உலகில் எந்த மூலையில் இருந்தாலும் சில நிமிடங்களில் வாகன அனுமதிப்பத்திரம் | தினகரன் வாரமஞ்சரி

உலகில் எந்த மூலையில் இருந்தாலும் சில நிமிடங்களில் வாகன அனுமதிப்பத்திரம்

இன்று அநேகமானோரின் நேரம் ‘ஒன் லைண்லேயே கழிகின்றது. சிலர் யூடியூபில் படம் பார்க்கின்றார்கள். சிலர் பாடல்களை கேட்கிறார்கள் சிலர் முகநூலில் மூழ்கி விடுகின்றார்கள். அவர்கள் பஸ் வண்டியோ, புகையிரதமோ என எண்ணுவதுமில்லை. இளைஞர்கள்  கூட எப்போதும் ஒன்லைனில்தான். முச்சக்கர வண்டிச் சாரதிகள் ஏன் வைத்தியரை சந்திக்க செல்லும் நோயாளிகள் கூட அதில் தான் சிறைப்பட்டுள்ளார்கள். தற்போது பொருட்களை வாங்கவும் சொத்துக்கள், வாகனங்களை விற்கவும் ஒன் லைனைப் பயன்படுத்துகின்றார்கள்.  

இருபத்து நான்கு மணிநேரம் ஒன்லைனில் இருந்தாலும் அநேகமானோர் தமது வாழ்க்கையை இலகுவாக்க அதனை பயன்படுத்துவதில்லை. அதிகமானோர் டேட்டாவுக்காக பணத்தையும் நேரத்தையும் வீணாக்குகின்றார்கள்.  

ஒன் லைன் மூலம் வாகன  அனுமதி பத்திரம் பெறக் கூடிய வசதி பத்து வருடங்களுக்கு முன்பே இருந்தாலும் அந்த சேவையை 3சதவீதமானோரே பயன்படுத்துகின்றார்கள்.  

மோட்டார் வாகன அனுமதிப்பத்திரத்தை ஒன்லைன் மூலம் பெறும் வசதி 2009ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அது மேல் மாகாணத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டது.  2015ம் ஆண்டு நாடு பூராவுமுள்ளவர்கள் வாகன அனுமதிப் பத்திரத்தை புதிதாக பெற்றுக் கொள்ளவும்,  பழைய உத்தரவு பத்திரத்தை புதுப்பிக்கவும் E revenue licence  எனப்படும் இலத்திரனியல் அனுமதிப்பத்திரம்  பெறும் சேவை நாடு பூராவும் ஏற்படுத்தப்பட்டது. தற்போது அச்சேவை 10 வருடத்தை பூர்த்தி செய்துள்ளது.   சாதாரணமாக வாகன அனுமதிப் பத்திரத்தை பெறவேண்டுமானால்  வாகனப் பதிவுச் சான்றிதழ், வாகன அனுமதிப் பத்திரம்,  காப்புறுதிச்  சான்றிதழ், புகைச் சான்றிதழ் போன்ற கடிதங்கள் அடங்கிய கோப்பொன்றை கொண்டு செல்ல வேண்டும். வரிசையில் நிற்க வேண்டும். திடீரென அவ் ஆவணங்களில் ஏதேனும் தவறிருந்தால் மீண்டுமொரு நாள் செல்ல வேண்டும்.

ஆனால் இலத்திரனியல் அனுமதிப் பத்திரம் வழங்கும் சேவை மூலம் 2 நிமிடங்களில் வீட்டிலிருந்தபடியே அனுமதிப்  பத்திரத்தை பெறமுடியும். நேரமும் பணமும் மீதப்படும் அதனால் தான் நாம் இலத்திரனியல் அனுமதிப்  பத்திரம் வழங்கும் சேவையை ஆரம்பித்தோம் என இலங்கை தகவல்கள் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவன (ICTA) ஆலோசகர் உதய கஸ்தூரிரத்ன தெரிவித்தார்.  

E- Revenu License எனப்படும் ERL முறைக்குள் நுழைவதற்கு gov.lk குள் நுழைய வேண்டும் அதன்பின்னர் E Revenue licence எனக் குறிப்பிட்டு இலத்திரனியல் அனுமதிப் பத்திர சேவையை பெறமுடியும். அங்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி அதாவது ஈமெயில் தேவையில்லை. இம்முறையில் அனுமதிப் பத்திரத்தை பெற வாகன இலக்கம் மற்றும் அனுமதிப் பத்திர இலக்கத்தை குறிப்பிட வேண்டும்.  

அதன்பின்னர் வாகனத்தை காப்புறுதி செய்த நிறுவன பெயர், புகைப் பரிசோதனை நிறுவனம் என்பவற்றின் பெயர்கள் கேட்கப்படும். அதனை உள்ளிட வேண்டும். அவ்வேளையில் புகைப் பரிசோதனை சான்றிதழோ காப்புறுதிப் பத்திரமோ பெற்றிருக்காவிட்டால் கணனி திரையில் காட்டப்படும்,  அத் தகவல்கள் சரியென்றால் மாத்திரமே முன்னேறி செல்ல அனுமதி கிடைக்கும்.  

ERL முறையில் அனுமதிப் பத்திரம் பெறுவதற்கு கிரெடிட் கார்ட் மூலமே பணம் செலுத்த முடியும். அதன் பின்னர் மின்னஞ்சல் முகவரிக்கு தற்காலிக அனுமதிப் பத்திரம் கிடைக்கும். நீங்கள் செய்ய வேண்டியது, அதில் ஒரு பிரதியை பெற்று உங்கள் வசம் வைத்திருப்பதாகும். உங்கள் நிரந்தர வாகன அனுமதிப் பத்திரம் தபால் மூலம் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும். அதுவரை மின்னஞ்சலில் அனுப்பப்பட்ட தற்காலிக அனுமதிப் பத்திரத்தை பயன்படுத்த முடியும்.  

ERL முறை மூலம் வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ள முடியும். அதற்காக பிரதேச செயலாளர் காரியாலயங்களுக்கு சென்று வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை. நேரமும் சேமிக்கப்படும். பணமும் சேமிக்கப்படும். ஆனால் 6 மில்லியன் வாகன அனுமதிப்பத்திரம் பெறப்படும் எமது நாட்டில் ERL முறை மூலம் 3% அனுமதிப் பத்திரமே பெறப்படுகின்றது. இது கவலைக்குரிய விடயமாகும்.  

ஒன்லைன் மூலம் வாகன  அனுமதிப்பத்திரம் பெறும் முறை பற்றி அநேகமானோர் அறிந்திருக்கவில்லை என்றே தோன்றுகின்றது. அதனால் இதுபற்றி பிரதேச செயலகங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம். நாமொரு ஆய்வை நடத்தினோம். அதில் இளைஞர்களிடம் பல கேள்விகளைக் கேட்டோம். அவர்கள் ஒன் லைன் செல்வதில்லை என்று கூறினார்கள். அவர்கள் அதை நம்புவதில்லை என்றும் பயப்படுவதாகவும் தெரிவித்தார்கள் அதன் பின்னர் நீங்கள் முகநூலில் இருக்கின்றீர்களா, யூடியூப் பார்ப்பீர்களா என்று கேட்க அவர்கள் ஆம் என்றார்கள் அவையும் ஒன்லைனுக்கு உரியவைதான் என அவர்களிடம் கூறினேன் என தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவன  ஆலோசகர் உதய கஸ்தூரிரத்ன சிரித்தபடி கூறினார்.  

ஒன்லைன் குறித்து பயமும் நம்பிக்கையின்மையுடனும்  கிரடிட் கார்ட் மூலம் கொடுப்பனவுகளை செய்யாத பலர் எமது சமூகத்தில் அதிகமாக காணப்படுவது,  ERL முறையில் வாகன அனுமதிப் பத்திரம் பெறாமைக்கு ஒரு காரணமாகும். விசேடமாக முச்சக்கர வண்டி சாரதிமார், சிறியரக லொறி உரிமையாளர்கள் கிரடிட் கார்ட் மூலம் கொடுப்பனவுகளை செய்வதில்லை. அவர்கள் மின் அஞ்சலை பயன்படுத்துவதும் இல்லை. மற்றையது ERL அனுமதிப் பத்திரம் பெற வீட்டிலுள்ள கணனி அவசியமாகும். அநேகமானோர் கைதொலைபேசி மூலமே ஒன்லைனை பயன்படுத்துகிறார்கள். இதுவும் ERL முறையில் வாகன அனுமதிப் பத்திரத்தை பெறாமைக்கு காரணமாக அமைகின்றது.  

நாற்பது வருடங்களாக ERL முறைபற்றி ஆராய்ந்த மோட்டார் வாகன அனுமதிப் பத்திரம் வழங்கும் திணைக்களம் அதில் மேற்கொள்ள வேண்டிய விடயங்களை அறிந்து கொண்டுள்ளது. அதன்படி 2020ல் மேலும் மேம்படுத்தப்பட்ட முறைகளை அறிமுகம் செய்யவுள்ளது. புதிய முறையில் மென்பொருளுடாக காப்புறுதிப் பத்திரம், புகைச் சான்றிதழ் போன்ற அவ்வாகனம் பற்றிய அனைத்து தகவல்களும் பெற்று கொடுக்கப்படும். அதேபோல் செயலி (அப்) ஒன்றையும் அறிமுகம் செய்யவுள்ளோம். அதனை தரவிறக்கம் செய்வதன் மூலம் வாகன வருமான அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம் என வாகன உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியையும் உதய கஸ்தூரிரத்ன தெரிவித்தார்.  

ERL முறை மூலம் வாகன அனுமதிப்  பத்திரத்தை பெற்றபின் தற்காலிக பிரதியொன்றை தம்வசம் வைத்திருக்காத ஒருவரை பொலிஸார் பரிசோதிக்கும் சந்தர்ப்பங்களில் 1919க்கு குறுஞ் செய்தியொன்றை அனுப்புவதன் மூலம் வாகன அனுமதிப் பத்திரம் பெற்றதற்கான  உறுதியை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு உறுதிசெய்வதற்கான குறுஞ்செய்தியை பொலிஸ் அதிகாரி ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனை ஏற்றுகொள்வது குறித்து பொலிஸ் அதிகாரியும் அறிவுறுத்தப்பட்டிருக்க வேண்டும் இல்லையென்றால் சிரமத்திற்குள்ளாவது வாகன உரிமையாளரே யாவார்.  

எமது நாட்டில் இன்னும் பிரதேச செயலாளர் காரியாலயங்களுக்கு சென்று அனுமதிப் பத்திரம் புதுப்பிக்கும் முறையையே பின்பற்றுகின்றார்கள். ஆனால் தற்போது எம்மால் அவர்களை அலையவிடாமல் சில நிமிடங்களில் அவர்களின் தேவையை நிறைவேற்ற முடியும். ஏனென்றால் வாகனங்கள் பற்றிய தகவல்கள் கணனி மயப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு வலையமைப்பாக செயல்படுவதால் 2020 தொடக்கம் கொழும்பு வாகன உரிமையாளருக்கு திருகோணமலையில் கூட வாகன அனுமதிப்  பத்திரத்தை பெற்று கொள்ளலாம்  எனத் தொடர்ந்து அவர் கூறினார்.  

புதிய யுகத்தின் ஆரம்பத்துடன் டிஜிட்டல் மயத்திற்கு நுழைவது தேசிய கொள்கையாக உள்ள இவ்வேளையில் வாகன அனுமதிப் பத்திரத்தை வீட்டிலிருந்தே பெற்று கொள்ளக் கூடியதாக இருப்பது மிகவும் பிரயோசனமானதாகும். ஆனால் அதனை சமூகமயப்படுத்துவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.  

ஹர்ஷா சுகததாச தமிழில் ஆர் வயலட்  

Comments