டமிட்டிருக்கின்றது. இந்நிறுவனத்தின் எதிர்கால நடவடிக்கைகளில் ஓர் அங்கமாக மரவள்ளிக்கிழங்கை அடிப்படையாகக் கொண்ட பயோ எதனோல் ஆலை அமைத்தல் இருக்கின்றது, இதற்காக குறிப்பாக உயர்தர சேதன சான்றளிக்கப்பட்ட மரவள்ளி மாவை உற்பத்தி செய்வதற்கு பொருத்தமான தரமுடைய மரவள்ளி தேவைப்படுவதால் பாரிய மரவள்ளி உற்பத்தியின் தேவை இருக்கின்றது. இந்த பாரிய திட்டமானது, எதிர்வரும் 10-15 ஆண்டுகளில் 20,000 முதல் 100,000 பயிற்சியுள்ள விவசாயிகளை உள்வாங்கக்கூடியதாக இருப்பதால் இலங்கை முழுவதும் சுமார் 100,000 ஏக்கர் வரையான விவசாய நிலங்களில் சேதன மரவள்ளி பயிர்ச்செய்கையை மேற்கொள்ள வழிவகுக்கும். 

இந்த திட்டத்தின் கீழ், கிராமசக்தி மக்கள் இயக்கத்திற்கும் ஸ்டார்ச் இண்டஸ்ட்ரீஸ் (STIN) நிறுவனத்துக்கும் இடையே ஏற்படுத்தப்படும் உடன்படிக்கையினால் இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் சேதன மரவள்ளி பயிர்ச்செய்கையில் ஈடுபடும் உள்ளூர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.  

இலங்கையின் ஏனைய விவசாய பிரதேசங்களும் பின்பற்றத்தக்க மரவள்ளி பயிர்ச்செய்கைக்கான ஒரு விவசாய முறையை நிறுவுவதன் மூலம் அந்தந்த பிரதேசங்களைச் சேர்ந்த கிராமசக்தி மக்கள் இயக்கங்களும் பயனடையக் கூடியதாக இருக்கும். ஆகையால் இத்திட்டமானது, பயிர்ச்செய்கை, நிபுணத்துவ ஆலோசனை மற்றும் நவீன விவசாய நடைமுறைகளில் குறிப்பிடத்தக்க அறிவை வழங்கும். இத்திட்டத்தின் கீழ் இலங்கையின் விவசாயத் துறையை நவீனமயமாக்குவதற்கான புதிய தொழில்நுட்பம் மற்றும் வினைத்திறனான பயிர்ச்செய்கை முறைமைகளை அறிமுகப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதாக அமையும். 

இத்திட்டத்துடன் இணைந்ததாக நடுகை செய்வதற்குத் தேவையான மரவள்ளி தண்டுகளை வழங்குதல், விவசாயிகளிடமிருந்து மரவள்ளி இலைகள் மற்றும் கிழங்குகளை பெற்று STIN தொழிற்சாலைக்கு வழங்குவதற்கான போக்குவரத்து சேவைகள், விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு மற்றும் நிதி பாதுகாப்பு ஆலோசனை, நுண் நிதி, மீளச் செலுத்தப்படும் உத்தரவாதம் போன்றவற்றினால் விவசாயிகளும் உள்ளூர் சமூகங்களும் இந்த திட்டத்தின் ஊடாக மிகுந்த நன்மையடைய கூடியதாக இருக்கும்.

சுகீஸ்வர சேனாதீர

Comments