தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாருடனும் கூட்டுச் சேர முடியாது | தினகரன் வாரமஞ்சரி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாருடனும் கூட்டுச் சேர முடியாது

கூட்டமைப்பு என்பது புதிவு செய்யப்பட்டு அதற்கு ஒரு சின்னம், ஒரு அமைப்பு  என்பன இருக்க வேண்டும் என வலியுறுத்தினோம். அப்படி இருந்தால் தான் மக்களது  பிரச்சினைகள் பற்றி பேச முடியும், பொது முடிவுகள் எடுக்க  முடியுமென்றெல்லாம் கூறியிருந்தோம். ஆனால் அதனைச் செய்வதற்கு தமிழரசுக்  கட்சி ஒருபோதும் தயாராக இருக்கவில்லை  என்கிறார் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் உப தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன். அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல்...

கேள்வி – தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்ற புதிய கூட்டணியொன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது. அதன் நோக்கம் என்ன?

பதில்: - தமிழ் மக்களின் ஆணைப் பெற்றவர்களாக தமிழ் கூட்டமைப்பினர் கொள்கை ரீதியாக முற்று முழுதாக வேறு ஒரு பாதையில் செல்கின்ற நிலைமை ஏற்பட்டது. இதனை நாங்கள் பல தடவைகள் சுட்டிக் காட்டினோம்.

இது ஒருபுறமிருக்க, வடக்கு மாகாண சபையில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்ற தீர்மானத்தை அன்றைய முதலமைச்சராக இருந்த விக்கினேஸ்வரன் தலைமையில் நிறைவேற்றியிருந்தார்கள். ஆனால் அவ்வாறானதொரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டாம். அப்படி நிறைவேற்றுவது தவறானது என சம்பந்தன், சுமந்திரன் போன்றோர் விக்கினேஸ்வரனிடம் திரும்ப திரும்ப சொல்லியிருந்தார்கள்.

ஆனாலும் அவற்றையெல்லாம் மீறித் தான் விக்கினேஸ்வரன் மாகாண சபையில் அந்த இனப்படுகொலைத் தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தார். ஆக மக்களிடம் பேசுகின்றபோது இங்கு இனஅழிப்பு நடைபெற்றிருக்கிறது. பல இலட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்று கூறுகின்றவர்கள் அதனை ஒரு தீர்மானமாக நிறைவேற்றி ஐ.நா சபைக்கு அனுப்புவதைச் செய்ய வேண்டாமெனத் தடுப்பது எந்த வகையில் நியாயமானது?

இவ்வாாறான ஒரு சூழ்நிலையில் அவர்களது நடவடிக்கைகள் அனைத்தும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தைக் காப்பாற்றுவதாகவே இருந்ததே தவிர உண்மையாகவே தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்னெடுத்துச் செல்வதாக இருக்கவில்லை. ஆகவே ஒரு மாற்றுத் தலைமை தேவைப்பட்டது.

இதில் சில பேர் சுரேசிற்கு ஆசனம் கொடுக்கப்படவில்லை. அதனால் தான் அவருக்கு மாற்றுத் தலைமை தேவைப்பட்டதாக சொல்லுவார்கள். ஆனால் நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது கூட இவர்கள் தவறான பாதையில் போகின்ற போதெல்லாம் பல கேள்விகளை கேட்டிருக்கின்றேன். அவர்களின் செயற்பாடுகளைத் தடுப்பதற்கு எங்களால் செய்யக் கூடிய வேலைகளையெல்லாம் நாங்கள் செய்தும் இருக்கின்றோம்.

அந்த வகையில் இதனை ஒரு சரியான தடத்தில் கொண்டு செல்வதற்கான மாற்றுத் தலைமை தேவைப்பட்டது. அது தொடர்பாக கடந்த இரண்டு, மூன்று வருடமாக பல கலந்துரையாடல்களும் நடைபெற்று இறுதியில்தான் இப்பொழுது தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்ற பெயரில் விக்கினேஸ்வரன் தலைமையில் மாற்று அணியொன்று உருவாகியிருக்கின்றது.

அதில் இப்போது நான்கு கட்சிகள் சேர்ந்திருக்கின்றன. இந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளக்கூடிய யாரும் வந்து இணைந்து கொள்ளலாம் என்பது தான் இப்போதிருக்கக் கூடிய நிலவரமாக உள்ளது.

கேள்வி – எதிர்வரும் தேர்தலை இந்தப் புதிய கூட்டணி எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது?

பதில் - இப்பொழுது தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்ற பெயரில் நாங்கள் இந்த தேர்தலை எதிர்கொள்வோம். அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அதில் கையெழுத்தையும் வைத்திருக்கின்றோம்.

கேள்வி – உங்களது புதிய கூட்டணிக்கு மக்களது ஆதரவு இருக்குமென்று எதிர்பார்க்கின்றீர்களா?

பதில்: - இந்தப் புதிய கூட்டணிக்கு நிச்சயமாக மக்களது ஆதரவு இருக்கும். இது இன்று நேற்றல்ல. கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இருந்த நிலைமைகளைப் பார்த்தீர்களானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறான பாதையில் போவதாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டே வந்தன.

இன்னும் சொல்லப் போனால் ஜெனீவாவில் கூட கால அவகாசத்தைக் கொடுத்து இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றுகின்ற செயற்பாடு நடக்கின்றது. அது தவறானது என்றும் சொல்லப்பட்டு வந்தது. குறிப்பாக இலங்கை அரசாங்கம் எதனையும் செய்ய மாட்டாது. கால அவகாசம் கொடுப்பதனூடாக எல்லாமே மறந்து போகின்ற சூழ்நிலை தான் வரும் என்றெல்லாம் சொல்லப்பட்ட பொழுதும் கூட கூட்டமைப்பின் தலைமை அதனை ஏற்றுக் கொள்ளாமல் தான்தோன்றித்தனமான முறையில் தான் செயற்பட்டு வந்திருக்கின்றது.

இவற்றுக்ெகல்லாம் மாற்றாகவே தமிழ் மக்கள் தேசிய கூட்டணி உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே நிச்சயமாக தமிழ் மக்கள் இதனை ஏற்றுக் கொள்வார்கள் என்றே நான் எதிர்பார்க்கின்றேன்.

கேள்வி – புதிய கூட்டணியானது வடக்கை மையப்படுத்தியதாகவே உள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்ற நிலையில் தேர்தல்கள் வருகின்ற போது வடக்கு, கிழக்கு முழுவதும் புதிய கூட்டணி போட்டியிடுமா?

பதில் - வட, கிழக்கில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் நாங்கள் தேர்தலில் போட்டியிடுவோம். வடக்கில் இரண்டு தேர்தல் மாவட்டங்களும் கிழக்கில் மூன்று தேர்தல் மாவட்டங்களும் உள்ளன. ஆகவே மொத்தமாக உள்ள ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்பது போட்டியிட இருக்கின்றது.

இதில் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் அம்பாறை திருகோணமலை போன்ற இடங்கள் ஒவ்வொரு ஆசனத்தைக் கொண்டதாக இருக்கிறது. ஆகவே அந்த இடங்களைத் தக்க வைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் எதுவும் கூட்டமைப்புடன் ஏற்படுமாக இருந்தால் நிச்சயமாக அதனைப் பற்றி ஆலோசிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

கேள்வி – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புதிய கூட்டணியில் ஏன் இணைந்து கொள்ளவில்லை என்று நீங்கள் கருதுகின்றீர்கள?

பதில் - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை இந்தக் கூட்டிற்குள் கொண்டு வர வேண்டுமென்பதற்காகவே இந்தக் கூட்டு உருவாகாமல் இருந்தது. இல்லையென்றால் ஒரு வருசத்திற்கு முன்னரே நிச்சயமாக இந்தக் கூட்டு உருவாகியிருக்கும். அது தொடர்பாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையில் அக்கறையுடைய பலபேர் அவர்களுடன் பேசினார்கள்.

ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் அவர்கள் யாருடனும் சேர்ந்து போகமாட்டார்கள். அவர்கள் விக்கினேஸ்வரனுடன் மாத்திரம் சேர்ந்து போகலாம் வேறு யாருடனும் சேர்ந்து போக முடியாது என்றவாறான கருதுகோள்களை வைத்திருந்தாரகள். ஒரு பரந்துபட்ட ஐக்கிய முன்னணியை அமைப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை.

இரண்டாவது, உண்மையாகவே தமிழ் மக்கள் எதிர்நோக்கக் கூடிய பிரச்சினைகளில் அவர்களது இருப்பு பாதுகாக்கப்பட வேண்டும். கன்னியாவை, முல்லைத்தீவை இழந்து போகின்ற சூழ்நிலை, தமிழ் மக்களின் பல ஆயிரம் ஏக்கர் காணிகளை இழக்கின்ற சூழ்நிலை இருக்க, வடக்கு கிழக்கு தமிழரின் தயாகம் என்ற பேச்சிற்கே இடமில்லாமல் போய்விடும்.

இவ்வாறு பல்வேறுபட்ட பிரச்சினைகள் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளாக இருக்கிறது. இதில் முக்கியமாக தமிழ் மக்களின் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டுமாக இருந்தால் இவ்வாறான ஐக்கியம் என்பது முக்கியம். ஆகவே தான் அவர்களையும் இதில் இணைத்துக் கொள்ள வேண்டுமென நாங்கள் எதிர்பார்த்தோம்.

ஆனால், இதனை எவ்வளவு தூரம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் புரிந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது. அவர்களைப் பொறுத்தவரையில் தாங்கள் தனித்து நின்று எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால் இன்றிருக்கக் கூடிய சூழ்நிலையில் தனித்து நின்று எதனையும் சாதிக்க மடியாது என்பது தான் யதார்த்தமான உண்மை.

ஏற்கனவே விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. அனால் அந்தக் கூட்டமைப்பு சரியான முறையில் நடந்திருந்தால் ஒரு மாற்றுத் தலைமை உருவாக்கப்பட வேண்டிய அவசியம் வந்திருக்காது.

கேள்வி – உங்களது புதிய கூட்டணியானது கொள்கையில்லாக் கூட்டணி என்றும் இந்தியாவின் முகவர் அமைப்பு என்றும் கூட்டமைப்பின் பி அணியென்றும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: - இந்த விடயங்களில் முதலாவதாக பி அணி சீ அணி டி அணி என்பவை கஜேந்திரகுமார் கொடுக்கிற பட்டப் பெயர்கள். அவர்களைப் பொறுத்தவரையில் ஏனையோர் மீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதனைத் தான் செய்ய முடியுமே தவிர, தமிழ் மக்களுக்கு ஒரு வழிகாட்டும் தலைமைத்துவ சக்தி என்பது நிச்சயமாக அவர்களிடம் கிடையாது. ஆகவே பி, சி அணி என்று சொல்வதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லாத ஒன்றாகவே பார்க்கிறோம்.’

என்னைப் பொறுத்தவரையில் நாங்கள் ஒரு கொள்கையின் அடிப்படையில் செயற்படுகின்றோம். அந்தக் கொள்கையை மிகத் தெளிவாக நாங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வெளிப்படுத்தியிருக்கின்றோம். ஆகவே அதன் பிரகாரம் தான் நாங்கள் செயற்படுவோம் என்பதையும் கூறியும் இருக்கின்றோம்.

கேள்வி – தமிழ்த் தரப்புக்கள் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டுமென்று வலியுறுத்தப்படுகின்ற நிலைமையில் பிளவுகள், புதிய அணிகள் உருவாக்கம் என்பது அந்த ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தாதா?

பதில்: -மிக நீண்டகாலமாக கூட்டமைப்பை பலப்படுத்துவதற்கான பல முயற்சிகளை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி எடுத்தது. இது சம்பந்தமாக பல பேச்சுவார்த்தைகளை நாங்கள் அவர்களுடன் நடாத்தியிருந்தோம். கூட்டமைப்பு என்பது புதிவு செய்யப்பட்டு அதற்கு ஒரு சின்னம், ஒரு அமைப்பு என்பன இருக்க வேண்டும் என வலியுறுத்தினோம். அப்படி இருந்தால் தான் மக்களது பிரச்சினைகள் பற்றி பேச முடியும், பொது முடிவுகள் எடுக்க முடியுமென்றெல்லாம் கூறியிருந்தோம். ஆனால் அதனைச் செய்வதற்கு தமிழரசுக் கட்சி ஒருபோதும் தயாராக இருக்கவில்லை.

ஆகவே இவ்வாறு ஒரு மாற்று அணி உருவாக வேண்டுமென்ற சூழலை உருவாக்கியது தமிழரசுக் கட்சியும் அந்தக் கட்சியுடன் இப்போது இணங்கி நிற்கக் கூடியவர்களும் தான்.

கேள்வி – மாற்றுத் தலைமை என்று நீங்கள் கூறுவதை மக்கள் எவ்வாறு பார்க்கின்றனர்? மாற்றுத் தலைமை தொடர்பில் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றீர்கள்?

பதில்: - தமிழ் மக்கள் தேசிய கூட்டணியை ஒரு மாற்றுத் தலைமையாக நாங்கள் கருதுகின்றோம். அதில் அங்கம் வகிக்கக்கூடிய எங்களது கட்சியை பொறுத்தவரையில் நீண்டகால அனுபவம் இருக்கிறது. அதேபோல ஏனைய கட்சிகளிடத்தேயும் நீண்டகால அரசியல் அனுபவம் இருக்கிறது. அந்த வகையில் சரியான ஒரு மாற்றுத் தலைமையை கொடுக்கக் கூடியதாக இருக்குமென்று நம்புகிறேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் அவர்கள் இப்பொழுது இந்த மாற்று அணியை தங்களுக்கு எதிரான ஒரு அணியாகப் பார்த்து உண்மையில் அச்சமடைந்திருக்கிறார்கள். அதனால் எங்கள் மேல் சில குற்றச்சாட்டுக்களை அவர்கள் சுமத்தக்கூடும்.

எஸ்.நிதர்ஷன்- பருத்தித்துறை விசேட நிருபர் 

Comments