"இருளில் இருக்கும் மக்கள் வெளிச்சத்தைக் கண்டார்கள்" | தினகரன் வாரமஞ்சரி

"இருளில் இருக்கும் மக்கள் வெளிச்சத்தைக் கண்டார்கள்"

அதிகாலை கேட்ட பட்டாசு  சத்தம் என் தூக்கத்தை  கலைத்தது. கண்  விழித்தவனாய், நேரத்தைப்  பார்த்தேன். மணி காலை 5.10.  மறுபுறம் நாட்காட்டியை  பார்த்த பொழுதுதான் விடயம் புரிந்தது. ஓ! இன்று டிசம்பர் 1ஆம் திகதி.

மனதில் இனம் புரியாத சந்தோஷம். இது கிறிஸ்மஸ் மாதமல்லவா? உலகம் முழுவதும் முதலாம் திகதி தொடங்கி மாதம் முழுவதும் கொண்டாடும் ஒரே பண்டிகை என்றால்,  அது இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமாகிய 'கிறிஸ்மஸ் பண்டிகையே' என்பதில் எந்தவித மாற்றுத் கருத்திற்கும் இடமில்லை.

அப்படி ஒரு சந்தோஷம் எதற்காக எல்லோரும் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை விரும்புகிறார்கள்?  யார் அந்த இயேசு கிறிஸ்து?  உண்மையிலேயே அவருடைய பிறப்பை நினைத்துதான் மகிழ்ச்சியுடன் அவருடைய பிறந்தநாளை கொண்டாட உலகம் முழுவதும் ஆயத்தமாகிறது. அது ஒரு சம்பிரதாயமா?

கிறிஸ்மஸ் என்பது உலக இரட்சகராம் இயேசு கிறிஸ்து பிறந்த திருநாள். பாவத்திலும் சாபத்திலும் வாழ்ந்த மனிதன் இருண்ட நாட்களுக்குள் கடந்து போய்க் கொண்டிருந்த பொழுது பிதாவாகிய தேவனுக்கு மனுக்குலத்தை மீட்க வேண்டிய அவசியம் இருந்தது. அவர் தான் படைத்த இந்த மனுக்குலத்திற்காக பரிதாபப்பட்டார்.

ஆண்டவருக்கு கீழ்ப்படியாமையால் மனுக்குலம் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டது. பாவத்தின் உச்சத்தில் வாழ்ந்த  மனிதனை மீட்க பயமற்ற ஒருவர் தேவைப்பட்டார். ஆகையால்தான், தேவன் மனுஷ ரூபமெடுத்து மண்ணுலகில் மனிதர்கள் மத்தியில் பரிசுத்த ஆவியினால் பிறப்படைய கன்னி மரியாளை தெரிவு செய்து அவருடைய வயிற்றில் தேவகுமாரனாக பிறந்தார்.  அவருடைய பிறப்பு புருஷ சித்தத்தின்படியல்ல, தேவ சித்தத்தின்படி பரிசுத்த ஆவியினால் வந்தது.

மனுதனுடைய பாவங்களை போக்க பாவங்களுக்கு பலியாக தன்னை சிலுவையில் ஒப்புக் கொடுக்க இயேசு கிறிஸ்து பிறந்தார் என்று பரிசுத்த வேதாகமம் தெளிவாக உரைக்கிறது.

"இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள். மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது" என்று ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்ட வார்த்தை இயேசு கிறிஸ்து  பிறந்ததின் மூலம் நிறைவேறியது.   என்ன அந்த இருள்? மனுகுலத்தை மூடிய பாவ இருள் மனிதனை தேவசித்தம் செய்யவிடாமல் உண்மையான தேவனை தேடவிடாமல் இழுத்துப் போட்ட பாவம் என்னும் இருள். அந்த பாவத்தை போக்கவே இந்த பூமிக்கு இயேசு கிறிஸ்து வந்தார்.   அவருடைய பிறப்பைக் குறித்து யோசேப்பிற்கு தேவதூதன்  சொல்லும் பொழுது பரிசுத்த வேதாகமத்தின் மத்தேயு சுவிஷேசம் 1:21 வசனத்தில். "அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக, ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்." என்கிறது.

ஆம், பாவங்களில் இருந்து மனுக்குலத்தை இரட்சிப்பதற்கு நமக்கு கொடுக்கப்பட்ட ஒரே நாமம் "இயேசு" என்பதே. வேறு எந்த நாமமும் மனுக்குலத்திற்கு எந்தக் காலத்திலும் யாராலும் கொடுக்கப்படவில்லை. ஏனென்றால், அவர் மனித வடிவில் வந்த பரிசுத்த தேவன்.

இந்த இயேசு கிறிஸ்துவை தனது இரட்சகராக யார் எல்லாம் ஏற்றுக்கொள்கிறார்களோ  அவர்கள் எல்லாம் தேவனுடைய பிள்ளைகள் ஆகும்படி அவர்கள்  பாவங்களையெல்லாம் மன்னித்து பரிசுத்த வாழ்வை பூமியில் வாழ செய்து பரலோக வாழ்வை தருகிறார்.   இந்த புனித நாள்தான் "கிறிஸ்மஸ்" தினம், ஆனால் இன்று  உலகம் கொண்டாடுகிற "கிறிஸ்மஸ்" மனுக்குலத்தை பாவத்தில் உச்சத்திற்கு கொண்டு போய் குடியும், கும்மாளமும், களியாட்டங்களுமாக கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் நோக்கத்தையே மாற்றிவிட்ட பரிதாபம் சொல்லில் அடங்காது.    மனிதன் மனம் திரும்பி மறுவாழ்வு வாழ பிதாவாகிய தேவன் உண்டாக்கிய வழியே இயேசு கிறிஸ்து. இந்த ஆண்டில் நீங்கள் யாராக இருந்தாலும் ஒரு தடவை அவரை உங்கள் உள்ளத்தில், இல்லத்தில் இரட்சகராக ஏற்றுக்கொண்டு இந்த கிறிஸ்மஸ் தினத்தில் மனம் திரும்பி, பாவ அறிக்கை செய்து புதிய ஆண்டை ஆரம்பித்துப் பாருங்கள்.

இருளில் இருக்கிற உங்கள் வாழ்க்கையில் பெரிய ஒரு ஒளி வீசுவதை காண்பீர்கள். உங்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துகள். ஆண்டவர்  தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

போதகர் போல்ராஜ்
(கெத்செமனே கொஸ்பல் சேர்ச் - சேதவத்தை)

Comments