மாணவர்களை வதைக்கும் அதிவெப்பம்! | தினகரன் வாரமஞ்சரி

மாணவர்களை வதைக்கும் அதிவெப்பம்!

தற்போது நாட்டில் நிலவும் சூடான காலநிலையால் பல்வேறு தரப்பினரும் அதன் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். அண்மைக்காலமாக நாட்டில் நிலவிய கடும் குளிரான காலநிலை மற்றும் இந்தியாவின் டெல்லியில் வளிமாசடைந்தமையால் உருவான ஆகாயக் கழிவுகள் இலங்கை நாட்டிலும் பரவியமை, கடல் மட்ட உயர்வு, வெள்ள நிலைமை, உலக வெப்பமயமாதல் உள்ளிட்ட பல காரணிகள் இவ்வாறான சூடான காலநிலைக்கும் அதனைத் தொடர்ந்த வறட்சிக்கும் காரணமாக அமைந்துள்ளது.  

பொதுவாக கடுமையான குளிருக்குப் பின்னர்  வெயில் காலநிலமை ஏற்படுவது இயற்கையான ஒரு செயற்பாடாகும். சராசரி மனித உடலின் வெப்பநிலையை விட சூழல் வெப்பநிலை அதிகரிக்கின்றபோது மனிதர்களுக்கு அதன் தாக்கம் உடனடியாக ஏற்படக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது. இதன் காரணமாக வெயிலின் கடுமையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக மனிதர் பல்வேறு வகையான உபாயங்களை மேற்கொண்டு வருகின்றனர். 

குளிரான நாடுகளில் வாழும் மக்கள்  சூடான நாடுகளுக்கு செல்வதும் சூடான நாட்டில் வாழும் மக்கள் குளிர் நாடுகளுக்கு செல்வதும் வழமையான செயற்பாடாகும். ஆனால் இந்நிலமை பணம் படைத்தவர்களைப் பொறுத்தமட்டில் இயலுமானதாக உள்ளது. வருமானம் குறைந்த வறுமைக் கோட்டின் கீழ் வாழுகின்ற மக்கள் இவ்வாறான நிலைகளுக்கு முகம் கொடுக்க தம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டமையால் பணத்தை செலவிட்டு வெளிநாடுகளுக்கு செல்வதற்கான வாய்ப்பு அரிதாகும். 

அண்மைக்காலமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள சூடான காலநிலை பாடசாலை மாணவர்களை வெகுவாகப் பாதித்து வருகின்றது. இதன் காரணமாக மாணவர்கள் மத்தியில் அம்மை, கண்நோய், தோல் நோய் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு காலநிலை ஏதுவாக அமைந்துவிடுகிறது. மாணவர்களை மேற்படி நோய்களிலிருந்து காப்பாற்றுவதற்கு பாடசாலை அதிபர்கள் பொருத்தமான மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு கல்வித் திணைக்களம் பாடசாலை அதிபர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு கடமைப்பட்டுள்ளது.  

தற்போது பாடசாலைகளில் இல்ல விளையாட்டுப் போட்டிகள், பாடசாலை மட்ட விளையாட்டு திறனாய்வுப் போட்டிகள், பயிற்சிகள் என்பன இடம்பெற்று வருகின்றன. தற்போதைய காலநிலையை கருத்தில் கொண்டு பாடசாலை விளையாட்டுப் போட்டிகள், பயிற்சிகள் போன்றவற்றை காலை 11மணி முதல் பிற்பகல் 3மணிவரை நடாத்த வேண்டாமெனவும் மாணவர்களுக்கு அதன் மூலம் அசெளகரியமான சூழ்நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதிலும் கல்வி அமைச்சு கவனமாக இருக்கிறது.  

ஆனால் கல்வி அமைச்சு எவ்வாறான அறிவுறுத்தல்களை வழங்கினாலும் அது பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுவதென்பது தற்போது இயலாத காரியமாக இருப்பதாகவே கொள்ளவேண்டியுள்ளது. பாடசாலை அதிபர்கள் தமது பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகளை ஒழுங்கு செய்து திட்டமிட்டபடி நடத்தி முடிக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக கல்வி அமைச்சின் அறிவுறுத்தல்கள் செயற்படுத்தப்படாத ஒரு நிலை காணப்படுகிறது.  

இதேபோன்று பாடசாலைகளில் நடைபெறும் விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் என்பவற்றுக்காக வருகை தரும் அதிதிகளை வரவேற்கும் நோக்கில் சூடான காலநிலையையும் கருத்திற் கொள்ளாது மாணவர்களை மணிக்கணக்கில் வீதியோரங்களில் நிறுத்தி வைத்து பேண்ட் வாத்தியங்களை இசைப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். வெப்பமான காலநிலையில் மாணவர்கள் மணிக்கணக்கில் நிறுத்தப்படுவதனால் அவர்கள் மயக்கமடைந்து விழுகின்ற சந்தர்ப்பமும் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றது. இதனை மட்டுப்படுத்த வேண்டுமென கல்வி அமைச்சு எத்தனை அறிவுறுத்தல்கள் வழங்கினாலும் அவை யாவும் பாடசாலை மட்டத்தில் பூச்சியமாகிப் போகின்றது. இதுபற்றி வலய மட்டத்தில், மாகாண மட்டத்தில் அறிவுறுத்தல்களை செயற்படுத்துகின்ற அல்லது மேற்பார்வை செய்கின்ற அதிகாரிகள் இவ்வாறான நிகழ்வை கண்டும் காணாதது போல் இருந்து வருகின்றமை மிகவும் கவலையான விடயமாகும்.  

உஷ்ணமான காலநிலையால் பாடசாலைகளில் மாணவர்கள் பல்வேறு அசெளகரியமான சூழ்நிலையை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் முகம் கொடுக்கின்றமை மற்றுமொரு பிரச்சினையாகும். தற்போதைய பாடசாலை அமைப்பில்  இடப்பற்றாக்குறை காரணமாக  காற்றோட்டமற்ற, சுகாதாரத்துக்கு கேடான வகையில் சில பாடசாலைகள் அமைந்துள்ளன. பாடசாலை மாணவர் ஒருவருக்கு கற்றலுக்கான வள அளவு 2.25சதுர அடி என கல்வி அமைச்சு வரையறுத்துள்ளது. ஆனால் பாடசாலைகளில் நிலப் பற்றாக்குறை காரணமாக இவ்வாறான இருக்கை அளவு மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இந்த சூழ்நிலையில் மாணவர்கள் கடுமையான வெயில் தாக்கத்தினால் வெப்பமான சூழலை  எதிர்நோக்குகின்றனர்.  

பாடசாலை வகுப்பறைகளில் மின்விசிறி வசதிகள் இருந்தும் அதிகமான பாடசாலைகளில் மின் கட்டணம் செலுத்துவதில் உள்ள கஷ்டங்கள் காரணமாகவும் அதிகரித்த மின்கட்டணங்களை செலுத்துவதற்கு கல்வி திணைக்களம் அனுமதிக்காமை காரணமாகவும் அதிபர்கள் அவற்றை பயன்படுத்துவதை தவிர்த்து வருகிறார்கள். இது பாடசாலை மாணவர்களுக்கு காற்றோட்ட வசதியை பெறுவதற்கு தடையானதொரு விடயமாகும்.  

வெயிலின் தாக்கம் உள்ள காலப் பகுதியில் பாடசாலைகளில் மாணவர்களுக்கான நீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டு வருகின்றது. பொதுவாக கிராமப் புறப் பாடசாலைகளில் இந்நிலைமை பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது. சுத்தமான குடிநீரை மாணவர்கள் பெறுவதென்பது கிராமப்புற பாடசாலைகளைப் பொறுத்தமட்டில் இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சினையாகவே உள்ளது. நகரப்புறப் பாடசாலைகளைப் பொறுத்தமட்டில் குடிநீர்ப் பிரச்சினை ஓரளவு தீர்க்கப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். 

வளி மாசடைவதால் ஏற்படும் சூடான காலநிலை ஆஸ்த்துமா, ஒவ்வாமை என்பனவற்றையும் மாணவர்களுக்கு ஏற்படுத்துகிறது. அத்துடன் வளிமாசடைதல் புற்றுநோய், நெஞ்சு நோவு போன்றவற்றையும் ஏற்படுத்துவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றை கட்டுப்படுத்துவதற்கு பாடசாலை மட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள சுற்றாடல் கழகங்கள் முறையாக இயக்கப்படின் மாணவர்களுக்கு பிரயோசனமானதாக இருக்கும்.  

வெயில் கூடுதலான காலப்பகுதியில் பாடசாலை மாணவர்களை நேரகாலத்தோடு வீடுகளுக்கு அனுப்பிவைப்பதற்கான பொறிமுறையொன்று இதுவரை கல்வி அமைச்சாலோ அல்லது மாகாணக் கல்வி அமைச்சுக்களாலோ வகுக்கப்படவில்லை. சாதாரணமாக பாடசாலைகள் காலை 7.30இற்கு ஆரம்பித்து பிற்பகல் 2.00மணி வரை நடைபெறுகின்றன. இதில் உஷ்ண காலப்பகுதியான பகல் 12மணிக்குப் பின்னர் மாணவர்கள் நீரிழப்பினால் கடுமையாக சோர்வடைகின்றனர். இந்த நிலைமையிலும் பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவதனால் பல்வேறு மனஉழைச்சல்களுக்கும் தாக்கங்களுக்கும் உள்ளாகின்றனர். இவற்றை குறைப்பதற்கு பாடசாலையை வெயில் காலங்களில் 12மணியுடன் முடித்து மாணவர்களை வீடுகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைப்பதற்கான பொறிமுறையொன்று வகுக்கப்படுவது இலங்கையை பொறுத்தமட்டில் அவசரமும் அவசியமானதுமாகும். 

முன்னர் பாடசாலைகளில் ஏற்படும் அவசர நிலையைப் பொறுத்து, பாடசாலைகளை மூடிவிடுவதற்கு அதிபர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவ்வாறான அதிகாரம் பாடசாலை அதிபர்களிடமிருந்து எடுக்கப்பட்டு கல்வி அதிகாரிகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலைமையில் இவ்வாறான சூடான காலநிலை ஏற்படும் போது பாடசாலை அதிபர்கள் தற்துணிவாக முடிவெடுப்பதற்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.  

உஷ்ணமான காலங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகளில் கவனம் செலுத்தப்படுவது அத்தியாவசியமானதொன்றாகும். சூடான காலநிலையில் மாணவர்களுக்கு பழச்சாறு, குளிர்பானங்கள், குளுக்கோசு அடங்கிய பானங்கள், பால் போன்ற திரவப்பொருட்களை பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் விநியோகிப்பதற்கு தேவையான ஒழுங்குகளை பாடசாலை அதிபர்கள் மேற்கொள்வது சூடான வெயில் நிலைமையில் மாணவர்களின்  நீரிழப்பை ஈடுசெய்வதற்கு ஒரு காரணியாக அமையும்.  

வெயிலான காலப்பகுதிகளில் மாணவர்களை வகுப்பறைகளில் அடைத்துக் கொண்டு கற்பிப்பதை விட மாணவர்களுக்கு காற்றோட்டமான, வசதியுள்ள மரநிழல்களின் கீழ் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வது அசெளகரியமான சூழ்நிலையை தவிர்த்து விருப்பத்துடன் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பையும் வழங்கும்.  

பொதுவாக பாடசாலைகளில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான விடயங்களை அவதானிக்கின்ற போது வெறுமனே வெள்ளம், மழை, சூறாவளிக்காற்று, சுனாமி போன்றவற்றிலேயே கவனம் செலுத்துகின்றனர். ஆனால், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் வெயில் கூடிய காலநிலையை ஒரு அனர்த்த நிலைமையாக கவனத்திற் கொண்டு பாடசாலை அதிபர்களும் கல்வி அதிகாரிகளும் பெற்றோரும் பாடசாலை சமூகமும் முகம் கொடுப்பதற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்வது இன்றைய சூழ்நிலையில் மிகவும் பிரதானமானதாகும். ஏனெனில், உலக நாடுகளில் புவி வெப்பமயமாதலும், கடல்மட்டம் அதிகரித்தலும் நாடுகளில் சூடான வெயில் கொண்ட காலநிலையை தொடர்ச்சியாக எதிர்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றதே தவிர குறைந்துவிடுமென கூறமுடியாது.

ஏ.எல்.எம்.முக்தார்
ஓய்வு நிலை கல்விப்
பணிப்பாளர், சாய்ந்தமருது.

Comments