கிடைப்பதை சுருட்ட அரசியலுக்கு வந்தவர்களே கூட்டமைப்பினர் | தினகரன் வாரமஞ்சரி

கிடைப்பதை சுருட்ட அரசியலுக்கு வந்தவர்களே கூட்டமைப்பினர்

வடகிழக்கை இணைத்து தமிழர்களின் பாது காப்பை உறுதிப்படுத் தினால் மட்டுமே இந்தியா தனது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள முடியும். இதை இந்தியாவும், கஜேந் திரகுமாரும் உணர வேண்டும் என, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான க.வி.விக்னேஸ்வரன் ஞாயிறு தினகரன் வாரமஞ்சரிக்கு அளித்த பிரத்தியேக நேர்காணலில் தெரிவித்தார். அவருடனான நேர்காணல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற் பட்டால் இணைந்து செயற் படுவது தொடர்பில் பரிசீலிக்கலாம் என்பதை, எதன் அடிப்படையில் தெரிவித்திருந்தீர்கள் ? 

பதில் :- தற்போதைய தலைமைத்துவம் எந்தத் தருணத்திலும் கூட்டமைப்பின் மீது தமக்கிருக்கும் பிடியைத் தளர்த்த முன்வரமாட்டார்கள் என்ற அடிப்படையில், மாவையுடன் கூட கொள்கை ரீதியாக ஒரு உடன்பாட்டுக்கு வரமுடியும். மற்றைய இருவரும் தமிழர்கள் தரப்பான கொள்கை என்றால் தாம் நினைப்பதும் கூறுவதுமே அவர்களின் எதிர்பார்ப்புக்கள், கொள்கைகள் என்று அடம் பிடிப்பார்கள். 

சமஸ்டித் தீர்வு விரைவில் சாத்தியமாகுமென எதை அடிப்படையாகக் கொண்டு கூறுகின்றீர்கள்? 

பதில் :- பூகோள அரசியல் எமக்கு சார்பானதாக மாறிக் கொண்டிருக்கின்றது. ஃபோரிஸ் ஜொன்சன் கூட தமிழர்களின் பிரச்சினைகளை உணர்ந்து பேசுவதாகத் தெரிகின்றது.  உண்மையில் நாம் தமிழர்கள் சம்பந்தமாக ஏமாற்றப்பட்டோமா என்று பெரும்பான்மையினர்  நினைக்கின்றனர். தமிழர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்வந்த வந்தேறு குடிகளே என்றே அவர்களுக்குப் போதிக்கப்பட்டிருந்தது. உண்மையை அவர்கள் உணர்ந்தால் எமது உரிமைகள் எந்தளவுக்குப் பறிபோயுள்ளன என்பதை  உணர வாய்ப்பிருக்கின்றது. சமஷ்டி பற்றி சாதகமாகப் பரிசீலிக்க வாய்ப்பிருக்கின்றது. 

பாரதத்தின் பாதுகாப்பு இலங்கை வாழ் தமிழ்மக்களை பாதுகாப்பதில் தங்கியிருக்கின்றது என்று எவ்வாறு சொல்கின்றீர்கள் ? 

பதில் :- சீனாவுடன் உறவு கொண்டாட இது நேரமில்லை என்பதை அதிகாரத்தில் உள்ளோர் உணர்ந்துள்ளனர். வடகிழக்கை இணைத்து தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தினால் மட்டுமே இந்தியா தனது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள முடியும். இதை இந்தியாவும், கஜேந்திரகுமாரும் உணர வேண்டும். 

மாற்றுத்தரப்பு தாங்கள்தான் என ஒரு சிலர் கூறிக்கொள்வதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? 

பதில் :- மாற்றுத்தரப்பை மக்களே தீர்மானிக்க வேண்டும். பதவியில் உள்ளோர் மக்களைப் பரிதவிக்கவிட்டால் மாற்று பற்றிய சிந்தனை வலுவடைவது இயற்கையே. தற்புகழ்ச்சியில் ஈடுபடுபவர்கள் தக்க தலைவர்களா என்பதை மக்களே தீர்மானிப்பார்கள். 

தமிழ் கட்சிகள் பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிடுவது ஆரோக்கியமானதா? 

பதில் :- தனித்து போட்டியிடுவது ஆரோக்கியமானதல்ல. ஆனால் கொள்கை அடிப்படையில் நாம் ஒன்று சேர்ந்தால் தேர்தல் உடன்படிக்கைகளை எட்டலாம். சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒன்று சேராதென்பது ஆன்றோர் கருத்து.

தமிழ் மக்கள் கூட்டணி பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடுமா? கூட்டணி அமைத்து போட்டியிடுமா? 

பதில் :- கூட்டணி அமைத்தே போட்டியிடும். விபரங்களை நாம் முடிவெடுத்த பின்னர் அறிவிப்போம். 

தமிழர்கள் தரப்பில் வகை தொகையின்றி அநேக அரசியல் கட் சிகள் உருவாகுவதற்கு வித்திட்டவர்கள்? 

பதில் :- தான்தோன்றித்தனமாக ஆணவத்தின் பிடியில் பிடிபட்டு இருப்பதுடன் கொள்கை ரீதியில் தலைமைத்துவத்தைக் கொண்டு செல்லத் தெரியாதவர்களாலேயே வகை தொகையின்றி கட்சிகள் உருவாகின்றன. 

புதிய அரசியலமைப்பு செயல்பாடு கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவ தென்பது சாத்தியமானதா? 

பதில்:- அடுத்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகளின் பின்னரே கூறமுடியும். 

கூட்டமைப்பு ஊழல் மிகுந்த கட்சியென கட்சிக்குள் இருப்பவர்கள் உட்பட ஏனைய கட்சிகள் மற்றும் பொது மக்களிடையே அளவளாவப்படுவது குறித்து ...? 

பதில் :- கூட்டமைப்பின் ஊழல் பற்றி எனக்குத் தெரியாது. கூட்டமைப்பினர் கொள்கைகளில் நாட்டமற்றவர்கள்; கிடைப்பதை சுருட்டவே அரசியலுக்கு வந்தவர்கள் என்பது எனது கணிப்பு. எனது நண்பர் பாராளுமன்ற சிங்களப்பிரதிநிதி ஒருவர் பல வருடங்களுக்கு முன்னர் கூறினார் “நான் தேர்தலில் வென்று விட்டேன். தேர்தலுக்காக நான் செலவுசெய்த தொகையை இனி சம்பாதிப்பதே எனது குறிக்கோள்” என்று, அரசியலில் சுருட்ட வந்தவர்கள் மக்கள் நலனில் ஈடுபாடு காட்டமாட்டார்கள். 

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் பலவாறாக சிதறும் என எதிர்பார்க்கப்படு கின்றதே? 

பதில்:- கொள்கை அடிப்படையில் கட்சிகள் சேர்ந்தால் வாக்குகள் பலவாறாக சிதறுவதை தவிர்க்கலாம், தவிர்க்க வேண்டும். கொள்கை அற்றவர்களுடன் அது சாத்தியமா?. 

தமிழ் மக்கள் முன்னேற்ற முன்னணி வடக்கிலும், கூட்டமைப்பு கொழும்பிலுமாக ஏட்டிக்கு போட்டியாக களம் இறங்குவதென்பது இரு சமூகத் தினருக்கும் ஆரோக்கியமானதா? 

பதில் :- வடக்கு கிழக்கை இணைக்க வேண்டும், எமது மக்களுக்கு சமஸ்டி முறையில் அரசாங்கம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கோரும் நாம் வட, கிழக்கினுள் மட்டுமே எமது நடவடிக்கைகளை மட்டுப்படுத்தி எமக்கு ஆதரவு நல்கும் பிற மாகாண கட்சிகளுக்கு ஆத்மார்த்த ஆதரவை வழங்குவது தான் நன்மை பயக்கும் என்பது எமது கருத்து. மிகை ஊதியமான  Bonus ஆசனங்களைப் பெற எத்தனிக்கும் நடவடிக்கையாகவே இதனை நான் பார்க்கின்றேன். 

நேர்கண்டவர் :- பாக்கியராஜா மோகனதாஸ்     

Comments