இத் தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான போராட்டம்! | தினகரன் வாரமஞ்சரி

இத் தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான போராட்டம்!

சர்வாதிகார ஆட்சியை நோக்கி சென்று கொண்டிருந்த நாட்டை ஜனநாயக வழிமுறைக்கு கொண்டு வந்த சின்னமே அன்னம். 2015 ல் வென்றெடுத்த அந்த ஜனநாயக வெற்றியைப் பாதுகாக்க மீண்டும் சர்வாதிகாரம் நோக்கி நாடு செல்வதைத் தவிர்க்க நடைபெறுகின்ற தேர்தல் என்ற வகையில் இது ஜனநாயகப் போராட்டமாக பார்க்கவேண்டிய தேர்தலாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவிக்கின்றார். நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வாரமஞ்சரிக்கு வழங்கிய சிறப்பு செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவருடனான உரையாடல் வருமாறு,

கேள்வி: நடைபெறவுள்ள ஐனாதிபதி தேர்தல் தொடர்பில் உங்களது கருத்து என்ன ?

பதில்: ஜனநாயக சூழல் ஒன்றில் நடைபெறுகின்ற தேர்தல். அதனால்தான் 35 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். கடந்த பொதுத்தேர்தலில் வேட்பாளர்களாக களம் இறங்குவதில் பலருக்கும் தயக்கம் இருந்தது. 2010 ஆம் ஆண்டு பொது வேட்பாளராக களமிறங்கிய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டார், எனவே 2015ல் பொது வேட்பாளராக வருபவர் அதிக ஆபத்தை ( Risk) எதிர்நோக்கியவராகவே உள்ளே வந்தார். உள்ளே  மட்டுமல்ல, உள்ளிருந்தும் வந்தார். அவர்தான் மைத்திரிபால சிறிசேன. இன்று அவர் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றபோதும் அன்று முன்வந்ததன் மூலம் அவர் நாட்டினை ஜனநாயக பாதைக்கு திருப்புவதில் அதிக பங்களிப்பை செய்தார். அவரே இன்று மீண்டும் பழைய சர்வாதிகார கும்பலிடம் சரணடைந்துவிட்ட நிலையில் அவர் ஜனாதிபதியாகி உருவாக்கிய ஜனநாயக சூழ்நிலையை தொடர்ந்தும் பாதுகாக்கும் பொறுப்பை அன்னம் சின்னமே ஏற்க நேரந்தது. எனவே, இது ஜனாதிபதி தேர்தல் என்பதை விட  ஜனநாயகத்துக்கான போராட்டமாகும்.

கேள்வி -: தமிழ் முற்போக்கு கூட்டணி தயக்கம் ஏதுமின்றி சஜித் பிரேமதாசவை ஆதரிக்க முன்வந்துள்ளது. இதுபற்றி...

பதில்: எந்தவொரு ஜனாதிபதியும், தான் முன்வைத்த விஞ்ஞாபனங்களை அப்படியே தானாக செய்து முடித்துவிடப்போவதில்லை. பாராளுமன்ற தேர்தலில் தாம் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கையிலும் அதன் ஊடான அரசியல் செயற்பாடுகளின் ஊடாகவே தமது கோரிக்கைகளை வெற்றி கொள்ள வேண்டும். ஆனால், அதற்கேற்ற ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்து கொள்ளும் பொறுப்பு எங்களுக்கு இருந்தது. நான் ஏற்கனவே சொன்னதுபோல ஜனநாயகத்தை மதிக்கும் ஜனாதிபதியாகவும் மக்களால் அணுகக்கூடியவராகவும் இருக்க வேண்டும். 35 பேர் போட்டியிட்டாலும் வெற்றிபெறக்கூடிய இருவரில் ஒருவரை யதார்த்தமான அரசியல் கட்சியாக நாம் தீர்மானிக்க வேண்டியவர்களாக இருந்தோம். அவர்களுள் முந்திக் கொண்டு கோட்டபாய ரஜபக்ஷ தன்னை வேட்பாளராக அறிவித்ததனால் எமது தெரிவு இலகுவானது. 32−42 என கோரிக்கைகளை தூக்கிக்கொண்டு அங்கும் இங்கும் அலையவில்லை, தடுமாறவும் இல்லை.

கேள்வி: நீங்கள் 32 கோரிக்கைகளை வைக்கவில்லை எனில் என்ன கோரிக்கைகளை முன்வைத்தீர்கள் ? அவற்றை சஜித் ஏற்றுக்கொண்டாரா?

பதில்: ஆம் ! இலங்கையின் ஒன்றிணைக்கப்பட்ட மக்களாக மலையக மக்களையும் அங்கீகரித்து, அவர்களது கௌரவம், சமத்துவம், பொருளாதார பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாடு என்பன நாட்டின் ஏனைய மக்களுக்கு சமமான முறையில் இலங்கையின் தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்படுவதை நாம் உறுதி செய்வோம். நிலமின்மை, வீடின்மை ஆகிய பிரச்சினைகளைத் தீர்ப்பதோடு, கல்வி, சுகாதாரம் போன்ற உரிமைகளையும் போக்குவரத்து, சுத்தமான குடிநீர் போன்ற உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்வோம்.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள், கைத்தொழில் மற்றும் சேவைத் துறைகளில் நவீன தொழில்களுக்கு மாறுவதற்கும் கௌவரமான வருமானத்தை ஈட்டுவதற்கும் ஆவண செய்யும் வகையில் , பெருந்தோட்ட சமூகத்தின் மேம்பாட்டுக்கான விசேட ஜனாதிபதி செயலணியை உடனடியாக நிறுவுதல், பெருந்தோட்டப் பிரதேசங்களில் பரம்பரையாக வாழும் சட்ட வதிவுடையோருக்கும் அதனை அண்மித்த நகரங்கள் குடியிருப்புகளில் வாழுகின்ற நிலமற்ற ஒவ்வொரு குடும்பமும் சொந்த நிலத்தையும், வீடற்ற ஒவ்வொரு குடும்பமும் வீடொன்றைப் பெறுவதையும் உறுதி செய்தல். தற்போதைய நிலையில் இருந்து முன்சென்று ஒவ்வொரு குடும்பமும் தலா 7 பேர்ச்சஸ் காணியைப் பெறுவதை உறுதி செய்தல். மலையக மக்களின் நிலம், வீட்டு வசதி தொடர்பான விடயங்கள் தேசிய காணி மற்றும் தேசிய வீடமைப்பு கொள்கைகளுக்கு அமைவாக அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களில் உள்ளடக்கப்படுவதை உறுதி செய்தல்.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களை உள்ளடக்கியதாக மலையகத்தில் 10 தேசிய பாடசாலைகளை கணித விஞ்ஞான உயர்தர பிரிவுகளுடன் கூடியதாக நிறுவுவதற்கும் நுவரெலியா மாவட்டத்தில் மலையகப் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கும் நடவடிக்கை எடுத்தல்.

நாட்டில் தற்போது இயங்கிவரும் பெருந்தோட்ட நிர்வாக கட்டமைப்பினை இதே நாட்டில் இயங்கிவரும் சிறுதோட்ட உடமைக் கட்டமைப்புக்கு மீளமைப்பு செய்தல். இதன் மூலம் தொழில்துறை பாதுகாப்பு, தொழில் பாதுகாப்பு, சிறந்த வேலைச்சூழல், அதிக உற்பத்தித்திறன், சுயதொழில் அம்சங்களைக் கொண்டு பெருந்தோட்ட சமூகத்தின் வருமானத்தை மேம்படுத்தும் நோக்கங்களை அடைதல். இதன் மூலம் ஒரு தொழிலாளியாக அல்லாமல் 'தமிழ் விவசாயியாக' 1500/= ரூபா அளவில் நாளொன்றுக்கான வருமானமாக பெறக்கூடியதான ஏற்பாடுகளைச் செய்தல்.

இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் மலையகத்தில் கைத்தொழில் வலயங்களையும் அதனோடு இணைந்த தொழில் பயிற்சி நிலையங்களையும் அமைத்தல். நாட்டின் தேசிய சுகாதார சேவைகளுக்கு சமனாக பெருந்தோட்ட சுகாதார சேவைகளை மேம்படுத்தி, போஷாக்கின்மை, சிசு மரணம் போன்ற சவால்களை முறியடித்தல். இது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவை பத்திரத்தின் பிரகாரம் தேசிய சுகாதார கொள்கைக்கு அமைவாக நடைமுறைப்படுத்துவதனை உறுதி செய்தல்.

தற்போது பெருந்தோட்டத்துறை நிறுவன மேற்பார்வைகளின் கீழ்வரும் பெருந்தோட்ட சமூக விவகாரங்களை, அரச பொது நிர்வாக கட்டமைப்பின் கீழ் கொண்டுவருவதற்குள்ள தடைகளை அகற்றி புதிய எல்லை மீள்நிர்ணயத்துடன் மேலதிக பிரதேச செயலகங்கள், மேலதிக கிராம சேவகர் பிரிவுகள், உள்ளூராட்சி நிறுவனங்கள் போன்றன நாட்டின் ஏனைய பகுதிகளில் இருப்பதைப் போன்று நிறுவுதல். பெருந்தோட்ட சமூகத்தை வலுப்படுத்தும் சிறப்பு அபிவிருத்தி நடவடிக்கையாக (Affirmative Action) நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்தல். இதனூடாக மலையக சமூகம் அரச தொழில் வாய்ப்புகள் கல்வி மற்றும் பயிற்சி நிலையங்களில் மலையகத் தமிழ் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல் போன்ற உறுதியான ஒன்பது அம்சங்களை எமது கோரிக்கையாக முன்வைத்து எட்டப்பட்ட உடன்பாடுகள் அடிப்படையில் எமது ஆதரவை வழங்குகின்றோம்.

கேள்வி: இந்த கோரிக்கைகளை கொண்ட ஒப்பந்தம் ஏதேனும் கைச்சாத்திட்டுள்ளீர்களா?

பதில்: அப்படியொரு ஒப்பந்தத்தை சஜித் பிரேமதாசவுடன் செய்து கொள்வது கஷ்டமான விடயமல்ல. ஆனால், அத்தகைய ஒப்பந்தங்களைக் கொண்டு எதிர்காலத்தில் தெரிவாகும் ஜனாதிபதி செய்யாவிட்டால் அத்தகைய ஒப்பந்தங்களை வைத்திருப்போர் என்ன செய்ய முடியும். தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை பதவி இறக்க முடியுமா ? அல்லது வழக்கு தொடர முடியுமா? எனவே 32 கோரிக்கையை கொண்டு ஒப்பந்தம் செய்வதெல்லாம் பம்மாத்து. குறைந்தபட்சம் வேட்பாளர்கள் முன்வைக்கும் விஞ்ஞாபனத்தில் அதனை உள்வாங்குவதையாவதை உறுதி செய்யவேண்டும். அது ஒரு கொள்கை விளக்கம் போன்றது. எங்களைப் பொறுத்தவரை எங்களது ஒன்பது கோரிக்கைகளையும் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்வாங்கியுள்ளோம். ஒப்பந்தம் என தமிழில் ஒன்றும் சிங்களத்தில் ஒன்றும் என விஞ்ஞாபனத்தில் வேறு ஒன்றும் என முன்னுக்குப் பின் முரணாக பேசவில்லை.

கேள்வி: இ.தொ.கா வின் கோரிக்கைகள் முன்னுக்குப் பின் முரணானது என்கிறீர்களா ?

பதில்: நிச்சயமாக! கோட்டாபயவின் விஞ்ஞாபனத்தையும் இ.தொ.காவின் கோரிக்கைகளையும் ஒப்பிட்டு பார்க்கும் யாருக்கும் அதனை தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். அவர்கள் புதிய கிராமம் அமைப்போம் என தமிழில் கூறியுள்ளார்கள். ஆனால் பயிர்நிலம் பாதிப்படையாத வகையில் இப்போது இருக்கின்ற வதிவிட சூழலில் குறைந்த மாடிகளைக் கொண்ட வதிவிடங்கள் அமைக்கப்படும் என தெளிவான சிங்களத்தில் கூறியுள்ளார் கோட்டாபாய. இது ஒன்றும் புதிதல்ல, இ.தொ.கா ஏற்கனவே முன்னெடுத்த மாடி லயன் முறைதான் அது. இதன் மூலம் மலையக மக்களின் காணி உரிமை மறுக்கப்படுகின்றது. தவிரவும் தோட்ட நிர்வாகத்தின் உதவியுடன் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்கள். இது அதிகாரப் பகிர்வு அம்சமாக நாம் வென்றறெடுத்த அதிகார சபையை கேள்விக்கு உட்படுத்துவதாக அமைகிறது.

கேள்வி : நீண்டநாள் இழுபறியாக இருந்த 50 ரூபா பிரச்சினை தீர்வை எட்டியிருப்பதாக கூறியுள்ளீர்களே ...!

பதில்: ஆம், தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக மேலதிக ஐயாயிரம் ரூபா பெற்றுக்கொடுக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் குளறுபடியான நிலையில், ஏற்கனவே பெற்றுக் கொடுக்க திட்டமிடப்பட்ட நாளாந்த சம்பளத்துடனான மேலதிக கொடுப்பனவை பெற்றுக் கொடுக்க எமது தரப்பு எடுத்த முயற்சி இப்போது வெற்றியடைந்திருக்கிறது. கடந்தவாரம் பெருந்தோட்டத்துறை அமைச்சிலும் தேர்தல்கள் ஆணைக்குழுவுடனும் தாம் நடாத்திய பேச்சுவார்த்தைகள் ஊடாக இந்த சாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு அதனை நவம்பர் மாதம் 20 திகதி பெற்றுக்கொடுக்க கோரியுள்ள நிலையில், அதற்கு முன்பதாக வழங்குவதெனில் அனைத்து தொழிற்சங்கங்களின் உடன்பாட்டையும் கோரியிருக்கிறது. இந்நிலையில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் அந்த ஒத்துழைப்பை கோரி மலையகத்தின் பிரதான தொழிற்சங்கங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். எனவே திரும்பிச் செலுத்த தேவையற்ற நாட் சம்பளத்திற்கு மேலதிகமான 50 ரூபா கொடுப்பனவை கடந்த கால நிலுவையோடு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் பெருந்தோட்ட அமைச்சரின் கடிதம் கிடைக்கப்பெற்ற சகல தொழிற்சங்கங்களும் தமது உண்மையானதும் பூரணமானதுமான ஒத்துழைப்பை இப்போது எழுத்து மூலம் பெருந்தோட்டக் கைத்தொழில்  அமைச்சினால் வழங்குமானால் தோட்டத் தொழிலாளர்களுக்கு கடந்த ஐந்து மாத நிலுவைப் பணமாக சராசரி 5000 ரூபாவை வழங்கும். திரும்பிச் செலுத்த தேவையற்ற கொடுப்பனவாகவே இது இருக்கும்.

நேர்காணல்: பி. வீரசிங்கம்

Comments