''சட்டத் திருத்தமே ஆயிரம் ரூபாவை உறுதிப்படுத்தும்!'' | தினகரன் வாரமஞ்சரி

''சட்டத் திருத்தமே ஆயிரம் ரூபாவை உறுதிப்படுத்தும்!''

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாவாக இருக்க வேண்டும் என்றும் அதனை பெருந்தோட்டக் கம்பனிகள் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும்.  

இந்த அறிவிப்பு வெளிவந்ததிலிருந்து அவ்வாறு சம்பளம் வழங்கப்பட்டால் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செல்வாக்கு அதிகரிக்கும் என்றும் அதன் விளைவாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு பெரும்பாலான மலையகத் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்றும் முகநூல்களில் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.  

 அதேவேளை நாளாந்த சம்பளத்திற்கு மேலதிகமாக நிவாரணக் கொடுப்பனவாக நாளாந்தம் ஐம்பது ரூபாவை அரசாங்கம் வழங்கும் என்று ஒன்றுக்கு மூன்று முறை கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டபோதும் அது நடைமுறைக்கு வரவில்லையாதலால் திகாம்பரம், இராதாகிருஷ்ணன், மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி  எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பை இழக்கும் என்றும் முகநூல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.  

தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு மக்களுக்கு வழங்கப்படும் வாக்குறுதிகள் நிவாரணங்கள், நாளாந்த பிரச்சினைகளுக்கு காணப்படும் தீர்வு போன்றன மக்களின் வாக்குகளை கவரும் உபாயங்களாகின்றன. இதற்கு தோட்டத் தொழிலாளர்கள் விதிவிலக்கல்ல. இவ்வாறான கவர்ச்சிகளுக்கு எடுபட்டு அல்லது நன்றிக்கடனாக அவற்றை உறுதி செய்யும் கட்சிகளுக்கு வாக்களிப்பது அரசியல் முதிர்ச்சியாக கொள்ளப்பட முடியாவிட்டாலும் வாக்கு அரசியலில் இது சகஜமாகும்.  

இவற்றை பற்றிய கருத்து பரிமாறுகை தேவையற்றனவல்ல. நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபா வேண்டுமென்பது ஐந்து வருடங்களுக்கு முன்பு முன்வைக்கப்பட்ட கோரிக்கையாக இருந்தாலும், தற்போது அத்தொகை போதுமானதல்ல. எனினும் அதனை வழங்க வேண்டுமென்று தற்போதைய அரசாங்க அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானத்தை நிறைவேற்ற பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு பல சலுகைகளை கொடுக்க முன்வந்துள்ளது. உற்பத்தி வரிக்குறைப்பு, உரமானியம் (இலவசமாக கொடுப்பது), வங்கிக் கடன் வசதி போன்றவற்றை அறிவித்துள்ளது. இச்சலுகைகளின் மூலம் கம்பனிகளை மகிழ்வடையச் செய்ய அரசாங்கம் முன்வந்துள்ளது.  

இச்சம்பள உயர்வு பற்றி பெருந்தோட்டக் கம்பனிகளுடன் கலந்துரையாடியதாகவும், அவற்றுக்கு பொருளாதார நிவாரணங்களை அரசாங்கம் வழங்க விருப்பதால் அவை இச்சம்பள உயர்வை வழங்குமென்றும் அமைச்சரவையின் இணைப்பேச்சாளருமான பெருந்தோட்டக் கைத்தொழில் ஏற்றுமதி விவசாய அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.  

ஆனால் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தேயிலைச் சபையிலிருந்து பெறப்படும் நிதியிலிருந்து ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படுமென கூறுகிறார். இவை இரு முரண்பட்ட கருத்துகளாகும்.  

இலங்கை தோட்டத்துரைமார் சங்கமோ (Planters Association of Ceylon) அரசாங்கத்தின் சம்பள உயர்வு அறிவிப்பானது, அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்றும் வழமைபோல் தேயிலை உற்பத்திச் செலவில் 70சதவீனமானது தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளமாகும் என்பதால் சம்பளஉயர்வை வழங்கினால் உற்பத்திச் செலவு மேலும் அதிகரிக்கும் எனவும், அதனால் பெருந்தோட்டக் கம்பெனிகளுக்கு மேலும் நட்டம் ஏற்படுமெனவும் கருத்து தெரிவித்துள்ளது.  

(இவை உண்மைக்கு புறம்பானவை என்று பல கட்டுரையாளர்களும் ஆய்வாளர்களும் நிரூபித்துள்ளனர். பெருந்தோட்டக் கம்பனிகளோ, தோட்டத்துரைமார் சங்கமோ பகிரங்க, விவாதத்திற்கு வந்தால் அவை கூறுவது உண்மைக்குப் புறம்பானது என்பதை நிரூபிக்க முடியுமென அந்த கட்டுரையாளர்களும் ஆய்வாளர்களும் ஏற்கனவே பலமுறை சவால் விடுத்திருந்தனர்)  

சம்பள உயர்வு பற்றித் தீர்மானிக்கும் பொறிமுறையாக கூட்டு ஒப்பந்தம் இருந்து வருகின்றது. அதில் பெருந்தோட்டக் கம்பெனிகள் சார்பில் இலங்கை முதலாளிமார் சம்மேளனமே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தொழிலாளர்களின் தொழிற்சங்கங்கள் கோரிக்கைகளை மதிப்பதாக கூட்டு ஒப்பந்த பேரப்பேச்சு இடம்பெறுவதுமில்லை, தொழிற்சங்கங்களின் பிடி பலமாக இருப்பதுமில்லை. இறுதியில் கம்பனிகள் கூறுவதை ஏற்றுக்கொள்ளும் நிலையிலேயே தொழிற்சங்கங்கள் இருந்து வருகின்றன. அந்த அடிப்படையிலேயே நீண்ட சுணக்கம், இழுத்தடிப்பிற்கு பின்னர் நாளாந்த அடிப்படை சம்பளம் 750ரூபாவாக்கப்பட்டது.  

தோட்டத்தொழிலாளர்கள் பல விதமான போராட்டங்களை முன்னெடுத்திருந்தபோதும் நாளாந்தம் சம்பளம் எவ்வாறிருக்க வேண்டுமென கடந்த மைத்திரி – ரணில் அரசாங்கம் மட்டுமல்ல, அதற்கு முக்கிய அரசாங்கங்களும் கம்பனிகளுக்கு, எவ்வித அழுத்தங்களையும் கொடுக்கவில்லை. கடந்த அரசாங்கத்தில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சராக இருந்த நவீன் திசாநாயக்க கம்பனிகளின் சார்பாக செயற்பட்டதுடன், அவை நாளாந்த சம்பளம் ஆயிரமாக வழங்கக்கூடிய நிலையில் இல்லை என தெரிவித்தார். கம்பனிகள் ஆயிரம் ரூபா கோரிக்கையை மறுக்க அவரின் நிலைப்பாடும் ஒரு காரணியானது. அந்த அரசாங்க அமைச்சரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதும் நாளாந்த நிவாரணமாக ரூபா 50/= வழங்கப்படவும் இல்லை. அதற்கும் நவீன் திசாநாயக்க ஒரு காரணமென கூறப்படுகிறது.  

தற்போதைய அரசாங்கம் நாளாந்த சம்பளமாக ரூபா 1000/= வழங்கப்பட வேண்டுமென அறிவித்துள்ளமை கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக அமைந்துள்ளது. ஆனால் இது நடைமுறைக்கு வருமா என்பதே தற்போதைய சவாலாகும்.  

அரசாங்கம் என்னதான் மானியங்களையும், நிவாரணங்களையும் வழங்கினாலும் கம்பனிகள் உற்பத்திச்செலவு அதிகரிப்பு என்ற பாட்டையும், நட்டம் ஏற்படும் என்ற பாட்டையும் பாடத்தான் போகின்றன. தற்போதைய கூட்டு ஒப்பந்த பொறிமுறைக்கு அரசாங்கமும் தொழிலாளர்கள் நலனை பாதுகாப்பதற்காக ஒரு தரப்பாக இருக்கும் வகையில் சட்டப் பொறிமுறை மாற்றப்பட்டாலன்றி வெறும் அமைச்சரவை தீர்மானம் கம்பனிகளை நிர்ப்பந்திக்காது. அமைச்சரவையின் இத்தீர்மானத்திற்கு ஏற்ப கூட்டு ஒப்பந்தம் திருத்தப்பட வேண்டும். அதில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபாவாக இருக்க வேண்டுமென ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.  

ஆகக்குறைந்த அல்லது குறைந்தபட்ச சம்பள சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு ஆகக் குறைந்த நாள் சம்பளம் ஆயிரம் ரூபாவாக இருக்க வேண்டுமெனவும் அச்சட்டம் தோட்டத்தொழிலாளர்களுக்கும் ஏற்புடையதெனவும் சட்ட ஏற்பாடுகள் இருக்க வேண்டும் அவ்வாறு திருத்தம் கொண்டு வரப்படின் எந்தவொரு கூட்டு ஒப்பந்தத்திலும் நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாவுக்கு குறைவாக இருக்க முடியாது. கூட்டு ஒப்பந்தத்தில் சம்பந்தப்படுத்தப்படாத எந்தவொரு தொழிலாளிக்கும் அதைவிட குறைந்த சம்பளம் வழங்கப்பட முடியாது.  

நடைமுறையில் இருக்கும் கூட்டு ஒப்பந்தமுறை பெருந்தோட்டத் தொழிற்துறையில் முன்னேற்றகரமான தொழிலுறவை ஏற்படுத்துவதற்கு முட்டுக்கட்டையாக இருப்பின் அதற்கு மாற்றாக இன்னொரு முன்னேற்றகரமான பொறிமுறை கண்டறியப்பட்டு ஏற்புடையதாக்கப்பட வேண்டும்.  

அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெருந்தோட்டத் துறையை மறுசீரமைக்க ஆக்கப்பூர்வமான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.  

தற்போது இந்தியாவிலும், கென்யாவிலும் பெருந்தோட்டத்துறை வீழ்ச்சியடைதுள்ளதால், அவற்றை உதாரணமாக எடுத்துக்காட்டி இலங்கையின் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உழைப்புரிமையை மறுக்கக்கூடாது. இந்தியாவில் பெருந்தோட்டத்துறையை விட வேறு பொருளாதார துறைகள் முதன்மை பெற்றுள்ளன. அங்கு தேயிலைத் தோட்டங்களில் வேறு மாற்றுப் பயிர்ச்செய்கைகளும், தொழிற்துறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கென்யாவின் பொருளாதார வீழ்ச்சி தேயிலை உற்பத்தியையும் பாதித்துள்ளது.  

அந்நிலைமை இலங்கையில் இல்லை. தேவையெனின் பெருந்தோட்டத்துறை  இன்னொன்றாக மாற்றியமைக்கப்படும் வரை தற்போதைய துறை பாதுகாத்து பேணப்பட வேண்டும். அம்மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டால் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து நாடோடிகளாக்கப்படும் நிலை ஏற்பட்டு விடலாம். இதை எவ்வகையிலும் தடுத்தேயாக வேண்டும்.  

சட்டத்தரணி இ. தம்பையா,  
(பொதுச் செயலாளர்,  
மக்கள் தொழிலாளர் சங்கம்,  
இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம்

Comments