புனித மக்காவில் ‘சிலோன் ஹவுஸ்’ | தினகரன் வாரமஞ்சரி

புனித மக்காவில் ‘சிலோன் ஹவுஸ்’

இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் இராஜதந்திர  தொடர்பு ஆரம்பிக்கப்பட முன்னர் இந்நாட்டிலிருந்து ஹஜ் கடமையை நிறைவேற்ற  மக்கா செல்லும் ஹாஜிகளின் தங்குமிட வசதி கருதி இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்  தலைவர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் குழுவொன்றினால் 1961இல் மக்காவில்  கட்டடமொன்று கொள்வனவு செய்யப்பட்டு வக்பு செய்யப்பட்டது. இக்கட்டடம்  மக்காவில் அமைந்துள்ள கண்கவர் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில்  அமைந்திருந்தது. ‘சிலோன் ஹவுஸ்’ என்ற பெயரில் இயங்கி வந்த இம்மண்டபம்  இலங்கை முஸ்லிம்களுக்குரிய பெறுமதிமிக்க சொத்தாகும். 

இருப்பினும் கஃபத்துல்லாஹ் விஸ்தரிப்பைத் தொடர்ந்து  இக்கட்டடமும் அப்புறப்படுத்தப்பட்டிருக்கின்றது. இதற்கென சவூதி அரேபிய  அரசாங்கம் பெருந்தொகை நிதியை நஷ்டஈடாக வழங்கியுள்ள போதிலும் இக்கட்டடத்தை  வாங்கி வக்ப் செய்தவர்களின் எதிர்பார்ப்புக்கு மாற்றமாக ஒருவர் அந்நிதியைக்  கையாண்டு வருவது தெரிய வந்துள்ளது. ஆனால் இது முற்றிலும் இலங்கை  முஸ்லிம்களுக்குரிய நிதியாகும். 

இவ்வாறான சூழலில் இம்முறை இலங்கைக்கு பெற்றுக்கொள்ளக்கூடிய  ஹஜ் கோட்டா தொடர்பில் கலந்துரையாடவென தற்போதைய சமய விவகார அமைச்சரான  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கமைய இலங்கை ஹஜ் குழு சவூதி  அரேபியாவுக்கு அண்மையில் விஜயம் செய்தது. அச்சமயமே சிலோன் ஹவுஸ் விவகாரம்  தெரிய வந்துள்ளது. இலங்கை ஹஜ் குழுத் தலைவர் மர்ஜான் பளீல் தலைமையில் இதர  உறுப்பினர்களான அஹ்கம் சப்ரி, அப்துல் சத்தார், செய்யத் அஹமத் நகீப்  மெளலானா, அஹமத் புவாத் ஆகியோரும் இவ்விஜயத்தில் கலந்து கொண்டிருந்தனர்.  இவ்வாண்டிற்காக இலங்கைக்கு வழங்கப்படும் ஹஜ் கோட்டா தொடர்பான  உடன்படிக்கையில் இலங்கை ஹஜ் குழு தலைவரும் அந்நாட்டின் ஹஜ் மற்றும் உம்ரா  விவகார பிரதியமைச்சர் கலாநிதி அப்துல் சுலைமான் மஷாட்டும்    கைச்சாத்திட்டதும் தெரிந்ததே.  

இந்த சிலோன் ஹவுஸ் என்னும் இலங்கையருக்கான தங்குமிடத்தை  மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசல் விரிவுபடுத்தலின் போது சவூதி அரேபிய அரசாங்கம்  பெற்றுக்கொண்டு அதற்கு அதிக நஷ்டஈட்டுத் தொகையை வழங்கியுள்ளதாகத்  தெரியவந்துள்ளது. இதற்காக வேண்டி 2006முதல் இலங்கைப் பிரதிநிதிகள் சிலர்  சவூதி அரேபிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும்  அக்காலப்பகுதியில் அவ்விடத்தின் பெறுமதிப் படி 100மில்லியன் அமெரிக்க  டொலர் நஷ்டஈட்டை வழங்குவதற்கு சவூதி அரேபிய அரசாங்கம் விருப்பம்  தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.    இந்நாட்டில் வாழ்ந்த மர்ஹும் கலாநிதி டீ.பீ. ஜாயா போன்ற  சிரேஷ்ட முஸ்லிம்களின் பங்களிப்பில் உருவாக்கப்பட்ட சிலோன் ஹவுஸ்  கட்டிடமானது அதற்காக உருவாக்கப்பட்ட இலங்கை மன்றமொன்றின் கீழ்  நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது.

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி,  இக்கட்டிடத்திற்கு சவுதி அரேபிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள அதிகூடிய  நஷ்டஈட்டு தொகை தொடர்பில் இலங்கை முஸ்லிம்கள் சார்பில் அன்று உரிய  நடவடிக்கைகள் முன்னெடுக்கத் தவறியதன் விளைவாக இந்நடவடிக்கைகளை முன்னெடுக்க  அட்டோனி தத்துவப் பத்திரம் வழங்கப்பட்்டிருந்த சாதிக் ஹாஜியார் என்பவரிடம்  அந்நிதி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை ஹஜ் குழுவின் உறுப்பினர் அப்துல் சத்தார் குறிப்பிடுகையில், 

‘ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கா செல்லும் ஹாஜிகள் பத்து  நாட்களுக்கும் மேற்பட்ட காலம் மக்காவில் தங்கியிருக்க வேண்டியேற்படும்.  இதற்காக தங்குமிட வசதிகளை பெற்றுக்கொள்ள ஹாஜிகள் அதிகூடிய பணத்தை செலவிட  வேண்டியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு அன்று டி.பி. ஜாயா போன்ற முஸ்லிம்  தலைவர்களும் தனவந்தர்களும் ஒன்றிணைந்து சிலோன் ஹவுஸ் என்னும் தங்குமிடத்தை  ஆரம்பித்துள்ளார்கள்.  

எனினும் கஃபத்துல்லா பள்ளிவாசல் விரிவுபடுத்தலின் போது சவூதி  அரேபிய அரசாங்கம் எமக்குச் சொந்தமான இக்கட்டிடத்தை பெற்றுக்கொண்டு அதன்  பெறுமதிக்கேற்ப கூடுதல் நிதித்தொகையை செலுத்தியுள்ளதாக சவூதி அரேபிய அரசின்  பிரதிநிதிகள் எம்மிடம் தெரியப்படுத்தியுள்ளனர். எமக்குத் தெரிவிக்கப்பட்ட  தகவல்களின் படி, அத்தொகை 100மில்லியன் டொலர்களுக்கும் அதிகதாகும்.  இந்நாட்டில் கடந்த அரசாங்கங்களில் அங்கம் வகித்து வந்த சிரேஷ்ட  அமைச்சரொருவரும் மக்காவில் வசிக்கும் அவருக்கு நெருங்கமான சில இலங்கை  வர்த்தகர்களும் இக்கொடுக்கல் வாங்கலில் தொடர்புபட்டிருப்பதாக அங்கு எமக்கு  தெரிவிக்கப்பட்டது.  

உண்மையில் இத்தங்குமிடம் அல்லது அதற்காக  வழங்கப்பட்ட  நஷ்டஈட்டுத் தொகையின் மூலம் நடாத்திச் செல்லப்படுகின்ற பிறிதொரு தங்குமிடம்  எமக்கு இருந்திருந்தால் எமது முஸ்லிம் மக்களுக்கு மக்காவில் குறைந்த  செலவில் தங்குமிட வசதிகளை செய்துகொடுக்க முடியும்.  

இங்கு மிகப்பெரும் மோசடி, முறைகேடு இடம்பெற்றிருப்பது நன்றாக  தெளிவாகின்றது. இதுவரைகாலமும் இவ்விடயம் பல்வேறு அரசியல் அழுத்தங்களின்  அடிப்படையில் மூடிமறைக்கப்பட்டுள்ளது. இப்பாரிய நிதித்தொகைக்கு என்ன  நடந்ததென்று தெரியவில்லை. இது மிகப் பெரும் மோசடியாகும். இது தொடர்பில்  விஷேட விசாரணை மேற்கொண்டு இப்பணத்திற்கு என்ன நடந்ததென்றும் இவ்விடயத்தில்  தொடர்புடைய நபர்கள் யாரென்பதை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக சட்ட  நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் பிரதமரிடம் நாம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். 

அதேநேரம் இக்கட்டடத்தை என்ன நோக்கத்திற்காக எமது முன்னோர்கள்  வாங்கி வக்ப் செய்தார்களோ அந்நோக்கம் நிறைவேற உச்சளவு முயற்சிகளில்  ஈடுபடுவோம். இவ்விடயத்தில் பின்வாங்க மாட்டோம்’ என்றார்.

சவுதி அரேபியாவுக்கான இலங்கை யின் முன்னாள் தூதுவர் அன்சார்     இப்றாஹீமிடம் வினவிய போது.. 

‘சிலோன் ஹவுஸ் கட்டிடம் எமது நாட்டிற்குச் சொந்தமாக காணப்பட்ட  பெறுமதியான சொத்தாகும். இக்கட்டிடம் தொடர்பாக உருவாகியுள்ள நிலைமைகள்  பற்றி கண்டறிந்து சட்ட நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பு செய்வதற்காக வேண்டியே  நாம் சவூதி அரேபியாவில் நிரந்தரமாக வசித்துவரும் சாதிக் ஹாஜியாரை  நியமித்திருந்தோம். இவர் அரபு மொழியிலும் சவுதி அரேபிய சட்டங்கள்  தொடர்பிலும் ஆழ்ந்த புலமை பெற்று இருந்ததன் காரணமாகவே இப்பொறுப்பு அவரிடம்  ஒப்படைக்கப்பட்டது.  

எனினும் அதன்பின்னர் அக்கட்டிடத்திற்கு என்ன நடந்தது என்பது  தொடர்பாக எவ்விதத் தகவல்களையும் இவர் எமது தூதுவராலயங்களுக்கோ அல்லது  கொன்சியூலர் அறிவிக்கவில்லை. அவருக்கு தேவையான விதத்திலேயே சகல  நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார். இப்பெறுமதியான சொத்து இலங்கை  முஸ்லிம்களுக்குச் சொந்தமானது. அதுவல்லாமல் ஒரு தனிநபருக்கு அல்லது சவுதி  அரேபிய அரசாங்கத்திற்கு உரித்தான விடயமொன்றல்ல.  

நாம் ஒப்படைத்த பொறுப்பிற்கு அப்பால் சென்று இந்நபர்  சட்டவிரோதச் செயலைச் செய்திருக்கிறார். இக்கட்டிடத்திற்காக சவுதி அரசாங்கம்  அதிகூடிய நஷ்டஈட்டுத் தொகையை செலுத்தியுள்ளது. எனினும் அந்நிதித்தொகை  எவ்வளவு என்று எமக்குத் தெரியாது. 26மில்லியன் சவுதி அரேபிய ரியால்  கிடைத்ததாக இவர் இலங்கை மன்ற சபைக்கு தெரிவித்திருந்தார். அப்படியெனில்  அப்பணம் எங்கே? அவர் இவ்விடயம் தொடர்பில் இதுவரை காலமும் ஏன் இலங்கை  அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தவில்லை?. தற்போது இவ்விடயம் பற்றிய தகவல்கள்  கசிகின்ற போதே அவர் இப்படிப் பணத்தொகையொன்று கிடைத்தது என்பதாகக்  கூறுகின்றார்.  

சிலோன் ஹவுஸ் கட்டிடம் தொடர்பில் சவுூதி அரேபிய  அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தி தேவையான தலையீடுகளை  மேற்கொள்வதற்காகவே நாம் அவரை நியமித்திருந்தோம். அதுவன்றி சவுூதி அரேபிய  அரசாங்கம் வழங்கிய பணத்தை பெற்றுக்கொள்வதற்காக அல்ல. இதில் பல வருடங்களாக  இலங்கை அரசாங்கங்களுடன் தொடர்புபட்டு வந்த பல்வேறு தரப்புக்கள் உள்ளனர்.  அவர்கள் இச்சகல விடயங்களையும் நன்றாக தெரிந்துவைத்துள்ளனர்.  

இவ்விடயம் தொடர்பான தகவல்களை ஆராய்ந்து பார்ப்பதற்கு விஷேட  ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு நாம் சமய விவகார அமைச்சரான பிரதமர் மஹிந்த  ராஜபக்ஷவிடம்் கோரியுள்ளோம். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக இருந்த  காலப்பகுதியிலும் நாம் அவருக்கு இவ்விடயம் குறித்து முறைப்பாடு செய்தோம்.  இக்கட்டிடத்தை பொறுப்பேற்று இலங்கை மன்ற சபைக்கு சவுூதி அரேபிய அரசாங்கம்  வழங்கிய அதிகூடிய பணத்தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக நாம்  சந்தேகப்படுகின்றோம்.

அப்பணத்தொகை அல்லது அதற்குப் பதிலாக ஏதேனும் ஒரு  கட்டிடம் இலங்கை மன்ற சபைக்கு கிடைத்துள்ளதெனில் அவை எமது நாட்டிற்கு  உரித்தாக வேண்டும். இவ்விடயம் தொடர்பில் நடந்துள்ள விடயங்கள் என்னவென்பதை  தற்போதாவது தெளிவாகக் கண்டறிந்து சட்டத்தை நிலைநாட்டுமாறும் இலங்கை  முஸ்லிம்கள் சார்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் நான் வேண்டுகோள்  விடுக்கின்றேன்’ என்றார். 

கொன்சியூலர் ஜெனரல் இனாமுல்லா

2005 – 2007  காலப்பகுதியில் சவுதி அரேபியாவின் ஜித்தா நகரிலுள்ள கொன்சியூலர்  அலுவலகத்தில் இலங்கைக்கான கொன்சியூலர்  ஜெனரலாக பதவி வகித்த அரபு மொழி  தொடர்பாகவும் அரேபியச் சட்டங்கள் தொடர்பாகவும் கூடுதல் புலமை கொண்ட       இனாமுல்லா மஸீஹூதீன் சிலோன் ஹவுஸ் கட்டிடத்தை இலங்கை மன்ற சபைக்கு  பெற்றுக்கொள்வதற்காக சிறப்பான பணிகளை செய்வதில் முன்னின்ற ஒருவராவார்.  

அவர் இது தொடர்பில் குறிப்பிகையில்,  

‘தற்போது கலந்துரையாடப்பட்டு வருகின்ற சிலோன் ஹவுஸ்  கட்டிடமானது மக்கா நகர விரிவாக்கல் திட்டத்தின் கீழ் சவூதி அரேபிய  அரசாங்கம் பொறுப்பேற்று அதற்குரிய நஷ்டஈட்டுத் தொகையை சிலோன் ஹவுஸ்  கட்டிடத்தை நிர்வகித்த இலங்கை மன்றத்திற்கு வழங்கியது.  நாம் இம்மன்றத்தின்  உரிமையைப் பெற்று அதற்குத் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இவ்விடயத்தை  ஒருங்கிணைப்பு செய்வதற்காக 2008இல் சாதிக் ஹாஜியாரை இலங்கை சார்பில்  நியமித்தோம்.  

அவர் சவுதி அரேபியாவில் நிரந்தர வதிவைக் கொண்டிருந்ததாலும்  அந்நாட்டு சட்டங்கள் மற்றும் அரபு மொழியில் ஆழ்ந்த புலமையைப் பெற்றவர்  என்பதாலும் நியமித்தோம். எனினும் அதன் பின்னர் தெரிவான இலங்கை  அரசாங்கங்களுடன் தொடர்பான தூதுவர்கள், கொன்சியூலர் ஜெனரல்கள், அலவி  மெளலானா, அஸ்வர் போன்ற முன்னாள் முஸ்லிம் அமைச்சர்கள் இச்சொத்து தொடர்பில்  எமக்குக் கிடைக்க வேண்டிய உரிமையை தூய்மையான முறையில் சவுூதி அரேபிய  அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்ட போதும் இதுவரை  அச்செயற்பாடு வெற்றியளிக்கவில்லை. அது தொடர்பில் பாரிய சிக்கல் நிலவுவது  தெரிகிறது.  

இவ்விடயம் தொடர்பில் நான் மிக ஆழமான ஆய்வில் ஈடுபட்டவன்.  எனவே இச்சொத்தை எமக்குப் பெற்றுக்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட  நடவடிக்கைகளில் ஏதேனும் ஒரு குறைபாடு ஏற்பட்டு தற்போது அச்சொத்து  வேறொருவருக்கு கைமாறியிருப்பது நிரூபணமாகியுள்ளது. இது முற்றிலும்  சட்டவிரோதச் செயலாகும். இது இலங்கை முஸ்லிம்களுக்குச் சொந்தமான பெறுமதியான  சொத்து. அதனை ஒரு தனிநபர் நிர்வகிக்க முடியாது. இக்கட்டிடத்திற்காக சவுூதி  அரேபிய அரசாங்கம் அதிகூடிய நிதித்தொகையை செலுத்தியிருப்பின்  அந்நிதித்தொகைக்கு என்ன நடந்தது என்பது பற்றி கட்டாயமாக ஆராய வேண்டும்.  

அதேநேரம், இலங்கை அரசாங்கத்தின் முஸ்லிம் சமய பண்பாட்டு  அலுவல்கள் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் இதற்கான புதிய மன்றமொன்று  முதலில் தாபிக்கப்பட வேண்டும். அம்மன்றத்திற்கூடாக சவுூதி அரேபிய  அரசாங்கத்துடன் இவ்விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வொன்றைத்  தேட வேண்டும். இது தொடர்பில் அமுலிலுள்ள சவுூதியச் சட்டங்கள் குறித்தும்  நாம் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் முன்னைய சவுூதி அரேபிய சட்டத்தின்  படி இக்கட்டிடத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள மன்றத்திற்கேயன்றி எமது  நாட்டிற்கு நஷ்டஈடு கிடைப்பதில்லை. அத்தோடு சவுூதி அரேபிய அரசாங்கம்  பெற்றுக்கொண்ட கட்டிடத்திற்குப் பதிலாக எமக்கு வேறு ஒரு கட்டிடம்  வழங்கப்பட்டிருப்பின் அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியும்  மக்கா நிர்வகிப்பு பணிக்கு தொடர்ந்தும் செலுத்தப்பட வேண்டியுள்ளது.  

இவ்விடயம் தொடர்பான உண்மைகளைக் கண்டறிவதற்கு நிபுணர்கள்  அடங்கிய குழுவொன்றை நியமிக்குமாறு நான் புதிய அரசாங்கத்தைக்  கேட்டுக்கொள்கின்றேன். தற்பொழுது சிலோன் ஹவுஸ் மன்றத்திற்கு பொறுப்பாகவுள்ள  சாதிக் ஹாஜியாரையும் இது தொடர்பில் தொடர்புபடுத்திக்கொள்ள வேண்டும்.  அவரும் இதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார் என எனக்கு அறியக்கிடைத்தது. இது  தொடர்பில் தகவல்களை அறிந்தவன் என்கின்ற வகையில் தேவையேற்பட்டால் எனது  ஒத்துழைப்பையும் அரசாங்கம் நியமிக்கும் நிபுணத்துவக் குழுவிற்கு அல்லது  மன்றத்திற்கு வழங்க எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நான் தயாராக உள்ளேன்.  

இச்சம்பவம் தொடர்பிலான தகவல்கள் குறித்து மீள  ஆராயப்படுவதையிட்டும், இலங்கை ஹஜ் குழு உறுப்பினர் அப்துல் சத்தார்் இது  குறித்த தகவல்களை நாட்டிற்கு அம்பலப்படுத்தியமை தொடர்பிலும் நான்  மகிழ்ச்சியடைகின்றேன். இம்மன்றத்தினை இலங்கை முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம்  செய்யும் வகையில் மீளக் கட்டமைத்து சிலோன் ஹவுஸ் கட்டிடத்தை எமக்கு மீளப்  பெற்று உருவாக்க முடிந்தால் எமது மக்கள் மக்காவுக்கு ஹஜ் யாத்திரைக்குச்  செல்கின்ற போது இலகுவாக குறைந்த விலையில் தங்குமிட வசதிகளை  பெற்றுக்கொள்ளலாம். அத்தோடு அதிலிருந்து கிடைக்கும் மிகப்பெரும்  வருமானத்தின் ஒரு பகுதியை எமது நாட்டின் முஸ்லிம் மத விவகாரங்களுக்காகவும்  பயன்படுத்தலாம். அது அரசாங்கத்திற்கு சுமையாகவும் இருக்காது’ என்றார்.

மர்லின் மரிக்கார்

 

 

Comments