பிரித்தானிய பிரிக்ஸிட் தேர்தலும் கன்சவேட்டிவ் வெற்றியும் | தினகரன் வாரமஞ்சரி

பிரித்தானிய பிரிக்ஸிட் தேர்தலும் கன்சவேட்டிவ் வெற்றியும்

பிரித்தானியப் பாராளுமன்றத் தேர்தல் மீண்டும் கன்சவேட்டிவ் இன் யுகத்திற்கு வாய்ப்பளித்துள்ளது. பிரதமராக பொறிஸ் ஜோன்சன் தெரிவாகியுள்ளார். ஏறக்குறைய 363 ஆசனங்களுடன் ஆட்சி அமைக்கும் பலமுடைய கட்சியாக பழைமை பேணும் கட்சி மாறியுள்ளது. 43.6 வீத வாக்குகளைப் பெற்று தனது பெரும்பான்மையை உறுதி செய்துள்ளது. எதிர்த்து போட்டியிட்ட தொழிற்கட்சி 203 ஆசனங்களைப் பெற்றதுடன் 32.2 வீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது என்பது கவனிக்கத்தக்கது. இத்தேர்தலுக்கான அதிக முனைப்புடன் தொழிற்கட்சி செயல்பட்டதுடன் கடந்த 80 ஆண்டுகளில் பெறாத குறைவான வாக்குகளை அக்கட்சி பதிவு செய்துள்ளது. எதுவாயினும் கடந்த பல ஆண்டுகளாக பிரிக்ஸிட் விவகாரத்திற்கான ஆட்சியில் காணப்பட்ட இழுபறியானது ஒருவாறு புதிய கட்டத்தை எட்டியுள்ளது. இக்கட்டுரையும் கன்சவேட்டிவ் கட்சியின் வெற்றிக்கான காரணங்களுக்கூடாக ஏற்படப் போகும் மாற்றங்களை தேடுவதாக அமையவுள்ளது.  

முதலில் இத்தேர்தல் பிரிக்ஸிட் தேர்தலாகவே அமைந்துள்ளது. பிரிக்ஸிட் மூன்று பிரதமர்களை தெரிவு செய்துள்ளது. அதிலிருந்து விடுபடுதல் அல்லது அதனுடன் உடன்பாட்டின் கீழ் விடுபடுதல் என்ற இரு தெரிவுக்கான இழுபறியாகவே கடந்தகால பிரிட்டன் ஆட்சித் துறை காணப்பட்டது. எல்லாவற்றையும் கடந்து பிரிக்ஸிட் விடயம் மட்டுமே முதன்மைப்படுத்தப்பட்ட போக்கு முடிவுக்கு வந்துள்ளது. இதனால் பொறிஸ் ஜோன்சன் இதுவரையும் டேவிட் கமரோன் தலைமையிலான அரசாங்கத்திலிருந்தே ஆட்சி செய்து வந்தார். அதலிருந்து விடுபடும் சூழலும் ஜோன்சன் தலைமையில் கன்சவேட்டிவ் வழிநடத்தப்பட்ட தேர்தல் என்ற வகையில் பெருமளவு திருப்தியானதாக அமைந்துள்ளது. இதனால் பிரிக்ஸிட் விடயத்தில் ஜோன்சன் எடுக்கும் முடிவுகளுக்கு நாடாளுமன்றம் கட்டுப்படும் நிலை உருவாகும் என்ற வாதம் மேலெழுந்துள்ளது. ஏறக்குறைய பிரிக்ஸிட் விடயத்தில் பிரதமருக்கு முடிவெடுக்கும் ஆணையை மக்கள் வழங்கியுள்ளதாக ஊடகங்கள் கருத்துரைக்கின்றன. அதற்கு ஆதரவாக ஆளும் தரப்பு விவாதங்கள் நிகழ்கின்றன.  

இது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதியின் அறிவிப்பு ஜோன்சனின் மனநிலையை தெளிவுபடுத்துகிறது. அதாவது ஜோன்சனின் வெற்றியானது பிரிக்ஸிட் பின்பான அமெரிக்காவுடனான வர்த்தக உறவைப் பற்றிய செய்தியாக அமைந்துள்ளது. இரு நாடுகளும் பிரிக்ஸிட்க்கு பின் பாரியளவிலான புதிய வர்த்தக தொடர்பினை ஏற்படுத்துவதற்கான சூழல் உருவாகியுள்ளது எனக்குறிப்பிட்டுள்ளார். அத்தகைய வர்த்தக உறவு ஐரோப்பிய யூனியனுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையை விட இலாபகரமானதாக அமையும் என்றார். இருவரும் ஏறக்குறைய சமதளத்தில் பயணிக்கும் தலைவர்கள் என்ற பதிவு உலகப் பரப்பில் உள்ளது.  

இரண்டாவது தேர்தல் காலத்தில் பிரித்தானிய மக்களுக்கு தொழில் கட்சியின் கொள்கையைக் காட்டிலும் கனசவேட்டிவ் கட்சியின் கொள்கைகள் தெளிவானதாக அமைந்திருந்தது. குறிப்பாக கன்சவேட்டிவ் இரண்டு பிரதான விடயங்களை முதன்மைப்படுத்தியிருந்தது. முதலாவது பிரிக்ஸிட் இரண்டாவது பிரிட்டனின் ஐக்கியம். இதன் பின்புலத்திலும் பொருளாதார மற்றும் நலன்பேணும் திட்டங்கள் சார்பிலும் கன்சவேட்டிவ் இன் கொள்கைகள் விபரமாக அமைந்திருந்தன. இதுவே தற்போதைய பிரிட்டனின்’ இருப்புக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அவசியமானவை என பிரித்தானிய மக்கள் கருதுகின்றனர். பிரிட்டன் பிரித்தானியருக்கானதாக இருத்தல் வேண்டும் என்ற எண்ணத்தை பிரதிபலிப்பதாக மக்களின் கோரிக்கைகள் மாறிவருகின்றன.

இது ஐரோப்பா முழுவதும் ஏற்பட்டது போன்று பிரிட்டனிலும் காணப்படுகிறது. பிரிக்ஸிட் என்பதுவும் அத்தகைய எண்ணத்தை பிரதிபலிப்பதாகவே அமைந்துள்ளது. இதனையே மேற்குலகம் தற்போது ஊக்குவிக்கும் நிலையில் காணப்படுகிறது.  

மூன்றாவது இத் தேர்தலில் எஸ்என்பி என அழைக்கப்படும் Scottish National Party போட்டியிட்ட 59 இடங்களில் 48 ஆசனங்களைப் பெற்றுள்ளது. இது பெரும் திருப்பமாக அக்கட்சி அரசியலில் பார்க்கப்பட்டாலும் நடைமுறையில் பிரிட்டனின் ஐக்கியத்திற்கு சவாலானதாக அமைய வாய்ப்புள்ளது. இதன் தேர்தல் அறிக்கைகள் அனைத்துமே ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் பற்றியதாக அமைந்திருந்தது.

2014 இல் நடந்த பொதுவாக்கெடுப்பில் 45 சதவீத வாக்குகளையே பெற முடிந்ததனால் பின்வாங்கிய போதும், மீண்டும் அத்தகைய போக்கிற்கான அணுகுமுறையை உருவாக்கியுள்ளது. அதனால் இதனை இரண்டாவது பொதுவாக்கெடுப்பாக கருதும் நிலையை எஸ்என்பி உருவாக்கியுள்ளது.

அது மட்டுமன்றி பிரிக்ஸிட்ன் முடிவையும் அங்கீகரித்த கட்சியாக தேர்தல் கால அறிக்கைகள் அமைந்திருந்தன. அக்கட்சியின் தலைமை நிக்கலோ ஸ்ரோக்கன் குறிப்பிடும் போது, ஸ்கொட்லாந்து மக்களுக்கு தேவையானது தமது எதிர்காலத்தை தாமே தீர்மானிப்பதாகும் என்ற தேர்தல் பிரகடனத்தை முதன்மைப்படுத்துவதாக தெரிவித்தார். 2015 இல் ஏழு ஆசனங்களை மட்டும் கைப்பற்றியிருந்தது கவனிக்கத் தக்க விடயமாகும்.

இத்தகைய நகர்வின் பிரதிபலிப்பு ஆபத்தான அரசியலை ஏற்படுத்தும் என்ற அவதானிப்பு பொது வெளியிலும் பிரித்தானியாவின் ஆளும் தரப்பிடமும் உண்டு. அதுமட்டுமன்றி ஆளும் தரப்பில் தற்போதைய பிரதமருடன் அக்கட்சி ஒத்துழைக்க முடியாது என்ற பதிவையும் ஆரம்பத்திலிருந்தே ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் ஜோன்சனும் அக்கட்சியின் ஆதரவு தேவையற்றது என்ற எண்ணத்தை முதலிலிருந்தே குறிப்பிட்டு வருவதனைக் காணமுடிகிறது.  

நான்காவது தொழில் கட்சியும் லிபரல் ஜனநாயக கட்சியும் பெருமளவுக்கு எதிர்ப்பு வாதத்தை அதிகம் வெளிப்படுத்தியிருந்தன. அதிலும் தாராள ஜனநாயகக் கட்சியானது பிரிக்ஸிட்க்கு எதிரான கொள்கைகளை அதிகம் கொண்டிருந்தது. வெளிப்படையாக அதனை விவாதப் பொருளாகவும் தேர்தல்  பிரகடனமாகவும் கொண்டிருந்தது. இவ்வாறு உதிரிக்கட்சிகளது அணுகுமுறைகள் அமைந்திருந்தமையும் அவற்றின் தேர்தல் தோல்விக்கு காரணமாகக் கொள்ளப்படுகிறது.

அக்கட்சிகள்  கடந்த 2017 தேர்தலுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது பெரும் வீழ்ச்சியை அடைந்துள்ளன. அதே நேரம் கன்சவேட்டிவ் கட்சியானது 47 ஆசனங்களை அதிகமாக பெற்றுள்ளது.  

ஐந்தாவது பிரிட்டனின் பாரம்பரியம் என்ற ஒன்று எப்போதும் காணப்படுகிறது. அது இருகட்சி பாரம்பரியமாகும். அதனை இதுவரை தொழில் மற்றும் பழமைபேணும் கட்சிகளே கொண்டிருந்தன. அதனை வேண்டும் என்றே மாற்றும் மரபு இன்னமும் ஏற்படவில்லை என்றே கூறமுடியும். வேண்டுமாயின் தொழில் கட்சிக்கு மாற்றாக இன்னோர் கட்சியின் எழுச்சி சாத்தியமாகுமே அன்றி, பல கட்சிக்குரிய மனநிலை என்றுமே அந்த மக்களிடம் ஏற்படவில்லை என்றே கூறலாம் குறிப்பாக பசுமைக் கட்சி ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் கணிசமான இடங்களை பிடித்த போதும், பிரிட்டனில் எத்தகைய ஆசனத்தையும் பெறமுடியவில்லை என்பது கவனிக்க வேண்டிய அம்சமாகும்.  

எனவே மீண்டும் பழைமைவாதத்தின் எச்சங்களின் வெற்றியாக பதிவு செய்யப்பட்டாலும் அடிப்படையில் பிரிக்ஸிட் விவகாரமே முதன்மையான அம்சமாக உள்ளது. பிரித்தானிய மக்களது போக்கில் ஏற்பட்ட மாற்றமாக ஐரோப்பிய யூனியன் விடயம் அமைந்துள்ளது. இன்றைய பொருளாதார இருப்பினை பாதுகாக்கவும் ஒருமைப்பாட்டினை தக்கவைக்கவும் கன்சவேட்டிவ் கட்சியின் கொள்கையே பிரதானதாக அமைந்திருந்தது. எனவே பிரித்தனிய மக்களது எதிர்பார்க்கையும் அடைவும் ஐரோப்பாவுக்குள் பிரிட்டனின் தனித்துவத்தை பாதுகாப்பதாகும். அந்த மக்கள் தொளிவான அரசியல் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் பிரதிபலிப்பவர்கள் என்பதை மீண்டும் ஒரு தேர்தலில் நிறுவியுள்ளனர்.

கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்  

Comments