இருண்ட யுகத்துக்கு இடமளிக்கக் கூடாது | தினகரன் வாரமஞ்சரி

இருண்ட யுகத்துக்கு இடமளிக்கக் கூடாது

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளருமான பொறியியலாளர் சிப்லி பாறூக்குடன் நேர்காணல்  

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படும் பட்சத்தில் மகிந்த  ராஜபக்ஷவே மீண்டும் இந்த நாட்டினுடைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் போன்று   செயற்படுவார், அவருடைய கடந்த ஆட்சிக்காலத்தின் போது முன்னெடுக்கப்பட்ட இன  ரீதியான செயற்பாடுகளையும் சிறுபான்மை மக்களுக்கெதிரான அடக்கு முறைகளையும்  தொடர்ந்தும் முன்னெடுப்பார் என்கிறார்  கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின்  மட்டக்களப்பு தொகுதி அமைப்பானருமான பொறியியலாளர்  சிப்லி பாறூக். அவர் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல்....

கேள்வி: இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதன் நோக்கம் என்ன?  

பதில்: உண்மையில் 2015ஆம் ஆண்டுக்கு முன்னுள்ள காலப்பகுதியில் இந்த நாட்டினுடைய ஆட்சி என்பது மகிந்த ராஜபக்ஸவின்  குடும்ப ஆட்சியாகவே இருந்தது. அவர்கள் நாட்டு மக்களின்  நலனில் அக்கறை கொள்ளாது தன்னிச்சையாக செயற்பட்டது மாத்திரமன்றி இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தினை சூறையாடி நாட்டினை மிகப் பெரும் கடன் சுமைக்குள் தள்ளியிருந்தனர்.  

தற்போதுள்ள 19ஆவது திருத்த சட்டத்தின் பிரகாரம் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சூழ்நிலையிலேயே கோட்டாபய ராஜபக்ஷ  ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.  

ஆகவே கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படும் பட்சத்தில் மகிந்த ராஜபக்ஷவே மீண்டும் இந்த நாட்டினுடைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் போன்று  செயற்படுவார், அவருடைய கடந்த ஆட்சிக்காலத்தின் போது முன்னெடுக்கப்பட்ட இன ரீதியான செயற்பாடுகளையும் சிறுபான்மை மக்களுக்கெதிரான அடக்கு முறைகளையும் தொடர்ந்தும் முன்னெடுப்பார் என்பதில் எவ்விதமான சந்தேகங்களும் கிடையாது.  

மேலும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இல்லாத வகையில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது சிறுபான்மை மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக பேசுவதற்கும், ஆராய்வதற்கும் ஒரு யாப்பு ரீதியான மாற்றம் ஒன்றினை கொண்டுவருவதற்கும் எங்களுக்கு சந்தர்ப்பங்கள் கிடைத்தது.  

கேள்வி: மகிந்த ராஜபக்ஷ இந்த நாட்டை யுத்தத்திலிருந்து மீட்டு வட, கிழக்கில் அமைதியை உருவாக்கியிருந்தார். இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?  

பதில்: யுத்தத்தை நிறைவு செய்ததில் மகிந்த ராஜபக்ஷவுக்கு நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவிக்க வேண்டும். இருப்பினும் யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் இந்த நாட்டிலுள்ள மக்கள் இன, மத, மொழி ரீதியான பாகுபாடுகளை மறந்து நிம்மதியாக வாழ முற்பட்ட வேளையில் தன்னுடைய ஆட்சியினை தக்கவைத்துக் கொள்வதற்காக பொதுபலசேனா போன்ற பெரும்பான்மை அடிப்படைவாத அமைப்புகளை தோற்றுவித்து அதனூடாக இன ரீதியான செயற்பாடுகளை மகிந்த ராஜபக்ஷ  முன்னெடுத்திருந்தார்.  

குறிப்பாக 18ஆவது திருத்தச்சட்டத்தினூடாக இரண்டு தடவைகளுக்கு மேலாக ஜனாதிபதியாக இருக்க முடியும் என்ற ஒரு நிலையில் தனது ஆயுள் முழுவதும் தான் ஜனாதிபதியாக இருக்காலாம் என மகிந்த ராஜபக்ஷ எண்ணியிருந்தார். அதற்கென பெரும்பான்மை சமூகத்தின் 60சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெறும் நோக்கில் பெரும்பான்மை இனவாத சக்திகளுக்கு ஊக்கமளித்து ஏனைய சமூகங்களை இன ரீதியாக நசுக்கும் நடவடிக்கைகளை அவர் முன்னெடுத்திருந்தார்.  

இவ்வாறானதொரு சூழ்நிலையில் அவர் ஏற்படுத்திய யுத்த வெற்றியை பூரணமாக அனுபவிக்கும் வாய்ப்பு இந்நாட்டு மக்களுக்கு இல்லாமல் போனது.  

கேள்வி:. கடந்த காலங்களைப் போன்றே ஐக்கிய தேசிய கட்சி இணைந்து ஏற்படுத்திய நல்லாட்சி அரசாங்கத்திலும் முஸ்லிம்களுக்கு எதிரான பல வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றிருந்தது. இது சம்மந்தமாக நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்?  

பதில்: குறிப்பாக இந்த அடிப்படைவாதம் என்பது 2010ஆம் ஆண்டிற்கு முன்னரான காலப்பகுதிகளில் பேரினவாத சக்திகளிடம் அதிகமாக வேரூன்றியிருக்கவில்லை. இருப்பினும் இவ்வாறான இன ரீதியான அமைப்புகளை உருவாக்கி அவற்றை போஷித்து வளர்த்தெடுத்த பெருமை மகிந்த ராஜபக்சவையும்  கோட்டாபய ராஜபக்சவையுமே சாரும்.  

இருப்பினும் நல்லாட்சி அரசாங்கமொன்று எற்படுத்தப்பட்டதற்கு பிற்பாடும் அவர்கள் உருவாக்கிய இத்தகைய அடிப்படைவாத அமைப்புகளினுடைய எச்சங்களே நாட்டில் பல்வேறு குழப்ப நிலைகள் உருவாவதற்கு காரணமாக அமைந்ததது. இவ்வாறானதொரு நிலையில் அடிப்படைவாத சக்திகள் சிறுபான்மை மக்களுக்கெதிராக இன ரீதியான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றபோது பாதுகாப்பு அமைச்சுக்கு பொறுப்பாக இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பாராமுகமாகவே செயற்பட்டிருந்தார்.  

குறிப்பாக சிறுபான்மை மக்களின் வாக்குகளினூடாக ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேன  எதிர்காலத்தில் அந்த சிறுபான்மை மக்களின் வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சியின் பக்கம் சென்றுவிடாமல் தன்னுடைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடைக்கவேண்டுமென்ற எண்ணத்தில் சிறுபான்மை மக்களுக்கெதிரான இன ரீதியான நடவடிக்கைகளின்போது அவற்றை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு சிறுபான்மை இன மக்கள் முன்னிலையில் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஐக்கிய தேசிய கட்சியினை குற்றவாளியாக சித்தரிப்பதற்கு முற்பட்டிருந்தார்.  

எனவே இம்முறை தேர்தலில் கட்சிகள் தனித்து போட்டியிடும் ஒரு நிலையில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியினை கைப்பற்றுமிடத்து சிறுபான்மை மக்களினுடைய பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் நிச்சயமாக சீர்செய்யப்படும் என நாங்கள் நம்புகின்றோம்.

எம்.எஸ்.நூர்தீன்

Comments