பிரதியமைச்சர் பதவி வகிக்க தன்மானம் இடம் தராது | தினகரன் வாரமஞ்சரி

பிரதியமைச்சர் பதவி வகிக்க தன்மானம் இடம் தராது

அமைச்சரவைக்கு, அமைச்சரவை அந்தஸ்துள்ள பதவிக்கு முஸ்லிம் ஒருவரது பெயரை சிபாரிசு செய்ய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தவறியமைக்குறித்து தான் கவலைப்படுவதாக தெரிவித்த முன்னாள் அமைச்சரும் சுதந்திரக்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான பைஸர் முஸ்தபா கடந்தகாலத்தில் சிரேஷ்ட அமைச்சர் பதவி வகித்த தன்னால் பிரதியமைச்சர் பதவியையோ, இராஜாங்க அமைச்சுப் பதவியையோ ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் தனக்கென ஒரு தன்மானம் இருப்பதாகவும் சமுதாயத்தை அவமானப்படுத்தவோ, காட்டிக் கொடுக்கவோ முடியாதெனவும் கூறினார்.

தினகரன் வாரமஞ்சரிக்கு அளித்த பிரத்தியேக நேர்காணலின் போதே பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் முடிந்ததன் பின்னர் மௌனம் காத்துவந்த அவர் முதற் தடவையாக தினகரன் வாரமஞ்சரிக்கு  மனம் திறந்து பேசினார்.

கே: -   ஜனாதிபதி தேர்தலில், சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுனவுடன் இணைந்தே  பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. இருகட்சிகளுக்குமிடையிலான இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தும் புதிய அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்? 

ப: ஜனாதிபதி தேர்தலில் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் தன்னைப் புறக்கணித்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்பு வைபவத்திலேயே சுட்டிக்காட்டியிருந்தார். அவரிடமிருந்து முஸ்லிம்கள் எதனையும் எதிர்பார்க்க முடியாது. அனைவருக்கும் நான் ஜனாதிபதி என்று அவர் கூறிய போதும் அமைச்சுப்பதவி விடயத்தில் அவர் பக்கமிருந்து எதிர்பார்ப்பது கஷ்டமானதே. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பொதுஜன முன்னணியுடன் இணைந்த நிலையில் சுதந்திரக்கட்சி உரிய முறையில் அமைச்சுப்பதவிகளை கேட்டுப் பெறத்தவறிவிட்டதாகவே நான் பார்க்கின்றேன். 

அமைச்சரவை எண்ணிக்கை 16ஆக மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் சிறுபான்மை சமூகத்தில் தமிழர் இருவருக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. சுதந்திரக்கட்சி இது விடயத்தில் நியாயமாகச் செயற்படவில்லை என்பதை பெரும் கவலையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். நான் சுதந்திரக்கட்சியில் அங்கம் வகிக்கின்ற போதும் கட்சி விட்ட தவறை சொல்லியாக வேண்டியுள்ளது. சுதந்திரக்கட்சி நடந்து கொண்டவிதம் பிழையானதே ஆகும். 

கே: அப்படியானால் பிரதியமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் நியமனத்தின் போதாவது கவனம் செலுத்தி இருக்க முடியுமல்லவா? 

ப: நான் கடந்த காலத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள பல அமைச்சுப் பதவிகளை வகித்தவன். கீழிலிருந்து மேலே வந்தவன். மேலிருந்து கீழே வர வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. இவ்வாறான பதவிகளுக்காக யாரிடமும் மண்டியிடவேண்டிய தேவைகளும் எனக்கில்லை. 

பொதுஜனபெரமுனவின் முஸ்லிம் பிரதிநிதிகள் எவரும் கிடையாது சுதந்திரக்கட்சியில் இருவர் காணப்படுகின்றனர். சுதந்திரக்கட்சி நினைக்க வேண்டியது., கட்சியைவிட நாடு குறித்தே யாகும். அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தின் அவசியத்தை சுதந்திரக்கட்சி உணர்த்திருக்க வேண்டும். கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் 7  இலட்சம் முஸ்லிம்கள் சுதந்திரக்கட்சியை ஆதரித்ததை நாம் மறந்து விடக்கூடாது. உள்ளூராட்சி சபைகளில் 124 முஸ்லிம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

இவ்வாறான நிலையில் சுதந்திரக்கட்சிக்கு பாரிய பொறுப்பு இருக்கின்றது. அமைச்சரவைக்கு ஒருவரை சிபாரிசு செய்வதற்கு கடப்பாடு உள்ளது. இந்தக் கடப்பாட்டை கட்சி மறந்துவிட்டது இந்த தவறுக்கு பிரதமர் மீதோ, ஜனாதிபதி மீதோ எம்மால் குறை கூற முடியாது.  

தப்பைச் செய்திருப்பது சுதந்திரக்கட்சியாகும். 

நீங்கள் சுட்டிக்காட்டியது போன்று ராஜாங்க அமைச்சு, பிரதியமைச்சுப் பதவிகளில் ஒன்றை எனக்குத்தர முடிவு செய்திருந்தனர். அதனை நான் எந்தச் சூழ்நிலையிலும் ஏற்கத் தயாரில்லை. 

எனக்கென தன்மானம் உள்ளது அதனை விட்டுக் கொடுக்கமாட்டேன். சமூதாயத்தை அவமானப்படுத்தவோ, காட்டிக்கொடுக்கவோ நான் ஒருபோதும் இணங்க மாட்டேன். இதே வேளை ஒரு இடத்தை பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு வழங்குமாறு நான் ஆலோசனை வழங்கினேன். அதுவும் நடக்கவில்லை. 

தனது சமுதாயத்தின் கௌரவம் பாதிக்கப்படுவதற்கு இந்த பைசர் முஸ்தபா ஒருபோதும் துணைபோகப் போவதில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றேன். 

கே: இந்தத் தவறைச் செய்த சுதந்திரக் கட்சியை நீங்கள் எவ்வாறு கையாளப்போகின்றீர்கள்?

ப: சுதந்திரக்கட்சி இந்தத் தவறுக்கு எப்படிப் பரிகாரம் தேடப்போகின்றது என்பது குறித்து என்னால் எதுவும் கூறமுடியாது. அது கட்சி எதிர்கொள்ளும் விடயமாகும். ஆனால் நான் தொடர்ந்தும் சுதந்திரக்கட்சியிலேயே இருப்பேன். அதன் மூலமே எனது அரசியல் பயணம் தொடரும். வரக்கூடிய பொதுத் தேர்தலில் கூட கொழும்பு மாவட்டத்தில் சுதந்திரக்கட்சியூடாகவே போட்டியிடவுள்ளேன். கட்சி விட்டதவறைச் சுட்டிக்காட்டியுள்ளேனே, தவிர கட்சிக்கு விரோதமாகச் செயற்பட முனையவில்லை. 

கே: ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் தரப்புகள் முஸ்லிம் சமூகத்தை தவறாக வழி நடத்தியதாக நீங்கள் கூறியுள்ளீர்களே? 

ப: உண்மையைத்தான் நான் சொன்னேன். இன்றும் அதே நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றேன். முஸ்லிம் தலைவர்கள் இருவரும் 19 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகவே முஸ்லிம் சமூகத்தைத் தூண்டிவிட்டார்கள். 

வடக்கு கிழக்கில் சிறுபான்மைச் சமூகங்கள் கோட்டாபய ராஜபக்சவை முற்றாக நிராகரித்தனர். இதனை எவராவது மறுப்பார்களா? முஸ்லிம்கள் ஒரே கூட்டுக்குள் இருக்கக் கூடாது. நாம் பரவலாக இருதரப்புக்கு பிரிந்து இருக்க வேண்டியதன் அவசியத்தை நான் பல இடங்களிலும் கூறிவந்துள்ளேன். முஸ்லிம்களின் மனங்களை திசை திருப்பி கோட்டாபயராஜபக்வை சிறுபான்மை மக்களின் துரோகியாக காட்டவே இந்தத் தலைவர்கள் முயற்சித்தனர். 

நாங்கள் தான் கிங்மேக்கர்கள் எனச் சிறுபான்மைச் சமூகத்தலைவர்கள் தொடர்ந்து கூறிவந்துள்ளனர். இது வழமையானதாகவே காணப்பட்டது. பௌத்த சிங்கள மக்கள் ஆழமாகச் சிந்தித்தனர். இதற்கு முடிவு கட்ட ஓரணியில் திரண்டனர். சிறுபான்மைத் தரப்புகளின் இலக்கை நோக்கி குறிவைத்து தவிடுபொடியாக்கி விட்டனர். இனிமேலாவது இந்த முஸ்லிம் தலைமைகள் சிந்திக்க வேண்டும். சமூகத்தை காட்டிக்கொடுக்கும் அரசியல் செய்ய முற்படக்கூடாது.  

அத்துடன் முஸ்லிம் சமூகமும் சிந்திக்க வேண்டும். சுய நல அரசியல் தலைவர்களின் பின்னால் அணிதிரளாமல் சுயமாகச் சிந்தித்து செயற்பட முன்வர வேண்டும். 

சமூகம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் இனவாத ரீதியில் சிந்திப்பதை தவிர்க்க வேண்டும். இனவாதத்தை தூண்டி அரசியல் செய்ய முற்பட்டால் சிறுபான்மைச் சமூகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியதாகிவிடும் என்பதை மறந்துவிடக் கூடாது. ஒற்றுமையுடன் நாம் இலங்கையர் என்ற ரீதியில் எமது அடையாளத்தைப் பாதுகாத்துக் கொள்ள முன்வர வேண்டும். 

கேள்வி – உங்களது எதிர்கால அரசியல் பயணம் எவ்வாறானது? 

பதில் – எனது தந்தை அரசியலை கை விட்டு தொழிலைக் கவனிக்குமாறு பல தடவைகள் எச்சரித்தார். ஆனால் நான் சமுதாயத்துக்காக பணியாற்றுவதென உறுதிபூண்டுள்ளேன். அதனை அரசியலூடாக முன்னெடுக்கவே நாடியுள்ளேன். முஸ்லிம் சமூகம் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்குத் துரோக மிழைக்க மாட்டேன். 

எனது சமூகத்தின் எதிர்கால இருப்புக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். என்னால் எனது மக்களுக்கு என்ன செய்யமுடியுமோ அதனைச் செய்வதில் பின் நிற்க மாட்டேன். கடந்த காலங்களில் இடம்பெற்ற துயரச் சம்பவங்களின் போது முஸ்லிம் சமூகத்துக்காக முதலில் குரல் கொடுத்தவன் நான். அதனை நான் அரசியல் நோக்கத்தோடு செய்யவில்லை.  சமூகத்திற்கான எனது கடமையாக கருதியே செயற்பட்டேன். 

அதே பாதையில் தான் எதிர்காலத்திலும் எனது சமுதாயப் பணி தொடரும். நான் அல்லாஹ்வுக்குப் பயந்தவனாக மக்களுக்கான சேவைக்காக என்னை அர்ப்பணித்து வருகின்றேன். முஸ்லிம் சமூகத்துக்காக குரல் கொடுப்பதில் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை.   

நேர்காணல்: எம்.ஏ.எம். நிலாம்

Comments