விரதங்களில் மேன்மை பொருந்திய சிவராத்திரி | தினகரன் வாரமஞ்சரி

விரதங்களில் மேன்மை பொருந்திய சிவராத்திரி

மனிதப் பண்புகளைத் தட்டியெழுப்பி, நேரிய வழியில் வாழ்க்கையை அமைத்து, உயர்நிலையை அடைவதற்காக மனிதனைப் பக்குவப்படுத்துவதே சமய நெறிகள். இந்த வகையிலே இந்து சமயம் பல்வேறு நெறிமுறைகளை முன்வைத்துள்ளது. அவற்றிலே விரதங்களும் அடங்குகின்றன. 

சக்தி விரதங்கள், விநாயக விரதங்கள், திருமாலுக்குரிய விரதங்கள், முருகனுக்குரிய விரதங்கள், நவகிரகங்களுக்குரிய விரதங்கள் எனப் பல விரதங்கள் இந்து சமயத்தவர்களால் அனுஷ்டிக்கப்படுகின்றன. 

விரதம் எனப்படும் போது மனவுறுதி என்ற பொருளுமுண்டு. உயிரினங்களெல்லாம் தமக்கென விதிக்கப்பட்ட ஒரே படிமுறையில் வாழ்ந்து மறையும் போது மனித இனம் மட்டும் சிந்தித்து, தனது வாழ்வை நெறிப்படுத்தி வாழும் தன்மையைக் கொண்டதாக விளங்குகின்றது. சிந்தனையைத் தூண்டி தூயவழியில் செல்ல விரதங்கள் மனிதருக்கு வழிகாட்டி நிற்கின்றன. 

இந்த வகையிலே இந்துக்கள் கைக்கொள்ளும் விரதங்களில் சிவனுக்குரிய விரதமான மகாசிவராத்திரி மேன்மை பொருந்தியதாக அமைகின்றது. எதிர்வரும் 21ம் திகதி மகாசிவராத்திரி அனுஷ்டிக்கப்படுகின்றது. 

மாதந்தோறும் அமாவாசையுடன் கூடி வரும் நாள் சிவராத்திரியாகக் கைக்கொள்ளப்படும் போது மாசி மாத அமாவாசையுடன் கூடிவரும் சிவராத்திரி மகாசிவராத்திரி என்று சிறப்பித்துக் கூறப்படுகின்றது. 

சிவராத்திரி தெடர்பாகப் பல புராண நம்பிக்ைககள் உள்ளன.பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் சிவன் சோதிப்பிளம்பாகத் தோன்றி, தனது அளப்பரிய ஆற்றலை வெளிப்படுத்திய நாளாகவும் அவர்களது ஆணவத்தை அழித்த நாளாகவும் இந்நாள் கூறப்படுகின்றது. இது போன்ற பல புராணக் கதைகள் வழக்கிலுள்ளன. 

இக்கதைகள் கூறும் தத்துவக் கருத்துகளைப் புரிந்து, உணர்ந்து கொள்வதே விரதம் நோற்பதன் பயனாக அமையுமேயன்றி, சம்பிரதாயச் சடங்குகளை மட்டும் கைக்கொள்வதால் பயனில்லை. 

மனதைப் பக்குவப்படுத்தி நேரிய வழியில் வாழ்ந்து, நாம் பெற்ற பிறவிப் பயனை அடைவதற்கான வழியை  இராமலிங்க வள்ளலார் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். 

அதுவே இன்று மகாசிவராத்திரி விரதத்தின் மூல மந்திரமாக விளங்குகின்றது. 'தனித்திரு, பசித்திரு, விழித்திரு' என்பவையே அவையாகும். ஒரு மனிதன் இம்மூன்று விதிகளையும் தெளிவாக உணர்ந்து தினமும் கைக்கொள்வானாயின் அவன் மனிதருள் தெய்வமாக உயர முடியும். 

ஆம். இந்த மூன்று வழிகளும் மனித மனதைப் பக்குவப்படுத்தி, வாழும் வழியை நெறிப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. இவற்றுக்கு மேலோட்டமாக ஒரு கருத்தும் கொள்ளப்படுவது வழக்கம். இருப்பினும் ஆழ ஆய்ந்து, அவற்றினுள் பொதிந்துள்ள தத்துவக் கருத்துகளைக் கைக்கொள்வதே மகாசிவராத்திரி விரதம் மேற்கொள்வதன் பயனாக அமையும். 

சம்பிரதாய சடங்குகள் மட்டுமே சமயம் என்று கருதி விடக் கூடாது. மனிதனை, மனிதனின் மனத்தைப் பக்குவப்படுத்துவதே சமய வாழ்வாகும். 

‘தனித்திரு’ எனும்போது தனியாக ஒதுங்கியிருப்பது என்பது கருத்தல்ல. நல்லவற்றையே நோக்காகக் கொண்டு சிந்தித்து செயற்பட்டு தனது உயர்ந்த தனித்துவத்தைப் பேணுதல் வேண்டும் என்பதே 'தனித்திரு' என்பதன் பொருளாக அமைகின்றது. 

‘பசித்திரு’ என்னும் போது உணவைச் சில வேளைகள் கைவிட்டு இருப்பது மட்டும் என்பதல்ல. உணவைக் குறைப்பதால் உடல் நலம் பேணப்படும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. உடல் நலத்தைப் பேண உணவைத் தவிர்த்து பசித்திருப்பது போல மனநலத்தைப் பேணவும் பசித்திருக்க வேண்டும். 

அதாவது வயிறு பசித்திருக்கும் போது நல்ல உணவைத் தேடுவது போன்று உள்ளப் பசிக்கு அதாவது அறிவுப் பசிக்கு நல்லவற்றைத் தேடி, அறிந்து அதன் மூலம் மனப்பசியைப் போக்கிக் கொள்ள வேண்டும். 

உடலிலுள்ள கழிவுகளை அகற்றுவதில் முன்னுரிமை தந்து செயற்படுவது போன்று உள்ளத்திலே புகுந்துள்ள தீய சிந்தனைகளான ஆசை, பொறாமை, கோபம், குரோதம், வெறுப்பு, பகை, ஆணவம், அகங்காரம், மோகம் போன்ற கழிவுகளை நீக்கி, வெளியேற்றி விடும் போது ஏற்படும் வெற்றிடமே மனப்பசி எனப்படுகின்றது. அந்த மனப் பசியை உருவாக்கிக் கொள்ள வேண்டும். 

மனப்பசிக்கு உணவாக நல்ல சிந்தனைகளை உள்வாங்கிக் கொள்வது மனித வாழ்வின் மகத்துவமாகின்றது. அதுவே வாழ வேண்டிய சமய நெறியில் வாழ வழிவகுப்பதற்குரிய படிமுறையாகின்றது. 

நித்திரை கொள்ளாது விழித்திருப்பது தான் மகாசிவராத்திரியின் ‘விழித்திரு’ என்ற ஞானப்பதத்தின் பொருளாகக் கொள்ளக் கூடாது. ‘விழித்திரு’ என்னும் போது அதுவும் ஒரு விளக்கமாக அமைகின்ற போதிலும், சிவராத்திரி கூறும் ‘விழித்திரு’ என்பதன் விரிவான பொருள் வேறொன்றுமுள்ளது. அதாவது தீய நோக்கங்கள், சிந்தனைகள் நம்மனத்தில் புகாதபடி நாம் விழிப்பாயிருக்க வேண்டும் என்பதே அதுவாகும். மனிதனின் சிந்தனையைச் சிதைத்து வாழ்வைத் துன்பத்தில் ஆழ்த்துபவை தீய சிந்தனைகள், தீய நோக்கங்கள், தீய செயற்பாடுகளேயாகும். 

இத்தீய சக்திகளைக் கட்டுப்படுத்தி, தூர விலக்கி விட விழிப்பாயிருக்க வேண்டும். மனிதனின் நேர்மையான வாழ்க்கைக்கு தடையாயிருப்பவை இனங்காணப்பட வேண்டும். அவை மனத்திலே புகாதிருக்க வேண்டும். அதற்காக ஒவ்வொருவரும் விழிப்பாயிருப்பதையே 'விழித்திரு' என்ற பதம் விளக்குகின்றது. 

ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தான் மேன்மைப்படுத்திக் கொள்ள வழியமைத்துத் தருபவை சமயங்கள் விதித்துள்ள விரதங்கள் என்பதை நாம் புரிந்து கொண்டு வாழ்வைச் செப்பனிட்டுக்கொண்டால் துன்ப, துயரங்களில் இருந்து விடுபட முடியும். 

ஆணவம், இறுமாப்பு, அகங்காரம், குரோதம், பகைமை போன்ற மனிதகுல நலனுக்கு ஒவ்வாத குணங்களுடன் வாழ்வதை ஒரு வாழ்வாகக் கொள்ள முடியாது. தானும் சீரிய வாழ்வு வாழ்ந்து, ஏனையோரும் அவ்வாறு வாழ வழிவகுப்பதே சமய வாழ்வு. விரதங்கள் நோற்பதன் மூலம் துன்பங்கள் களையப்பட்டு தூய்மையான வாழ்வு வந்து சேரும் என்பது மரபு வழியாக வரும் நம்பிக்கையாகும்.   நமக்கும் மேலாக ஒரு சக்தியுள்ளது, அது நம்மை வழிநடத்துகின்றது என்பது சமயங்களின் அடிப்படையான ஆழ்ந்த தத்துவமாகும். இவ்வாறான உறுதியான நம்பிக்கை நம்மை வந்தடைந்து விட்டால், தன்னம்பிக்கையுடன் நல்வழியில் வாழத் தலைப்பட்டு விட்டால் தன்மானம் கொண்ட மனிதனாக வாழலாம். 

ஆதியும் அந்தமுமில்லாத அரும்பெருஞ் சோதியான சிவபிரானை வழிபட்டு, சிவசக்தி அருள் நாடி, தனித்திருந்து, பசித்திருந்து, விழித்திருந்து நோற்கப்படும் மகாசிவராத்திரி விரதமானது மனித குலத்தின் மேன்மையின் திறவுகோலாகும். 

இவ்விரத நாளில் அதர்மமும், ஆணவமும் அழிந்து எங்கும் நிம்மதி நிலவப் பிரார்த்திப்போம். நம்பினோர் கெடுவதில்லை என்ற கூற்றுக்கமைய, எம்மை வாட்டும் துன்பங்கள் துடைத்தெறியப்பட எம்பெருமான் திருவருள் கிட்டும், வாழ்வு வளம் பெறும், ஒளிபெறும், அதர்ம நிலை அகன்று எங்கும் நிம்மதி நிலைக்கும் என்ற நம்பிக்கையுடன் பிரார்த்திப்போம். 


த. மனோகரன்
துணைத்தலைவர்,

அகில இலங்கை இந்து மாமன்றம்      

Comments