புற்றுநோயை ஏற்படுத்தும் மிளகாய்தூள்! | தினகரன் வாரமஞ்சரி

புற்றுநோயை ஏற்படுத்தும் மிளகாய்தூள்!

நாம் உணவின் சுவைக்காக பாவிக்கும் மசாலாவில் செத்தல் மிளகாய் முக்கிய இடத்தை வகிக்கின்றது. மிளகாயை மிளகாய் தூள்  துண்டு மிளகாய் என உணவு தயாரிப்புக்கு பயன்படுத்துகின்றோம். ஆனால் அண்மையில் சுங்க அவதான முகாமைத்துவ பிரிவினூடாக மிளகாய் இறக்குமதி செய்யும் மற்றும் விற்பனை செய்யும் முக்கிய சரக்கு பொருள் நிறுவனம் உள்ளிட்ட இறக்குமதியாளர்கள் 17பேர் அப்லடொக்சீன் (Aflatoxin) என்னும் புற்றுநோய் காரணியுடன் கூடிய 39கொள்கலன்களை இறக்குமதி செய்துள்ளமை ஊடகங்களுக்கு தெரியவந்துள்ளது. தர பரிசோதனை அறிக்கை பெறப்படாமலேயே சந்தைக்கு அவை விடுக்கப்பட்டுள்ளன. இதுவரை இருபது லட்சம் பேரளவில் அந்த மிளகாயை பாவனை செய்துள்ளார்கள்.  

இது தொடர்பாக விசாரணை செய்த சுங்க அவதான முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள் கூறியதாவது இந்தியாவிலிருந்து 39கொள்கலன்களில் புற்றுநோய் காரணி அடங்கிய 550மெற்றிக் தொன் அதாவது 50,000கி.கிராம் மிளகாய் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பாக சுங்கம் விசாரணைகளை பூர்த்தி செய்து இறக்குமதியாளர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.  

கொழும்பையும் அதனை அண்டிய பிரதேசங்களையும் சேர்ந்த பொருட்கள் இறக்குமதி செய்யும் 17மொத்த வியாபாரிகள் இந்த மிளகாயை இறக்குமதி செய்துள்ளமை விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. அவற்றை ஆய்வுகூட பரிசோதனைக்கு உட்படுத்திய போது அப்லடொக்ஸின் என்னும் புற்றுநோய்க் காரணி அடங்கியுள்ளதாக தெரியவந்ததால் அந்த மொத்த வியாபாரிகளின் களஞ்சியத்தை பரிசோதிக்க சென்றார்கள்.  

ஆனால் அப்போது அந்த களஞ்சியங்களில் சந்தேகத்துக்குரிய பொருட்கள் இல்லாமை உறுதிப்படுத்தப்பட்டது. மிளகாய் சுங்கத்திற்கு கிடைத்த பின்னர் அவை தரமானவையா இல்லையா என சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரிவின் உணவு பரிசோதனை அதிகாரிகளால் பரிசோதிக்கப்படும். பரிசோதனையின் பின்னர் அவர்கள் மனித பாவனைக்கு உகந்ததல்ல எனக் கண்டால் அவற்றை மீள் ஏற்றுமதி செய்ய வேண்டுமென முடிவு வருவார்கள். அப்லடொக்சீன் அனுமதிக்கப்பட்ட அளவு கிலோ கிராம் ஒன்றுக்கு 30மைக்ரோ கிராமுக்கு குறைவாக இருக்க வேண்டும். அதற்கு அதிகமான காணப்பட்டால் மீள் ஏற்றுமதி செய்ய வேண்டும். அல்லது அவற்றை அழிக்க வேண்டும். ஆனால் அந்த இறக்குமதி செய்யப்பட்ட மிளகாய் தூளில் குறிப்பிட்ட அளவைவிட நான்கு மடங்கு எப்லடொக்சீன் காணப்பட்டதாக ஆய்வு கூட அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளன.  

ஆனால் இங்கே சுங்கம் அதன் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முன்னர் மொத்த மிளகாயும் உள்ளூர் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு விட்டது. இது தொடர்பாக சுங்க அவதான முகாமைத்துவ பிரிவு குறிப்பிட்ட மிளகாய் தொகையை இறக்குமதி செய்ய நிறுவன உரிமையாளரிடம் சாட்சியங்களை பதிவு செய்துள்ளது. அவர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.  

1980ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க உணவு சட்டத்துக்கு அமைய அப்லடொக்சீன் ஏதேனும் உணவில் அனுமதிக்கப்பட்ட அளவையும் விட அதிகமாக இருந்தால் அது தரம் குறைந்ததென வகைப்படுத்தப்படும்.  

அப்லடொக்சீன் அடங்கிய 9கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய மிளகாய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறாதிருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க சுங்கம் தீர்மானித்துள்ளது.

இந்நாட்டில் பெயர் பெற்ற பிரதான மசாலா பொருட்கள் இறக்குமதி செய்யும் நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு அது பயன்படுத்தப்பட்டுள்ளமையும், சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.  

தரமற்ற இந்த மிளகாயை விநியோகம் செய்தமை தொடர்பாக வழக்கு தொடுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் இறக்குமதி செய்த நிறுவனத்தின் பெயர் வெளியிடப்படவில்லை. தற்போது மொத்த மிளகாயும் விற்பனை செய்யப்பட்டு 20இலட்சத்துக்கும் அதிகமான பாவனையாளர்களை அது சென்றடைந்துள்ளது. சாதாரணமாக துறைமுகத்துக்கு சரக்கு பொருட்கள், மிளகாய் போன்ற பொருட்கள் வந்தவுடன் பொருட்களின் நிறை, சரியான அளவுக்கு வரிப்பணம் செலுத்தப்பட்டுள்ளதா என ஆராய்வார்கள். தர பரிசோதனைக்காக குறிப்பிட்ட நிறுவனத்தால் பொருட்களின் மாதிரிகளும் பெறப்படும்.  

பின்னர் அந்த மிளகாய் மாதிரிகளை சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் பெற்று கொண்ட பின்னர், அந்த கொள்கலன்கள் விற்க அனுமதி அளிக்கப்படுவதில்லை. அவற்றின் தரப்பரிசோதனை முடிவடையும் வரை விற்பனை செய்யாமல் தம் வசம் வைத்திருப்பதாக அவர்கள் உறுதி அளிப்பார்கள். பின்னர் குறிப்பிட்ட உணவு பரிசோதனை நிறுவனத்துக்கு சென்று தரம் தொடர்பான அறிக்கையை பெற்ற பின்னரே அவற்றை விடுவிக்க முடியும். ஆனால் இந்த 17இறக்குமதி செய்யும் நிறுவனங்களும் குறிப்பிட்ட எழுத்து மூல பரிசோதனை அறிக்கையை பெற்று கொள்ளாமலேயே சந்தைப்படுத்தியுள்ளன. அவர்களுக்கு அவ்வாறு செயல்பட சட்டத்தில் எவ்வித அதிகாரமுமில்லை எனச் சுங்க அதிகாரியொருவர் தெரிவித்தார்.  

சுங்க கட்டணச் சட்டத்தின் விதிமுறைகளின் கீழ் இவர்கள் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என கருதப்பட்டால் அப் பொருட்களின் பெறுமதி போன்று மூன்று மடங்கை அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டும். கடந்த வருடம் அதாவது 2018ஆகஸ்ட் மாதம் தொடக்கம் நவம்பர் மாதம் வரையான கால பகுதியில் இந்த மிளகாய் தொகை அடிக்கடி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான விசாரணையை 2019மார்ச் மாதம் ஆரம்பித்துள்ளது. தற்போது அனைத்து விசாரணை நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டு பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க ஆவண செய்துள்ளதாக சுங்க அதிகாரிகள் கூறுகின்றார்கள்.  

அப்லடொக்சின் என்னும் புற்றுநோய் காரணி மிளகாயில் எவ்வாறு சேர்கின்றது? அதனால் ஏற்படும் பாதிப்பு எவ்வாறானது? புற்று நோய்க் காரணி அடங்கியுள்ளது என்பதை எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்? என்பது தொடர்பாக நாம் சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரிவின் டொக்டர் சபுமல் தனபாலவிடம் வினவியபோது அவர் பின்வருமாறு கூறினார்.   “செத்தல் மிளகாயில் அந்த புற்றுநோய் காரணி உருவாக முக்கிய காரணம் சரியான முறையில் உலர்த்தப்படாமல் ஈரலிப்புடன் சில காலம் வைத்திருப்பதாகும்.

மிளகாயின் ஈரலிப்பு 100க்கு 12வீதத்துக்கும் அதிகமாக இருப்பதாலும் எண்ணெய்த் தன்மை இருப்பதாலும் சில காலம் சென்றவுடன் பூஞ்சணம் உருவாகின்றது. அதனால் ஏற்படும் இரசாயனத் தாக்கத்தால் விஷத்துடன் கூடிய இரசாயனம் உருவாகின்றது என்றார்.

கடைசியாக ஒரு விஷயம். நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்களையும், ரசாயனங்களையும் உள்ளடக்கிய பல பண்டங்களை நாம் தினமும் விலை கொடுத்து வாங்குகிறோம். மிளகாய், மிசாலாவை எடுத்துக் கொண்டால் முடிந்தவரை நாமே மசாலா பொருட்களை வாங்கி அரைத்து எடுத்துக் கொள்வதே சிறந்தது. உணவுகளைப் பொறுத்தவரை விளம்பரக் கவர்ச்சியில் ஆழ்ந்து போகாமல் சொந்தமாக சிந்தித்து மாற்று வழிகளை, பாரம்பரிய முறைகளை முடிந்தவரை கடைபிடிப்பதே உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆரோக்கியம். 

தமிழில் – வயலட்

Comments