வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் வாக்குகளே ஜனாதிபதியை தீர்மானிக்கும் | தினகரன் வாரமஞ்சரி

வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் வாக்குகளே ஜனாதிபதியை தீர்மானிக்கும்

எமது 13 அம்ச கோரிக்கை தொடர்பாக தென்னிலங்கையில் இருக்கக் கூடிய சிங்கள பௌத்த தீவிரவாதிகளும் சில அரசியல் கட்சிகளும் தமது காட்டமான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து வருகின்றனர். தமிழ் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் நாடு பிரிவடைந்துவிடும் என்றும் புலிகள் ஆயுதத்தால் அடைய முயற்சித்ததை தமிழ் மக்கள் ஆவணங்களால் அடைய முயற்சிப்பதாகவும் இந்த கோரிக்கைகளை ஏற்பவர்கள் சிங்கள பௌத்த இனத்திற்கு விரோதிகளாக இருப்பார்கள் என்றும் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றது. சிங்கள தேசிய கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் தாம் யாருடனும் உடன்பாடு செய்யமாட்டோம் எனவும் யாருடைய நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் தமிழர் உரிமைகளுக்கு எதிராக எவ்வளவு தூரம் வலுவாக பேச முடியுமோ அவ்வளவு தூரம் பேசுவதையும் காணக்கூடியதாக உள்ளது என, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தினகரன் வாரமஞ்சரிக்கு அளித்த பிரத்தியேக செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்

கேள்வி :- இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகள் சிதைவடைந்து போகுமென்றும் பெரும்பான்மையினரின் வாக்குகளே சிங்களத் தலைவரை தேர்ந்தெடுக்கும் என்று பொதுமக்களிடையே அளவளாவப்படுகின்றது. இது குறித்து நீங்கள் கூற விழைவது? 

பதில் :- சிங்கள மக்களின் வாக்குகள் மூன்று நான்கு பிரிவுகளாக பிரியக்கூடிய ஒரு சூழ்நிலையில் சிறுபான்மையினத்தின் வாக்குகளே ஜனாதிபதியினை தீர்மானிக்கும் வாக்குகளாக அமையும் என்பதனை எம்மால் கணிப்பிடக்கூடியதாக உள்ளது. இந்த நிலையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகள் ஜனாதிபதியை தீர்மானிக்கும் வாக்குகளாகவும் மாறலாம். வாக்குகள் தேவையா இல்லையா என்பதனை தீர்மானிக்க வேண்டியது வேட்பாளர்களினதும் அவர் சார்ந்த கட்சிகளுமாகும். தமிழ் மக்களது கோரிக்கைகளை நியாயபூர்வமாக சீர்தூக்கிப் பார்த்து அதற்கான தீர்வுகளை முன்வைக்க முனைந்தால் வாக்குகள் சிதறப்படாமல் சிதைவடையாமல் குறிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு கிடைக்க முடியும். ஆனால் அவர்கள் சிங்கள இனவாதத்திற்குள் மூழ்கி தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிராகரிப்பார்களாக இருந்தால் சிறுபான்மையின வாக்குகள் சிதைவடைவதும் பெரும்பான்மையின வாக்குகளில் தெரிவு செய்யப்படும் சூழலும் ஏற்படலாம். 

கேள்வி :- வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் இருப்பிடமாக இன்று உள்ளதா, இது தொடர்பாக தங்கள் அபிப்பிராயம்? 

பதில் :- வடக்கு கிழக்கு என்பது தமிழ் பேசும் மக்களின் வரலாற்று பூர்வமான வாழ்விடம் என்பது மாத்திரமல்லாமல் அது தமிழ் மக்களின் மரபுவழித்தாயகமும் ஆகும். ஆனால் இலங்கை சுதந்திரமடைந்ததில் இருந்து தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த அவர்களது பூர்வீக பிரதேசங்களான, வடக்கு, கிழக்கில் அரச ஆதரவுடனான சிங்கள குடியேற்றங்களை நடாத்தி தமது சொந்த பூமியிலேயே தமிழரை சிறுபான்மையினமாக்கும் நடவடிக்கைகளை மாறிமாறி ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் மேற்கொண்டு வந்தன. இதனால் கிழக்கு மாகாணத்தின் பெரும்பகுதியினையும் வவுனியா மாவட்டத்தின் கணிசமான பிரதேசங்களையும் நாங்கள் இழந்திருக்கின்றோம். இப்பொழுது வடக்கு மாகாணத்தில் சிங்கள பௌத்த குடியேற்றங்களை கொண்டு வருவதன் ஊடாக இங்கும் தமிழ் மக்களை தமது சொந்த மண்ணில் சிறுபான்மையினமாக்கும் முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. அது மாத்திரமல்லாமல் முழு இலங்கையையும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவருவது என்பதுடன்; தமிழர்களின் அடையாளங்களை அழித்தொழித்து ஒரு இன அழிப்பினை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. தமிழ் மக்கள் தமது மண்னை காப்பாற்றுவதற்காகவும் தமது இனத்தை பாதுகாப்பதற்காகவும் மிகக் கடுமையான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். 

வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு பகுதி. வட- கிழக்கு இணைந்த தமிழர் தாயகமென்பது ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டு 18 வருட காலம் வட- கிழக்கு இணைந்த ஒரு மாநிலமிருந்தது. அந்த மாநிலம் மீள உருவாக்கப்பட்டால் தான் தமிழ்மக்கள் இந்த மண்ணில் பாதுகாக்கப்படுவார்கள். வட- கிழக்கு இணைப்பு ஒருதலைப்பட்சமாகத் தற்போது மறுதலிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் மக்களின் புராதன இடங்களான கன்னியா வெந்நீரூற்று, முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயம், நெடுங்கேணி வெடுக்குநாறி மலை போன்ற தமிழ்மக்களின் புராதன இடங்களெல்லாம்  பறிமுதல் செய்யப்பட்டு அங்கு புதிய புத்தர் சிலைகள், பெளத்த விகாரைகள் அமைப்பது மாத்திரமல்ல. அதனைச் சுற்றி சிங்களக் குடியேற்றங்களும் அமைக்கப்படுகின்றன. இதன் மூலமாகத் தமிழ்மக்களின் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் விடயம் மிகத் தீவிரமாகத் தற்போது வடக்கு மாகாணத்தில் இடம்பெற்று வருகிறது. இவையெல்லாம் இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே நடைபெறுகின்றது. 

இதன்மூலம் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழக் கூடிய வடக்கு மாகாணத்தில் அவர்களைச் சிறுபான்மையாக மாற்றி அவர்களின் அடையாளங்களை அழித்து தேசிய இனமென்ற நிலையிலிருந்து மாற்றித் தமிழர்களை இல்லாதொழிப்பதற்கான முனைப்புக்கள் தீவிரம் பெற்றுள்ளன. தமிழ்மக்களின் புராதன சின்னங்கள், கலாசாரங்கள் பாதுகாக்கப்பட்டால் மாத்திரம் தான் தமிழ்மக்கள் இந்த மண்ணில் ஒரு தேசிய இனமாக தலைநிமிர்ந்து வாழ முடியும். 

கேள்வி :- ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரை தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உங்கள் கட்சியின் நிலைப்பாடு எவ்வாறுள்ளது? 

பதில் :- யுத்தத்திற்கு பின்னர் ஆட்சிபீடமேறிய சகல ஜனாதிபதிகளும் சகல அரசுகளும் தமிழ்மக்களின் கோரிக்கைகளை நிராகரித்தது மாத்திரமல்லாமல் அவர்களது அரசியல் நடவடிக்கைகளில் மிகப் பெரும்பாலானவை தமிழ் மக்களை பாதித்தே வந்திருக்கிறது. மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போதும் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த போதும் தமிழ் மக்களின் உரிமைகள், கோரிக்கைகள் தொடர்பாக எதிர்மறையாக செயற்பட்டது மாத்திரமல்லாமல் தமிழர்கள் தொடர்சியாக பாதிப்புறும் வண்ணமே சகல அரசுகளினதும் நிகழ்ச்சி நிரல்களும் அமைந்தும் வந்திருக்கின்றன. 

யுத்தம் முடிந்து 10 வருடங்கள் முடிவடைந்த நிலையிலும் அரசியல் கைதிகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை. முப்படைகளின் வசம் உள்ள காணிகள் விடுவிக்கப்படவில்லை. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எந்த விதமான நீதியும் வழங்கப்படவில்லை. போர் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் எதுவும் செய்யப்படவில்லை. மீள்குடியேற்றம் இன்னமும் முழுமைபெறவில்லை. அதே சமயம் பல்வேறுபட்ட வழிமுறைகளில் தமிழ் மக்களின் விவசாயக்காணிகளும் வாழ்விடங்களும் பறிமுதல் செய்யப்படுகின்றது. தமிழ் மக்களின் புராதன சின்னங்களும் புராதன இடங்களும் அழித்தொழிக்கப்படுகின்றது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும், காணிகளை இழந்தோரும் வருடக்கணக்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கேள்வி :- மக்கள் பிரதிநிதிகளும் மக்களும் தேர்தல் காலங்களில் ஆட்சியரசை மாற்றுகிறார்களே தவிர, தமிழ் மக்களுக்கான தீர்வு இற்றைவரை எட்டாக்கனியாகவே இருந்துகொண்டிருக்கின்றது. அவ்வகையில் இத்தேர்தலிலாவது தமிழ்மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கையுள்ளதா? 

பதில் :- தமிழ் மக்களின் போராட்டம் நீண்ட நெடிய போராட்டமாக சென்று கொண்டிருக்கின்றது. ஆரம்பகாலத்தில் 30 வருடம் அகிம்சைப் போராட்டமாகவும், இன்னுமோர் 30 வருடம் ஆயுதப் போராட்டமாகவும் இது வளர்ச்சியடைந்திருந்தது. இந்த ஆயுதப்போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் மிகப் பெருமளவிலான சொத்திழப்புக்கள் ஏற்பட்டும் ஆயிரக்கணக்கான போராளிகளும் ஆயிரக்கணக்கான சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்டும் இலங்கையினுடைய பொருளாதாரம் மிக மோசமாக பின்தள்ளப்பட்டிருந்த போதும் அரசாங்கம் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஆக்கபூர்வமான தீர்வுத்திட்டங்கள் எதனையும் முன்வைக்கவில்லை. 

மாறாக தமிழின விரோத நடவடிக்கைகளையே தொடர்ந்த வண்ணமிருக்கின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் தான் இந்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெற இருக்கின்றது. பல இன, பல மொழி, பல மதங்களை கொண்ட ஒரு நாட்டில் எல்லோரினது உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய வகையில் ஆட்சிப் பொறிமுறை ஒன்று இருக்க வேண்டும். ஆனால் இலங்கையை பொறுத்த மட்டில் ஓர் ஒற்றையாட்சியை கொண்ட சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை அழுத்தம் திருத்தமாக வைத்திருக்கக்கூடிய ஆட்சிமுறையே இப்பொழுது இருந்து கொண்டு இருக்கின்றது. 13ஆவது திருத்தம் போதாதென்றும் மேலதிகமான அதிகாரப்பகிர்வு அவசியம் என்ற அடிப்படையில் ஜனாதிபதிகளான பிரேமதாசா, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்கள் பல குழுக்களை அமைத்து புதுப்புது தீர்வுத்திட்டங்கள் முன்வைக்கப்பட்ட போதும் அனைத்தும் குப்பைக்கூடைக்குள் சென்று விட்டன. இறுதியாக மைத்திரி_ ரணில் அரசாங்கத்தில் புதிய அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்குவதற்கு எடுத்த முயற்சியும் இப்போது கிடப்பில் போடப்பட்டு விட்டது. இவ்வாறான ஓர் சூழ்நிலையில் புதிய ஜனாதிபதி வந்தவுடன் தீர்வுகள் எதுவும் வந்துவிடும் என்று எதிர்பார்ப்பதற்கு இல்லை. ஆனால் இதற்காக நாங்கள் ஓய்வாக இருந்துவிட முடியாது. எமது மொழி, கலாச்சாரம், பண்பாடு, எமது பிரதேசம், எமது அடையாளம் இவை யாவும் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் தமிழ்மக்களுக்கு நியாயமான அதிகார பகிர்வை உள்ளடக்கிய தீர்வுத்திட்டம் ஒன்று உருவாக்கப்படவேண்டும். ஆகவே அதனை எட்டும் வகையில் தமிழ்மக்களின் போராட்டமும் தொடரவே செய்யும். 

கேள்வி :- இத்தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வாறானவருக்கு வாக்களிக்க வேண்டும் என கருதுகின்றீர்கள் ? 

பதில்:- ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர்கள் முழு இலங்கைக்குமான ஜனாதிபதி என்ற அடிப்படையில்தான் போட்டியிடுகின்றார்கள். ஆகவே தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியினுடைய கொள்கைகள், கோட்பாடுகள், நடவடிக்கைகள் என்பன தமிழ் மக்களையும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கவே செய்யும். அந்த நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களுடைய கொள்கைகளை பரிசீலித்து இவர்களுக்கு வாக்களிக்கலாமா? தேவையில்லையா? போன்ற விடயங்களை அலசி ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழ்மக்களுக்கு இருக்கின்றது. ஆகவே இது சிங்கள தேசத்திற்கான தேர்தல் மாத்திரம் அல்ல, தமிழர் தேசத்துக்குமான தேர்தலாக இருக்கின்ற காரணத்தினால் தமிழ் மக்கள் இந்த தேர்தலில் இருந்து ஒதுங்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. 

கேள்வி :- மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் தீர்க்கப்படாத சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகவே பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளமையினை தமிழ் மக்கள் இன்றும் நம்புவார்கள் என கருதுகிறீர்களா? 

பதில் :- இராணுவத்திடமும் பொலிசாரிடமும் சரணடைந்து இருபதினாயிரம் பேருக்கு மேல் காணாமல் ஆக்கப்பட்டிருந்த பொழுதிலும் கூட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று யாரும் இல்லை, சரணடைந்தவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என மிகப் பெரும் பொய்யை கூறியுள்ளார். தமது பிள்ளைகளை தேடி 3 வருடங்களுக்கு மேலாக போராடிவரும் தாய்மாருக்கு இவர் மூலம் நீதி கிடைக்காது என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இதனை போன்றே யுத்த குற்றங்களுக்காக இராணுவத்தை விசாரிக்க முடியாதென்றும், தான் பதவியேற்றதும் சிறையிலிருக்கும் இராணுவத்தினரை விடுவிப்பதாகவும் சூளுரைத்துள்ளார். ஆகவே இவ்வாறானவருக்கு வாக்களிக்க வேண்டுமா? இல்லையா என்பதை தமிழ்மக்கள் தீர்மானிப்பார்கள். அதே சமயம் மைத்திரி ரணில் கூட்டு அரசாங்கம் தமிழ் மக்களுக்கு கொடுத்த எந்த உறுதி மொழியினையும் நிறைவேற்றவில்லை என்பதனையும் தமிழ் மக்கள் நன்கறிவர்.  

குறைந்த பட்சம் தமிழ் மக்களின் காணிகளை முழுமையாக விடமுடியவில்லை, அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு தீர்வில்லை, தமிழ் இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக காத்து கிடக்க வடக்கு மாகாணம் முழுவதும் சிங்கள இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகின்றன. எவ்வளவுதான் இனவாதம் பேசினாலும் தமிழ் மக்களின் வாக்குகள் தேவை என்றால் முடிவெடுக்கவேண்டிய பொறுப்பும் கடமையும் வேட்பாளர்களிடமே இருக்கின்றது. 

நேர்காணல்: பா. மோகனதாஸ்

Comments