இனவாதத்தை வலுவூட்டுவது பிரச்சினைகளின் கவனத்தை தவிர்க்கும் கபட முயற்சி | தினகரன் வாரமஞ்சரி

இனவாதத்தை வலுவூட்டுவது பிரச்சினைகளின் கவனத்தை தவிர்க்கும் கபட முயற்சி

அதிகாரத்துக்கு வந்த மறுநாள் (நவம்பர், 17) சிறையிலிருக்கும் அத்தனை இராணுவத்தினரையும் விடுதலை செய்வேன்” என்று பகிரங்க அறிவிப்பைச்செய்திருக்கிறார் பொதுஜன பெரமுனவின் ஜனாபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஸ. (தேர்தல் என்றால் இப்படி ஆயிரம் கதைகளுக்கு – பகடிகளுக்கு – பஞ்சமிருக்காது) 

கோட்டபாய சொல்வது சாத்தியமா இல்லையா? அவர் சொன்ன மாதிரியெல்லாம் நடக்குமா இல்லையா என்பது வேறு விசயம். 

ஆனால், இப்படி ஒரு அறிவிப்பைப் பகிரங்கத்தளத்தில் ஜனாபதி வேட்பாளர் ஒருவர் செய்யலாமா? ஏனெனில் இதுவொரு சட்ட விவகாரம். நீதிமன்றத்தின் ஆணையோடு சம்மந்தப்பட்டது. சிறையில் உள்ள படையினர் நீதிமன்றத்தீர்ப்பின் அடிப்படையில் அல்லது சட்டவிதிமுறைகளின் கீழ்தான் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆகவே அவர்களை விடுவிப்பதும் சட்ட ஏற்பாட்டின்படியே நடக்க வேண்டும். 

நீதிமன்றத்தை நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் இழுத்துப் பிடிக்கலாம், வளைத்தெடுக்கலாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருதிச் செயற்பட்டதனால் ஏற்பட்ட நிலைமைகளை கடந்த 2018 ஒக்டோபர் மீறல்கள் நினைவூட்ட கிறதல்லவா! 

ஆகவே இதை நீதிமன்ற ஏற்பாடுகள், உத்தரவு, ஆணை என்ற அடிப்படையில்தான் கையாள முடியும். வேண்டுமானால் இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளைக் குறித்து மீள்விசாரணைகளைச் செய்வதற்கு ஏற்பாடு செய்யலாம் என்று ஓரளவுக்குச் சொல்லலாம். அதுகூட சட்ட விவகாரத்துக்குரியதே. நீதிமன்ற நடைமுறைகளின்படியே சாத்தியமாகக் கூடியது. 

இன்னொரு வழிமுறை உண்டு. அது ஜனாதிபதி விசேட கவனமெடுத்துப் பொதுமன்னிப்பளிப்பது என்பது. அதுவும் தேர்தல் மேடையில் சொல்லப்படுவதைப்போல எளிய விசயமல்ல. அதற்கும் ஏராளம் நடைமுறைச் சிக்கல்களும் ஏற்பாடுகளுமுண்டு. 

இதைப்பற்றியெல்லாம் யோசிக்காமல் சனத்திரளைக் கண்டவுடன் வாக்குறுதிகளை கண்டபாட்டுக்கு அள்ளிவிடுவது சனங்களை ஏமாற்றுவதாகவே அமையும். இதை எதிர்கால ஜனாதிபதியாகத் தன்னைக் கருதும் ஒருவர் செய்வது முறையல்ல. அதைவிடவும் முறையற்றது, முன்னாள் பாதுகாப்புச் செயலராக இருந்த ஒருவர் இதைச்செய்வதாகும். 

இதையிட்டு எந்த ஆட்சேபனைகளையும் செய்யாமல் அதை அதே மேடையில் அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறார் முன்னாள் ஜனாபதியும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ஸ. குறைந்த பட்சம் அந்தச் சந்தர்ப்பத்தில் மேடையில் எழுந்து சென்று சகோதரரின் காதில் மெதுவாக “தம்பி அளந்து பேசு” என்றாவது சொல்லியிருக்கலாம் அவர். 

இதைப்போல கோட்டபாயவின் சகாக்களான ஜீ.எல். பீரிஸ் தொடக்கம் வாசுதேவ நாணயக்கார வரையில் மூத்த அரசியல் தலைவர்கள் பலரும் அங்கே பிரசன்னமாகியிருந்தனர். இவர்கள் அனைவரும் இதைப்பற்றி எந்த விளக்கமும் சொல்லவில்லை. இனியும் சொல்லப்போவதில்லை. 

எல்லோருக்கும் இன்று தேவைப்படுவது வெற்றியே. அதற்காக அவர்கள் எதையும் செய்யத்தயார். எந்த வழியிலும் பயணிக்கத்தயார். 

ஆனால், இவர்களில் ஒருவருக்கும் சிறையில் முடிவற்ற தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கும் தமிழ் அரசியற் கைதிகளைக் குறித்து நினைவுக்கு வரவில்லை. அந்த அக்கறையுமில்லை. ஆகவே அதைப்பற்றி எவரும் பேசவில்லை. இதை கோட்டபாயவுக்கு ஆதரவளிக்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி ஆகியவை கூடப் பேசவில்லை. கூடவே, காணாமலாக்கப்பட்டோரைப்பற்றியும் கோட்டபாய தரப்பு ஒன்றுமே சொல்லவில்லை. 

காணாமலாக்கப்பட்டோரைப்பற்றி அவர் எப்படிச் சொல்ல முடியும்? அந்தப் பிரச்சினையோடு அவருடைய பெயருமல்லவா சம்பந்தப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது அவர் எப்படி அந்த நெருப்புக்குள்ளே கையை வைப்பார்? என்கிறார் மூத்த அரசியல் அவதானியான இரத்தினசிங்கம். 

இதெல்லாம் தேர்தல் நாடகம். அரசியலில் இதுபோல ஆயிரத்தைக் கண்டிருக்கிறோம். அரசியலில் இது சகஜம். இதையெல்லாம் நாம் பொருட்படுத்தத் தேவையில்லை என்று எளிதில் கடந்து சென்றுவிட முடியாது. 

ஏனெனில், ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர், அதிலும் முன்னர் பாதுகாப்புச் செயலராக இருந்த ஒருவர் பொறுப்பற்றுப் பேச முடியாது. அப்படிப் பேசினால் அதைக்குறித்து நாம்தான் எச்சரிக்கையோடிருக்க வேண்டும். 

பொதுஜன பெரமுனவும் கோட்டபாயவும் சிங்கள மக்களின் வாக்குகளைக் குறிவைத்துத் தேர்தல் வியூகத்தை வகுத்திருப்பதால், அவர்கள் சிங்களச் சமூகத்துக்கு இனிக்கும் என்று கருதத்தக்க மாதிரியே நடந்து கொள்கின்றனர். இந்த வகையில்தான் அவர்களுடைய தேர்தற்பரப்புரைகளும் அரசியல் முன்னெடுப்புகளும் உள்ளன. 

அப்படியென்றால் இது மிக ஆபத்தான ஒரு நிலையே. இலங்கைத் தீவை மீண்டும் ரத்தக்களரிக்கே இது கொண்டு செல்லும். முன்பு இதை ஒத்த இன ரீதியான கடும்போக்கையும் அதற்கான தந்திரங்களையும் ஜே.ஆர். ஜெயவர்த்தன பகிரங்கமாக – திமிர்த்தனமாக முன்னெடுத்தார். போர் என்றால் போர். சமாதானம் என்றால் சமாதானம் என்று. இதற்குத் தலைசாய்க்கவும் கை தட்டவும் கூட நின்று ஆதரவளிக்கவும் அப்போதும் பலர் இருந்தனர். அதன் விளைவுகளை நாடு பிறகு எப்படியெல்லாம் அனுபவித்தது என்பது எல்லோருக்குமே தெரியும். 

இப்பொழுது இதையே கோட்டபாய – பொதுஜன பெரமுன தரப்புச் செய்கிறது என்றால் வரலாறு முன்னோக்கிப் பயணிக்கிறதா? பின்னோக்கிச் செல்கிறதா? என்பதை நாம்தான் மதிப்பிட்டுக் கொள்ள வேண்டும். 

தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் என்னென்ன வாக்குறுதிகளும் அறிவிப்புகளும் வெளியாகும் என்று தெரியவில்லை. எப்படியோ நவம்பர் 16 க்கு முன்பு ஏராளம் வரலாற்று நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கப்போகிறோம் என்பது மட்டும் உண்மை. கோட்டபாயவுக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் சற்றும் குறைந்தவர்களில்லை என்று சொல்கிறார் சஜித் பிரேமதாசவும். கூடவே அவரை ஆதரிக்கும் தரப்பினரும் ஐ.தே.கவும். 

இலங்கையைப் பௌத்த கேந்திர நிலையமாக மாற்றுவேன் என்று சொல்கிறார் சஜித். இதற்காக இலங்கையில் சர்வதேச பௌத்த பல்கலைக்கழகமொன்றையும் உருவாக்குவேன் என்று மகாசங்கத்தினருக்கு வாக்குறுதி அளித்திருக்கிறார். கூடவே நாடுமுழுவதிலும் ஆயிரத்துக்கு மேற்பட்ட பௌத்த விஹாரைகளைக் கட்டுவேன் என்றும் சொல்லியிருக்கிறார். 

இப்பொழுது நாட்டுக்குத் தேவையாக இருப்பது இதுதானா? 

வேறொன்றுமில்லை. கோட்டபாயவைச் சைற் பண்ண வேண்டுமென்றால், அதற்கு இந்த மாதிரி சிங்கள பௌத்த மனங்களுக்கு இனிப்பூட்ட வேண்டும். அது கோட்டபாயவை விட, பொதுஜனபெரமுனவை விட இந்த இனிப்பூட்டல் கூடுதலாக இருக்க வேண்டும் என இந்தத் தரப்பு விரும்புகிறது. 

இப்படிச் சிந்திக்கத் தொடங்கினால் அது படு இனவாதத்தில்தான் போய் முடியும். அப்படியென்றால், அடுத்து வரும் நாட்களில் இது இன்னும் இன்னும் முற்றி உச்ச நிலைக்குச் செல்லக்கூடும். ஆகவே இந்தத் தீய வழியில் நடக்கப்போகும் நிகழ்ச்சிகளை நாம் இந்தத் தேர்தல் காலத்தில் பார்க்கலாம். 

ஏறக்குறைய இதை ஒத்தவிதமாகவே ஜே.வி.பியும் நடக்க வேண்டிய நிர்ப்பந்தம். ஆனால், ஜே.வி.பி குறிப்பிட்டுள்ள ஒரு விசயத்தை நாம் கவனிக்கலாம். தாம் அதிகாரத்துக்கு வந்தால் உடனடியாக – முதல்வேலையாக – தமிழ் அரசியற் கைதிகளை விடுவிப்போம். கூடவே விவசாயிகளின் பிரச்சினையைக் கவனிப்போம் என்று சொல்லியிருக்கிறது. 

ஆனாலும் ஜே.வி.பியும் தமிழ் பேசும் தேசிய இனங்களின் பிரச்சினைகளைக் குறித்து மறந்தும் வாய் திறக்கவில்லை. அது சிங்களச் சமூகத்திடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்தி விடக்கூடும் என்று அஞ்சுவதாகத் தெரிகிறது. 

இந்த அச்சமெல்லாம் இந்தக் கட்சிகளுக்கும் இன்றைய தலைவர்களுக்கும் ஏன் ஏற்படுகிறது? 

இலங்கையில் உள்ள பிரச்சினைகளைக் குறித்து யாருக்கும் ஒன்றுமே தெரியாதென்றில்லை. தீராதிருக்கும் இனப்பிரச்சினையைப்பற்றி, சுமையாகியுள்ள பொருளாதார நெருக்கடிகளைப்பற்றி, இயற்கை வளச் சேதங்களைப் பற்றி, அபிவிருத்திக்குத் தடையாக இருக்கும் காரணிகளைப்பற்றி, கடன்சுமையைப்பற்றி, சீராக்க வேண்டிய சர்வதேச உறவைப்பற்றி, நாட்டின் நன்மதிப்பைப்பற்றி, பாதிக்கப்பட்ட மக்களின் அவல நிலையப்பற்றி,  அதைச் சீராக்க வேண்டியதைப்பற்றி, தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளைப்பற்றி, இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினையைப்பற்றி... இப்படி நம்முடைய காலடியிலிருந்து உச்சந்தலை வரை நம்மை மூடிக்கொண்டிருக்கும் அத்தனை பிரச்சினையைப்பற்றியும் மக்களுக்கும் தெரியும். தலைவர்களுக்கும் தெரியும். 

அப்படித் தெரிந்த பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதை விடுத்து, அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பதை விடுத்து, இப்படி இனவாதத்தில் தேரோட முயற்சிப்பது இரத்தித்தில் குளிப்பதற்கு விரும்புவதன்றி வேறென்ன? 

இதுதான் இதுவரையான அரசியலிலும் நடந்தது? 

இதனால்தானே நாடு இரத்தத்தில் குளித்து இருளில் மூழ்கியது. அந்நிய சக்திகளெல்லாம் இதை ஒரு வாய்ப்பாகக் கொண்டு இலங்கைக்குள் தலையை நுழைக்க முடிந்தது. இப்போதும் அந்தச் சக்திகள் நம்மை விட்டு நீங்கவில்லை. இந்த ஜனாதிபதித்தேர்தலிலும் அந்தச் சக்திகள் மிகத் தீவிரமாக இயங்குகின்றன. தமது விருப்பத்திற்கேற்றவிதமாக ஆட்களைத் திரட்டுகின்றன. அணி சேர்க்கின்றன. வளைத்தெடுக்கின்றன. இதற்காகத் தினமும் ஒவ்வொரு கட்சியாகவும் அணிகளாகவும் சந்திப்புகளைச் செய்து கொண்டிருக்கின்றன. அபிப்பிராய உருவாக்கிகள், கருத்துருவாக்கிகள் போன்றோரைக் கூப்பிட்டு அறிவுறுத்தல்களை விடுக்கின்றன. 

ஆக மொத்தத்தில் இனவாதத்தை வளர்க்க வளர்க்க வெளிச்சக்திகள் உள்நுழையக் கூடிய நிகழ்தகவுகளே உருவாகின்றன. இதைத்தான் ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்று சொன்னார்கள். ஆனாலும் நம் தலைவர்களுக்கும் மக்களுக்கும் இதுதான் தேவையாக உள்ளது. தங்கள் தலை போனாலும் பரவாயில்லை. இலங்கையை எவர் எடுத்து ஆண்டாலும் பரவாயில்லை. நாங்கள் (தமிழர்களும் சிங்களவர்களும் முஸ்லிம்களும்) ஒன்றாக இருக்க மாட்டோம். நாம் மற்றவர்களை நம்பவும் மதிக்கவும் மாட்டோம் என. 

இது மூடத்தனமே. ஒரு விதமான நோயே. இனவாத நோய் என்பது இதுதான். உண்மையில் இந்தத் தேர்தலில் போட்டியிடும் அத்தனை வேட்பாளர்களும் மேலே சுட்டப்பட்ட பிரச்சினைகளுக்குரிய தீர்வைப்பற்றியே பேச வேண்டும். அதை அவர்கள் தீர்க்கும் வழிமுறைகள் வேறுபடலாம். அதுதான் அவர்களுடைய அடையாளம். வேறுபாடு, வித்தியாசங்கள். ஆனால், இதை ஒவ்வொருவரும் ஜனநாயக ரீதியாக எப்படி அணுகப்போகின்றனர் என்பதையே இவர்கள் வெளிப்படுத்த வேண்டும். 

இந்தத் தேர்தலில் ஒரு புதிய வெளிப்பாட்டுக்கு பவ்ரல் அமைப்புக் களம் உருவாக்கியுள்ளது. போட்டியிடும் வேட்பாளர்களை அது பொதுமக்களின் முன்னிலையில் நிறுத்த முயற்சிக்கிறது. வேட்பாளர்களுக்கிடையிலும் மக்களுக்கிடையிலும் விவாதக்களத்தை உருவாக்கி, மக்களின் கேள்விகளுக்கு வேட்பாளர்கள் பதிலளிக்க வேண்டிய ஒரு நிலையை உண்டாக்கியுள்ளது. இது ஓரளவுக்கு ஆறுதலான விசயம். ஆனாலும் இதையும் மீறித் தங்கள் பயணத்தைத் தொடரவே வேட்பாளர்கள் முயற்சிக்கின்றனர். 

இது ஒன்றும் நல்ல சகுனமல்ல. 

1994 இல் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். தமிழ்ச்சமூகத்துக்குச் சிங்களச் சமூகம் இழைத்த அநீதிக்குப் பரிகாரம் காணவேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு என்று சொல்லியே தேர்தலில் நின்றார் சந்திரிகா குமாரதுங்க. அதைச் சிங்களச்சமூகமும் ஏற்றது. ஏனைய சமூகத்தினரும் ஆதரித்தனர். 

2005, 2010 தேர்தல்களில் இனப்பிரச்சினைத்தீர்வுக்கு 13 பிளஸ் என்று அறிவித்தே மகிந்த ராஜபக்ஸ தேர்தலில் நின்றார். வெற்றியையும் பெற்றார். 

2015 இல் மைத்திரி – ரணில் கூட்டணி கூட இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அரசியல்சாசன மாற்றம் என்று சொல்லியே நின்றது. வென்றது. 

இப்பொழுது மட்டுமென்ன இதைப்பற்றிப் பேசவே முடியாது என்ற புதுக்கதைகள்? 

இனவாதத்தை வலுவூட்டுவதன் மூலம் நாட்டின் ஏனைய பிரச்சினைகளின் மீதான கவனம் குவிவதைத் தவிர்க்கும் முயற்சியே இது. இது இந்த நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இதைக்கடந்தும் இந்த வேட்பாளர்கள் வெல்லக்கூடும். இவர்களைச் சனங்கள் ஆதரவளிக்கத்தான் போகிறார்கள். அப்படியென்றால் நாடு எப்படி ஆகப்போகிறது? 

கருணாகரன்

Comments