நாள், கோள், நற்பலன் | தினகரன் வாரமஞ்சரி

நாள், கோள், நற்பலன்

மேஷம் 

மேஷ ராசி அன்பர்களே! திங்கள் பகல் வரை சஞ்சலங்கள் தரும் செய்திகளை எதிர்கொள்ள நேரும். மனமும் தேகமும் ஒரு நிலைப்பட்டு தொடரும் நாட்களைத் திடமாக, நிதானமாகச் சந்திக்கும் வலிமை தானாக உருவாகும். எடுக்கும் முயற்சிகளுக்கு உறுதியற்ற மழுப்பலான பதில்களே வந்து சேரும்போது, மனம் அசதியில் ஆழ்ந்து போய்விடும். தேவையற்ற கெடுபிடிகளும் குறுக்கிடுவதால், என்ன செய்வது என்பது கேள்விக் குறியாய் மாறித் துன்பங்கள் தொடர்வதையே காட்டும். வியாழன், வெள்ளி சனி நாட்களில் முரண்படுதல்களையும், வாக்கு வாதங்களையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். எதிர்பார்த்திருந்த நல்ல முடிவுகள் விரும்பியவாறு அமையாத சூழ்நிலை ஏற்பட்டால் குழம்பாது சமாளிக்கத் தயாராயும் இருப்பது நல்லது.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே! லாவகமாகக் காரியங்களைக் கையாண்டு வெற்றிகளை எளிதில் குவிக்கும் சந்தர்ப்பங்கள் ஏராளமாய்க் கிடைக்கும். மேலும், சுற்றமும், நண்பர்களும் சகாயங்கள் செய்வதினால் அபரிமிதமான இலாபங்களை அடைய இடமுண்டு. மனதிற்குப் பிடித்தவைகளை வாங்கித் திருப்தியடையும் நேரமும் இதுதான். தொந்தரவுகளும், தொல்லைகளும் வாழ்வில் இல்லாமல் போவதில்லையே? அவைகளையும் எதிர்கொண்டு, சந்தோஷங்களையும் அனுபவிப்பதுதான் வாழ்வாகும். தொழிலில் புதிய முதலீடுகள் அதிக இலாபத்தைக் தரும். பங்காளிகளும் ஒத்துழைப்பார்கள். இல்லறத்தில் பிரச்சினைகள், பிரிவுகள் உள்ளவர்கள் தங்கள் மனத் துயரங்களை இப்போது முயன்றால் தீர்த்துக் கொள்ள முடியும். கிடப்பில் கிடக்கும் திருமணப் பேச்சுக்களைத் தூசிதட்டித் தொடங்கினால் கல்யாண வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே! திங்கள் முதல் புதன் வரையிலான நாட்கள் வியாபாரத்தில் இலாபங்களைத் தரும். பண முடக்கம் இருக்காது. செலவுகள் கட்டுப் பாட்டில் அமையும். வழக்கமான தொழில் தொந்தரவுகள் புதனுக்குப் பின் தலைவிரித்தாடும், ஓரம் கட்டி, வேடிக்கை பாருங்கள். கடன் வாங்கித் தொழில் செய்ய முயலாதீர்கள். இது அதற்கேற்ற தருணம் இல்லை. இது போதாதென்று குடும்பத்திலும் பெரும் பிரச்சினைகளை எழுப்புவார்கள். உதவிகள் செய்கிறேன் என்று சொல்லும், வரும் உதவாக்கரைகளால் ஒட்டுமொத்தத் துன்பங்களும் பெருகி ஊர் உங்களைப் பார்த்து சிரிக்க வைக்கும். உங்களைத் தலை சாய்த்துத் தூங்க விடாமல் எல்லாப் பக்கங்களிலும் துன்பங்கள் ஓலமிடும். உங்களைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு விளக்கம் சொல்ல முயற்சிக்க வேண்டாம்.

கடகம்

கடக ராசி அன்பர்களே! சீரும் சிறப்புமாகப் பல காரியங்கள் நடந்தேறிக் கொண்டிருக்கும். ஞாயிறு, திங்கட் கிழமைகளில் சிக்கல்கள் வந்து போகும். ஆனாலும் திங்கள் பகல் பொழுதிற்கு மேல் நன்மைகளும் இலாபங்களும் சேரும். எதிர்பாராத சாதனைகளும் பெரிய நிம்மதியைத் தரும். பெரியவர்களின் ஆசீர்வாதங்களும், வழிகாட்டல்களும் இருக்கும். இனம் புரியாதவகையில் மனம் மகிழ்ச்சியைக் கொண்டாடும். குடும்பமும் சுற்றமும் கை கோர்த்து சகாயங்களை வழங்குவார்கள். முயற்சிகள் பலனளிப்பதோடு, சென்ற இடங்களில் மரியாதைகளும், அங்கீகாரங்களும் கிடைப்பதும் சந்தோஷத்தைத் தரும். யுவதிகளும், யுவர்களும் திருமண வாழ்க்கையைத் தொடங்க வாய்ப்புகள் வரும்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே! முகம் கோணாமலும், எந்த எதிர் விளைவுகளையும் பொருட்படுத்தாமலும் சிக்கல்களை மிக லாவகமாகச் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

அது சிம்ம ராசிக் காரர்களுக்கு மட்டுமே உரித்தான சிறப்பாகும். மலை போல் தொல்லைகள் வந்தாலும் மண்டியிடாத மாபெரும் வீரர்கள் தாங்களே. நெருங்கிய உறவினர்கள் செய்யும் அட்டகாசங்களை ஒரு போதும், ஏன் மனைவியிடமோ அல்லது வேறு எந்த அந்நியோன்னிய உறவுகளிடமோ சொல்லாத அன்பர்கள்தான், எதனாலும் தளும்பாத சிம்ம ராசிக்காரர்கள். பொருட் சேதங்களையும் அலட்டிக் கொள்ளாமல் கையாளும் பெருந்தன்மை வேறு எந்த ராசிக்காரர்களுக்கும் வராது, இல்லை. தொழில் சிறப்பாக நடந்தேறுவதும், லாபங்களும், பொருளாதார முன்னேற்றங்களும் படிப்படியாக உயரும்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே, களைத்துப்போனாலும் கண்ணயர்ந்து தூங்க முடியாக வாழ்க்கைதான் அமைந்துள்ளது.

சீர்கேடுகளையும், சீரழிவுகளையும் சந்திப்பதோடு சுமைதாங்கியாகவும் இருக்கும் நிலை பரிதாபகரமானதுதான், என்றாலும் அதையெல்லாம் கடந்து சிரித்த முகத்துடன் எவருக்கும் ஏதும் தெரியாத வகையில் வாழும் சாமர்த்தியம் உங்களுக்கு மட்டும் தான் உண்டு. திட்டங்களைச் செயல் வடிவத்திற்கு மாற்ற எடுக்கும் முயற்சிகள் யாவும் தடைபட்டுப் போய் தடுமாற்றமே எஞ்சி நிற்கும். குடும்பமும், உறவுகளும், நண்பர்களும் உங்களைச் சரியாகப் புரிந்துகொள்ள நாட்கள் செல்லும். ஆனால் புடம் போட்ட தங்கமாக ஜொலிக்கும் நாளும் வரத்தான் போகிறது.

துலாம்

துலா ராசி அன்பர்களே! அறிவுக் கூர்மையும், சளைக்காத உழைப்பும் உங்களது வெற்றிகளுக்குத் தாரக மந்திரமாகத் திகழ்கிறது. நேரடியாகவே உண்மைகளைப் பேசும் பேராற்றல் ஒரு சாதகமான நிலையை எப்போதும் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும். குழந்தைப் பாக்கியமும் வாய்க்கும். இல்லற தொடர்புகளில் விரிசல்கள் இருந்தால் அவைகளை மூட்டை கட்டி தூரத் தூக்கி எறிந்து சமாதான கொடியை உயர்த்துங்கள். நலமே பயக்கும். யுவ, யுவதிகள் திருமண வாழ்க்கையை முன்னெடுக்க முயலுங்கள். காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. உங்களைப் பார்த்தவுடன் அங்கீகாரம் கிடைக்கும். சளைக்க வேண்டாம். புதன் இரவு 08.51முதல் சனிக்கிழமை காலை 04.52அட்டம ராசியில் சந்திரன் சஞ்சரிக்கிறார். சுப காரியங்களை ஒத்திப் போடுங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே! நம்பியவர்கள் நடு வழியில் கைவிட்டு மாறிய துக்கங்களும், வீண் விரயங்களும் ஏமாற்றங்களும் புடைசூழ வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கும். நிலையாக எதையும் சிந்தித்துச் செயலாற்றும் வல்லமையும் விடைபெற்றுப் போயிருக்கும்.

உடல் நலக் குறைவும், மன உளைச்சலும் தேடிக் கண்ட செல்வமாக அமைந்துவிடும். ஒத்துழைப்போர் எவருமில்லா நிலைமைகளில் போராடும் வலிமையையும் கொஞ்சம் கொஞ்சமாக இழப்பது போன்ற பிரமையும் மனதை வாட்டும். இயன்ற அளவு ஏறி மிதிக்கும் உறவுகளுக்குத் இரையாகித் தவிப்பதைத் தவிர வேறு வழியும் இல்லை. குடும்பத்தினரும் அவர்களோடு கூடிக் கும்மாளம் போடுவது, குலாவி மகிழ்வது சகிக்க முடியாத அவமானமாகவும், ஆத்திரமாகவும் இருக்கும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் கிரகங்கள் சாதகமாக அமையவில்லை என்பதே முக்கியமாகும். இதனால் சுமுகமான நிலை நிலவுவது அரிதான ஒன்றாகும். வரவேற்புகளும், வழக்கமாகக் கிடைக்கும் அனுசரனைகளும் பெரிதும் பாதிக்கப்படும். பெரு முயற்சிகள் செய்தாலும் சிறிய காரியங்களைக் கூட செய்து முடிப்பது சிரமமாகத் தோன்றும். வீண் விவகாரங்கள் தலை தூக்கி திசையை மாற்றி தோல்விகளை உறுதிப் படுத்தும். வாதங்களும் வம்புகளும் தேடிவந்து துயரங்கள் பெருக துணை நிற்கும். அசந்து போய் தடுமாறும் போதும் கூட ஆடம்பரச் செலவுகளும், கௌரவம் என்ற பெயரில் கழுத்தை அறுக்கும். சுப காரியங்கள், கோவில்கள் என்பதும் இதில் அடங்கும்.

மகரம்

மகர ராசி அன்பர்களே! தொழில் வகைகள் சிறப்பாகவே நடைபெறும். பணப் புழக்கங்கள் தாராளமாக இருக்கும். தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கின்ற போதிலும் குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் குறைவாகவே இருக்கும். வீட்டில்; நுழையும் விருந்தினர்கள் வேண்டிய அளவு குழப்பங்களை உண்டாக்கி விடுவார்கள்.

பூசல்களும், இடையூறுகளும் உங்களைச் சுற்றி வந்த வண்ணமே தொடரும். சம்பந்தமில்லாப் பொல்லாப்புகளுக்கு முகம் கொடுத்து சில அவப் பெயர்களைச் சுமக்க வேண்டி வரும். உடல் நலக் கோளாறுகள் அடிக்கடி இடைஞ்சல்களைத் தரும். ஆயினும் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவை இல்லை. உத்தியோகத்தர்களும், பதவி வகிப்பவர்களும் செலவுகளுக்கு முகம் கொடுக்கக் கஷ்ட்டப்பட்டாலும் நிம்மதியாகத் தொழிலைச் செய்யலாம்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே! திங்கள் பகல் வரை ஏட்டிக்குப்போட்டியாகப் பேசுவதை நிறுத்திக் கொள்வது நல்லது. கெடுபிடியாக நடப்பதும், ஏளனமாகப் பேசுவதும் சில சமயங்களில் சங்கடங்களைத் தரக் கூடும். தொடர்ந்து கிடைக்க இருக்கும் நன்மைகளை அவை சிதற அடித்தும் விடலாம். வருமானங்களும் தொழிலும் சிறப்பாக நடக்கும் போது, எதிர்பாராத நஷ்டங்களையும், சேதங்களையும் காண நேரிடும். இதற்காகக் கலங்கி நேரத்தை வீணாக்காமல் செயல் படுவதே புத்திசாலித்தனம். கைநழுவிப் போனவைகளுக்காக தடுமாறுவது அதனைத் திருப்பிப் பெறும் முயற்சியாகாது. குழப்பங்கள் தரும் மன உளைச்சல்களைத் தீர்க்க முயல்வதே உத்தமம். குடும்பத்தில் உருவாகும் சலசலப்புகளை சமரசமாகக் கையாள்வதே இன்று உகந்ததாக அமையும்.

மீனம்

மீன ராசி அன்பர்களே, நினைத்ததைச் சாதிக்கும் வல்லமை இப்போது கைவந்த கலையாகி விட்டது. எங்கே எதை எப்படி சாதிப்பது என்பதெல்லாம். அத்துப் படியான கதைதான். சௌகரியமாக வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளலாம். சலசலப்புகளுக்கு அஞ்சாமல் துரித முன்னேற்றங்களை அடையலாம். கௌரமும், வசதிகளும் தேடி வருவதால் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். குடும்பத்திலும், உறவினர்களிடேயும் மதிப்பு மரியாதை உயரும். மணம் முடிக்காதவர்கள் இனிமேல் காத்திருக்க வேண்டாம். மணமாலைகளைத் தேடிப் புறப்படுங்கள். சலுகைகளுக்காகக் காத்திருந்த காலம் போய் மற்றவர்களது சங்கடங்களைத் தீர்க்கும்.

Comments