தோட்டப்புறப் பாதை விஸ்தரிப்பை உணர்த்தும் பசறை பஸ் விபத்து | தினகரன் வாரமஞ்சரி

தோட்டப்புறப் பாதை விஸ்தரிப்பை உணர்த்தும் பசறை பஸ் விபத்து

பிறந்துள்ள 2020ஆம் ஆண்டு அனைவரது வாழ்விலும் மகி ழ்ச்சியைத் தரவேண்டும் என்ற பிரார்த்தனைகள் இருந்தாலும், ஜனவரி மாதம் ஆரம்பித்த ஓரிரு நாட்களில் பதுளை மாவட்டத்தின் அப்புத்தளை பகுதியில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான கண்காணிப்பு விமானம் மலை முகட்டில் மோதி விழுந்து நொறுங்கியதில் நான்கு விமானப்படை வீரர்கள் உடற்கருகி சம்பவ இடத்திலேயே இறந்து போன சோகம் மாறுவதற்கு முன்னர் கடந்த 6ம் திகதி திங்கட்கிழமை பி.ப. 4.30மணிக்கு பசறை நகரிலிருந்து மடூல்சீமை வழியாக எக்கிரிய கிராமத்திற்கு தனது பயணத்தை ஆரம்பித்த இலங்கை போக்குவரத்து சபையின் பதுளை டிப்போவிற்குச் சொந்தமான NA-2662இலக்கத் தகடுடைய பஸ்வண்டி பசறை மடூல்சீமை வீதியின் 6வது மைல்கல் பகுதியில் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து சுமார் 100அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 09பேர் மரணமடைந்தும் 40இற்கும் அதிகமானோர் படுகாயங்கள், எலும்பு முறிவுகள் என்பவற்றிற்கு உட்பட்டும் பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

விபத்திற்குள்ளான குறித்த பஸ் வண்டி தினமும் காலை வேளையில் எக்கிரிய கிராமத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்து பசறை வழியாக பதுளை நோக்கி சென்று பகல் வேளையில் பசறைக்கு பயணிகளை சுமந்து கொண்டு வருவதுடன் மாலை 4.30மணிக்கு அந்நாளுக்குரிய இறுதி பிரயாணத்தை எக்கிரிய கிராமத்தை நோக்கி ஆரம்பிப்பது வழமை. 

அன்று மாலை 4.30இற்கு புறப்பட்ட பஸ்வண்டி 6ஆம் கட்டை பகுதியை பி.ப.5.10மணியளவில் அண்மித்து பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்த போது எதிரே வந்த லொறி ஒன்றிற்கு இடம்கொடுக்க முற்படுகையில் பின்நோக்கி நகர்ந்த பஸ் வண்டி வீதியை விட்டு விலகி தடம்புரள்கையில் மாளிக்காதென்னை கிராமத்திற்குச் செல்லும் பாதையையும் தாண்டி பாய்ந்து சவுக்கு மரம் ஒன்றில் மோதியுள்ளது. இதன் காரணமாக பஸ் வண்டியின் பாகங்கள் சிதறுண்டுள்ளது. பயணிகளும் நாலாபுறமும் தூக்கியெறியப்பட்டுள்ளனர். சிலர் பஸ்ஸின் அடிப்பாகத்திலும் சிக்குண்டுள்ளனர். 

பஸ் வண்டி கட்டுப்பாட்டை இழந்து தடம்புரள்வதை உணர்ந்த சாரதி வெளியில் பாய்ந்து காயமடைந்துள்ளார். ஏனைய பயணிகள் பஸ் வண்டியினுள் சிக்கி, புரண்டு, படுகாயமடைந்துள்ளதோடு, சிலர் சம்பவ இடத்திலும், சிலர் பசறை ஆதார வைத்தியசாலையிலும் வைத்து உயிர் நீத்ததோடு, மேலதிக தீவிர சிகிச்சைக்காக பதுளை கொண்டு செல்லப்பட்டவர்களில் ஒருவர் 8ஆம் திகதி புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.  

மடூல்சீமை பகுதியிலுள்ள அனைத்து பெருந்தோட்டங்களிலும் உள்ளவர்களில் ஏதோ ஒரு வகையில் விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மடூல்சீமை, எக்கிரிய பகுதிகள் சோகமயமாக காட்சியளித்ததை காண முடிந்தது. உயிரிழந்தவர்களில் டூமோ தோட்டத்தைச் சேர்ந்த மடுல்சீமை தமிழ் மகாவித்தியாலயத்தில் உயர்தரம் கற்கும் ஆறுமுகம் ஆகாஷ் (18வயது), பசறை மத்திய மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் ஊவாக்கலை தோட்டத்தைச் சேர்ந்த செல்வி எஸ்.நெத்மி நவோதா ஆகியோரும் அடங்குகின்றனர். இவர்களைத் தவிர பட்டாவத்த, வெவபெத்தயை சேர்ந்த மாரிமுத்து தர்மலிங்கம் (வயது 59), ஊவாக்கலை தோட்டத்தைச் சேர்ந்த செல்வி. பார்வதிதாசன் பத்மாவதி (வயது 17), எக்கிரியவை சேர்ந்த டி.எம். கங்ஹதி (58வயது) மாளிஹாதென்னவைச் சேர்ந்த கே.எம். கருணாதாச (வயது 63), மாளிஹாதென்ன பகுதியைச் சேர்ந்த ஏம்.எம். கருணாவதி (வயது 61) மற்றும் பதுளை பொது வைத்தியசாலையில் உயிர்நீத்த மஹாதோவ கீழ்பிரிவைச் சேர்ந்த கதிர்வேல் தர்மலிங்கம் (வயது 65) ஆகியோரும் அடங்குகின்றனர். 

பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் மூவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகமானோர் எலும்பு முறிவு ஏற்பட்டு சத்திரசிகிச்சைக்கு உட்பட்டுள்ளனர். வேறு சிலர் காயமடைந்தும், பலமாக அடிப்பட்டு உள் காயங்களுக்கு உட்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் எலும்பு முறிவின் காரணமாக சத்திரசிகிச்சைக்கு உட்பட்டுள்ளதால் குணமடைய நீண்ட காலம் எடுக்கும் என்பதே உண்மையாகும். இதனால் இவர்களது வாழ்வாதாரம், பொருளாதாரம், கல்வி மற்றும் தொழில் என்பன பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. 

விபத்து நடந்த 6ஆம் திகதி மாலை பாதிக்கப்பட்டவர்களை துரிதமாக மீட்பதற்காக மடுல்சீமை, பசறை, பதுளை பொலிஸ் நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டு விசேட வீதிப்போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டது. பதுளையில் இருந்து வந்த நடமாடும் மருத்துவ குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களுக்கு முதற்கட்ட சிகிச்சையை வழங்கி அவர்களை வைத்தியசாலைக்கு கொண்டுவரும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கினர். இவர்களுடன் அனர்த்த முகாமைத்துவ தொண்டர்படை, விசேட அதிரடிப்படை, பொதுமக்கள் எனப்பலரும் இணைந்திருந்தனர். சம்பவ இடத்திற்கு நூற்றுக் கணக்கான முச்சக்கர வண்டிகள் சென்றிருந்தன. ஒரு சில முச்சக்கர வண்டிகளில் காயமடைந்தவர்கள் பசறை ஆதார வைத்திசாலைக்கு கொண்டு வரப்பட்டனர். எனினும் ஒருசில முச்சக்கர வண்டி சாரதிகளின் பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக படுகாயமடைந்தவர்களை உரிய நேரத்திற்கு வைத்தியசாலைக்கு கொண்டுவந்து உயிர் காக்கும் உரிய சிகிச்சையை வழங்க முடியாது போனதாக நடமாடும் மருத்துவ குழுவில் வந்த மருத்துவ அதிகாரியொருவர் தெரிவித்தார். 

பசறை ஆதார வைத்தியசாலையை அண்டிய பகுதியில் சம்பவத்தினத்தன்று, மறுநாளும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், நண்பர்கள் எனப் பலர், அதிகளவில் திரண்டு இருந்ததால் அப்பகுததி சன நெரிசலும் பதற்றமும் நிறைந்து காணப்பட்டது. இதற்கு காரணம் சம்பவத்தினத்தில் உயிரிழந்த எட்டு பேரின் சடலங்கள் அங்கு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தமையாகும். 7ஆம் திகதி காலை வேளையில் பதுளை நீதிமன்ற நீதவான் சமிந்த கருணாதாச முன்னிலையில் சட்ட வைத்திய அதிகாரியினால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிற்பகல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அன்று பிற்பகல் 3.00மணியளவில் இறந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் இறுதிக்கிரியை நடவடிக்கைகளுக்காக கையளிக்கப்பட்டன. மரணச்சடங்கிற்காக தலா ரூபா. 50ஆயிரம் வீதம் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் வழங்க அமைச்சர் மஹிந்த அமரவீர இலங்கை போக்குவரத்து சபை தலைவர் கிங்ஸ்லி ரணவக்கவிற்கு பணிப்புரை விடுத்திருந்தார். தவிர முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பசறை தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி பிரதான அமைப்பாளருமான வடிவேல் சுரேஸ் ஆகியோர் இறந்தவர்களின் உடல்களை எம்பம் செய்து பதப்படுத்தல், சவப்பெட்டி என்பவற்றிற்கான செலவை பொறுப்பேற்றதுடன், இ.தொ.கா. உப தலைவரும், முன்னாள் ஊவா மாகாண அமைச்சருமான செந்தில் தொண்டமானும் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி வழங்கியுள்ளார். தவிர காயமடைந்தவர்களின் மருத்துவ செலவிற்கு இ.போ.ச. ஒரு தொகை நிதியை வழங்கியுள்ளது. 

விபத்திற்குள்ளான பஸ்வண்டி குறித்த விசாரணையை இ.போ.ச. வின் உயர் தொழில்நுட்ப குழுவும், இலங்கை மோட்டார் வாகனத் திணைக்களமும், பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்டுள்ளன. பஸ் வண்டி சாரதியின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு பஸ் வண்டியின் சுக்கான் (ஸ்டேரிங்) எவ்விதம் செய்யப்பட்டது என்பது குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பசறையில் இருந்து எக்கிரிய கிராமத்திற்கு சுமார் 38கிலோமீற்றர் தூரம் உள்ளது. குறித்த இப்பாதை வெள்ளையர் ஆட்சி காலத்தில் தேயிலை கொழுந்து ஏற்றி இறக்குவதற்காக உருவாக்கப்பட்ட பாதையாகும். மலை முகடுகளின் ஊடே அமைந்துள்ள இப்பாதை நீண்டகாலமாக எவ்வித விஸ்தரிப்பு, அபிவிருத்திக்கும் உட்பட்டிருக்கவில்லை. எனவும் மடூல்சீமை தொடக்கம் எக்கிரிய கிராமத்திற்கான பாதை காபர்ட் இடும் நோக்கில் இரு மருங்கிலும் விஸ்தரிக்கப்பட்டு அப்பணி முழுமை பெறாது ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. இதன் காரணமாக எக்கிரிய பாதை குன்றும் குழியுமாக காட்சியளிக்கின்றது. 

இப்பாதையில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்கள் பல்வேறு உதிரிபாகங்களின் தேய்மானத்திற்கு உள்ளாகியே சேவையில் ஈடுபட்டு வருகின்றன. தோட்டப்புற பாதைகள் குறுகியதாகவும் விஸ்தரிக்கப்படாமலும் காணப்படுவதால் பஸ் வண்டிகள் அடிக்கடி பழுதடைந்து திருத்தத்திற்குட்படுவதும் வாடிக்கையான ஒரு விடயமாகவே உள்ளது. 

கிராமப்புற, தோட்டப்புற பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்தும் நோக்கில் புதிய பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்படுவது வரவேற்புக்குரியதாகும். எனினும் சேவையில் ஈடுபடுத்தப்படும். பஸ் வண்டிகள் மிகவும் பழையதாக, அல்லது புதிய என்ஜின்கள் வைத்து சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன. இதனால் பாதை சேதமடைந்து பிரயாணம் பாதுகாப்பற்ற அவதானமிக்கதாக காணப்படுகின்றது. பஸ் வண்டியின் தரம் பயணத்தை ஆபத்தாக்கி விடுகின்றது. இதற்கு பிராந்திய பஸ் டிப்போக்களை குறைகூறி பயனில்லை. அவர்களிடம் சேவையில் ஈடுபடுத்த போதுமான பஸ் வண்டிகள் இல்லை. பராமரித்து பழுதுபார்க்கவும் உரிய வளங்களும், உரிய அக்கறை இன்மையும் காரணமாகியுள்ளன.   

குறித்த விபத்து தொடர்பாக கருத்தறிய பிராந்திய அரசியல் பிரமுகர்கள் பலரிடம் முயன்ற போதும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் முக்கியஸ்தருமான அரவிந்தகுமாரை மாத்திரமே இணைத்துக்கொள்ள முடிந்தது. அவர் இவ்விடயம் தொடர்பாக கூறும் போது பதுளை டிப்போவிற்கு 225பஸ்கள் தேவை எனினும் 175பஸ் வண்டிகளே சேவையில் உள்ளன. 50பஸ் வண்டிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. தோட்டப்புற சேவையில் E வகை பஸ்களே ஈடுபடுத்தப்பட வேண்டும். எனினும் அவற்றிற்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. நாடு முழுவதிலும் சுமார் 3000பஸ்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. சிறந்த தரத்தில் உள்ள புதிய பஸ் வண்கள் நீண்ட தூர பிரயாண சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன. இ.போ.ச. விற்கு பல இலட்சங்களை உழைத்து கொடுத்த பழைய பஸ்களே சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன. பஸ்ஸின் தரம் குறித்து நாம் டிப்போ அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினால் பஸ் சேவை இடைநிறுத்தப்படுகின்றது. இதனால் பொதுமக்களின் கோபத்திற்கும் உள்ளாக நேரிடுகின்றது. புதிய பஸ்களின் தேவை குறித்து மாகாண சபை, பாராளுமன்றம் என்பவற்றில் குரல் எழுப்பிய போதும் இன்னும் உரிய தீர்வு கிட்டவில்லை. நிகழும் விபத்துக்களை அரசாங்கம் பொறுப்பேற்பதே சிறந்தது. இ.போ.ச. பஸ்கள் காப்புறுதி செய்யப்பட்டுள்ளன. விபத்து நடந்த பஸ் வண்டியும் காப்புறுதி செய்யப்பட்டதொன்றாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு பாதிக்கப்பட்ட, இறந்தவர்களுக்கு காப்புறுதி நிறுவனத்தின் இழப்பீடுகளை பெற்றுக்கொடுக்க இ.போ.ச. தலைவர் கிங்ஸ்லி ரணவக்கவிடம் எழுத்துமூல கோரிக்கையை முன்வைத்துள்ளேன். இவ்விடயத்தில் ஏற்படும் சட்டரீதியாக செலவுகளை நானே பொறுப்பேற்கவுள்ளேன்.  

அத்தோடு தோட்ட கிராமப்புற பாதைகளில் சேவைகளில் ஈடுபடும் பஸ்களில் நிரந்தர சாரதிகளை நியமிக்க வேண்டும். பஸ்களின் பராமரிப்பு, பழுதுபார்ப்பு குறித்தும் உரிய அணுகுமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என குறிப்பிட்டதோடு, பாதிக்கப்பட்டவர்களில் சிலர் நிரந்தரமாக பாதிக்கப்பட்டு அவர்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளதால் அது தொடர்பாகவும் பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டார். 

மடூல்சீமை, பசறை வீதியில் முன்னர் காலை 6.30மணிக்கு இ.போ.ச. பஸ்வண்டியொன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டு மாணவர்களை பாடசாலைக்கு ஏற்றியிறக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. எனினும் தற்போது அச்சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதால் அதிக பணம் கொடுத்தே மாணவர்கள் பசறை பகுதியிலுள்ள பாடசாலைகளுக்கு வந்து கற்று செல்கின்றனர் என பொதுமக்கள் தெரிவித்தனர். மடூல்சீமை பாதையினூடாக குருவிகொல்லை, றோபேரி மற்றும் பிட்டமாருவ வரை செல்லும் இ.போ.ச. பஸ்கள் பழையவையாகவே உள்ளன. ஒரேயொரு பஸ் வண்டி மாத்திரமே புதியதாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். 

தனியார் பஸ் வண்டிகளும் சேவையில் ஈடுபடும் பாதையாக இது உள்ளது. அவற்றின் தரம், நேர முகாமைத்துவம், சாரதிகளின் அனுபவம், மதுபானம், தொலைபேசி பாவனைக் கட்டுப்பாடு என்பன தொடர்பாக பொது போக்குவரத்து சேவை வாகன ஓட்டிகள் அனைவரிடமும் போக்குவரத்து வாகன பரிசோதகர்கள் அவதானம் செலுத்த வேண்டுமென இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். குறித்த பஸ் விபத்திற்குரிய முழு பொறுப்பையும் போக்குவரத்து அமைச்சு பொறுப்பேற்று விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளது. நிரந்தரமாக பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். பாவனைக்குதவாத பஸ்களை சேவையில் இருந்து இடைநிறுத்த விபத்தின் எதிரொலியாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்க்கக் கூடியதொன்றாகும்.  

தோட்டப்புற, கிராமபுற பாதைகளின் போக்குவரத்து அவதானமிக்கதாக மாறியுள்ளது. 

பாதை சீர்கேடு இதற்கு பிரதான காரணமாகும். ஹாலிஎல பகுதியிலுள்ள ரொசட், ரொக்கத்தன்னை மற்றும் அலுகொல்ல பாதைகளின் நிலைமை குறித்தும் ஸ்பிரிங்வெளி மேமலை தோட்டம் பாதை உட்பட பாதுகாப்பு அற்ற ஏனைய தோட்ட பாதைகள் குறித்தும் அரசாங்கம் உடனடியாக கரிசனை காட்டி தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். 

புதிய தரம் மிக்க தோட்டப்புற பாவனைக்கேற்ற பஸ்களை பாவனையில் ஈடுபடுத்த வேண்டும். சாரதிகளின் அனுபவம், நடத்தை, மதுபாவனை பழக்கம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு கடமைகள் உரிய பாதைகளில் வழங்கப்பட வேண்டும். அப்போது தான் எம்மனதில் மாறாத வடுவாக மாறிவிட்ட இதுபோன்ற விபத்துக்கள், இழப்புக்கள் குறித்து நாம் எதிர்காலத்தில் செய்திகளை கேட்காமல் இருக்கும் வாய்ப்பு ஏற்படும். இவ்விடயம் குறித்து குரல் எழுப்ப வேண்டியது மலையகம் சார்ந்த மக்கள் பிரதிநிதிகளின் தலையாய கடமையாகும்.

ஏ.பி.ஜோன்சன்

Comments