தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆசனப்பகிர்வு நாடகம் | தினகரன் வாரமஞ்சரி

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆசனப்பகிர்வு நாடகம்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்குள் இழுபறி நிலையிலிருந்த பாராளுமன்றத் தேர்தலுக்கான ஆசனப்பங்கீடு ஓரளவுக்குச் சுமுக நிலையை எட்டியுள்ளது. ஆசனப்பகிர்வுக்காகக் கொழும்பில் கூடிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இரண்டு நாட்களாக நடந்தது. இரண்டு நாட்களும் நடந்த கடுமையான விவாதங்களுக்குப் பிறகு, இந்த விவகாரம் முடிவுக்கு வந்திருக்கிறது. 

இதன்படி தமிழரசுக் கட்சிக்கு 15 வேட்பாளர்களும் (யாழ் மாவட்டம் 07, மட்டக்களப்பு 05, வன்னி மாவட்டம் 04) ரெலோவுக்கு 04 வேட்பாளர்களும் (யாழ் மாவட்டம் 01, வன்னி 03, மட்டக்களப்பு 02) புளொட்டுக்கு 05 வேட்பாளர்களும் என ஒதுக்கப்பட்டிருக்கிறது. அம்பாறை, திருகோணமலைத் தேர்தல் மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் பற்றி இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. காரணம், இந்த மாவட்டங்களில் பொருத்தமான வேட்பாளர்களை ஒவ்வொரு கட்சியும் கண்டறிவதில் உள்ள சிக்கலே. எனினும் இதுபற்றி விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. 

இதேவேளை இதுவரையிலும் இல்லாத வகையில் இந்தத் தடவை ஒரு புதிய ஆசன ஒதுக்கீட்டைப்பற்றிக் கூட்டமைப்புச் சிந்தித்திருக்கிறது. வன்னி மாவட்டத்தில் மலையகத் தமிழ்ச்சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒரு பிரதிநிதித்துவத்தை வழங்குவது என்பதே இதுவாகும். இவ்வாறு நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றிபெறாதவிடத்தும் இந்தப் பிரதிநிதித்துவம் வழங்கப்படுமா என்பது கேள்வியே. அதாவது கொள்கையளவில் மலையக சமூகத்தினரைப் பிரதிநிதித்துவத்துக்கு ஏற்றவகையில் நிச்சயமாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளதா என்று தெளிவில்லை. 

இப்பொழுது இப்படியொரு பிரதிநிதித்துவத்தைப்பற்றிச் சிந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதற்குக் காரணமே சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் முருகேசு சந்திரகுமார், தமிழ் முற்போக்குக் கூட்டணி (மனோ கணேசன், திகாம்பரம், வேலு சரவணகுமார்) தரப்பினால் ஏற்பட்ட நிர்ப்பந்தங்களேயாகும். முருகேசு சந்திரகுமார், மலையக சமூகத்தின் மத்தியில் செல்வாக்கோடுள்ளதும் இந்தச்சமூகத்தின் சமூக, பொருளாதார, அரசியல் இருப்பு மற்றும் அடையாளம் குறித்து மேற்கொண்டு வரும் அரசியற் செயற்பாடுகள் கூட்டமைப்புக்குப் பெரும் சவாலாக இருந்தது. இதனால் கடந்த காலத்தில் பல நெருக்கடிகளைக் கூட்டமைப்புச் சந்தித்தது. இதை வென்றெடுப்பதற்காக கூட்டமைப்பு மலையகத்திலிருந்து மனோ கணேசன், இராதாகிருஸ்ணன் போன்றோரைப் பயன்படுத்தியது. இவர்கள் தேர்தல் காலங்களில் கூட்டமைப்பின் தேர்தல் மேடைகளில் ஏறிப் பரப்புரைகளில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து கூட்டமைப்பை ஆதரிப்போராகவும் கூட்டமைப்பின் பரிந்துரைகளில் தமது அமைச்சின் வழியாக நிதி அளிப்போராகவும் செயற்பட்டனர். ஏறக்குறைய 2010 க்குப் பிறகு தமிழ் முற்போக்குக் கூட்டணி தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு அணுக்கமாகவே இருந்தது. ஆனால், இந்தத் தேனுறவு நீடிக்கவில்லை. 2018, 2019 இல் இதில் வெடிப்புகள் ஏற்பட்டன. 

மலையக சமூகத்தின் வாக்குகளைக் கவர்வதற்காக மட்டுமே தம்மைக் கூட்டமைப்புப் பயன்படுத்திக் கொள்கிறது. அதற்கப்பால் அந்தச் சமூகத்தினரின் அரசியல் அந்தஸ்து, சமூக பொருளாதார முன்னேற்றம் போன்றவற்றில் அக்கறை கொள்ளவில்லை. மட்டுமல்ல, அந்தச் சமூகத்தினரை கூட்டமைப்புப் புறக்கணித்தே நடத்துகிறது என்பதை வடக்கிலுள்ள மலையக மக்கள் தமிழ் முற்போக்குக் கூட்டணியிடம் முறைப்பாடாக முன்வைத்தனர். “நீங்கள் இங்கே வன்னிக்கு வந்து கூட்டமைப்பினரின் கோரிக்கையை நிறைவேற்றுகின்றீர்கள். அவர்கள் எம்மைப் புறக்கணித்து விட்டு, எமது உறவுகளாகிய உங்களைக் கொண்டே தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர். தம்மைச் சேர்ந்தோரின் நலன்களைப் பேணுகின்றனர். தம்மைச் சேர்ந்த மக்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர் என்று குற்றம் சாட்டினர். இது மட்டுமல்ல, கொழும்பிலுள்ள (வெள்ளவத்தை, வத்தளை, தெகிவளை வாழ்) யாழ்ப்பாணத்தமிழர்களின் நலன்களையும் கூட்டமைப்பு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மூலமாகப் பேணிக்கொண்டது. 

இதனால் ஒரு கட்டத்தில் தாம் தமிழ்த்தேசியக் கூட்டணியினால் ஏமாற்றப்படுவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் உணரத் தொடங்கினர். அத்துடன், கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த அரசியலமைப்புத் தொடர்பான உண்மை நிலவரத்தை மனோ கணேசன் வெளிப்படுத்தியபோது கூட்டமைப்புக்குச் சங்கடம் ஏற்பட்டது. அரசியலமைப்புத் தொடர்பாக தமிழ்ச்சமூகத்துக்கு பல விதமான கற்பனைகளை உருவாக்கிக் கொண்டிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மனோ கணேசனின் உள்வீட்டுத் தகவல்கள் நெருக்கடியை உண்டாக்கி, உண்மையை அம்பலப்படுத்தின. இதனையடுத்து கூட்டமைப்புக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரான மனோ கணேசனுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது. பின்னர் இது தொடர் விவாதங்களாக மாறியது. மனோ கணேசன் தன்னியல்பான அவருடைய வெளிப்படுத்தல்களின் மூலம் அரசாங்கத்தின் போக்கையும் தமிழ்ச்சமூகத்தின் நிலையையும் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்தார். இதுவும் கூட்டமைப்புக்கு நெருக்கடியைக் கொடுத்தது. ஒரு கட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எல்லாவற்றுக்கும் மௌனம் காப்பதும் எந்தக் கேள்வியும் இல்லாமல் எல்லாவற்றையும் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதும் தவறு என்று நேரடியாகவே விமர்சித்தார். இது நேரடியான மோதல் என்ற நிலையைத் தோற்றுவித்தது. 

இதற்கெல்லாம் இன்னுமொரு உட்காரணமும் இருந்தது. கடந்த அரசாங்கத்தில் ரணிலுக்கு நெருக்கமாக யார் நிற்பது, யார் செல்வாக்கைப் பெறுவது என்ற போட்டி கூட்டமைப்பின் பேச்சாளர் ஆபிரகாம் சுமந்திரனுக்கும் மனோ கணேசனுக்குமிடையில் நிலவியது. இது ஒரு பெரும் பனிப்போராகவே தொடர்ந்து கொண்டிருந்தது. மகிந்த – மைத்திரி கூட்டணி 2018 இல் ஆட்சிக்கவிழ்ப்பைச் செய்தபோது அதற்கெதிராக இந்த இருவரும் முன்னணிப்போராளிகளாக நின்று சமராடியது காட்சிகள் இந்தக் கணத்தில் உங்களுக்கு நினைவில் எழும். சுமந்திரன் நீதிமன்றத்தின் மூலம் போராடினார். மனோ கணேசன் கட்சிகளை ஒருங்கிணைத்து, எதிர்த்தரப்பின் முயற்சிகளை எல்லாம் முறியடிப்பதில் முன்னின்றுழைத்தார். ஆக மொத்தத்தில் தமக்குச் சாத்தியமான வழிகளில் கடுமையாக முயற்சித்துக் கொண்டிருந்தனர். இது வெளிப்பரப்பில் செல்வாக்குப் பெறுவது வரையில் போட்டி நிலையை உருவாக்கியது. முக்கியமான வெளிநாட்டுத்தூதுவரங்கள் வரையில். மனோ கணேசன் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் என்ற வகையிலும் சுமந்திரன், கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற வகையிலும் இந்த முக்கியத்துவப் போட்டி நிலவியது. ஆகவே பல முனைகளில் இந்த இருவரும் தம்மை நிறுவுவதற்கும் மேலெழுவதற்கும் முயற்சித்தனர். இதனால் கூட்டமைப்புக்கும் முற்போக்குக் கூட்டணிக்கும் இடையில் உரசல்கள் தீவிரமடைந்தன. 

இதன் விளைவாக ஒரு கட்டத்தில் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணி வடக்குக் கிழக்கிலும் போட்டியிடும் என்ற அறிவிப்பை விடுத்தது. முற்போக்குக் கூட்டணியின் அறிவிப்பு கூட்டமைப்புக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது. இதற்குப் பதிலடியாக உடனே “அப்படியென்றால், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வடக்குக் கிழக்குக்கு வெளியேயும் போட்டியிடும் என்று தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அறிவித்தார். இருந்தாலும் முற்போக்குக் கூட்டணியின் அறிவிப்பு உண்டாக்கிய கலக்கம் கூட்டமைப்பை நிம்மதியாக இருக்க விடவில்லை. ஏற்கனவே வன்னி – கிளிநொச்சிக் களத்தில் சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு மற்றும் வவுனியாவில் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் (ஈ.பி.ஆர்.எல்.எவ்) ஆகியவற்றின் நெருக்கடிகள் ஒருபுறமிருக்கிறது. இந்த நிலையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியும் வன்னியில் களமிறங்கினால் அது பெரிய நெருக்கடியாகி விடும் என்று பதறுகிறது கூட்டமைப்பு. இதன் விளைவாகவே வரவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் மலையக மக்களுக்கான பிரதிநிதித்துவத்துக்கு ஒரு ஆசனத்தை ஒதுக்குவதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு தேர்தல் வெற்றிக்காக மட்டும்தானா அல்லது அந்த மக்களுடைய அடையாள இருப்புக்கானதா என்பது கேள்வியே. அதாவது தேர்தலில் வாக்குகளைச் சேகரிப்பதற்காக மட்டும்தானா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.  

இதற்கான பதில் இனிமேல் பல்வேறு தளங்களிலும் எழுப்பப்படும் கேள்வி, முன்வைக்கப்படும் விமர்சனங்களால்தான் கிடைக்கும். இல்லையென்றால் இதுவும் ஒரு வரலாற்று மோசடியாகவே அமையக்கூடும். 

இது ஒருபுறமிருக்க திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் யார் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதைத் தீர்மானிக்க முடியாத நிலையில்தான் மூன்று கட்சிகளின் (தமிழரசுக்கட்சி, புளொட், ரெலோ) கூட்டமைப்பு உள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும். இது எவ்வளவு மோசமான நிலை? என்பதைத் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். திருகோணமலை தமிழ் மக்களின் தலைநகர், வடக்குக் கிழக்குக்கான தலைமையிடம் என்ற கதையாடல்களின் நிலையைக் குறித்து இந்த இடத்தில் அனைவரும் சிந்திக்க வேண்டும். அப்படியெல்லாம் சொல்லப்படும் ஒரு மாவட்டத்தில் பொருத்தமான வேட்பாளர்களை அடையாளம் காண முடியாதிருக்கிறது ஒரு பெரும் கட்சிக்கு என்றால்... அதுவும் முக்கட்சிகளின் கூட்டமைப்புக்கு எனில் இந்த அரசியலின் விளைபொருள் என்ன? இதைப்போலவே அம்பாறையிலும் வேட்பாளர்களைத் தெரிவு செய்ய முடியாதிருக்கிறது என்பது ஏராளம் கேள்விகளை எழுப்புகிறது. இவ்வளவுக்கும் இந்த இரண்டு மாவட்டங்களும் சிங்களக் குடியேற்றங்களால் பல விதமான நெருக்கடிகளையும் சிக்கல்களையும் சவால்களையும் கொண்டவை. ஆக இந்த மாவட்டங்களில்தான் கூடிய கவனமிருக்க வேண்டும். ஆனால், இதை, இதன் பாதிப்பை, இதனுடைய சீரியஸைக் கூட்டமைப்பு புரிந்து கொள்ளாமலிருக்கிறது என்றால் அதனுடைய அரசியல் செயற்பாடுகள் என்ன? சிந்தனை என்ன? 

இவற்றுக்கும் அப்பால் இன்னொரு விடயத்தையும் இந்தப் பத்தியில் சுட்ட வேண்டியுள்ளது. மாவட்ட ரீதியாக வேட்பாளர்களுக்கான இட ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டிருப்பது சரியாகத் தோன்றலாம். இந்த வேட்பாளர்கள் கட்சி ரீதியான ஒதுக்கீடு என்பதற்கு அப்பால் இந்த மாவட்டங்களில் சமூக ரீதியாக – ஒடுக்கப்பட்ட மக்களைப்பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய அளவுக்கு நிகழுமா? அல்லது எப்போதையும் போல மேல்நிலைச்சமூகத்தினர்தான் இதிலும் கோலோச்சப்போகிறார்களா?  அப்படியென்றால், இந்தத் தேர்தலிலும் கண்கட்டு வித்தைகள்தான் நிகழப்போகின்றனவா? 

கருணாகரன்

Comments