போட்டிகள் வரும் காலத்தில் மட்டும்தான் மாணவர்கள் மைதானத்துக்கு வருகிறார்கள் | தினகரன் வாரமஞ்சரி

போட்டிகள் வரும் காலத்தில் மட்டும்தான் மாணவர்கள் மைதானத்துக்கு வருகிறார்கள்

பாடசாலைகளின் விளையாட்டுப்போட்டிகள் ஆரம்பமாகி கலகலப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பிள்ளைகளும் காலம் முழுதும் விளையாட்டுத்திடலை பார்க்காவிட்டாலும் இப்போது அந்த திடலிலேயே வரும் பெரு வெய்யிலில் காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.  

 “ ரீச்சர் உங்கட விளையாட்டுகள் எப்ப நடக்கப்போகுது.”  

 “எப்பிடியும் கெதியில செய்யத்தான்வேணும் செக்குல் வந்திட்டுதே”  

“எங்களையும் கூப்பிடுங்கோ மறந்திடாதையுங்கோ”  

“ ஓ.. நீங்களில்லாமயோ” இந்த உரையாடல் ஒரு பேருந்துப்பயணத்தில் காதில் விழுந்தது.  

விளையாட்டுப் போட்டிகள் என்பதானது பாடசாலைக்கு ஒரு வைபவம் போல நடக்கிறது. ஒப்புக்கு சப்பாணியாக இதில் பாடசாலை அபிவிருத்திக்குழுக்கள் இடம்பெறுகிறது. பழைய மாணவர்களும் இதில் கலந்து கொள்கிறார்கள். ஆயினும் இவையனைத்தும் இந்தந்த பாடசாலை அதிபரின் சர்வாதிகாரத்துக்குள் கட்டுப்பட்டாக வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது.  

தை மாதத்துக்கு முந்திய மாதம் மழைக்காலம். ஆக பெரும்பாலான கிராம பாடசாலை மைதானங்கள் செடி கொடிகள் மண்டி புல்லும் புதருமாக மாறியிருக்கும் அவை புழக்கத்தில் இருப்பதில்லை. அங்கே மாணவர்களுக்கு பயிற்சியளிக்க நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயிற்சியளிக்க முடிவதில்லை. அவற்றை அப்புறப்படுத்த வேண்டிய கடமை யாருடையது. உண்மையில் பெற்றோர்களும் பிள்ளைகளுமே தமது பாடசாலை மைதானத்தை சுத்தம் செய்தாக வேண்டும். பாடசாலையின் மாணவர்களுடைய பெற்றோருக்கும். பாடசாலைக்கும் இடையேயான நல்லுறவை மேம்படுத்தி வைத்திருக்கவேண்டிய கடமை அதிபருக்கும் ஆசிரியருக்குமே பொறுப்பானதாகும்.  

 போர் நடந்த காலத்தில் இந்த நடைமுறையை கண்டிப்பாக அனுசரிக்கவேண்டிய கட்டாயம் ஆசிரியர்களுக்கு இருந்தது. அதில் இயக்க சார்பில் அந்த பிரதேசப் பொறுப்பாளரும் மக்களுடன் கலந்து கொள்வார். போட்டிக்காக பரிசில் வழங்கல் மைதானம் சீரமைத்தல் என்பவை மட்டுமன்றி விளையா ட்டுப்போட்டிகள் முடியும் வரை அவர்கள் கூடவே நிற்பார்கள். இதனால் மக்களும் செறிவாக அங்கே காணப்பட்டார்கள்.  

 இப்போதும் அதே மக்கள்தானே ஏன் பாடசாலை நிர்வாகத்துக்கு ஏன் தமது மாணவர்களின் கல்வி செயற்பாட்டுக்கு உதவ மறுக்கிறார்கள். அங்கே அதிபரின் ஆசிரியரின் அக்கறையின்மை வெளிப்படுகிறது. பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவருடைய விபரமும் அந்த மாணவரின் பெற்றோர் பற்றிய விபரமும் பாடசாலையில் இல்லையா? அப்படி மாணவர்களைப்பற்றி பெற்றோரிடம் உரையாடவேண்டிய கடப்பாடு ஆசிரியருக்கும் ஆசிரியருடன் உரையாடவேண்டிய கடப்பாடு பெற்றோருக்கும் இல்லையா என்ன? அப்படி பிள்ளைகளின் கல்வியில் அக்கறை இல்லாத பெற்றோர் இப்போதும் இருக்கிறார்கள் என்பதை நம்ப முடிகிறதா? தொலைவிலிருந்து கடமைக்கு வரும் ஆசிரியர்களுக்கு பெற்றோரோ மாணவர்களோ தொழில்தான். பாடசாலையோ மாணவர்களோ எப்படிப்போனால் என்ன என்பார்கள். கிராமவாசிகளும் பாடசாலையின் ஒழுங்கோ ஒழுக்கமோ மனதுக்கு பிடிக்கவில்லையானால் வேறொரு பாடசாலையில் பிள்ளைகளை மாற்றிவிடுகிறார்கள். கிராமத்து பாடசாலைகளின் இழிவு நிலைக்கு இதுவுமொரு வலுவான காரணம்தான்.  

“அதுகள் கூப்பிட்டாலும் வராதுகள். ஒழுங்கா கூட்டங்களுக்கே வராதுகள்.”  

“சனம் எங்கட கரைச்சலுக்குத்தான் படிக்கவே அனுப்புதுகள் இதில விளையாட்டுப்போட்டி நடத்துவம். மைதானம் துப்பரவாக்க வாங்கோ எண்டா வருதுகளே”  

அப்படியானால் அந்த விளையாட்டுக்களுக்கான பயிற்சியை வழங்கும் ஆசிரியர் என்ன செய்வார். மைதானமே இல்லாமல் விளையாட்டுகளை எப்படி நடத்தலாம். வவுனியாவின் ஒரு அபிவிருத்தியடைந்து கிராமப்பாடசாலையின் விளையாட்டுப் பயிற்சி ஆசிரியர் இதை அதிபரிடம் கேட்டால், நீங்கள் ஆள்பிடிச்சு திருத்திப் போட்டு பில்லைத்தாங்கோ. காசைத்தாறன்’ என்றாராம். ஒரு வகுப்பில் கரும்பலகை உடைந்து போய்விட்டால் அல்லது மை கரைந்து போனால் அந்த வகுப்பின் ஆசிரியர்தான் அதை திருத்துவாரா? எனக்குப் புரியவில்லை. இலவசக்கல்வி என்பது இதைத்தானா? பாவம் அந்த பெண் ஆசிரியர் அண்மையில்தான் வேலையில் சேர்ந்தவர். தனது திறமையை நிரூபிக்க கிடைத்த முதல் வாய்ப்பு இந்த விளையாட்டுப்போட்டி. வேறு வழியின்றி கடன் வாங்கி அந்த மைதானத்தினை செடிகளை அகற்றும் வேலையை செய்ய வேண்டியதாகப்போயிற்று.  

ஆயிற்றா போட்டிகளின் இறுதிநாளன்று சாத்திர சம்பிரதாயங்களுக்காக இரண்டொரு விளையாட்டுகளை நடாத்தி பரிசு வழங்குவர். அந்த நிகழ்ச்சியானது ஏறக்குறைய அதிபரின் வீட்டுத்திருமண நிகழ்வு போல மிக நேர்த்தியாக ஒழுங்கு செய்யப்படும். அவரது அபிமான அரசியல்வாதிகள், அதிகாரிகள் என்போர் முக்கிய விருந்தினர்களாக அழைக்கப்பட்டு மாலை மரியாதைகள் வழங்கப்பட்டு அதிபரது எதிர்காலம் பிரகாசமாக்கப்படும்.  

இந்த விருந்தினர்களாக யாரை அழைப்பது என்பது தொடர்பாக பாடசாலை அபிவிருத்திக் குழுவிற்கும் அதிபருக்கும் பெரும் விவாதமே நடக்கும் அரசியல் கட்சிகளையும் பகைத்துக் கொள்ளாமல் அதிகாரிகளையும் பகைத்துக் கொள்ளாமல் திட்டங்கள் இருக்கும். ‘அவர்' வாசலுக்கு வளைவு கட்டித் தாறண்டவர்.’ ‘இவர் புதிய கட்டடத்துக்கு அனுமதி தாறண்டவர்.’ ‘அவா் பள்ளிக்கூட நூலகத்துக்கு டொனேசன் தந்தவர்.’ மொத்ததில் இவர்கள் அனைவருமே அதிபரின் பாடசாலை என்ற பெயரிலான சொந்த நலன்களையே பேணுவதாக முடியும். இதற்காகவே அநேக கிராமப் பாடசாலைகளின் அபிவிருத்தி குழுவில் உள்ளவர்கள் உப்புக்குச்சப்பாணியாக இருக்கிறார்கள் அவர்களுக்கு எந்த அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தேவைப்படுவதில்லை.  

 இப்படி அழைக்கப்படும் பெருவிருந்தினர்களுக்கு செய்யப்படும் மரியாதைகள் தனியானவைதான். மிக அழகான மாணவிகள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு சேலையணிந்து ஒப்பனை செய்து வரும் விருந்தினர்களுக்கு மாலையிட நிறைகுடம் ஏந்த, சிற்றுண்டி பரிமாற என சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள். இது சார்பாக எந்த பெற்றோரும் ஆட்சேபணை கிளப்புவதில்லை. இந்த மன்னர்கால பணிப்பெண்களாக மாற்றப்படும் பெண்களுக்கும் எந்த ஆட்சேபணையும் கவுரவக் குறைச்சலும் தெரிவதில்லை. இதெல்லாம் இப்போது சகஜமாகிவிட்டது. ஒரு பெண் அதிபர் உள்ள பாடசாலையில்கூட இதுதான் நடந்தது.  

ஏன் பெண்களின் உரிமைகளை உயர்த்திப்பிடித்த விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டு கழகத்தால் நடாத்தப்பட்ட ஒரு பெரு நிகழ்வில்கூட இம்மாதிரி அழகிய பெண்கள் ஒப்பனை செய்யப்பட்டு மேடையின் இரு புறமும் நிறுத்தப்பட்டிருந்தனர். மேடையில் இருப்பவர் திரும்பி கடைக்கண்ணால் பார்த்தாலும் ஓடிவந்து அவர்கள் முன் வாய்புதைத்து நின்று கட்டளை ஏற்றார்கள். அந்த நேரம் அப்பவே எனது மனம் கொதித்தது.  

 பாடசாலையின் ஆசிரியர்களும் ஆசிரியைகளும் அன்றைக்கு அணிவதற்கென்றே அவரவர் இல்ல நிறத்தில் மிக அழகிய ஆடைகள் நகைகள் அணிந்து மைதானத்தை நிறைத்து அங்குமிங்கும் அலைவதைக் காணலாம். இந்த விழாவைக் காண அந்த கிராமம் மட்டுமல்ல அயற் கிராமங்களிலிருந்தும் மக்கள் திரண்டு வந்து நிகழ்ச்சிகளில் கலந்து, விசிலடித்து, கைதட்டி ஆரவாரிப்பார்கள். இவ்வளவுக்கும் ஆரம்பம் அந்த செடிமண்டிக் கிடந்த விளையாட்டு மைதானம்தான். அதை சுத்தப்படுத்த முன்வராத இந்த கும்பலில் மனோநிலைதான் என்ன? அதிபரின் மனநிலைதான் என்ன? விளையாட்டுப்போட்டிகள் வரும் காலத்தில் மட்டும்தான் மாணவர்கள் மைதானத்துக்கு வருகிறார்கள் என்றால், செடி மண்டித்தான் போகும் எப்போதும் புழக்கத்தில் உள்ள மைதானங்கள் அழகாகவே இருப்பதை காணலாம்.  

 “இப்ப விளையாட்டு முக்கியமா என்ன நாங்க படிக்கத்தான் பிள்ளையள பாடசாலைக்கு அனுப்பிறம்” என்ற கூறும் பெற்றோரும் படிக்க வேண்டும்.

தமிழ்க் கவி பேசுகின்றார்

 

Comments