தெல்லிப்பழையில் 'விந்து' வங்கி | தினகரன் வாரமஞ்சரி

தெல்லிப்பழையில் 'விந்து' வங்கி

யாழ். தெல்லிப்பழை கூட்டுறவு வைத்தியசாலை கருவுறுதல் பரிந்துரை நிலையம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. குழந்தை பேற்று மருத்துவர் நிலந்த ரட்நாயக்காவினால் இந்த வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டது. நைன்வெல்ஸ் வைத்தியசாலையுடன் இணைந்து இயங்கவுள்ள இந்த வைத்தியசாலை மூலம் விந்து பரிசோதனை உட்பட ultra sound பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.  

யாழ்ப்பாணத்தில் முதன் முதலில் இந்த வைத்தியசாலை திறக்கப்படுவதால் யாழ்ப்பாணத்தில் சிகிச்சை மூலம் குழந்தையைப் பெற்றுக்கொள்ள விரும்புவர்கள் கொழும்புக்கு போகாமலே இந்த பரிசோதனைகளை இந்த வைத்தியசாலையிலேயே மேற்கொள்ள முடியும்.  

போர் தின்ற வாழ்வில் இருந்து மீளமுடியாமல் இருக்கும் வடக்கு மக்கள் உடல் ரீதியாகவும் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அவர்கள் உடல் ரீதியான பல நோய்களுக்கு ஆளாகி வருவது பெரும் பிரச்சினையாக இருக்கிறது. அதாவது அந்த நோயில் இருந்து தம்மை விடுவிக்க முடியாத அளவுக்கு வசதி வாய்ப்பின்றி தவிக்கின்றனர்.  

போரின் பின்னர்தான் மகப்பேறு தொடர்பான சிக்கல்களுக்கு இவர்கள் முகம் கொடுத்து வருகின்றனர். இதன் பொருட்டு ஏராளமானோர் மகப்பேறு தொடர்பான சிகிச்சையை அதிகளவில் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை இந்தியா சென்று சிகிச்சை மூலம் குழந்தை பெற்று வந்தவர்கள் இன்று இலங்கையில் அதாவது யாழ்ப்பாணத்தில் சிகிச்சை மேற்கொண்டு குழந்தை பெறும் வாய்ப்பை பெறுவதற்கு இந்த வைத்தியசாலை உங்களுக்கு உதவும். இங்கு நாளுக்கு நாள் சிகிச்சை மூலம் குழந்தை பெறும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஒருபுறம் சிகிச்சையில் வெற்றியடைத்தாலும் மறுபுறம் இயற்கையாகவே குழந்தை பெறும் தகுதியை இழக்கும் பெண்களின் வீதம் அதிகரித்து வருவது கவலை தரும் விடயமாகும். சிகிச்சை மூலமும் குழந்தைப் பேற்றை அடைய முடியும் என்றாலும் அது நூறு சதவீதம் பலன் அளிக்கும் என்று சொல்வதற்கில்லை.  

தம்பதியினர் மத்தியில் மகப்பேறின்மைக்கு போரின் தாக்கம் ஒரு காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்பட்டாலும் அதனை விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்க எவரும் முன்வருதில்லை. அதாவது போரின் தாக்கத்தால் ஏற்ப டும் மனப்பயத்தினாலும் மனஉளைச்சலினாலும் பெண்களுக்கு உடல் ரீதி யாக பாதிப்புகள் இடம்பெற்றிருக்கக் கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் யாழ்ப்பாணம் விவ சாய பூமியாகத் திகழ்வதால் பயிர்ச் செய்கைகளுக்கு பயன்படும் கிருமி நாசினிகளால் இந்தப் பிரச்சினை எழுவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.  

அளவுக்கு அதிகமான கிருமி நாசினிகளைப் பயன்படுத்தி விளைச்சலை அதிகரித்து அதனை உட்கொள்ளும் போது பெண்களுக்கு இரசாயன பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.  

போர்க் காலங்களில் சரி போர் முடிவடைந்த பின்னாளிலும் சரி பிறக்கும் குழந்தைகள் சத்துக் குறைபாட்டுடன் பிறக்கின்றனர். போரின் போது குண்டுகளின் நச்சுப் புகைகளால் இக் குறைபாடு தோற்றம் பெற்றிருக்கலாம். என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.  

இனி யாழ்ப்பாணத்தில் சிகிச்சையை மேற்கொண்டு குழந்தையை பெற்றுக் கொடுக்கும் மருத்துவர் என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போம்.  

யாழ்ப்பாணத்தில் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பெற்றுக் கொடுக்கும் சிகிச்சை முறையானது 100 இற்கு 60 வீதம் தான் வெற்றியளித்திருக்கிறது என்று மருத்துவர் நிலந்த ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கும் போது,  

யாழ்ப்பாணத்தில் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பெற்றுக்கொடுக்கும் சிகிச்சையை நான் ஆரம்பித்து ஒரு வருடம் ஆகப் போகிறது. இந்த சிகிச்சை முறைக்கு இங்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.  

“நான் யாழ்ப்பாணம் வரும் போது இங்கு என்னை சந்திக்க வரும் குழந்தை இல்லாத தம்பதியினரிடம் அவர்களின் பிரச்சினை தொடர்பில் ஆராய்வேன். சிகிச்சையில் நிறைய படிமுறைகள் உள்ளன. பல தளத்தில் இருந்து சிகிச்சைகள் இடம்பெறுகின்றன. விந்து வீரியம் இல்லை என்றால் நன்கொடையாளர்களை நாடுகிறோம்.  

IUI சிகிச்சை முறையானது கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் நடக்கும் சிகிச்சையாகும். கணவனின் விந்தில் வீரியம் இல்லை என்றால் IVF சிகிச்சை முறையானது மேற்கொள்ளப்படுகிறது. இந்த சிகிச்சை முறையானது நன்கொடையாளர்களிடம் இருந்து விந்தை வாங்கி மேற்கொள்ளும் சிகிச்சை முறையாகும். கணவனின் விந்து சரிவரவில்லை என்றால் விந்து நன்கொடையாளர்களிடம் இருந்து பெறுவோம். அந்த நன்கொடை வங்கி தெல்லிப்பழையில் இருக்கிறது” என்றார்.  

குழந்தை பெறுவது குறைந்து வருவதற்கு என்ன காரணம் என்று கேட்டால் போரும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார். ஆனால் கிருமிநாசினிகளால் தான் விளைவு அதிகம் என்பது அவரது வாதம். போர்க் காலங்களில் இடம்பெயர்ந்து அலைந்து திரிந்தும் பதுங்குகுழிகளில் வாழ்வை நகர்த்தியதால் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் உடல் அளவிலான பாதிப்பை எதிர்கொண்டுள்ளார்கள் என்பது அவர் கூறும் விஷயம்.  

போரின் பாதிப்புடன் சேர்ந்து உண்ணும் உணவு வரை உடலில் நஞ்சு கலந்துள்ளதால் புற்றுநோய் உட்பட பல நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். குழந்தை பேறும் இல்லாமல் போவதற்கு இதுவும் ஒரு காரணம் என்பது அவர் கூற்றாகும். யாழ்.தெல்லிப்பழை கூட்டுறவு வைத்தியசாலை கருவுறுதல் பரிந்துரை நிலையம் நைன்வெல்ஸ் வைத்தியசாலையுடன் இணைந்து இயங்கவுள்ளது. இந்த வைத்தியசாலையில் விந்து பரிசோதனை உட்பட ultra sound பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.  

மகப்பேற்று சிகிச்சையை யாழ்ப்பாண மக்கள் பல சிரமங்களின் மத்தியில் கொழும்பு வந்து சிகிச்சையை மேற்கொள்வதால் யாழ்ப்பாணத்திலேயே சிகிச்சை நிலையத்தை திறப்பதன் மூலம் மக்களின் அலைச்சலை குறைக்க முடியும் என்று இவர் நம்புகிறார். இங்கே ஒரு சிகிச்சை நிலையத்தை திறந்துள்ளோம்.  

இந்தியா சென்று பெரும் தொகை பண செலவு செய்து சிகிச்சையை மேற்கொள்ள வேண்டிய தேவை இனி இல்லை. இங்கேயே குறைந்த செலவில் சிகிச்சையை மேற்கொள்ள முடியும்.  

குழந்தைப் பேறு வீழ்ச்சிக்கு விவசாய உற்பத்திக்கு பயன்படும் கிருமிநாசினிகளும் ஒரு காரணமாக அமைவதுடன். முதிர்ந்த வயதும் காரணமாக அமைகிறது. மேலும் மனவிரக்தி அதாவது போர் இடம்பெற்ற மண்ணில் போருக்கு முகம் கொடுத்தவர்கள் என்ற வகையில் அவர்கள் அந்த அசாதாரண சூழலில் இருந்து இன்றுவரை மீள முடியாதுள்ளனர். எனினும் வாழ்க்கை மிகவும் முக்கியம் என்பதால் புதிய சூழலுக்கு தங்களை மாற்றிக் கொண்டு பழக வேண்டும் என்பது மருத்துவரின் ஆலோசனையாகும்.    

கே. செல்வகுமார்

Comments