திருடனின் கண் பார்வையைப் பறித்து நகைப் பெட்டியை மீட்டுத்தந்த 'கன்னன் குடா கண்ணகி அம்பாள்' | தினகரன் வாரமஞ்சரி

திருடனின் கண் பார்வையைப் பறித்து நகைப் பெட்டியை மீட்டுத்தந்த 'கன்னன் குடா கண்ணகி அம்பாள்'

அம்மாவை வேண்டித் துதிப்போர் வேண்டுவதை தவறாது கொடுப்பவள் அம்பாள் என்பது ஐதீகம். திருடனின்  கண் பார்வையைப் பறித்து அவன் களவெடுத்த அம்பாளின் நகைப் பெட்டியை மீட்டுத் தந்தவளே கன்னன் குடாவில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கண்ணகி அம்பாள் என கன்னன் குடா கண்ணகி அம்பாள் தேவஸ்தான அறங்காவலர் சபைத் தலைவர் க.விமலநாதன் தெரிவிக்கிறார். பக்திப் பிரவாகத்தோடு அவர் அம்பாளைப்பற்றி வெளியிட்ட கருத்துக்களை தினகரன் வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறோம் 

மட்டக்களப்பு மாநகரத்தின் மேற்குப்புறத்தில் மட்டக்களப்பு வாவிக்கு அப்பால் அமைந்திருக்கும் விசாலமான கிராமமே கன்னன் குடாவாகும். அங்கு இருப்பவர்களில் அனேகர் ”போடிமார்” அதாவது நிலச் சுவாந்தர்கள், பட்டிக்காரர்கள். பட்டிக்காரர்கள் என்றால் ஒவ்வொருவரிடமும் நூற்றுக்கணக்கான மாடுகள் இருக்கும். அங்கு வேளாண்மைச் செய்கையே பிரதானமான தொழில். செல்வச் செழிப்புக்கும் அங்கு குறைவில்லை. போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும் மட்டக்களப்பில் தடம்பதித்ததாலும். கன்னன் குடாமக்கள் அவர்களின் நாகரீகத்தை அடி ஒற்றவில்லை. ஆன்மீகமும், தமிழர்களின் பாரம்பரியமும் அங்கு தொன்று தொட்டு கட்டிக்காக்கப்பட்டு வருகின்றன. அங்குள்ளவர்களுக்கு கண்ணகி அம்பாள்தான் எல்லாவற்றிற்கும் துணை. 

அம்பாளுக்கு நேர்த்தி வையாமல் அந்தக் கிராமத்தவர்களும், அயற் கிராமத்துக்காரர்களும். எந்த வேலையையும் புதிதாக தொடங்கமாட்டார்கள். அதனால், அம்பாளுக்கு நேர்த்திக்கு குறைவில்லை. அம்பாளுக்கு நேர்த்திக்கடனாக வரும் தங்க நகைகள் வேறாகவும், வெள்ளி நகைகள் வேறாகவும் இரு பெட்டகங்களில் வைக்கப்படும். அதன் கதவைத்திறப்பதற்கு இரண்டு பலசாலிகள் தேவைப்படுவர். அவ்வளவு பாரம் கொண்டது இதனது பூட்டுக்களை இலகுவில் திறக்க முடியாது. இதன் இரகசியங்கள் பலருக்குத் தெரியாது. 

இக் கோயில் குருக்கள் பக்கத்துக் கிராமமான பழுகாமத்தைச் சேர்ந்தவர். நல்ல பக்தியும் நேர்மையும் நிறைந்தவர். நீண்ட காலமாக அம்பாளுக்கு பூசைகளை விதிப்படி செய்துவருபவர். அவருக்கு எல்லாமே கண்ணகி அம்பாள்தான். 

1981ஆண்டு மார்கழி மாதம் 2ம் திகதி, அன்றுதான் அந்த வரலாற்றுச் சம்பவம் நடந்து அன்று எங்கள் ஊரில் ஒரு சாவீடு. அதுவும் கோயிலுக்கு அண்மையில்தான். நடு நிசி ச.சீனிவாசகம் குருக்கள் ஐயாவுக்கு இரு கள்ளர்கள் கதவையும், பெட்டகத்தையும் உடைத்து அம்பாளின் நகைகளை திருடுவது போல் காட்சியொன்று கனவில் தோன்றியுள்ளது. குருக்கள் ஐயா கதவைத் திறந்து பாரத்தபோது கோயிலுக்குள் சத்தம் கேட்பதை அறிந்து கொண்டார். மெதுவாக தனது இருப்பிடத்திலிருந்து சாவீட்டுக்கே சென்றார் சாவீட்டில் அனேக சனங்கள் இருப்பார்கள் என்ற எண்ணமே அவருக்கு வந்தது. அவர், ஓரிருவருக்கு இரகசியமாக சொன்ன செய்தி மெதுவாக பரவி துவக்கு வைத்திருக்கும் ஊர்க்காரர்கள் எல்லோரும் கோயிலைச் சுற்றி ஒன்று சேர்ந்துவிட்டார்கள். முதாவது வெடிச்சத்தத்தோடு திருடன்கள் இருவரும் கோயிலுக்கு வெளியே வந்து ஒட எத்தனித்தார்கள். அதில் ஒருவனை பிடித்து கட்டிப் போட்டுவிட்டார்கள். மற்றவன் எப்படியோ நழுவி ஒட்டம் பிடித்துவிட்டான். 

இப்போதுதான் அம்பாளின் அனுக்கிரகம் செயற்படத் தொடங்கியிருந்து, ஓடிய கள்ளன் ஊரின் எல்லையைத் தாண்டும்போது. அவனால் ஒட முடியவில்லை. அந்த இடத்திலே சுற்றிச் சுற்றி நின்றான். இதே நேரத்தில் கோயில் களவு போன செய்திகேட்டு பக்கத்து ஊர்க்காரர்கள் எல்லோரும் வரத் தொடங்கிவிட்டார்கள். வந்தவர்கள் ஊரின் எல்லையில் புதியவனொருவன் அநாதரவாக நிற்பதை சொன்னார்கள். 

இளைஞர் கூட்டம் அவனைப் பிடித்து கோயிலுக்கு கொண்டுவந்தார்கள். ஊராரிடம் பிடிபடாமல் ஓடித்தப்பிய நீ தொடர்ந்து ஏன் ஒடித் தப்பவில்லை என்று கேட்டபோதே அவன் அந்த உண்மையை சொன்னான். நான் ஒடினேன், ஒடினேன், ஊர் எல்லை வரை ஓடிவிட்டேன். அதற்கப்பால் என்னால் ஓட முடியவில்லை. எனது இரண்டு கண்களும் பார்வையை இழந்துவிட்டன என்றான். எனக்கு பார்வையிருந்திருந்தால் எனது ஊரான வீரமுனைக்கு ஓடித் தப்பியிருப்பேன் என்றான். அதன் பிறகு கள்ளனுகள் இருவரையும் பொலிசில் ஒப்படைத்தனர். அவனுக்கு பார்வை திரும்பவில்லை. போதிய சாட்சிகள் குற்றச்சாட்டை ஊர்ஜிதம் செய்யாத படியால் வழக்கு தள்ளுபடியாயிற்று.  அம்பாளின் அனுக்கிரகத்தை போற்றாதார் யாருமில்லை.    

எஸ்.எஸ்.தவபாலன்

 

 

Comments