வரலாறு திரும்புகின்றதா? கொரோனா ஒன்றும் கொள்ளை நோயல்ல | தினகரன் வாரமஞ்சரி

வரலாறு திரும்புகின்றதா? கொரோனா ஒன்றும் கொள்ளை நோயல்ல

சீனர்களைக் கண்டாலே எம்மில் பலருக்கு ஆகாது. தலைநகரில் அதிகளவில் திரியும் சீனர்கள் மீது ஒருவித ஒவ்வாமையைக் கொண்டிருக்கும் எமது சீன வெறுப்புக்கு மேலும் தூபம் போட்டிருக்கின்றது கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்.  

சீனாவின் ஹுபேய் மாகாணத்தின் தலைநகரான வுஹானில் கொரோனா எனும் வைரஸ் தொற்று கட்டின்றிப் பரவுவதாக சீனா கடந்த மாத இறுதியில் அறிவித்தது. கொரோனா  வைரஸ் வுஹானையும் தாண்டி வுபேயின் பல பகுதிகளையும் தற்போது தாக்கியுள்ளது. தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை ஒரே நாளில் 2000ஆல் அதிகரிக்க மொத்த எண்ணிக்கை 11000ஐத் தாண்டிள்ளது. தொற்றினால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250 ஐயும் தாண்டிள்ளது.  

கொரோனா பறவைகளை தாக்கும் வைரஸ் என்றும், வைரஸ் தொற்றுக்கு உள்ளான வெளவால்களைத் தின்ற பாம்புகளாலேயே மனிதருக்குப் பரவியிருக்கலாம் எனவும் ஆரம்பத்தில் ஊகங்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து சிலரால் புனிதமான விலங்காகவும் வேறு சிலரால் சாத்தானாகவும் கருதப்படும் பாம்பை உண்ணும் பழக்கம் கொண்ட சீனர்கள் கொரோனா வைரசின் தாக்கத்துக்குள்ளாகி நீலம் பாரித்து கொத்துக் கொத்தாகச் செத்து மடிவதாகவும் கூட சமூகதளமெங்கிலும் செய்திகள் பரப்பப் பட்டன. அது மாத்திரமல்ல பாம்பு, பூரான், தவளை என்று எல்லாவற்றைம் துடிதுடிக்க சீனர்கள் ரசித்து சாப்பிடுவதாகவும் வீடியோக்கள் வேறு யூடியூப், பேஸ்புக், வட்ஸப் என எல்லாவற்றிலும் பகிரப்பட்டு, பொதுவாகவே எங்கள் மத்தியில் உள்ள சீன வெறுப்புக்கு மேலும் தூபமிட்டன. 

கொரோனா வைரஸ் சீன வைரசு ஆராய்ச்சியாளர்களால் திட்டமிடப்பட்ட வகையில் பரப்பப்பட்ட “உயிரியல் ஆயுதம்” என்பதாகவும் கூட இஸ்ரேலிய உளவுத்துறைத் தலைவரை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் இவையெல்லாம் வெறுமனே வதந்திகள் தான் என்று பீ.பீ.ஸீ செய்தி வெளியிட்டிருக்கின்றது.  

சீனாவின் உணவகங்கள் மற்றும் சீன உற்பத்திகள் புற்றுநோயை ஏற்படுத் தன்மை கொண்டவையாக மேல்குலக ஊடகங்களால் பரப்பப்படும் விசமத்தனமான பிரசாரங்களுக்கு முழு உலகுமே நம்பியதைப் போன்றே இன்று கொரோனா வைரஸ் பற்றிப் பரப்பப்படும் வதந்திகளை நம்பி முழ உலகுமே  உறைந்துபோயுள்ளது.  

அதற்காக கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.  

கொரோனா வைரஸ் விரைவாகப் பரவும் அபாயம் இருப்பதால்தான் உலகம் முழுவதும் மருத்துவ அவசரகால நிலைமையை உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.  

சீனாவில் மாத்திரமல்ல, ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் வைரஸ் நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதேநேரம் சீனாவுக்குள் அமெரிக்கர்கள் நுழைவதை இடைநிறுத்தும் பிரகடனத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டிருக்கின்றார்.  

சீனாவின் வுஹானில் இயங்கும் சட்டவிரோத விலங்கு இறைச்சி மற்றும் கடலுணவு சந்தையொன்றிலேயே கடந்த வருட இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கின்றது.  

தொற்று பரவ ஆரம்பித்த சில நாட்களிலேயே தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தாண்டியதால் வுஹான் தற்போது முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. வைரஸ் தாக்கத்தால் சீனாவில்தான் தொற்றுக்குள்ளானவர்களில் சில நூற்றுக் கணக்கானவர்கள் இறந்திருக்கின்றார்கள். ஆனால் சீனாவுக்கு வெளியே உயிரிப்புகள் ஏதும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. காரணம் இவ்வாறான தொற்றுக்களால் உயிரிழிப்புகள் ஏற்படுமளவுக்கு அமெரிக்காவினதோ சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டிருக்கும்ே நாடுகளினதோ மருத்துவத்துறை நலிந்த நிலையில் இல்லையென்பதுதான். அதுமாத்திரமல்ல இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டவருக்குத் தோன்றும் அறிகுறிகள் சாதாரணமாக ஃபுளு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருடையதைப் போன்றே, காய்ச்சல், இருமல், வாந்தி, வயிறோட்டம் சுவாசிப்பதில் சிரமம் என்பதாகவே இருக்கும். அதனாலேயே இவ்வறிகுறிகள் தென்பட்டாலும் பலர் அதனைச் சட்டை செய்வதில்லை.  

2019-nCoV எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரசின் தாக்கத்தால் சீனாவில் உயிரிழந்தவர்களில் அனேகர் 65 வயதுக்கும் மேற்பட்டவர்கள். அதாவது நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள். வுஹானில் போதிய மருத்துவ வசதிகள் இன்மையும் அங்குள்ளவர்கள் அனேகமாக பொதுப்போக்குவரத்துக்களில் நீண்டநேரம் பயணிப்பவர்களாக இருப்பதும், சனநெருக்கம் மிக்க நகராக வுஹான் இருப்பதும், அங்கு வேகமாக தொற்று பரவுவதற்கும் உயிரிழப்புகள் அதிகரிப்பதற்கும் காரணமாக அமைந்திருக்கின்றது.  

 வைரசுத் தாக்கமென்பது உலகுக்கு ஒன்றும் புதியதல்ல. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் 1920களில் ஸ்பானிய வைரஸ் தாக்கத்தால் பல லட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கின்றார்கள் அதனாலேயே பல ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு நூறு வருடங்களின் பின்னரும் வரலாறு மீளத் திரும்புகின்றதா எனக் கெள்வி எழுப்பியுள்ளனர்.  

மக்களைக் கொல்லும் ஆற்றல் கொண்ட வைரசுக்கள் உலகின் ஏதோவொரு மூலையில் தினமும் உருவாகிக் கொண்டே உள்ளனவாம். கண்ணுக்குத் தெரியாத இந்த நுண்ணுயிர்கள் லட்சக் கணக்கில் உயிர்களைக் காவுகொண்டிருக்கின்றன. எங்கள் கலங்களுக்குள் புகுந்து பல்கிப்பெருகி மரணத்தை உண்டுபண்ணுகின்றன. உலகில் பல லட்சம் உயிர்களைக் காவு கொண்ட வைரசுக்களின் தாக்கத்தில் இருந்து தொற்று நீக்கிகளைக் கொண்டு கைகளைக் கழுவுவதன் மூலம் மூலம் தப்பித்திருக்க முடியாது.  

1720ஆம் ஆண்டு தொடங்கி சரியாக 100 ஆண்டுகள் இடைவெளியில் பல்வேறு வைரஸ் தொற்றுக்கள் உலகை உலுக்கியுள்ளன. 

1720ஆம் ஆண்டு பரவிய பிளேக் என்ற எலிக்காய்ச்சலால் ஐரோப்பாவில் பல மில்லியன் மக்கள் கொத்துக்கொத்தாக மடிந்தனர். 1820ஆம் ஆண்டு பரவிய கொலரா நோய் தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்தோனேசியாவிலுள்ள ஜாவா என்ற தீவில் மட்டும் இந்த கொலராவால் ஒரு லட்சம் பேர் உயிரிழந்தனர். 

1918 முதல் 1920ஆம் ஆண்டு வரை பரவிய இன்ஃப்ளுவென்ஸா மற்றும் பன்றிக் காய்ச்சல் என்று அழைக்கப்படும் H1N1 ஆகிய நோய்களால் உலகம் முழுவதும் 50 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். ஸ்பானிஷ் ஃப்ளு என்று அழைக்கப்படும் இந்த நோயால் சுமார் 10 கோடி பேர் உயிரிழந்துள்ளனர். உலகில் இதுவரை ஏற்பட்ட  வைரஸ் நோய்களில் மிகவும் மோசமானது என்று இது கருதப்படுகிறது. உலகில் மிக மோசமான உயிர்க் கொல்லியாக பெரியம்மை விளங்கியது. கோடிக்கணக்கானோர் செத்து மடிந்தனர். அது எவ்வளவு கொடூரமானது என்பதற்கு, இரண்டு உதாரணங்கள் சொல்லாம். முதலாவதாக அதற்கு நாம் இட்ட ‘அம்மா’ என்ற பெயர். நோயை எவ்வாறு தணிப்பது என்று தெரியாமல் அன்பான அம்மாவின் பெயரை அம்மை என்று அந்த நோய்க்கு வைத்ததோடு, அம்மா பார்த்திருக்கு என்றே மரியாதையாகச் சொல்வார்கள். சிங்களத்தில் இதனை ‘தெய்யங்கே லெடே’(கடவுளின் நோய்) என்று அழைத்தார்கள். மாரியம்மனுக்கு முத்தைக் கொடுத்தது பெரியம்மை கொப்புளங்கள்தான். முத்து மாரியம்மன் என்ற பெயர் வரக் காரணம், நோயாளர்களின் கொப்புளங்களை முத்துமாரியம்மன் ஏற்றுக்கொண்டு, சுகம் தர வேண்டும். என்ற எதிர்பார்ப்புத்தான்.  

இவற்றைப்போலவே, எபோலா, ஜிகா, எச்.ஐ. வி என்பவும் அதிகளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்திய வைரசுக்கள். 

கொரோனா வைரஸால் ஏற்படும் இந்தத் தொற்றுக் குறித்து மக்கள் பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை. வைரஸ்களும் இந்த உலகின் ஒரு பகுதிதான என்கின்றனர் விஞ்ஞானிகள். எனவே அதற்கெதிரான எதிர்ப்பு சக்தி எமது உடலில் தோன்ற ஆரம்பித்துமே அதன் தாக்கமும் குறைய ஆரம்பித்து விடும்.  

வைரசுக்களுக்கென பிரத்தியேக சிகிச்சைகள் எதுவும் கிடையாது. அறிகுறிகளுக்கான சிகிச்சைகள் மட்டுமே உள்ளன. இந்த வைரஸுக்கென்று தடுப்பூசிகளும் கண்டறியப்படவில்லை.  

ஆனால் மனிதரில் இருந்து மனிதருக்கு மிக விரைவாகத் தொற்றக்கூடியவை என்பதால் தொற்று ஏற்படக்கூடிய நபர்கள், இடங்கள் என்பனவற்றைத் தவிர்ப்பதே சிறந்ததென்கின்றார்கள் மருத்துவர்கள். அவ்வாறான இடங்களில் மாத்திரமே முகக் கவசம் அணிந்தால் போதுமானது என்பதுவும் அவர்களது அறிவுரை.  

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பீதியால் இலங்கையில் அனேகர் முகக் கவசம் வாங்க முண்டியடிக்க., சாதாரணமாக பத்து, பதுனைந்து  ரூபாவுக்கு விற்கப்பட்ட முகக் கவசம் 500 ரூபாவரை விற்கப்பட்டதை எத்தனை பேர் அறிந்திருப்பார்கள்! உலக சுகாதார ஸ்தாபனம் தொற்று ஏற்படுவதைத் தடுக்க கூறும் அறிவுரை, தும்மும்போதோ, இருமும்போதோ வாயையும், மூக்கையும் மூடிக்கொள்ளுங்கள், இறைச்சி மற்றும் முட்டை போன்ற உணவு வகைகளை நன்கு சமைத்த பின்னர் உண்ணுங்கள் என்பதுதான்.  

இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் உள்ளவர்களுக்கு மூக்கையும் வாயையும் மூடித் தும்முவது, கண்டகண்ட இடங்களில் எல்லாம் எச்சில் துப்புவதைத் தவிர்ப்பது என்பதெல்லாம் பின்பற்றக் கடினமான பழக்கவழக்கங்களே.  

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் கட்டுப்படுத்துவது கடினமானதாக இருக்குமோ என்றுதான் எண்ணத்தோன்றுகின்றது. 

பேய் நகரமாகிய வுஹான்: பணத்தை வாரி வழங்கும் உலக கோடீஸ்வரர்கள் 

கொரோனா வைரஸால் சீனாவில் இருக்கும் மக்கள் அடுத்தடுத்து இறந்து கொண்டிருக்கும் நிலையில், அதை கட்டுப்படுத்தும் விதமாக உலகின் பணக்காரர்கள் அந்நாட்டிற்கு உதவ முன்வந்துள்ளனர். 

சீனாவின் வுஹான் நகரம் தற்போது ஒரு அமைதி நகரமாக, ஒரு பேய் நகரம் என்று குறிப்பிட்டு வரும் அளவிற்கு ஆகிவிட்டது. ஏனெனில் கொரோனா வைரஸ் அந்தளவிற்கு அங்கிருக்கும் உயிர்களை காவு கொண்டுவருகிறது. 

வேகமாக மற்றவர்களுக்கு இந்த நோய் பரவி வருவதால், அதை கட்டுப்படுத்த முடியாமல் சீன அரசு திணறி வருகிறது. தற்போது வரை 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், பதினோறாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கொரோனோவை கட்டுப்படுத்த, சீனாவில் 1000 படுக்கை வசதிகள் கொண்ட இரண்டு புதிய மருத்துவமனைகள், இதை எப்படி தடுப்பது என்பதற்காக ஆராய்ச்சி மையம் போன்றவை அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை இந்த நோயை கட்டுப்படுத்த முடியவில்லை. 

சீனாவில் மட்டுமின்றி உலகில் இருக்கும் 16 நாடுகளில் இந்த நோயின் பாதிப்பு உள்ளது. 

இந்நிலையில் சீனாவிற்கு உதவும் விதமாக அமெரிக்காவை சேர்ந்த உலக கோடீஸ்வரரும், மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் பணத்தை வாரி வழங்கியுள்ளார். 

பில் கேட்ஸ் மற்றும் Melinda Gates அறக்கட்டளையும் சேர்ந்து கடந்த ஞாயிற்றுக் கிழமை சீனா மற்றும் ஆப்பிரிக்காவில் பரவி வரும் மர்ம நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த 10 மில்லியன் டொலர் வழங்குவதாக அறிவித்துள்ளது. 

இதில் சிகிச்சை மற்றும் தடுப்பூசி மேம்பாட்டிற்கு 5 மில்லியன் டொலர் அடங்கும் என்று தெரிவித்துள்ளது. இவரை தொடர்ந்து சீனாவின் இரண்டாவது கோடீஸ்வரரான ஜாக் மா 14 மில்லியன் டொலர் கொடுத்து உதவுவதாக அறிவித்துள்ளார். 

இதே போன்று சீனாவில் இருக்கும் மில்லியனர்களான Robin Li(Baidu), Ma Huateng(Tencent), Ren Zhengfei( Huawei) மற்றும் Zhang Yiming(ByteDance) ஆகியோர் இணைந்து 115 மில்லியன் டொலர்கள் உதவியாக கொடுக்க முன் வந்துள்ளனர். 

வாசுகி சிவகுமார்

Comments