போருக்குப் பிந்திய அரசியல்: முன்னெடுப்பும் சறுக்கலும் | தினகரன் வாரமஞ்சரி

போருக்குப் பிந்திய அரசியல்: முன்னெடுப்பும் சறுக்கலும்

எத்தனை சவால்கள், பின்னடைவுகள், தோல்விகள் ஏற்பட்டாலும் மனித இயக்கம் சோர்ந்து விடுவதில்லை. சமூக அசைவியக்கம் என்பது இடையறாது பல முனைகளில் தொழிற்பட்டுக் கொண்டேயிருக்கும். அத்தகைய பன்முனைத் தொழிற்பாடுதான் மனித குலத்தை இத்தனை விரைவாகவும் வலுவாகவும் இந்தப் பூமிப் பரப்பில் உயர்த்தியது. 

எத்தனை சவால்களை எதிர்கொண்டு அவற்றை முறியடித்தாலும் புதிய புதிய சவால்கள் தோன்றிக் கொண்டேயிருக்கிறது. உருவாகும் பின்னடைவுகளைச் சீர் செய்யும்  ​போதும் புதிய சறுக்கல்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. தோல்விகளிலிருந்து மீண்டெழுந்தாலும் இன்னொரு தோல்விக்கான புள்ளி எங்கோ எப்படியோ தோன்றி விடுகிறது. இப்படித்தான் மனித வரலாறு நகர்ந்து கொண்டிருக்கிறது. 

சவால்கள், பின்னடைவுகள், தோல்விகள் எட்டக் கூடாது என்ற அறிவோடு எவ்வளவுதான் முயன்றாலும் முன்னெச்சரிக்கையோடிருந்தாலும் தோல்விகளும் பின்னடைவுகளும் ஏற்பட்டு விடுகின்றன. புதிய சவால்கள் முளைத்து நம்மைத் திகைப்படைய வைக்கின்றன. 

என்றாலும் மனித மனம் களைத்துச் சோர்ந்து பின்னடைந்து விடுவதில்லை. அது சிகரத்திலிருந்து சறுக்கி அடிவாரத்துக்கு வந்தாலும் மறுபடியும் சிகரம் நோக்கியே சிறகடிக்கத் துடிக்கும். உயிர்களின் பொதுவியல்பு இது. 

இப்படித்தான், போருக்குப் பிந்திய தமிழர் அரசியலை முன்னெடுப்பதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிகள் சறுக்கியபோதும் சோர்ந்து விடாமல் இன்னொரு புதிய முயற்சி ஆரம்பமாகியது. இதன்போது ஒரு விசயம் கவனத்திற் கொள்ளப்பட்டது. ஏற்கனவே எடுக்கப்பட்ட முயற்சிகளில் பெற்றுக்கொண்ட படிப்பினைகளை முதலில் நேர்மையான முறையில் அணுகி, ஆராய்வது இந்தப் புதிய முயற்சிக்கு உதவும் என. அந்தப் படிப்பினைகளின் அடிப்படையில் புதிய அணுகுமுறைகளைக் கைக்கொள்ளலாம். புதிய வழிமுறைகளை உருவாக்கிக் கொள்ளலாம் என்றும். 

இதன்படி இதை ஒரு சுருக்க நிலையில் ஆராய்ந்து அனுபவங்களைத் தொகுத்துக் கொண்டோம். இந்த அனுபவங்களை அல்லது படிப்பினைகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு புதிய முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதில் அரசியற் கட்சிகள், பாரம்பரிய அமைப்புகளை அணுகுவதற்கு முன்பு அங்கங்கே உள்ள சமூகச் செயற்பாட்டாளர்களையும் மாற்றுச் சிந்தனையாளர்களையும் முதற்கட்டமாகத் தொடர்பு கொண்டு பேசுவது. அவர்களுடைய அறிதல்களையும் அனுபவங்களையும் தொகுத்துக் கொள்வது. பிறகு அவர்களையும் இந்தத் திட்டத்தின் அடிப்படையில் ஒருங்கிணைப்பது. இந்த ஒருங்கிணைப்பைப் பலமானதொரு கட்டமைப்பாக மாற்றுவது. வளர்த்தெடுப்பது என இந்த முயற்சி அமைந்தது. இதை முதலில் வடக்கில் ஆரம்பிப்பது எனவும் சம நேரத்தில் கிழக்கிலும் இதற்கான தொடக்கங்களை உண்டாக்குவதைப்பற்றிச் சிந்திப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கிழக்கின் நிலைமை, அந்தச் சூழல், அதனுடைய யதார்த்தம் போன்றவை வேறு. அப்படியிருப்பதால் அதற்கு ஏற்றவாறு தனியான ஒரு கவனம் தேவை. அதை வடக்கிலிருந்து நோக்க முடியாதென்றும் தீர்மானித்தோம். 

இதில் இன்னொரு விடயமும் பிரதானமாக உணரப்பட்டது. இந்தப் புதிய முயற்சியில் ஈடுபடுவோருக்கு சில நம்பிக்கைகளை ஊட்ட வேண்டும். அதில் இரண்டு விடயங்கள் பிரதானமானவையாக இருந்தன. ஒன்று, இந்த முயற்சிகளுக்கு குறிப்பிட்டளவு நிதி தேவை. நிதி இருந்தால்தான் செயற்பாடுகளைத் தளர்வின்றித் தொடர முடியும். தொடராகவும் செய்ய இயலும். இரண்டாவது ஊடகப் பலம் வேண்டும். இரண்டுக்கும் புலம்பெயர் சமூகத்தின் பங்களிப்பே அவசியம். இல்லையெனில் இந்த முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாமல் இடையறுந்து விடும். அத்துடன் நிதியும் ஊடக பலமும் இருக்குமானால் அதன் மூலம் வேலைத்திட்டங்களைச் சிறப்பாகச் செய்ய முடியும். வேலைத்திட்டங்களைத் திட்டமிடவும் ஆரம்பிக்கவும் முடியும். அந்த வேலைத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும்போது அதற்கான ஊடகப் பொறிமுறை மூலமாக அந்தச் செயற்பாடுகளைப் பரவலாக்கம் செய்ய முடியும். இது சனங்களை எமது செயலாக்கத் தளத்தை நோக்கி அழைத்து வரும். அல்லது சனங்களிடம் அறிமுகத்தை உண்டாக்கி எமக்கான இடத்தை உருவாக்கும். 

இது புதிய – மாற்று அரசியலுக்கான விரும்பிகளை ஒரு மையத்தை நோக்கி நம்பிக்கையோடு திரள வைக்கும் என்ற எண்ணத்தோடு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. உள்நாட்டிலும் (தாயகத்திலும்) புலம்பெயர் நாடுகளில் இருந்தும் ஆர்வமுள்ள சிலர் இதில் நம்பிக்கையோடும் ஈடுபாட்டோடும் இதில் ஈடுபட்டனர். 

முதலில் இந்த முயற்சியில் ஈடுபட விரும்பியோருக்குத் திட்டங்கள் தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. ஏற்கனவே நடந்த மாற்று அரசியலுக்கான – போருக்குப் பிந்திய அரசியலுக்கான முனைப்புகளை எடுத்ததையும் அவற்றின் கதியைப் பற்றியும் உரையாடி, விவாதிக்கப்பட்டது. இந்தப் பின்னடைவுகளுக்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதை உடனடியாக எவராலும் சரியாக இனங்காண முடியவில்லை. ஆனால் பலவிதமான கருத்துகளின் வழியாக சில விடயங்கள் இனங்காணப்பட்டன. அதில் முக்கியமான ஒன்று எந்தக் கட்சியும் மக்கள் மத்தியில் தம்மை அர்ப்பணித்து வேலை செய்யத் தயாரில்லை என்பது. மக்களுக்கான வேலைகளைச் செய்வதற்கு ஏற்பட்ட தயக்கத்துக்குப் பல காரணங்களிருந்தன. 

அதிற் சில – 

1. அரசியற் கொள்கையிலும் நிலைப்பாட்டிலும் உள்ள தெளிவின்மை 

2. உறுதிப்பாடின்மை. 

3. சமூக ஜனநாயகம் குறித்த விடயங்களில் சரியான பார்வையில்லாத குறைபாடு. 

4. நிதிப்போதாமை  என நீண்டது இந்தப்பட்டியல். 

தேர்தல் அரசியலில் வாக்குகளின் எண்ணிக்கை முக்கியம் என்பதால் கொள்கையின் உறுதிப்பாட்டை விடவும் சமரங்களுக்கான இடமே அதிகம். என்பதால் இந்தப் பிரச்சினைகள் தவிர்க்க முடியாமல் உள்ளது என்றும் காண முடிந்தது. இரண்டாவது எந்தத் தளத்திலிருந்து வேலை செய்வது? அதாவது எந்த அடிப்படையில் தமது கட்சிக் கட்டமைப்பை உருவாக்குவது என்று தெரியாத தடுமாற்றம் இன்று அனைத்துக் கட்சிகளுக்கும் உள்ளது. அரைவாசிக்கு மேற்பட்ட கட்சிகள் ஆயுதப்போராட்ட இயக்கங்களிலிருந்து வந்தவை. இந்த இயக்கங்கள் புலிகள், இலங்கை அரசு, இந்தியப் படைகள், இந்திய அரசு என்ற அதிகார அமைப்புகளால் காயடிக்கப்பட்டவை அல்லது நெருக்கடிக்குள்ளானவை என்பதால் இவற்றின் வளர்ச்சியானது ஒரு ஒழுங்குமுறைப்பட்ட பரிணாமத்தைக் கொண்டதல்ல. சூழ்நிலைக்கு ஏற்றவாறும் நெருக்கடியிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளக் கூடியவாறும் கட்டமைத்தவை. தலைமைகளின் அழிவைக் கொடூரமான முறையில் எதிர்கொண்டவை. ஆகவே பல உட்சிக்கல்கள் இவற்றுக்குண்டு.

இது இவற்றின் அரசியல் பாதையையும் அதன் உறுதிப்பாட்டையும் குலைத்திருக்கிறது. இதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.   மூன்றாவது அரசாங்கத்தின் கண்காணிப்பாகும்.

இதுவும் சாதாரணமான ஒன்றல்ல. அன்றைய சூழலில் 2013, 2014 ஆம் ஆண்டுகளில் எல்லாவற்றையும் கண்காணிக்கும் ஒரு போக்கு நாட்டில் வலுவாகக் காணப்பட்டது. கூடவே மக்களிடமுள்ள சந்தேகங்களும் புதிய அரசியலுக்கான தயக்கங்களும்.

இதெல்லாம் உருப்படுமா என்பது மக்களிடமிருந்த பிரதானமான கேள்வி. அடுத்தது இப்படிப் பல அமைப்புகள் வந்தால் அல்லது குழுக்கள் என உருவாகினால் அது தமிழ் மக்களின் அரசியலுக்குப் பாதிப்பை உண்டாக்கும். ஒற்றுமை என்ற பலத்தைச் சிதைக்கும் என்பது. மற்றது, இதற்குப் பின்னால் உள்ளது யார் அல்லது எந்தச் சக்தி? என்ற சந்தேகம். குறிப்பாக அரச பின்புலம் ஏதாவது இருக்குமா என்ற ஐயம் எனச் சில காரணங்கள் மேலும் கண்டறியப்பட்டன.   இப்படிப் பல நெருக்கடிகள், சிக்கல்கள், உளவியற் குறைபாடுகளின் மத்தியில் எமது முயற்சிகள் தொடர்ந்தன. ஒவ்வொரு விடயமும் மிக நிதானமாகவே கையாளப்பட்டது. 

கருணாகரன்   

Comments