அக்கறை இல்லை என்றால் நாம் அடையாளம் இழந்து விடுவோம்! | தினகரன் வாரமஞ்சரி

அக்கறை இல்லை என்றால் நாம் அடையாளம் இழந்து விடுவோம்!

மலையகத்தில் இருந்து வன்னிக்கு புலம் பெயர்ந்தவர்கள் தொகை மூன்று இலட்சம் வரை இருக்கலாம் என்பது ஆய்வுத் தகவல். இவ்வாறு வன்னிப்பகுதிக்கு சென்று வாழ்ந்து வரும் மலையகத் தமிழர்களின் 2012ஆம் ஆண்டுக்கான குடிசன மதிப்பீட்டு விபரப் பட்டியலின்படி முல்லைத்தீவு 2.5வீதம், திருகோணமலை 1.7வீதம், கிளிநொச்சி 1.5வீதம், வவுனியா 0.8வீதம், மன்னார் 0.4வீதம் என்பதாகக் காணப்படுகின்றது.  

இத்துடன் இதே ஆண்டிற்கான புள்ளி விபரப்படி 2,12,826பேர் மட்டுமே பெருந்தோட்டத் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். வன்னி நிலப்பரப்பில் குடியேறியவர்களில் அதிகமானோர் மாத்தறை, காலி, களுத்துறை, மாத்தளை, மொனராகலை, இரத்தினபுரி, கண்டி, கேகாலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாகவே இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் இப்பிரதேசங்களில் வாழ்ந்தவர்களே இனக்கலவரங்களால் நேரடியான பாதிப்புக்கு ஆளாகியவர்கள். ஆயினும் இவர்கள் மலையகத் தமிழர்களாகவே இடம் பெயர்ந்திருந்தனர். வன்னி மக்களில் கணிசமான ஒரு தொகையாக இருக்கின்றனர் இம் மலையக மக்கள்.  

பெருந்தோட்டப் பகுதிகளில் இன்னும் தொழில் செய்து வாழ்க்கை நடத்திவரும் 160000பேர் வரை மிக மோசமான வாழ்வியல் நெருக்குவாரங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. 1972- முதல் 1975வரையிலான காலக்கட்டத்தில் அதுவரை ஆங்கிலேயர் வசமிருந்த பெருந்தோட்டங்கள் அரசுடைமையாக்கப்பட்டன. காணி சீர்திருத்த சட்டத்தின்படி அந்நியருக்குச் சொந்தமான காணிகள் மட்டுமன்றி குறிப்பிட்ட அளவுக்கு மேல் காணிகளைக் கொண்டிருந்த இப்பகுதி மக்களின் காணிகளும் சுவீகரிக்கப்பட்டன. இதில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் காணி உடைமையாளர்களே ஆவர்.  

பெருந்தோட்டங்கள் அரசுடைமை ஆக்கப்பட்டாலும் அதன் வளர்ச்சிக்கான வழி கையாளப்படவில்லை. இதனால் தோட்டக்காணிகளை நிர்வகித்த அரச பெருந்தோட்ட யாக்கம், மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை பாரிய நட்டத்தை எதிர்நோக்கின. இவ்வாறு 141,000ஹெக்டெயர் பெருந்தோட்டக் காணிகள் பாதிப்புக்குள்ளாயின.  

இதனால் இத் தோட்டக் காணிகள் 1992இல் மீண்டும் தனியார் மயப்படுத்தப்பட்டன. இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் ஒன்று இருக்கின்றது. அரசு பொறுப்பின் கீழ் தோட்டங்கள் இருந்தபோதும் சரி அவை மீண்டும் தனியார் கம்பனிகளிடம் ஒப்படைக்கப்பட்டு இதுவரையிலும் சரி அங்கு வாழும் மக்கள் நிலையில் மாற்றம் ஏதும் எற்பட்டதாகத் தெரியவில்லை. இவர்கள் நிலைதான் இப்படி என்றால் வன்னிச் சென்றோர் கதி எப்படி? அதுவும் இப்படியே தான். இங்கு குடியேற்றப்பட்ட மக்கள் விவசாய நிலங்களில் தொழில் செய்ய வேண்டி இருந்தது. அன்று பெருங்காடுகளை அழித்து தேயிலைப் பயிர்ச்செய்கைக்கு உரமாகிப் போனது போல இங்கும் விவசாயப் பண்ணைகளை விரிவுபடுத்த காடுகளை துவம்சம் செய்து விளைநிலங்களாக மாற்றியமைக்க வேண்டியிருந்தது. மலையகத்திலும் மக்கள் செழிப்படையச் செய்த நிலம் அவர்களுக்குச் சொந்தம் இல்லை. வன்னியிலும் இவர்கள் பாடுபடும் நிலம் இவர்களுக்குச் சொந்தம் இல்லை. இதற்கு உரித்தானவர்கள் வேறு. அவர்களே நில உடைமையாளர்கள். இப்படி வியர்வை சிந்தி காடழித்து விளை நிலங்களாக மாற்றியமைத்த பின்னர் அவற்றை நிலச்சொந்தக்கார்கள் கையகப்படுத்துவதும் நடக்கவே செய்கின்றது. ஆக நிரந்தரமாக தொழில் இல்லை. அதனால் நிரந்தர வதிவிடமும் இல்லை. அங்கும் இங்கும் தொழில் தேடி அலைந்து திரியும் அவலம் என்பதே அவதானிகளின் பதிவாக காணப்படுகின்றது.  

எனினும் தாம் குடியேறிய இடங்களுக்கேற்ப தமது வாழ்க்கை முறைமையை வரித்துக் கொள்ள இவர்கள் தவறவில்லை. இதனால் கலாசார பின்னடைவு ஏற்படவே செய்கின்றது. ஒரு சிலர் மட்டுமே இன்னும் மொழி ரீதியில் மலையக மண்வாசனையை மணக்கவிடுகின்றனர். தெய்வ வழிபாட்டிலும் கூட பழைய பழக்கத்தைக் கைவிட வில்லை என்று தெரிய வருகின்றுது.       

ஆனால் இந்தக் கலாசார பின்னடைவு வன்னிப்பகுதியில் குடியேறிய மக்களிடம் மட்டுந்தான் ஏற்பட்டுள்ளது என்று எண்ணிவிடக்கூடாது. காலி, மாத்தறை, களுத்துறை, மொனராகலை, அவிசாவளை, கேகாலை போன்ற மாவட்டங்களிலும் தோற்றம் பெற்றுள்ளன என்பது துயரமான விடயம்.   

இதேநேரம் வன்னியில் குடியேறிய மக்கள் அங்கே நிரந்தர குடிகளாகி விட்டார்கள். இப்பிர தேச மக்களின் தேசிய சுய நிர்ணய போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார்கள். பொதுவாக 1920ஆம் ஆண்டு முதல் 1948ஆம் ஆண்டுவரை மலையக மக்கள் இலங்கை அரசியலில் பலம் பொருந்திய இரண்டாவது தரப்பாக இருத்திருக்கின்றார்கள்.அரசியல் சூழ்ச்சியாளர்கள் இந்நிலைமையை 1948இல் முடிவுக்குக் கொண்டு வந்தனர்.  

இதேபோல் 1961ஆண்டு முதல் 1981அம் ஆண்டு குடிசன மதிப்பீட்டுக்காலம் வரை இலங்கையின் அதி கூடிய மக்கள் தொகையை உள்வாங்கிக் கொண்டிருந்த சமூகமாக மலையக மக்கள் காணப்பட்டார்கள். ஆனால் 1981இல் இந்த நிலைமையும் தகர்க்கப்பட்டது. வெறும் நான்காவது இடத்துக்கு நகர்த்தப்பட்டதே வரலாறு. ஸ்ரீமா-   _ சாஸ்திரி ஒப்பந்தம், இனக்கலவரம் காரணமாக வன்னி நோக்கிய புலம் பெயர்வு மட்டுமின்றி மற்றுமொரு காரணமும் இங்கே குறுக்கிடுகின்றது. பெருந்தோட்டங்களில் வாழ்பவர்கள் மட்டுமே தம்மை இந்திய வம்சாவளித் தமிழர் என்று பதிவு செய்கின்றார்கள். தோட்டங்களுக்கு வெளியே வாழ்விடங்களைக் கொண்டிருப்பவர்கள் தம்மை இலங்கைத் தமிழர் என்று பதிவு செய்வதை கெளரவமாக எண்ணுகின்றனர்.   இதனால் மலையக மக்களுக்கான அடையாள தனித்துவம் சின்னாப்பின்ன மாக்கப்படுகின்றது. தனியொரு தேசிய இனம் என்னும் அங்கீகார கோரலுக்கான அடித்தளம் பலம் குன்றுகிறது. மலையகத்தவர்கள் என்பதற்கான அடையாளங்களைப் பாதுகாப்பது அவசியமாகின்றது.

பன். பாலா

Comments