ராஜயோகம் என்னும் புனித கலையை உபதேசிக்கும் பிரம்ம ஸ்ரீ நித்தியானந்த சுவாமிகள் | தினகரன் வாரமஞ்சரி

ராஜயோகம் என்னும் புனித கலையை உபதேசிக்கும் பிரம்ம ஸ்ரீ நித்தியானந்த சுவாமிகள்

ஆயிரம் ஆயிரம் முனிவர்களும், தேவர்களும், சித்தர்களும், ஞானிகளும், அவதார புருஷர்களும், இந்தியாவிலே தோன்றி மக்களை நல்வழிப்படுத்தி இருக்கின்றார்கள். அந்த வரிசையிலே குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்த சுவாமிகள் சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டம் கோழி பாக்கம் கிராமத்தில் ஸ்ரீ சண்முக நாயகன் திருக்கோவிலையும் பிரம்ம சூத்திர குழு யோக பாடசாலையையும் அமைத்து மக்களுக்கு குரு உபதேசம் செய்து வருகின்றார்.

இன்று சண்முக நாயகனின் அடையாளம் கொண்டுள்ள இத் திருத்தலம் இதற்கு முன்புவரை ராஜயோக பாடசாலையாக மட்டுமே இயங்கி வந்தது. குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்த சுவாமிகளின் பீடமானது பிரம்ம சூத்திர குழு என்று அழைக்கப்படுகின்றது. இந்த பிரம்ம சூத்திர குழு பாடசாலையில் மனிதன் பரப் பிரம்மத்தில் கலக்க உதவும், ராஜயோகம் என்னும் புனித கலையை பிரம்ம ஸ்ரீ குரு நித்தியானந்த சுவாமிகள் உபதேசித்து வருகின்றார். இந்த உபதேசமானது ஒவ்வொரு மாதம் பௌர்ணமி தினம் அன்று நடைபெறுகின்றது. பௌர்ணமி பூஜையின் போது குருநாதர் சீடர்களின் ஆன்ம விழிப்பு வேண்டி இறைவனிடம் மன்றாடி ஆசி பெற்று அதை சீடர்களுக்கு வழங்கும் விதமாக சீடர்களை ஒருங்கே அழைத்து அவர்களுக்கு ஆரத்தி செய்கின்றார். மேலும் அதன் நிறைவாக பக்தர்களுக்கு அன்பே வடிவான சிவ ஜோதியின் உத்தமமான விபூதியின் மூலம் திலகமிட்டு இறைவனின் மடியில் சேர்க்கின்றார்.

ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் உலகெங்கும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இவரிடம் வந்து ஆசி பெறுகின்றார்கள். கதிரவனின் அருட் கதிர்களால் காரிருள் விலகி மலர்ச்சி மலர்வது போல சண்முக நாயகனின் அருளைப் பெற்றவர்களின் வாழ்க்கையில் மலர்ச்சி நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது.

குறிப்பாக இத்தலத்தில் எங்கும் காணாத வண்ணம் மும்மூர்த்திகளும் தம்பதி சமேதராக வீற்றிருக்கின்றனர். அதாவது பிரம்மா சரஸ்வதி மகாவிஷ்ணு மகாலட்சுமி சிவபெருமான் துர்கா தேவி ஆகியோர். இதன் காரணமாக திருமணத்தடை உள்ளவர்கள் முறையாக விரதங்களை அனுஷ்டித்து அருளைப் பெறுபவர்களுக்கு திருமணத் தடை விலகி மணவாழ்க்கை கைகூடுகிறது.சிவபெருமான் துர்க்காதேவி மட்டுமல்லாது, அவர்களின் சிருஷ்டிகள் ஆன முருகப்பெருமான், விநாயகப் பெருமான், ஐயப்பன் ஆகியோரும் ஒருங்கே வீற்றிருப்பதால் இங்கே புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கு இறைவனின் மனம் இசைக்கின்றது. நமது உடலில் துவாரங்கள் 9 இங்கே எழுந்தருளியுள்ள தெய்வங் களின் எண்ணிக்கை 9 இந்த 9 தெய்வங்களையும் முறையாக வலம் வருபவர்களின் நவக் கிரக பலன்கள் நற்பலன்களாக அமையும். இவை எல்லாத்தையும் விட இந்த கோயிலின் சிறப்பு சண்முக நாயகனே மூலவராக எழுந்தருளியுள்ளார்.  

Comments