123 ஆண்டுகளுக்கு முன் யாழ். இந்துக்கல்லூரியில் சுவாமி விவேகானந்தர் | தினகரன் வாரமஞ்சரி

123 ஆண்டுகளுக்கு முன் யாழ். இந்துக்கல்லூரியில் சுவாமி விவேகானந்தர்

விஷயமோ மிகவும்‌ பெரியது, நேரம்‌ மிகக்‌ குறைவாகவே உள்ளது. ஒரு சொற்பொழிவில்‌ இந்துக்களின்‌ மதத்தைப்‌ பற்றிய ஒரு முழுமையான ஆராய்ச்சியை நடத்துவது சாத்தியமல்ல. எனவே நமது மதத்தின்‌ முக்கிய கருத்துக்களை என்னால்‌ இயன்ற அளவு எளிய மொழியில்‌ உங்கள்‌ முன்‌ வைக்கிறேன்‌. 

நம்மை நாம்‌ இப்போது நாகரீகமாக அழைத்துக்‌ கொள்கின்ற “ஹிந்து” என்ற வார்த்தை, அதன்‌ முழுப்பொருளையும்‌ இழந்துவிட்டது. ஏனெனில்‌ இந்த வார்த்தை சிந்துநதிக்கு மறுபக்கத்தில்‌ வாழ்ந்தவர்களைக்‌ குறிப்பிடுகிறது. அவ்வளவுதான்‌. 

சிந்து என்ற சொல்‌ பழங்காலப்‌ பாரசீகர்களால்‌ சிதைக்கப்பட்டு ஹிந்து ஆயிற்று ; சிந்துநதிக்கு மறுபுறம்‌ வாழ்ந்த அனைவரையும்‌ அவர்கள்‌ ஹிந்து என்றே அழைத்தார்கள்‌. இவ்வாறு தான் இந்தச்‌ சொல்‌ நம்மிடம்‌ வந்தது. முகமதியர்களின்‌ ஆட்சிக்‌ காலத்தில்‌ நாமும்‌ இந்தப்‌ பெயரை ஏற்றுக்‌ கொண்டோம்‌. இந்த வார்த்தையைப்‌ பயன்படுத்துவதால்‌ எந்தத்‌ தீமையும்‌ இல்லை. ஆனால்‌ நான்‌ முன்பே சொன்னதுபோல்‌, அது தன்‌ பொருளை இழந்துவிட்டது. தற்காலத்தில்‌ சிந்து நதிக்கு இந்தப்‌ பக்கத்தில்‌ வாழ்கின்ற எல்லா மக்களும்‌ பழங்காலத்தைப்போல்‌ ஒரே மதத்தைப்‌ பின்பற்றவில்லை. 

எனவே இந்தச்‌ சொல்‌ தற்போது இந்துக்களை மட்டுமின்றி முகமதியர்கள்‌, கிறிஸ்தவர்கள்‌, சமணர்கள்‌ என்று இந்தியாவில்‌ வாழ்கின்ற அனைவரையும்‌ குறிக்கிறது. அதனால்‌ இங்கு இந்து என்ற சொல்லை நான்‌ பயன்படுத்தப்‌ போவதில்லை. அப்படியானால்‌ எந்த வார்த்தையை உபயோகிப்பது? நாம்‌ பயன்படுத்தத்தக்க வார்த்தைகள்‌ இரண்டே: வைதீகர்கள்‌ - வேதத்தைப் பின்பற்றுபவர்கள்‌; அல்லது இதைவிடச்‌ சிறப்பாக, வேதாந்திகள்‌- வேதாந்தத்தைப்‌ பின்பற்றுபவர்கள்‌. 

உலகின்‌ சிறந்த மதங்களுள்‌ பெரும்‌ பாலானவை சில குறிப்பிட்ட நூல்களை ஆதாரமாகக்‌ கொண்டுள்ளன; அவற்றுள்‌ கூறப்பட்டுள்ளதை இறைவனின்‌ வார்த்தைகள்‌ என்றோ, இயற்கையைக்‌ கடந்த சில தேவதைகளின்‌ வாக்குகள்‌ என்றோ அவர்கள்‌ நம்புகிறார்கள்‌. அவையே அவர்களது மதத்தின்‌  அடிப்படையாக உள்ளன. இன்றைய மேலை நாட்டு அறிஞர்களின்‌ கருத்துப்படி, இந்த நூல்களுள்‌ பழமையானது இந்துக்களின்‌ வேதங்களே. எனவே வேதத்தைப்பற்றிச்‌ சிறிது அறிந்து கொள்வது அவசியமாகும்‌. 

வேதங்கள்‌ என்ற பெயரால்‌ அழைக்கப்படுகின்ற நூற்களஞ்கியங்கள்‌ மனிதர்கள்‌ சொன்னவை அல்ல. அவற்றின்‌ காலமும்‌ நிர்ணயிக்கப்படவில்லை; நிர்ணயிக்கப்படவும்‌ முடியாது. நம்‌ கருத்துப்படி, வேதங்கள்‌ என்றுமே உள்ளவை. ஒரு முக்கிய விஷயத்தை நான்‌ உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்‌. மற்ற மதங்கள்‌ தங்கள்‌ தோற்றத்திற்கு ஒரு தெய்வத்தையோ, பல மனிதர்களையோ, தேவதைகளையோ, இறைவனின்‌ விசேஷ தூதர்களையோ காரணமாகக்காட்டி, குறிப்பிட்ட சிலர்‌ மூலமாக அவர்கள்‌ அந்த மதத்தை வெளிப்படுத்தியதாகக்‌ கூறுகின்றன. 

இவ்வாறு தங்கள்‌ அத்தாட்சியை நிலைநாட்டுகின்றன. ஆனால்‌ இந்துக்களோ வேதங்களுக்கு அப்படியோர்‌ அத்தாட்சியைக்‌ கூறவில்லை. என்றென்றும்‌ நிலையான இறைஞானத்தை அவை  கூறுவதால்‌ அவையும்‌ அழிவற்றவை, அதனால்‌ வேதங்களுக்கு வேதங்களே அத்தாட்சி என்று இந்துக்கள்‌ கூறுகிறார்கள்‌. அவை எந்தக்‌ காலத்திலும்‌ எழுதப்படவில்லை, எந்தக்‌ காலத்திலும்‌ உருவாக்கப்படவில்லை. காலங்காலமாக அவை இருக்கின்றன. 

எவ்வாறு படைப்பும் தோற்றமும்‌ முடிவும்‌ இல்லாமல்‌ எல்லையற்றதாகவும்‌ நிரந்தரமானதாகவும்‌ இருக்கிறதோ, அவ்வாறே இறையறிவும்‌ தோற்றமும்‌ முடிவும்‌ இல்லாமல்‌ என்றும்‌ இருக்கிறது. இந்த  அறிவுதான்‌ வேதங்கள்‌ (வித்‌-அறிதல்‌) என்று அழைக்கப்படுகிறது. 

வேதாந்தம்‌ என்ற பெயரால்‌ அழைக்கப்படுவதான அறிவுக்‌ களஞ்சியம்‌, ரிஷிகளால்‌ கண்டுபிடிக்கப்பட்டவை. ரிஷி என்றால்‌ “மந்த்ர த்ரஷ்டா' அதாவது மந்திரத்தை, ஒரு சிந்தனையை நேரே கண்டவர்‌ என்று கூறப்படுகிறது. அவர்கள்‌ அந்தச்‌ சிந்தனையைக்‌ கண்டவர்களே தவிர, அந்தச்‌ சிந்தனைகள்‌ அவர்களுடையவை அல்ல. வேதத்தின்‌ இன்ன பகுதி இன்ன ரிஷியிடமிருந்து வெளிவந்தது என்றால்‌ அந்தப்‌ பகுதியை அவர்‌ எழுதினார்‌. என்றோ, அவர்‌ தம்‌ மனத்திலிருந்து அதனை உருவாக்கினார்‌ என்றோ நினைத்துக்‌ கொள்ளாதீர்கள்‌. எற்கனவே இருந்த சிந்தனையை அவர்‌ கண்டார்‌, அவ்வளவுதான்‌. அது பிரபஞ்சத்தில்‌ எப்போதும்‌ இருக்கிறது. ரிஷி அதனைக்‌ கண்டுபிடித்தவர்‌. 

வேதங்கள்‌ முக்கியமாகக்‌ கர்மகாண்டம்‌, ஞான காண்டம்‌-  செயல்‌ பகுதி; ஆன்மீகப்‌ பகுதி-என்று இரண்டு பகுதிகளாகப்‌ பிரிக்கப்பட்டுள்ளன. கர்மகாண்டம்‌ பல்வேறு யாகங்களைப்‌ பற்றிக்‌ கூறுகிறது. தற்போதைய சூழ்நிலையில்‌ செய்யப்பட முடியாதவை என்று அவற்றுள்‌ பலவும்‌ கைவிடப்பட்டுவிட்டன. எஞ்சியவை ஏதோ ஒரு விதத்தில்‌ இன்றுவரை இருக்கவே செய்கின்றன. சாதாரண மனிதன்‌, மாணவன்‌, இல்லறத்தான்‌, துறவி என்று வாழ்வின்‌ பல்வேறு நிலைகளில்‌ உள்ளவர்களுக்கான கடமைகள்‌ கர்மகாண்டத்தின்‌ முக்கியக்கருத்துக்கள்‌ ஆகும்‌. இவை இன்றும்‌ ஒரளவிற்கு வழக்கத்தில்‌ உள்ளன. 

நமது மதத்தின்‌ ஆன்மீகப்‌ பகுதி இரண்டாம்‌ பகுதியான ஞான காண்டத்தில்‌ உள்ளது. இதுவே வேதாந்தம்‌, வேதங்களின்‌ நிறைவு, வேதங்களின்‌ சாரம்‌, அதன்‌ லட்சியம்‌. வேதங்களின்‌ சாரமான கருத்து வேதாந்தம்‌ எனப்படுகிறது. இந்தப்‌ பகுதியில்தான்‌ உபநிடதங்கள்‌ உள்ளன. துவைதம்‌, அத்வைதம்‌, விசிஷ்டாத்வைதம்‌, சைவம்‌, வைணவம்‌, சாக்தம்‌, செளரம்‌, காணபத்யம்‌ என்று இந்தியாவிலுள்ள மதப்‌ பிரிவுகள்‌ எதுவாயினும்‌, இந்து மதத்தின்‌ ஒரு பிரிவாகத்‌ தன்னைக்‌ கூறத்‌ துணிவுள்ள எந்த நெறியாயினும்‌ அவை வேதங்களின்‌ இந்த உபநிடதங்களை ஏற்றுக்கொண்டாக வேண்டும்‌. அவை அவற்றைத்‌ தங்களுக்கு ஏற்றவாறு பொருள்‌ கொள்ளலாம்‌. ஆனால்‌ உபநிடதங்களை ஏற்றுக்கொண்டே தீர வேண்டும்‌. அதனால்‌ தான்‌ நாம்‌ இந்து என்பதற்குப்‌ பதிலாக வேதாந்தி என்ற சொல்லைப்‌ பயன்படுத்த விரும்புகிறோம்‌. இந்தியாவின்‌ வைதீகத்‌ தத்துவ அறிஞர்கள்‌ அனைவரும்‌ வேதாந்தத்தை ஏற்கத்தான்‌ வேண்டும்‌. தற்கால மதங்களை எடுத்துக்‌ கொள்ளுங்கள்‌. அவற்றுள்‌ சில வளர்ச்சி அடையாதவையாக இருக்கலாம்‌, சில பயனற்றவை போலவே தோன்றலாம்‌. ஆனால்‌ அவற்றை ஆழ்ந்து படிப்பவர்கள்‌, புரிந்து கொள்பவர்கள்‌, அவையும்‌ உபநிடதக்‌ கருத்துக்களையே ஆதாரமாகக்‌ கொண்டிருப்பதைக்‌ காணலாம்‌. 

இந்து மதத்தின்‌ கீழ்நிலைப்‌ பிரிவுகள்‌ எதாவது ஒன்றில்‌ காணப்படுகின்ற சின்னங்களை ஆராய்ந்து பாருங்கள்‌; அவற்றுள்‌ பலவும்‌ உபநிடதங்களில்‌ உருவகமாகக்‌ கூறப்பட்டிருப்பதைக்‌ கண்டு ஆச்சரியமடைவீர்கள்‌. இந்த உபநிடத உருவகங்களே காலப்போக்கில்‌ சின்னங்களாக மாறின. அந்த அளவிற்கு ஆழமாக உபநிடதங்கள்‌ நம்‌ இனத்தில்‌ ஊறிப்போயிருக்கின்றன. 

உபநிடதங்களில்‌ உள்ள உயர்ந்த ஆன்மீகச்‌ சிந்தனைகளும்‌ கருத்துக்களும்‌ பல்வேறு சின்னங்களின்‌ வடிவில்‌ இன்றும்‌ நம்‌ வீடுகளில்‌ வழிபடப்பட்டு நம்முடன்‌ இருக்கின்றன. இவ்வாறு நாம்‌. பயன்படுத்தி வருகின்ற சின்னங்கள்‌ எல்லாமே வேதாந்தத்திலிருந்து வந்தவைதாம்‌. வேதாந்தத்தில்‌ அவை உருவகங்களாகக்‌ கூறப்படுகின்றன. இவை நாடு முழுவதும்‌ பரவி இறுதியில்‌ சின்னங்களாக ஒவ்வொருவரின்‌ அன்றாட வாழ்க்கையோடு ஒன்றிவிட்டன.  

வேதாந்தத்திற்குப்‌ பிறகு ஸ்மிருதிகள்‌ வருகின்றன. இவையும்‌ மகான்களால்‌. எழுதப்பட்டவையே.

ஆனால்‌  அத்தாட்சியைப்‌ பொறுத்தவரை இவை வேதாந்தத்திற்கு அடுத்த படியில்‌ உள்ளவை. மற்ற மதங்களுக்கு அவற்றின்‌ சாஸ்திரங்கள்‌ போல்‌ நமது மதத்திற்கு உள்ளவை இவை. இந்த ஸ்மிருதிகள்‌ சில குறிப்பிட்ட ரிஷிகளால்‌ எழுதப்பட்டவை என்பதை நாம்‌ ஏற்றுக்‌ கொள்கிறோம்‌. இந்த நிலையில்‌ தான்‌ அவை பிற மத  சாஸ்திரங்களைப்‌ போன்றவை. ஸ்மிருதிகள்‌ இறுதி அத்தாட்சி அல்ல. ஸ்மிருதியில்‌ வேதாந்தத்திற்கு மாறாக ஏதாவது இருக்குமானால்‌ அதை ஒதுக்கிவிட வேண்டும்‌, அதன்‌ அத்தாட்சி போய்விட்டது. இந்த ஸ்மிருதிகள்‌ காலத்திற்குக்‌ காலம்‌ மாறிக்கொண்டே இருப்பதையும்‌ நாம்‌ காண்கிறோம்‌. சத்திய  யுகத்தில்‌ இன்ன ஸ்மிருதி அத்தாட்சி பெற்றது, திரேதாயுகத்தில்‌ இன்ன ஸ்மிருதி, அதுபோல்‌ துவாபர யுகத்தில்‌ சிலவும்‌, கலியுகத்தில்‌ சிலவும்‌ அத்தாட்சி பெற்றிருந்தன என்று நாம்‌ படிக்கிறோம்‌. 

ஸ்மிருதிகள்‌ முக்கியமாக மக்களின்‌ பழக்க வழக்கங்களை நெறிப்படுத்துபவை. காலத்திற்கேற்ப நாட்டின்‌ அடிப்படைச்‌ சூழல்கள்‌ மாறி, வேறு சூழல்களின்‌ ஆதிக்கம்‌ ஏற்படும்போது, மக்களின்‌ வாழ்க்கைமுறை மாறுவதற்கு ஏற்றாற்போல்‌ ஸ்மிருதிகளும்‌ மாறும்‌. இந்த விஷயத்தை நினைவில்‌ வைத்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்‌ கொள்கிறேன்‌. 

வேதாந்தக்‌ கோட்பாடுகள்‌ மாறாதவை. ஏன்‌? ஏனெனில்‌ அவை மனிதனிலும்‌ இயற்கையிலும்‌ உள்ள மாறாத உண்மைகளின்‌ அடிப்படையில்‌ எழுப்பப்பட்டுள்ளவை. அவை ஒருபோதும்‌ மாறாது. ஆன்மா பற்றிய உண்மைகள்‌ மற்றும்‌ சொர்க்கத்திற்குப்‌ போவது போன்ற கருத்துக்கள்‌ எப்போதுமே மாற முடியாது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன்‌ அவை இருந்தது போலவே இன்றும்‌ உள்ளன. லட்சக்கணக்கான ஆண்டுகளுக்குப்‌ பிறகும்‌ இப்படியேதான்‌ இருக்கும்‌. ஆனால்‌ சமுதாய நிலைகள்‌, பரஸ்பரத்‌ தொடர்பு ஆகியவற்றின்‌ அடிப்படையிலேயே முற்றிலும்‌ அமைவதான சமயப்‌ பழக்கவழக்கங்கள்‌ சமுதாயம்‌ மாறும்‌ போது மாறியே தீரும்‌. 

எனவே குறிப்பிட்ட ஒரு காலத்திற்குத்தான்‌ நல்லலையாகவும்‌ பொருத்தமானவையாகவும்‌ அவை இருக்கும்‌; மற்ற  காலங்களுக்கு ஏற்புடையவையாக இருக்காது. ஒரு குறிப்பிட்ட உணவு ஒரு காலத்தில்‌ உண்பதற்கு அனுமதிக்கப்பட்டது, அடுத்த காலகட்டத்தில்‌ அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில்‌ அந்தக்‌  காலத்தில்‌ அந்த உணவு பொருந்தவில்லை, கால நிலையும்‌ மற்றச்‌ சூழல்களும்‌ மாறியது, வேறு பல சூழல்களையும்‌ எதிர்கொள்ள நேர்ந்தது. எனவே பிற்கால ஸ்மிருதிகள்‌ உணவையும்‌ பிறவற்றையும்‌ மாற்றி விட்டன. இவ்வாறே காலத்திற்குக்‌ காலம்‌ மாறுதல்கள்‌ ஏற்பட்டன. இன்றைய நமது சமுதாயம்‌ ஏதாவது மாற்றங்களை விரும்பினால்‌ அவற்றையும்‌ செய்தாக வேண்டும்‌. மகான்கள்‌ தோன்றி அதனை எப்படிச்‌ செய்வது என்பதைக்‌ காட்டுவார்கள்‌. ஆனால்‌ நமது மதத்தின்‌ கோட்பாடுகள்‌ ஒர்துளிகூட மாறாது;  அவை அப்படியே இருக்கும்‌. 

பின்னர்‌ வருபவை புராணங்கள்‌. 'புராணம்‌ பஞ்ச லக்ஷணம்‌” -புராணங்களை ஐந்து அடையாளங்களால்‌ அறிந்துகொள்ளலாம்‌; அவை வரலாறு, பிரபஞ்ச இயல்‌, தத்துவக்‌ கருத்துக்களுக்கு பல்வேறு உருவ விளக்கம்‌ போன்றவை. வேதக்‌ கருத்துக்களைப்‌ பரப்புவதற்காக எழுதப்பட்டவை புராணங்கள்‌. வேதங்கள்‌ எழுதப்பட்ட மொழி மிகவும்‌ பழமையானது. அறிஞர்களுள்‌ கூட எதோ சிலரால்தான்‌ அந்த நூல்கள்‌ எழுதப்பட்ட காலத்தை அறிந்து கொள்ள முடியும்‌. 

புராணங்கள்‌ அக்கால மக்கள்‌ பேசிய மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. அந்த மொழியே இன்றைய நவீன சம்ஸ்கிருதம்‌. அவை அறிஞர்களுக்காக எழுதப்பட்டவை அல்ல, சாதாரண மக்களுக்காக எழுதப்பட்டவை. சாதாரண மக்களால்‌  தத்துவங்களைப்‌ புரிந்துகொள்ள முடியாது. அத்தகைய விஷயங்கள்‌ சுலபமாகப்‌ புரிந்து கொள்ளக்கூடிய வகையில்‌ மகான்கள்‌, அரசர்கள்‌ மற்றும்‌ பிரபலமானவர்களின்‌ வரலாறுகள்‌ மூலமாகவும்‌, அக்காலத்தில்‌ அந்த இனத்தில்‌ நடைபெற்ற வரலாற்று நிகழ்ச்சிகள்‌ முதலியவற்றின்‌ வாயிலாகவும்‌ புராணங்களில்‌ விளக்கப்படுகின்றன. 

இவற்றைப்‌ பயன்படுத்தி மக்களுக்கு நிலையான தத்துவங்களை மகான்கள்‌ புகட்டினார்கள்‌. இவற்றைத்‌ தவிர தந்திர நூல்கள்‌ உள்ளன. இவை சில விஷயங்களில்‌ புராணங்களைப்‌ போலவே உள்ளன. இவற்றுள்‌ சில கர்மகாண்டத்தில்‌ உள்ள யாகம்‌ பற்றிய பழைய கருத்துக்களைத்‌ திரும்பவும்‌ நடைமுறைக்குக்‌ கொண்டு வருவதற்கான முயற்சி காணப்படுகிறது. 

இந்த நூல்கள்‌ அனைத்தும்‌ சேர்ந்ததே இந்துக்களின்‌ சாஸ்திரங்கள்‌. இவ்வளவு அதிகமான புனித நூல்கள்‌ இருக்கின்ற ஒரு நாட்டில்‌, தன்‌ ஆற்றலின்‌ பெரும்‌ பகுதியை இத்தகைய தத்துவ நாட்டத்திலும்‌, ஆன்மிகச்‌ சிந்தனைகளிலும்‌ செலவிட்ட ஓர்‌ இனத்தில்‌ (எத்தனை ஆயிரம்‌ ஆண்டுகளாக என்பது யாருக்கும்‌ தெரியாது), அதிகமான இவ்வளவு மதப்‌ பிரிவுகள்‌ இருப்பது இயல்பானது. இன்னும்‌ ஆயிரக்கணக்கில்‌ இல்லாதது தான்‌  ஆச்சரியம்‌. அந்தப்‌ பிரிவுகள்‌ சில கோட்பாடுகளில்‌ முற்றிலும்‌ வேறுபடுகின்றன. அந்த வேறுபாடுகள்‌ எல்லாவற்றையுமோ அவற்றின்‌ ஆன்மீகக்‌ கோட்பாடுகள்‌ அனைத்தையுமே அறிந்து  கொள்ள நமக்கு நேரமில்லை. எனவே இந்தப்‌ பிரிவுகள்‌ அனைத்திற்கும்‌ அடிப்படையானதும்‌, ஒவ்வோர்‌ இந்துவும்‌ நம்பியே தீரவேண்டுவதுமான சில கருத்துக்களை நான்‌ பேச எடுத்துக்‌  கொள்கிறேன்‌. 

முதலாவது, படைப்பைப்‌ பற்றியது; அதாவது இயற்கை, பிரகிருதி, மாயை பற்றியது. மாயை எல்லையற்றது, தோற்றமில்லாதது. இன்ன நாள்‌ இந்த உலகம்‌ உருவாக்கப்பட்டது, ஒரு கடவுள்‌ வந்து இந்த உலகங்களைப்‌ படைத்தார்‌, அதன்பிறகு இன்றுவரை அவர்‌ தூங்கிக்‌ கொண்டிருக்கிறார்‌ என்பதில்லை; ஏனெனில்‌ அவ்வாறு  நடக்க முடியாது. படைப்பாற்றல்‌ இன்னும்‌ இயங்கிக்‌ கொண்டேதான்‌ இருக்கிறது. கடவுள்‌ எப்போதும்‌ படைத்துக்‌ கொண்டே இருக்கிறார்‌, ஒருபோதும்‌ ஒய்வு கொள்வதில்லை. நான்‌ ஒரு கணம்‌ ஒய்வெடுத்தாலும்‌ இந்தப்‌ பிரபஞ்சம்‌ அழிந்துவிடும்‌' என்று கீதையில்‌ ஸ்ரீகிருஷ்ணர்‌ சொல்வதை நினைவு கூருங்கள்‌. நம்மைச்‌ சுற்றி இரவும்‌ பகலும்‌ இயங்கிக்‌ கொண்டே இருக்கின்ற அந்தப்‌ படைப்பாற்றல்‌ ஒரு வினாடி நின்று போனாலும்‌ எல்லாம்‌ தரைமட்டமாகிவிடும்‌. பிரபஞ்சம்‌ முழுவதும்‌ அந்தச்‌ சக்தி இயங்காத நேரமே கிடையாது. 

ஆனால்‌ பிரளயம்‌ அல்லது சுழற்சி நியதி (Law of Cycles) என்பது உள்ளது. படைப்பிற்கான சமஸ்கிருதச்‌ சொல்லைச்‌ சரியாக மொழிபெயர்த்தால்‌ அது வெளிப்பாடு (Projection) என்று பொருள்படுமே தவிர படைப்பு (Creation) என்று பொருள்‌ தராது. 

ஏனென்றால்‌, ஆங்கில மொழியில்‌, படைத்தல்‌ என்ற சொல்‌ சூன்யத்திலிருந்து ஏதோ ஒன்று தோன்றுதல்‌, ஒன்றுமில்லாததிலிருந்து படைப்பு, இல்லாத ஒன்று இருப்பதாக மாறுதல்‌ என்றெல்லாம்‌, துரதிர்ஷ்டவசமாக, மிகவும்‌ வேதனை தருகின்ற, முதிர்ச்சியற்ற பொருள்களைத்‌ தருகிறது. 

இந்தக்‌ கருத்தை நம்பும்படிக்‌ கூறி உங்களை நான்‌ இழிவுபடுத்த மாட்டேன்‌. இதற்கு நமது சொல்‌ 'வெளிப்பாடு' என்பதாகும். இந்த இயற்கை மொத்தமும்‌ இருக்கிறது; பிறகு நுட்பமாகிறது, மறைகிறது. ஒரு குறிப்பிட்ட கால ஒய்விற்குப்‌ பின்னர்‌, வெளிப்படுவதுபோல்‌ மீண்டும்‌ எல்லா பொருட்களும்‌ தோன்றுகின்றன; அதே சேர்க்கை, அதே பரிணாமம்‌, அதே வெளிப்பாடுகள்‌ தோன்றுகின்றன. ஒரு குறிப்பிட்ட காலம்‌ விளையாடல்‌ நடைபெறுவது போல்‌. தோன்றகிறது. பின்னர்‌, சேர்ந்த அனைத்தும்‌ மீண்டும்‌ சிதறி, நுட்பமாகி, மேலும்‌ நுட்பமாக மாறி எல்லாம்‌ மறைந்து விடுகிறது. மறுபடியும்‌ வெளிவருகிறது. 

இவ்வாறு ஒர்‌ அலையைப்போல்‌ முன்னால்‌ வருவதும்‌ பின்னால்‌ போவதுமாக காலங்காலமாக இந்த இயக்கம்‌ நடைபெற்றுக்‌ கொண்டேயிருக்கும்‌. காலம்‌, இடம்‌, காரணம்‌ எல்லாம்‌ இந்த இயற்கைக்குள்தான்‌ உள்ளன. எனவே இந்தப்‌ பிரபஞ்சம்‌ ஒரு காலத்தில்‌- படைக்கப்பட்டது என்று சொல்வது சுத்த முட்டாள்தனம்‌. அதன்‌ தோற்றத்தைப்‌ பற்றியோ முடிவைப்‌ பற்றியோ எந்தக்‌ கேள்வியும்‌ எழ முடியாது. எனவே நம்‌ சாஸ்திரங்களில்‌ எங்கெல்லாம்‌ பிரபஞ்சத்தின்‌ தோற்றம்‌ மற்றும்‌ முடிவு என்று வருகிறதோ அதனை ஒரு சுழற்சியின்‌ தோற்றம்‌ மற்றும்‌ முடிவு என்று கொள்ள வேண்டும்‌. இதுவே அதன்‌ பொருள்‌,வேறெதுவும்‌ அல்ல. 

எது இதனைப்‌ படைத்தது? கடவுள்‌. GOD என்னும்‌ இந்த ஆங்கிலச்‌ சொல்‌ மூலம்‌ நான்‌ எதைக்‌ குறிப்பிடுகிறேன்‌? சாதாரணமாக அந்த வார்த்தை ஆங்கில மொழியில்‌ கூறப்படும்‌  பொருளில்‌ அல்ல. நான்‌ கொள்ளும்‌ பொருளுக்கும்‌ அதற்கும்‌ மிகுந்த வித்தியாசம்‌ உள்ளது. அதனைக்‌ குறிப்பதற்குப்‌ பொருத்தமான வேறு ஆங்கிலச்‌ சொல்‌ எதுவும்‌ இல்லை. எனவே “பிரம்மம்‌” என்ற 

சம்ஸ்கிருதச்‌ சொல்லையே பயன்படுத்துகிறேன்‌. அவர்‌ இந்த எல்லா வெளிப்பாடுகளுக்கும்‌ பொதுக்‌ காரணமாக இருக்கிறார்‌. 

இந்த பிரம்மம்‌ என்பது என்ன? அவர்‌ என்றும்‌ இருப்பவர்‌, என்றும்‌ தூய்மையானவர்‌, என்றும்‌ விழிப்போடு இருப்பவர்‌, எல்லா ஆற்றலும்‌ கொண்டவர்‌, எல்லாம்‌ அறிந்தவர்‌, கருணைமயமானவர்‌, எங்கும்‌ நிறைந்தவர்‌, உருவமற்றவர்‌. பிரிவு இல்லாதவர்‌. அவர்‌ இந்தப்‌ பிரபஞ்சத்தைப்‌ படைக்கிறார்‌. அவர்‌ எப்போதும்‌ படைத்துக்‌  கொண்டும்‌ காத்துக்‌ கொண்டும்‌ இருப்பதாகச்‌ சொன்னால்‌ இரண்டு சங்கடங்கள்‌ எழுகின்றன. நாம்‌ இந்தப்‌ பிரபஞ்சத்தில்‌ ஏற்றத்தாழ்வுகளைப்‌ பார்க்கிறோம்‌. ஒரு மனிதன்‌ பிறந்ததிலிருந்தே மகிழ்ச்சியாக இருக்கிறான்‌, மற்றொருவன்‌ துயருறுகிறான்‌; ஒருவன்‌ பணக்காரனாக இருக்கிறான்‌, மற்றொருவன்‌ ஏழையாக இருக்கிறான்‌. இது ஒரவஞ்சனையையே காட்டுகிறது. அதோடு, படைப்பில்‌ கொடூரம்‌ இருக்கிறது; வாழ்க்கையின்‌ நியதியே மரணமாக அல்லவா உள்ளது! ஒரு மிருகம்‌ மற்றொரு மிருகத்தை நார்நாராகக்‌ கிழிக்கிறது. ஒவ்வொருவனும்‌ தன்‌ சொந்த சகோதரனிடமிருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு பறித்துக்கொள்ள முயல்கிறான்‌. 

இந்தப்‌ போட்டி, கொடூரம்‌, பயங்கரம்‌, ஏக்கப்‌ பெருமூச்சுகள்‌ எல்லாம்‌ இரவும்‌ பகலும்‌ இதயங்களைக்‌ கிழித்துக்‌ கொண்டே இருக்கின்றன. இதுதான்‌ நமது உலகத்தின்‌ நிலைமை. இது கடவுளின்‌ படைப்பு என்றால்‌, அந்தக்‌ கடவுள்‌ கொடூரத்தைவிட மோசமானவர்‌; மனிதனால்‌ கற்பனை செய்ய முடிவதைவிட மிகவும்‌ பயங்கரமான பிசாசு அவர்‌.

நன்றி கிருஷ்காந்தன் 

 

Comments