“நுவரெலிய விவசாய பிரச்சினைகளை கொழும்பில் இருந்தபடி தீர்க்க முடியாது!” | தினகரன் வாரமஞ்சரி

“நுவரெலிய விவசாய பிரச்சினைகளை கொழும்பில் இருந்தபடி தீர்க்க முடியாது!”

பொதுவாகவே மலையகத்தில் மரக்கறி விலை அதிகரித்தால் அரசாங்கங்கள் செய்கின்ற வேலை என்ன தெரியுமா? வரி குறைப்பு செய்வார்கள் அல்லது வெளிநாடுகளில் இருந்து மரக்கறிகளை இறக்குமதி செய்வார்கள்.

இன்று மரக்கறி விலை அதிகரிப்பு என்றவுடன் நாடு முழுவதும் இதுதான் பேசுபொருளாக மாறி இருக்கிறது. ஏன் விலை ஏற்றம் என்றால் கால நிலை தான் காரணம் என்றாலும் எங்களுடைய உள்ளூர் உற்பத்திகளுக்கு அரசாங்கம் உரிய ஊக்குவிப்பு செய்கின்றதா என்று பார்த்தால் இல்லை என்ற பதில்தான் விவசாயிகளிடம் இருந்து வரும்.

மானியம் வழங்குவதாலும் அல்லது சிறு சிறு பரிகாரங்களை செய்வதாலும் மாத்திரம் இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை காண முடியாது. குறிப்பாக இந்த பகுதியில் இருக்கின்ற விவசாய திணைக்களத்தின் பங்களிப்பு என்பது மிகவும் இன்றியமையாதது. விவசாயத்தை பொறுத்த அளவில் அவர்களுடைய செயல்பாடு போதாது என்றே நாங்கள் கருதுகின்றோம்.

நான் யாரையும் தனிப்பட்ட முறையில் குறை கூறவில்லை. ஆனால் உண்மையை பேச வேண்டிய ஒருவனாக இருக்கின்றேன். குறிப்பாக விவசாய கூட்டங்களில் பேசப்படும் விடயங்களைப் பார்த்தால் விவசாயிகளுடைய பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக அங்கெல்லாம் பேசப்படுவதில்லை.

என்னைப் பொறுத்தவரையில் நுவரெலியா மற்றும் கந்தப்பளை உட்பட்ட பகுதிகளில் விவசாயம் சிறப்பாக முன்னெடுக்கப்பட வேண்டுமானால் விவசாயத்தில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்.

பகுதிகளில் உள்ள விவசாய பண்ணைகளின் செயற்பாடுகள் போதுமானதாக இல்லை. விவசாய திணைக்களம் இன்னும் பல புதிய தொழில்நுட்பங்களின் உதவியுடன் தங்களுடைய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. அரசாங்கம் அந்த வசதிகளை அவர்களுக்கு செய்து கொடுக்க வேண்டும்.

விவசாயிகள் தங்களுடைய தொழிலை கைவிட்டு வேறு தொழிலை தேடிச் செல்வதை நாங்கள் பார்க்கின்றோம். இந்த விவசாயத்தை நம்பி அவர்கள் தொடர்ந்தும் செல்ல முடியாததே இதற்குக் காரணம். அதற்கு கடந்த கால அனுபவங்கள் சான்றாக அமைந்திருக்கின்றன.

தொடர்ந்தும் தங்களுடைய பிள்ளைகளை இந்த துறையில் ஈடுபடுத்துவதற்கு அவர்கள் தயாராக இல்லை. எனவே எதிர்கால இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட வேண்டுமாக இருந்தால் அதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

வெறுமனே மானியம் கொடுப்பதோ அல்லது விவசாயிகளுக்கு கடன் கொடுப்பதோ போதாது. விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பம் தொடர்பான அறிவைப் பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்தித்தர வேண்டும்.

புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக கருவிகளை இறக்குமதி செய்வதற்கு விவசாயிகளுக்கு உதவி செய்ய வேண்டும். இலங்கை போன்ற நாடுகளில் உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது. எனவே இந்த விடயங்களை கருத்தில் கொண்டு அரசாங்கம் செயல்படுமாக இருந்தால் நிச்சயமாக நிரந்தரமான ஒரு தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.

இன்று மரக்கறி விலை அதிகரிப்பதை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம் ஆனால் எதிர்வருகின்ற வாரங்களில் விலை மேலும் அதிகரிக்கலாம் என்றே நான் கருதுகின்றேன். ஏனெனில் தற்பொழுது அறுவடை செய்வதற்கு தயாராக நுவரெலியாவில் மரக்கறி வகைகள் இல்லை.

இந்தியாவை எடுத்துக்கொண்டால் அவர்கள் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகின்றார்கள் பல்வேறு வசதிகளை விவசாயிகளுக்கு செய்து கொடுத்திருக்கிறார்கள். அங்கே விவசாயத் திணைக்களம் 24 மணி நேரமும் செயல்படுகின்றது. அவர்கள் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றார்கள். அதற்கு காரணம் அங்கு அவர்கள் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். என்பதுதான் ஆனால் இங்கு அந்த நிலை இல்லை.

விவசாயம் சரியாக இருந்தால் அரசாங்கத்திடம் சென்று எங்களுடைய மக்கள் வேலை வாய்ப்பையும் அல்லது வேறு எந்த சலுகையையும் கேட்கமாட்டார்கள். எனவே விவசாயத்தை உரிய முறையில் முன்கொண்டு செல்வதற்கு இந்த விவசாயிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க அரசு முன்வர வேண்டும். நிச்சயமாக நாங்கள் பலருக்கு வேலை வாய்ப்பை வழங்கக்கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது.

நீண்ட கால அனுபவம் பெற்றவன் என்ற ரீதியில் என்னுடைய கருத்தை சொல்ல விரும்புகிறேன். விவசாயிகளின் குழுவொன்றை அமைத்து அதனூடாக ஆலோசனைகள் பெறப்பட்டு அவற்றை நடைமுறைப்படுத்தினால் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொள்ளலாம்.

இதை விடுத்து தற்காலிக தீர்வுகள் வழங்கப்படுமானால் ஒரு நிரந்தரத் தீர்வை பெற்றுக்கொள்ள முடியாது என்பதே என்னுடைய கருத்து.

விவசாய அமைச்சின் அதிகாரிகள் கொழும்பு ஏசி அறைகளில் அமர்ந்து தீர்மானங்களை எடுப்பது சாத்தியமாகாது. அவர்கள் களத்திற்கு வர வேண்டும். விவசாயிகளிடமும் வியாபாரிகளிடமும் பேச வேண்டும். இங்கிருக்கின்ற நடைமுறை பிரச்சினைகளை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். விவசாயிகளிடம் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். அதிகாரிகள் கல்வி கற்றவர்கள் என்பது உண்மை, ஆனால் விவசாயிகளோ அனுபவ கல்வியை பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.

கடந்த பல வருடங்களாக நுவரெலியாவில் குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலை ஒன்றை அமைக்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்து வந்திருக்கிறோம். ஆனால் இதுவரையில் அது நடைமுறைபடுத்தப்படவில்லை. நாங்கள் எல்லாவற்றிற்கும் அரசியல் வாதிகளை குறை கூறிக்கொண்டிருக்க முடியாது. அதிகாரிகள் சரியாக செயற்பட வேண்டும். ஒரு சில அதிகாரிகள் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற நிலையில் இருக்கின்றார்கள் அந்த நிலை மாற வேண்டும்.

இன்று நாங்கள் மறைமுகமாகவும் நேரடியாகவும் பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுத்திருக்கின்றோம். இந்த விவசாயம் பாதிக்கப்படுமாக இருந்தால் நிச்சயமாக நுவரெலியா மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பிரச்சினை அதிகரிக்கும். இதனை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.  

Comments