நாள், கோள், நற்பலன் | தினகரன் வாரமஞ்சரி

நாள், கோள், நற்பலன்

மேஷம் 

மேஷ ராசி அன்பர்களே, புதிதாக முளைத்திருக்கும் பொறுப்புகளை ஏற்கவும், தொழில் விருத்திகள், முதலீடுகள், பெரிய இடத்துத் தொடர்புகள் என்று வரிசையாக பல நல்ல விஷயங்கள் நடந்தேற வாய்ப்புகள் உள்ளன. இதுவரை ஒதுங்கி இருந்தவர்கள் ஒட்டி உறவாட முயற்சிப்பார்கள். அவர்களால் நன்மைகள் நடக்கவும், இழுபறியாய்க் கிடந்த பிரச்சினைகள் தீரவும் இடமுண்டு. எதையும் சாதிக்கலாம், சாதிக்க வேண்டும் என்கின்ற உத்வேகம் மனதில் கிளர்ந்து எழ மிக வேகமாய்த் துணிந்து செயல்பட வேண்டியிருக்கும். சான்றோர் வழிகாட்டல்கள், திருமணம் போன்ற சுப காரியங்கள் உங்களுக்கோ வீட்டில் வயது வந்து காத்திருந்த பிள்ளைகளுக்கோ நடக்கவும் இடமுண்டு. உதவும் உறவினர்கள் உங்களை நம்பி பொருளாதார சகாயங்களைத் தயக்கமின்றிச் செய்வார்கள்.  

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே, தடங்கல்களும் இடைஞ்சல்களும் சகஜமாக எதிர்நோக்கும் விஷயங்களாய் இருக்கும். இதுவரை இவையெல்லாம் எங்கிருந்தன என்று யோசித்து வியப்படைந்து போகவும் கூடும். வழக்கமாகக் கிடைத்த நல்வரவேற்புகள், சற்றுத் தோய்வுடன் இருப்பது நன்றாகவே மனதிற்குத் தெரியவரும். காத்திருந்தும், மிகப் பணிவாக நடந்தும் உங்களால் மிகச் சிறிய இலக்குகளைக் கூட எளிதில் அடைய முடியாத சந்தர்ப்பங்கள் ஏராளமாய் இருக்கும். உங்களால் துன்பம் என்று நண்பர்கள் விலகுவது பெரிய அதிர்ச்சிதான் என்றாலும் ஏதும் செய்வதற்கில்லை. வருமானங்கள் கிடைக்கும், அதோடு சேர்ந்து சிறு பிணிகளும் வந்து சேரும்.

எதற்கும் சீரிப் பாயாமல் இருக்கப் பழகிக் கொள்ளுங்கள். குடும்ப அங்கத்தினர்களோடு முட்டி மோதுவது எதற்கும் தீர்வாகாது.   

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே, சிந்தையில் தெளிவும், செயல்களில் துணிவும் தெரிகிறது. ஆனால் உங்களது முணுமுணுப்புக்கள் மட்டும் இன்னும் குறையவே இல்லை. கிரகங்களில் நான்கு முக்கியமானவர்கள் சாதகமான இடத்தில் இல்லை. அப்படி இருந்தும் பங்காளிகள் மத்தியில் அமைதியும், வருவாய்களில் முன்னேற்றங்களும் இருக்கத்தானே செய்கின்றன? குடும்பத்திலும் ரகளைகள் முடிவிற்கு வந்து கொண்டிருக்கின்றன். கொஞ்சம் மனம் விட்டுச் சிரித்தால் நாம் எல்லோருக்கும் நல்லது. உறவினர்கள் மத்தியில் நல்ல பெயர் குறைந்து கொண்டு போய்விடும். சிறிது காலத்திற்கு அலட்டிக் கொள்ளாதீர்கள். பின்னர் தேடி வரும் போது பார்த்துக் கொள்ளலாம். நம்பியவர்கள் நட்டாற்றில் விட்டு விடுவார்கள். யாரையும் தேடிப் போகாதீர்கள்.  

கடகம்

கடக ராசி அன்பர்களே, பல கோணங்களில், எதிர்பாராத வகைகளில் பணம் வரும். லட்சுமிகரமாக இருப்பது உண்மைதான், ஆனாலும் இடைஞ்சல்களும் தேக அசௌக்கியங்களும் மனதை வாட்டிக் கொண்டிருக்கும். விரயங்கள் இவ்வளவு இருக்கிறதே, இது எங்கே போய் முடியும் என்ற கவலையும் மனதில் உதித்த வண்ணமே இருக்கும். குடும்பத்தில் அசாதாரண நிலை நிலவுவதால் மன நிம்மதி சொல்லிக் கொள்ளாமல் ஓடிப் போய்விடும். ஒரு பக்கம் சிரிப்பும், மறு முனையில் துக்கங்களுமாக நாட்கள் நகரும். முயற்சிகள் யாவும் இழுபறியாய், எடுத்த காரியங்கள் சவால்களாக உருவெடுக்கும். உதவிகளோ, வேண்டியவர்களின் அணுசரனையோ கிடைக்காமல் தடுமாறும் நிலையே இருக்கும். அரசாங்கமும் வேண்டாத விவகாரங்களைக் கிளப்பித் துன்பங்கள் தரும்.  

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே, வாரத்தின் ஆரம்பம் அவ்வளவு இனிமையாக இருக்காது. ஞாயிறு மாலை 06.44வரை சந்திரன் அட்டமத்தில் சஞ்சரிக்கிறார். வீண் செலவுகளும், அலைச்சல்களுமே மிஞ்சும். வீட்டுக்குள்ளேயே இருந்தால் தொந்தரவுகளைத் தவிர்க்கலாம். தொழில் வகைகளில் நஷ்டங்களை எளிதில் தவிர்த்தும், சமாளித்தும் தலை தூக்கலாம். ரகசியமாக நடந்து வந்த பல சதிகள் அம்பலமாகி உண்மைகள் வெளிப்பட சந்தர்ப்பங்கள் உண்டு.

பல பெரியவர்களின் அணுசரனைகள் உங்களுக்கு கை கொடுக்கும். பொருளாதாரமும், வழி காட்டல்களும் போதியளவு வந்து வாய்க்கும். சமூக அந்தஸ்து உயரவும், செல்லுமிடங்களில் நல்வரவேற்பும் கிடைக்கும். தொழில் விருத்தி தொடர்பாக புதிய வழிகள் திறக்கவும், அரச ஆதரவும் வரும்.  

கன்னி

கன்னி ராசி அன்பர்களே, ஞாயிறு மாலை 06.44முதல் புதன் அதிகாலை 04.02வரை சந்திரன் அட்டமத்தில் இருப்பார். புதிய காணிகள், வீடுகள் வாங்கவோ, இருக்கும் இடம் மற்றும் சொத்துக்களை விற்கவோ முயலாதீர்கள். தள்ளிப் போடுங்கள், நல்ல பலன்கள் கிடைக்கும். வந்து சேரும் செலவுகள் சுப செலவுகளாக இருக்கும்.

புகழ் சேர்க்கும். வீணான ஆடம்பரச் செலவுகள் என்று கவலைப் படவேண்டும். பின்னர் அவை முதலீடுகளாக மாறும். தொழில் துறைகள் சிக்கல்களில் இருந்து விடுபட்டு முன்னேற்றங்களையும் சந்திக்கும். வருமானங்களும் பெருகும். உறவினர்களும் நண்பர்களும் ஒத்துழைப்புத் தருவார்கள். குடும்ப அங்கத்தினர்களின் அனுதாபமும், சகாயங்களும் தேவையான சமயங்களில் பேருதவியாக அமையும். அரச நன்மைகளும், மேலதிகாரிகளின் சகாயங்களும் கிடைக்க வாய்ப்புகள் உண்டு.  

துலாம்

துலா ராசி அன்பர்களே, வருமானத்தைப் பொறுத்த வரையில் சில நெருடல்களைச் சந்திக்க நேரும், எனினும் பணப் புழக்கத்தில் பெரிய சிக்கல்கள் வர இடமில்லை. நீங்கள் சொல்வதை அப்படியே நம்பியவர்கள் இனிமேல் யோசித்தே ஏற்றுக் கொள்வார்கள். உங்கள் பேச்சில் குறைகளும், குற்றங்களும் இல்லாதபோதும் நிலைமை அதுதான். புதன் அதிகாலை 04.02முதல் வெள்ளி பகல் 11.34வரை சந்திரன் அட்டமத்தில் அமர்ந்து தொழில் ரீதியாகப் பல சங்கடங்களைத் தருவார். மிகுந்த அவதானத்துடன் அவைகளைக் கையாளுங்கள். தோல்விகள் என்றில்லாவிட்டாலும் எதிர்பார்க்கும் நன்மைகளை அவ்வளவு எளிதில் அடைந்துவிட முடியாது. நடக்கும் தொழிலில் சங்கடங்கள் வந்துவிடாது. புதிய முயற்சிகளையே யோசிக்க வேண்டியிருக்கும்.  

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே, சோர்ந்து கிடந்த காளை துள்ளிப் பாய்வதுபோலக் காரியங்களில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பீர்கள். நாவடக்கத்துடன்    செல்படுவதே நல்ல பயனைப் பெற வழி வகுக்கும். சரியாக நடக்கும்போது ஏன் முரண்டு பிடிக்கவேண்டும், அமைதியாக இருப்பது சாலச் சிறந்ததுதானே? மனதில் பயம் இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் திறமையாகச் சமாளிப்பீர்கள், கெட்டிக்காரர்தான். தேக அசௌக்கியம் என்றெல்லாம் சொல்லி காலத்தை வீணடிக்காதீர்கள், வந்து போவதை நினைத்து மனதைக் குழப்பிக் கொள்ளவேண்டாம். வெள்ளி பகல் 11.35முதல் சனிக்கிழமை முழுவதும் சந்திரன் அட்டமத்தில் சஞ்சரிப்பார். இதனால் வீட்டு விவகாரங்கள் விளங்காத புதிராகத் தொல்லையாகவேதான் நடக்கும். விட்டுப் பிடியுங்கள், காலத்தால் அவைகள் தீரும்.  

தனுசு

தனுசு ராசி அன்பர்களே, எவ்வளவோ யோசித்துப் பார்த்தும் பல விஷயங்களில் தெளிவைப்பெற முடியவில்லையே என்ற ஆதங்கங்கத்தோடு இருப்பது புலனாகிறது. ஏன் இருக்கின்ற விவகாரங்களைச் சரிக்கட்ட முடியால் போகிறது என்பதும் புதிராகவே தோன்றும், இதற்கெல்லாம் காரணம் கிரக நிலைதான், குரு பகவான் இடம் மாறி, மூலத் திரிகோணத்தில் ஆட்சி பெறுகின்ற போதிலும், சில காலத்திற்குப் பொறுமையாகவே இருக்க வேண்டியதுதான். தலையிலும், குடும்பத்திலும், தொழில் துறையிலும் தொல்லைகள் உருவாகி பின்னர் மறைவதுமாகவும் இருக்கும். ஆனால் பாரிய பாதிப்புகள் ஏற்படாது. உறவினர்களின் ரகளைகளை ரசிக்கப் பழகிக் கொள்ளுங்கள். வாழ்க்கை இனிமையாக இருக்கும். அலட்டிக் கொண்டால் மன அமைதி ஓடி ஒளிந்து கொள்ளும்.  

மகரம்

மகர ராசி அன்பர்களே, சந்தோஷமாக இருக்கப் போதுமான காரணங்கள் இருக்கின்ற போதிலும் மனக் கவலையில் அல்லல்படுகிறீர்கள். வருகின்ற வருமானங்களையும், தேடி வந்து சேரும் செலவுகளையும் தாராளமாகச் சமாளித்துக் கொண்டு நிம்மதியாக இருக்க முடிந்தும், வீணாக அலட்டிக் கொள்வது உண்மையாகவே அவசியமற்ற ஒன்றுதான். தொழில் துறைகள் சிறப்பாகவே நடக்க வாய்ப்பு உண்டு. பண முடக்கம் என்பதும் இல்லை. வழக்கமான குடும்ப முணுமுணுப்புகளைத் தவிரப் பெரிதாகப் பிரச்சினைகளும் இல்லை. உறவினர்களும் நண்பர்களும் சோகச் செய்திகளோடு வந்தால் ஆறுதல் சொல்லுங்கள், நீங்கள் இடிந்து போய் கவலையில் மூழ்கி விடவேண்டாம். எப்போதும் மகிழ்ச்சியான செய்திகளையே வாழ்க்கையில் எதிர் பார்க்காதீர்கள்.  

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே, மழை பெய்தால் நிலம் விளையும், சற்று அதிகமானால் வெள்ளமாகும், இது இயற்கையின் நியதியே. உங்களுக்கு தேவைக்கு அதிகமாகவே வருமானம் புரள்கிறது, நல்ல சொத்துக்களும் சேர்கிறது. ஆனாலும் சேதங்களையும், உற்றார் உறவினர்களின் ரகளைகளும் சேர்ந்தே வருகின்றன. இது முற்றிலும் இயற்கையின் நியதியாகப்பட வில்லையா? சேர்ந்துபோய் மூலையில் உட்காரலாமா என்று யோசிக்கிறீர்கள். மனதை அளவிற்கு அதிகமாக அலட்டிக் கொள்வது தேக ஆரோக்கியத்திற்கு நல்லதல்லவே? குழப்பங்கள் இல்லாத குடும்பங்களைத் தேடிக் கண்டு பிடிக்க யாரால் முடியும்? கொஞ்சம் விட்டுக் கொடுங்கள், இல்லறம் மிக நல்லறமாக மாறிவிடும், இது நிச்சயம். அளவிற்கு அதிகமாக மன உளைச்சலில் இருப்பதற்குக் காரணம் நீங்கள் தாம். உண்மையில் எல்லாம் நல்லபடியாகவே நடக்கத் தொடங்கிவிட்டன.  

மீனம்

மீன ராசி அன்பர்களே, திட்டம் போட்டிருந்த பல முயற்சிகள் தலை கீழாகப் போய்க் கொண்டிருப்பதும் உண்மைதான், ஆனாலும் எல்லாம் குட்டிச் சுவராய்ப் போய்விட்டதே என்று அங்கலாய்க்க வோண்டிய தேவையில்லையே. இன்னும் உங்கள் சொல் அம்பலம் ஏறும், நுணுக்கமாகச் சிந்தித்தால் வெற்றி வாய்ப்புகள் பளீரென்று தெரியத் தொடங்கும். உதவிகள் என்று யாரையும் நம்பி விடாதீர்கள், அவரவர் தங்கள் நலத்தோடுதான் உங்களை அணுகுவார்கள். அவர்களை சமயோசிதமாக உபயோகித்துக் கொள்வது உங்கள் கைகளில் தான் இருக்கிறது.

குடும்பக் குழப்பங்கள் அடங்கிப் போகும், உதவும் உறவினர்கள் என்று யாரும் இல்லை, உங்கள் விஷயங்களில் தனியாகக் கவனம் செலுத்துங்கள். எதையும் விற்கவோ வாங்கவோ முயற்சிக்காதீர்கள், சிக்கலும், நஷ்டங்களும் காத்திருக்கிறது.

Comments