தமிழ் மக்களை தனிமைப்படுத்தும் விவேகமற்ற அரசியல் | தினகரன் வாரமஞ்சரி

தமிழ் மக்களை தனிமைப்படுத்தும் விவேகமற்ற அரசியல்

ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ் மக்களின் நியாயமான ஆதரவு தமக்கு கிடைக்குமென எதிர்பார்த்திருந்த போதிலும், தாம் எதிர்பார்த்த அளவு ஆதரவு தமிழ் மக்களிடமிருந்து தமக்கு கிடைக்கவில்லை எனவும் இருப்பினும் தம்மை ஒட்டுமொத்த நாட்டு மக்களினதும் ஜனாதிபதியாக நாட்டு மக்கள் தெரிவு செய்திருப்பதால் தமது பயணத்தில் தமிழ் தரப்பினரையும் இணைத்துக்கொள்ளப் போவதாகவும் நாட்டை முன்னேற்றும் பணியில் தம்மையும் பங்காளியாக்கிக் கொள்ளுமாறும் தமிழ் தரப்பினருக்கு ஜனாதிபதி தமது பதவியேற்பு விழாவில் வேண்டுகோள் விடுத்தார். அதையடுத்து தமிழ்த் தரப்புகளையும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்காக ஜனாதிபதியுடன் பேசத்தயாராக இருப்பதாக அடிக்கடி தெரிவித்து வருகிறது. அப்பேச்சுவார்த்தைகள் எந்த அடிப்படையில் அமைய வேண்டும் என்பதைப்பற்றி ஜனாதிபதி அவ்வப்போது தெரிவித்து வரும் கருத்துக்களிலிருந்து மிகத்துல்லியமாக ஊகித்துக் கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.  

நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டும் என தமிழ் தரப்பு கூறிவரும் பின்னணியில் இந்நாட்டின் பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்புகளை மதிக்கும் பட்சத்திலேயே நாட்டு மக்களின் இறைமை பாதுகாக்கப்படுமென தெரிவித்திருக்கும் ஜனாதிபதி, அரசியல் யாப்புக்கமைய ஒற்றையாட்சியை பாதுகாக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கே தமது இணக்கப்பாடு இருக்கும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார். அத்தோடு இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் நிகழ்ச்சி நிரலை இந்நாட்டின் பெரும்பான்மை மக்களினால் நிராகரிக்கப்ட்டிருப்பதாகவும் இதனைப் புரிந்துகொண்டு இனங்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தும் குறுகிய நோக்கம் கொண்ட அரசயலுக்குப் பதிலாக நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்லும் தேசிய அரசியலில் இணைந்து செயற்பட இனவாத அரசியல் குழுக்கள் மனதில் கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.  

தமது முதலாவது அரசமுறை பயணமாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியிடம் அந்நாட்டு ஊடகங்கள் இலங்கைத் தமிழ் மக்களுக்கு எவ்வாறான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்ற கேள்வியை எழுப்்பிய வேளையில், தமது பதவிக்காலத்தில் தாம் தமிழ் மக்களுக்காக முன்னெடுக்கவிருக்கும் அபிவிருத்தித் திட்டங்கள் எத்தகைய தீர்வை தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப் போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்க்கும்படி கூறிய ஜனாதிபதி அபிவிருத்தி அரசியலையே முன்னெடுக்க இருக்கின்றார் என்ற செய்தியையே இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஒரே நேரத்தில் தெளிவுபடுத்தி இருக்கின்றார்.  

அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தபோது, அதிகாரப் பகிர்வு மற்றும் அரசியல் தீர்வு ஆகிய விடயங்கள் மீது அவர்கள் அதிக கவனத்தை செலுத்திய போதிலும் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி, இலங்கையை ஒரு முக்கிய முதலீட்டு கேந்திரமாக நோக்கும்படியும் அரசியல் தீர்வு என்பது மக்களின் பொருளாதார அபிவிருத்தியுடன் இணைந்ததாக இருக்க வேண்டுமெனவும் தெரிவித்ததோடு அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் சில ஏற்பாடுகள் நடைமுறைச் சாத்தியமற்றதெனவும் இதனால் அரசியல்வாதிகள் மாற்றுத் தீர்வு குறித்து சிந்திக்க வேண்டுமெனவும் தெரிவித்திருக்கின்றார். நிதர்ஷனமாக பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளிடம் கையளிக்கப்படும் பட்சத்தில் அது பொலிஸ் சேவையை அரசியல் மயமாக்க வழிவகுக்குமெனவும் மாறாக பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் வகையிலான உயர் பதவிகளை மாகாண மற்றும் மாவட்ட மக்களை உள்வாங்குவதன் மூலம் மொழி மற்றும் கலாசார வேறுபாடுகள் காரணமாக ஏற்படும் சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ளக் கூடியதாக இருக்குமெனவும் எடுத்துரைத்திருக்கின்றார்.  

அதேபோல் காலங்காலமாக அரச சேவைகளுக்கான தேர்வுகளின்போது தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எதிர்வரும் காலங்களில் அரச சேவைக்கான ஆட்சேர்ப்பின்போது அனைத்து மாவட்டங்களுக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கும் வகையில் அச்செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். யுத்தத்தின் பின்னரான காலத்தில் குறிப்பாக பெண்கள் நுன்கடன் தொல்லையால் பாதிக்கப்படுவது பற்றி நீண்டகாலமாக பேசிவந்த போதிலும் அதற்கான காத்திரமானதொரு தீர்வு முன்வைக்கப்படாமலே இருந்து வந்தது. இதனைக் கருத்தில் கொண்டு சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கான கடன்களைப் பெற்றுக்கொள்கையில் அக்கடனுக்குப் பிணையாக வைக்கப்பட்ட சொத்துக்களை ஏல விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்துமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் அமைச்சு மட்டத்திலான செயலணியொன்றை உருவாக்கி தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதுடன் பாரம்பரிய சிறு கைத்தொழில்களுக்கு தேவையான மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதில் ஏற்படுகின்ற சிரமங்களை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்க வேண்டுமென முன்மொழியப்பட்டுள்ளது. இதன் மூலம் சகல மாவட்டங்களிலும் காணப்படும் முதலீட்டு வாய்ப்புகளை இனங்கண்டு வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்வதற்கான செயற் திடடங்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தியிருக்கின்றார்.  

மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களை வைத்துப் பார்க்கும்போது இதுவரை காலமும் தமிழ் அரசியல்வாதிகள் எழுப்பி வந்த அரசியல் தீர்வு எனும் கோஷத்துக்கு முக்கியத்துவத்தைக் கொடுத்து பேச்சுவார்த்தைகளுக்காக பெருமளவு நேரத்தை செலவிட்டுக் கொண்டிருப்பதற்கு பதிலாக குறிப்பாக வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கியிருக்கும் அடிப்படைப் பிரச்சினைகள், வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுத்து புதிய தொழில் வாய்ப்புகளுக்கான வழிகளை ஏற்படுத்தி அம்மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்பதிலேயே புதிய ஜனாதிபதியால் முழுமையான கவனம் செலுத்துப்படும் என்பது தெளிவாகின்றது.  

கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக யுத்தத்தால் பாரியளவில் பின்தள்ளப்பட்டிருக்கும் வடக்கு கிழக்கு மாவட்டங்களை துரிதமாக முன்னேற்ற வேண்டுமென்பதும் அதன் பலன்களை மக்கள் அடையக்கூடியதாக இருக்க வேண்டுமென்பதுமே அப்பகுதியில் பாதிக்கப்பட்ட சாதாரண மக்களின் முதன்மை எதிர்பார்ப்பாக இருக்கின்றது. நீண்டகாலமாக பேசுபொருளாக இருந்துவரும் அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் அடைய வேண்டிய முதல் இலக்காக அபிவிருத்தி அமைய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்பதை அப்பகுதி மக்களின் உணர்வுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. இதனை மிகத்தெளிவாக புரிந்துகொண்டு தாம் வெறுமனே மக்களை மாத்திரமன்றி அவர்களின் விருப்பு வெறுப்புகளையும், உணர்வுகளையும், எதிர்பார்ப்புகளையும், வாழ்க்கையையும், பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் என்பதை செயற்பாட்டு ரீதியில் நிரூபிக்க வேண்டிய கட்டத்துக்கு தமிழ் அரசியல் தரப்புகள் இன்று தள்ளப்பட்டுள்ளன. இதனை உணர இன்னும் காலத்தை கடத்தும் பட்சத்தில் மக்களின் வெறுப்புணர்வை சந்திக்க நேரிடுவதை தவிர்க்க முடியாது போய்விடும். ஆகையால் இனவாதம் பிரதேச வாதம் ஆகியவற்றை முதன்மைப்படுத்தும் குறுகிய அரசியல் நோக்கங்களைக் கைவிட்டு நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்வதற்கு ஆக்கபூர்வமான பங்களிப்பினை தமிழ் தரப்பு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாக இருக்கின்றது. இதனை தமிழ் அரசியல்வாதிகள் உணராத பட்சத்தில் அது, தமிழ் மக்களை தனிமைப்படுத்துவதாக அமைந்துவிடும்.  

அரச தலைமைத்துவத்தையும் நல்லாட்சி அரசையும் உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்த போதிலும் அதன் உரிய பலனை தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க தமிழ் அரசியல் தரப்புகள் தவறிவிட்டன என்ற பரவலான குற்றச்சாட்டு இருந்துவரும் பின்னணியில் தற்போது பதவியில் அமர்த்தப்பட்டிருக்கும் புதிய ஜனாதிபதி நாட்டை முன்னேற்றும் தமது பயணத்தின் பங்காளிகளாக இணைந்துகொள்ளுமாறு தமிழ் தரப்புக்கு விடுத்திருக்கும் வெளிப்படையான வேண்டுகோளுக்கு சாதகமான சமிக்ஞையை காட்டுவதே தமிழ் அரசியல் தரப்புகளின் விவேகத்தை வெளிப்படுத்துவதாக அமையும்.    

ரவி ரத்னவேல்

Comments