"மலையகத் தமிழர் பிரச்சினைகளை சர்வதேச பேசு பொருளாக மாற்றுவதே என் நோக்கம்" | தினகரன் வாரமஞ்சரி

"மலையகத் தமிழர் பிரச்சினைகளை சர்வதேச பேசு பொருளாக மாற்றுவதே என் நோக்கம்"

இந்திய அகதி முகாம்களில் வாழும் மலையகத் தமிழர்களுக்கு இந்திய பிரஜாவுரிமை  பெறுவது தொடர்பில் தொல் திருமாவளவனிடன் பேசினேன். விடயத்தை புரிந்துகொண்ட அவர் தமிழகத்தில் இது  விடயமாக பேசக்கூடியவர்களை தம்மை வந்து சந்திக்குமாறு கேட்டுக்கொண்டார்.  உடனடியாக என்னுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு அறிவித்தேன். அவர்களும்  இந்தவாரம் அவரை சந்திக்கின்றனர்'

மலையகத்தவர்கள் கல்வி அறிவில் குறைந்தவர்கள், அவர்களது பிரச்சினை சம்பளப் பிரச்சினை மட்டும்தான். அவர்களில் இருந்து வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்றில் பேசுவதில்லை போன்ற கதையாடல்கள் பொதுவெளியில் கடந்த காலங்களில் கேட்கக்கூடியதாக இருந்தவையே. அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் தொடங்கிவிட்ட யுகம் ஒன்றை அண்மைக் காலமாக அவதானிக்க முடிகிறது. குறிப்பாக கடந்த ஐந்தாண்டு பாராளுமன்ற செயற்பாடுகள் மலையக அரசியலில் புதிய திசையை காட்டி நிற்பதை மறுப்பதற்கில்லை.  

உதாரணத்துக்கு மயில்வாகனம் திலகராஜ் எம்.பியை சொல்லலாம். கல்வி, கலை, இலக்கியம், தொழிற்சங்கம், அரசியல், எழுத்து, மேடைப்பேச்சு, ஊடக விவாதங்கள் என பல்துறை ஆளுமையாக அவர் வலம் வருகிறார்.  

அண்மையில் அமெரிக்காவில் இடம்பெற்ற ஐ.நா பொதுச் சபை கூட்டத்தொடருடன் இணைந்த உபகுழு கூட்டங்களிலும் செக் நாட்டில் இடம்பெற்ற மதிப்பாய்வு மாநாட்டிலும் பங்குபற்றி திரும்பியிருக்கும் அவரிடம் அந்த அனுபவங்கள் குறித்து உரையாடினோம்.  

அண்மையில் இடம்பெற்ற ஐ.நா பொதுச்சபை கூட்டத்தொடருடன் இணைந்த உப குழு கூட்டங்களில் கலந்துகொண்டு மலையக விடயங்கள் குறித்து பேசியிருந்தீர்கள். அது குறித்து கூறுங்களே?  

இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை, ஜெனிவா ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. மலையக மக்களின் பிரச்சினைகள் தொழில் உரிமை சார்ந்த பிரச்சினைகளாகவே சர்வதேச அரங்கில் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன. சர்வதேச தொழில் தாபன (ILO) அரங்கில் தொழிற்சங்க பிரதிநிதிகளும், சிவில் சமூக பிரதிநிதிகளும் அதிகளவில் பங்குபற்றியுள்ளனர்.  

தற்போதைய காலகட்டத்தில் அபிவிருத்தி இலக்குகளை முன்வைத்து அபிவிருத்தியின் கோணத்திலான அணுகுமுறைகள் அடிப்படையில் பூகோளரீதியாக இலக்குகள் தீர்மானிக்கப்பட்டு அதன் அடிப்படையில் அபிவிருத்தி கருத்தாடல் இயங்குகிறது. 2015ஆம் ஆண்டு அத்தகைய இலக்குகள் தீர்மானிக்கப்படும் முதலாவது கூட்டத் தொடரிலும் பங்கேற்றிருந்தேன். அந்த பதினேழு இலக்குகளில் எட்டாவது இலக்காக அமைவது கண்ணியமான (Decent) வேலையுடன் கூடிய பொருளாதார அபிவிருத்தி.  

அந்த வகையில் சம மதிப்புடனான வேலைக்கு சமமான கொடுப்பனவு எனும் ஐ.நா இலக்குக்கு அமைவாக மலையக மக்களின் பிரச்சினைகளின் பேரில் சர்வதேச கவனத்தைப் பெறுவது என்பதே எனது நோக்கம்.  

அந்த இலக்கு கூறவரும் விடயங்கள் என்ன? அதில் எவ்வாறு மலையக மக்களின் பிரச்சினைகளை இணைத்து பேசுகிறீர்கள்?  

2000ம் ஆண்டளவில் ஐ. நா மிலேனியம் அபிவிருத்தி இலக்குகள் (MDG) என பத்து இலக்குகள் பரந்துபட்டதாக முன்வைக்கப்பட்டன. அதுவே 2015இல் பதினேழு 17பூகோள இலக்குகளை கொண்டதாக நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளாக (SDG) நிரண்யிக்கப்பட்டது. அந்த இலக்குகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட பூகோள அபிவிருத்தி நோக்கமாக கொண்டது.  

அவற்றுள் தொழில் கண்ணியம் (Decent Work) எனும் எட்டாவது இலக்குடன் மலையகத் தொட்டத்தொழிலாளர்களின் கண்ணியமற்ற தொழில் நடைமுறைகள் குறித்து பேசமுடியும். அதேநேரம், வம்சாவளி (Descent) அடிப்படையில் தொழில் பாகுபாடு காட்டப்படுவதனால் இந்த கண்ணியமான தொழில் சூழல் இல்லாத நிலைமைகளையும் சர்வதேச அரங்கில் எடுத்துக்கூறும் வாய்ப்பு ஏற்படுகிறது.  

இலங்கை தேயிலைத் தொழில்துறை, இலங்கையின் பூர்வீக சிங்கள மக்களை சிறுதோட்ட உடமையாளராக, நிலவுடைமையாளர்களாகவும், இந்திய வம்சாவளியினரான மலையகத் தமிழ் மக்களை வைத்துள்ளது. பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் தொழிலாளர்களாகவும் அதுவும் நாட்கூலிகளாக அவர்களை வைத்திருக்கும் நிலைமை பாரபட்சமானது என்பதனையும் எடுத்துக் கூறினேன். இதனால் இந்த பாரபட்சம் நீக்கப்பட்டு சம மதிப்புடனான வேலைக்கு சமமான கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். இந்திய வம்சாவளியினரான மலையகத் தமிழ் மக்களும் பூர்வீக சிங்கள மக்களைப்போன்று சிறுதோட்ட உடமையாளர்களாக மாற்றப்படல் வேண்டும். அவர்களது காணி உரிமை உறுதி செய்யப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தினேன்.  

இங்கு இலங்கையனாக மலையகத்தவனாக அறியப்படும் நான், சர்வதேச அரங்கில் இலங்கையனாக தேயிலை சார்ந்தவனாக, அந்த மக்களின் பிரதிநிதியாகவே அறிமுகம் செய்துகொள்கிறேன். இலங்கை தேயிலை ஏற்கனவே உலகப்புகழ் பெற்றது என்பதனால் தேயிலைக்கு பின்னால் உள்ள வாழ்க்கை பாரபட்சம் மிக்கதாக உள்ளது என்பதை கவனம் கொள்ள செய்ய முடிந்தது.  

இத்தகைய வாய்ப்புகளை நீங்கள் எவ்வாறு உருவாக்கிக் கொள்கிறீர்கள்?  

இத்தகைய மாநாடுகளில் பங்கு கொள்வதற்கான கல்வி பின்புலத்தையும் அனுபவத்தையும் தொடர்ச்சியாகப் பெற்றுக் கொள்வதில் அதிக அக்கறை காட்டுகிறேன். சிவில் சமூக அமைப்புகளுடன் தொடர்புகளைப் பேணி வருகிறேன். மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் தொழில் பிரச்சினைகள், முள்ளுத்தேங்காய் பயிரிடல், சுகாதாரத்துறையை தேசிய மயப்படுத்தல் முதலான விடயங்களில் அக்கறையுடன் செயல்படுகின்ற அமைப்பாக கண்டி, மனித அபிவிருத்தித் தாபனம் செயற்பட்டு வருகின்றது.

இத்தகைய மாநாடுகளில் ஏனைய நாட்டு பிரதிநிதிகளும் அவரவர் கோணத்தில் இந்த பாகுபாட்டுத் தன்மைகளை எடுத்துக்கூறுவதற்கு அவர்களை ஒன்றிணைக்கும் அமைப்புகள் உள்ளன. அத்தகைய சர்வதேச நிறுவனங்கள் ஊடாக மனித உரிமை தாபனம் கொண்டிருக்கும் தொடர்புகளினால் அத்தகைய சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து எமது பிரச்சினைகளையும் முன்வைக்க முடிகிறது. இவர்கள் ஊடாகவே 2015இலும் நான் இந்த கூட்டங்களில் கலந்துகொண்டேன். இம்முறையும் கலந்துகொண்டேன்.  

சிறுபான்மை பிரச்சினைகள் சம்பந்தமான ஐ.நா அறிக்கையாளராக ரீட்டா ஐசேக் இலங்கை வந்தபோது கண்டி மனித உரிமை தாபனத்தினர் அவரிடம் அறிக்கையொன்றை சமர்ப்பித்திருந்தனர். நாங்களும் தமிழ் முற்போக்கு கூட்டணியும் அவரை சந்தித்துப் பேசியிருந்தோம்.

இப்போது அவர் அப்பதவியில் இல்லாதபோதும் இப்போது இனரீதியான பாகுபாடுகள் சம்பந்தமான அமைப்பின் உறுப்பினராகவுள்ளார். அவர் செனகல் நாட்டு ஐ.நா ஸ்தானிகராலயத்தின் ஊடாக எம்முடன் முழுவதுமாக இணைந்திருந்தார். 2015ஆம் ஆண்டைவிட இந்த முறை செனகல் நாட்டு ஐ.நா தூதுவராயத்தின் ஊடாக எமது பிரச்சினைகளை முன்வைக்க கிடைத்தமை முன்னேற்றகரமானது.  

சர்வதேச பாராளுமன்ற சங்கத்தினரையும் சந்தித்தாக அறிந்தோம் அது பற்றி..?  

ஆம், பாராளுமன்றங்களுக்கு இடையிலான சங்கம் Inter Parliamentary Union – IPU) பழமையான ஒரு சர்வதேச அமைப்பு. ஐ.நா வை விட மூத்த அமைப்பாகவும் அது காணப்படுகின்றது. அந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் பல நாடுகளினது பாராளுமன்றங்களில் இலங்கை பாராளுமன்றமும் ஒன்று. எனவே, இலங்கை பாராளுமன்றிலும் இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்படல் வேண்டும் என்பதை சர்வதேச பாராளுமன்ற சங்கம் வலியுறுத்த வேண்டும் எனும் கோரிக்கையை அங்கு முன்வைத்தேன். இவையெல்லாம் மலையகத் தமிழர்களின் பிரச்சினைகள் சர்வதேச அரங்கில் பேசப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு மேற்கொள்ளப்படுபவையே. தனியாக நின்று சாதிப்பதை விட கூட்டாக சேர்ந்து பிரச்சினைகளை முன்வைத்து தீர்வு காண்பது, தீர்வுகாண முனைவது நல்ல பலனைத் தரும் என எண்ணுகிறேன்.  

அமெரிக்க கொலம்பிய பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளிலும் கலந்து கொண்டுள்ளீர்கள். அதன் நோக்கம் என்ன?  

மேற்கத்தேய நாட்டு பல்கலைக்கழகங்கள் சமூகத்துக்கு திறந்து விடப்பட்டவையாக அமைந்திருக்கும். குறிப்பாக கொலம்பிய பல்கலைக்கழத்தில் மானுடவியல் துறை பிரபலம் பெற்றது. அங்கு பயிலும் கலாநிதி பட்ட ஆய்வு மாணவர்கள், மலையகம் குறித்த பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அங்கு நாவலப்பிட்டியை பூர்வீகமாகக் கொண்ட மலையகத் தமிழரான வெலன்டைன் டேனியல் பேராசிரியராக பணியாற்றி அதனை ஊக்குவித்து வந்தார். தற்போது அவர் ஓய்வு பெற்றுள்ளார். கடந்த முறை அவரை சந்தித்து உரையாடியிருந்தேன்.

அந்த பல்கலைக்கழக மாணவர்களை சந்திப்பது மலையக மக்கள் தொடர்பாக உரையாடுவது எனது நோக்கம். இந்த முறையும் அது நடந்தது. அண்மையில் கூட இலங்கை வம்சாவளி தமிழரான அமெரிக்கர் மைத்திரி ஜெகநாதன் எனும் ஆய்வாளர் இலங்கை வந்து தனது ஆய்வு நூலை எனக்கு தந்தார். அதன் தலைப்பும் தேயிலை சம்பந்தப்பட்டது. இதுபோல தலைப்புகளை ஆய்வு மாணவர்களை தேர்வு செய்யக்கோருவதும் இலங்கைக்கு அவர்களை அழைப்பது. எனது வழக்கம். இந்தமுறையும் கூட ஹாவார்ட் கலாநிதி ஆய்வு மாணவரும் நியூயோர்க்கில் அதிகப்பிரதிகள் விற்பனையாளரும் ஆய்வு எழுத்தாளருமான இந்தியரான சுராஜ் யங்டே எனும் இளைஞனை சந்திக்க கிடைத்தது. அவர் இலங்கைக்கு வரவும் மலையகம் தொடர்பாக அறிந்துகொள்ளவும் ஆர்வம் காட்டியுள்ளார்.  

வேறு நாட்டு மக்கள் பிரதிநிதிகளுடன் சந்திப்புகள் ஏதேனும் செய்தீர்களா?  

விசேட சந்திப்புகள் என்று இல்லை. ஆனால், ஒரு அமர்வில் கலந்துகொள்பவர்கள் என்ற வகையில் நட்புடன் பல விடயங்களை உரையாடினோம்.  

இந்தமுறை இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் வருகை தந்திருந்தார். இந்திய அகதி முகாம்களில் வாழும் மலையகத் தமிழர்கள் சுமார் முப்பதினாயிரம் பேர் தொடர்பில் விரிவாக உரையாடக்கிடைத்தது. அவர்களுக்கு இந்திய பிரஜாவுரிமை பெறுவது தொடர்பில் பேசினேன். விடயத்தை புரிந்துகொண்ட அவர் தமிழகத்தில் இது விடயமாக பேசக்கூடியவர்களை தம்மை வந்து சந்திக்குமாறு கேட்டுக்கொண்டார். உடனடியாக என்னுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு அறிவித்தேன். அவர்களும் இந்தவாரம் அவரை சந்திக்கின்றனர். இது விடயமாக நான் பலமுறை பேசியுள்ளேன். நேரடியாக அத்தகைய அகதி முகாம்களுக்கு சென்று ஆய்வுப்பணிகளை செய்துள்ளேன். இந்திய நாடாளுமன்றத்தில் இந்த விடயத்தை முன்வைப்பதற்கு திருமாவளவனுடனான உரையாடல் வழிவகுக்கும் என்பது என் நம்பிக்கை.  

அமெரிக்கா தவிர வேறு நாடுகளுக்கும் பயணித்தீர்களா? அதன் நோக்கம் என்ன?  

ஆம். செப்டெம்பர் மூன்றாம் வாரத்தில் ஐ.நாவிலும் ஒக்டோபர் முதலாம் வாரத்தில் செக். குடியரசின் ப்ராக் நகரில் மதிப்பாய்வு தொடர்பான ஐடியாஸ் பூகோள மாநாடும் இடம்பெற்றது. இடையில் ஐந்து நாள் இடைவெளி. அதில் இலங்கை வந்து மீண்டும் செல்வது அர்த்தமற்றது எனும் அடிப்படையில் இடையில் இங்கிலாந்துக்கும் ஸ்கண்டிநேவிய நாடுகளான டென்மார்க், நோர்வே, சுவீடன் ஆகிய நாடுகளுக்கும் பயணித்தேன். அவை இலக்கியம் சார்ந்ததும் நட்பும் உறவு சார்ந்ததுமான பயணங்கள். மலையக இலக்கியங்களில் ஆங்கிலத்தில் வெளிவந்தவற்றை மீள்பிரசுரம் செய்வது அவற்றை அங்கு வாசிக்க செய்வது தொடர்பில் கலந்துரையாடினோம்.  

ப்ராக்கில் இடம்பெற்ற சர்வதேச மாநாட்டில் இலங்கை பாராளுமன்றில் மதிப்பாய்வினை 'நிறுவனமயப்படுத்தல்' எனும் தலைப்பில் அறிக்கை செய்து உரையாற்றினேன். மதிப்பாய்வு சம்பந்தமாக நான் உரையாற்றிய ஏழாவது சர்வதேச அமர்வாக இது அமைந்தது. இதற்கு முன்னர் கிர்கிஸ்தான், பூட்டான், பிலிப்பைன்ஸ், மியன்மார், இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளிலும் பங்குபற்றி உரையாற்றியுள்ளேன். மலையகம் தொடர்பாக பேசுவது போலவே இலங்கை எமது தேசம் என்ற வகையில் நாட்டினை பிரதிநித்துவப்படுத்தி மலையகத்தவர்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை எடுத்துரைக்க எனது ஒவ்வொரு செயற்பாட்டின் ஊடாக வெளிப்படுத்த எண்ணுகிறேன்.    

பி. வீரசிங்கம்

Comments