ஷகிலா வழியில் சோனா | தினகரன் வாரமஞ்சரி

ஷகிலா வழியில் சோனா

சில வருடங்களுக்கு முன் சோன்பப்டி மாதிரி சினிமா உலகைத் தன் கவர்ச்சியால் கட்டிப்போட்டு வைத்திருந்தவர் சோனா. இப்போது நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு படங்களைத் தேர்வுசெய்து நடித்து வருகிறார். அவரது நடிப்பிற்குத் தீனி போடும் வகையிலான  கதைகள் தற்போது அவரைத் தேடிவரத் துவங்கியுள்ளன. 

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட மலையாளப்படமான ‘பச்சமாங்கா’ என்ற படத்தில் சோனா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப்  படத்தில் அவரோடு பிரதாப் போத்தனும் நடித்துள்ளார். 

ஜெஷீதா ஷாஜி மற்றும் பால் பொன்மணி தயாரித்துள்ள இந்தப் படத்தை  ஜெய்ஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி அமோக  வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் ட்ரைலரில் சோனாவின் கவர்ச்சியான உடை  குறித்து சோனா இந்தப் படத்தில் மிக கவர்ச்சியாக நடித்துள்ளார் என்று செய்தி  வெளிவந்தன. 

ஊடகங்களில் ‘ஷகிலா வழியில் சோனா கவர்ச்சியாக நடிக்கிறார்’ என்பது போன்ற செய்திகள் வெளிவந்தன. அது பற்றி சோனாவிடம் கேட்டோம். 

“இந்தப் படம் சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு  எடுக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இனி கவர்ச்சியாக நடிக்கப்  போவதில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டேன்.  ‘பச்சை மாங்கா’ படம் அப்படி கவர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட  படமாக இருந்தால் பிரதாப் போத்தன் எப்படி நடிக்க சம்மதித்து இருப்பார்  என்பதை யோசிக்க வேண்டும். இந்தப் படம் ஒரு கனமான கதையை அடிப்படையாகக்  கொண்டது. நம்முடைய பாலு மகேந்திரா சார் படம் போல பக்கா க்ளாஸியான படம் அது.  அந்தப் படத்தின் ட்ரைலரில் என் உடை மற்றும் சிறிது நேர நடிப்பைப் பார்த்து  பலர் நான் அதிக கவர்ச்சியான நடிகை என்பது போன்ற பிம்பத்தை  ஏற்படுத்திவருகிறார்கள். அது உண்மை அல்ல. 

கேரளாவில் பெண்கள் எப்படி உடை அணிவார்களோ அதை அப்படியே  பிரதிபலிக்க வேண்டும் என்பதால்தான் படத்தில் அப்படியான உடையை  அணிந்திருந்தேன். இந்தப்படத்தை என் உடை மூலமாகக் கவர்ச்சிப் படம் என்றோ,  என்னைக் கவர்ச்சி நடிகை என்றோ சித்தரிக்க வேண்டாம் எனக்  கேட்டுக்கொள்கிறேன். இது மிகச் சிறப்பான படம். என் கதாபாத்திரமும்  அப்படியே. படம் வந்தபின் இந்த வார்த்தையை அனைவரும் சொல்வார்கள்” என்றார்.   

Comments