அதிகார அரசியலில் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழல்! | தினகரன் வாரமஞ்சரி

அதிகார அரசியலில் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழல்!

ஊழல் என்பது உலகில் இன்று நேற்று தோன்றிய ஒன்றல்ல கிறிஸ்துக்கு முன் 300ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த சாணக்கியர் “நீரில் உள்ள மீன் எவ்வளவு நீரைக்குடித்தது என்பதை எவ்வாறு அறியமுடியாதோ அதே போலத்தான் அரசு அதிகாரிகள் எந்தளவுக்கு அரசாங்கப் பணத்தை திருடுகிறார்கள் என்பதையும் சரியாக அறிய முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் “தேன் எடுப்பவன் புறங்கையை நக்குவான்’ என்றொரு முதுமொழியும் நம்மத்தியில் உள்ளது.

ஊழல் என்பது நபர் ஒருவரோ அல்லது நிறுவனமோ தமக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டத்திற்குப் புறம்பான தனிப்பட்ட நலன்களை அடைந்து கொள்ளமுயற்சிப்பது என வரைவிலக்கணப்படுத்தப்படுகிறது. பொதுவாக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பண ரீதியான அல்லது வேறுவகையிலான தனிப்பட்ட நன்மைகளை பெறல் என எடுத்துக் கொள்ளலாம்.

ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல் (Transparency international) என்ற நிறுவனம் ஊழலை மூன்று விதமாக வகைப்படுத்துகிறது.

01.பேரூழல் – (Grand Corruption)

02. சிற்றூழல் (Petty Corruption)

03. அரசியல் ஊழல் (Political Corruption)

பேரூழல் என்பது உயர் மட்ட அதிகாரத்தை சிலர் நன்மை பெறும் விதத்திலும் பலர் பாதிக்கப்படும் விதத்திலும் துஷ்பியோகம் செய்வதைக் குறிக்கும். இது தனிநபர்களுக்கும் சமூகத்திற்கும் பரந்தளவில் தீமை பயப்பதாகும்.

சிற்றூழல் என்பது அரசு அதிகாரிகள் பொதுமக்களுடனான தமது ஊடாட்டங்களின்போது தமது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வதாகும். பொதுமக்கள் அரச சேவைகளைப் பெற எத்தனிக்கிறபோது இது பெரும்பாலும் இடம்பெறும்.

அரசியல் ஊழல் என்பது அரசாங்க கொள்கைகளை, அல்லது நிறுவனங்களை அத்துடன் நிர்வாகம் சார்ந்த நடைமுறைகளை மாற்றியமைக்க செல்வாக்கு செலுத்துவதாகும். அரசியல் தீர்மானம் மேற்கொள்ளும் அரசியல்வாதிகள் தமது அதிகார இருப்பையும் செல்வத்தையும் தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு அரசியல் ஊழல்களில் ஈடுபடுவர். கொள்கை அடிப்படையில் நோக்குமிடத்து ஊழலை இருவகைப்படுத்தி நோக்கலாம்.

01. வேகப்பணம் (Speed Money)

தனது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, ஒரு அரச வேலையை நிறைவேற்ற அல்லது அதனை துரிதப்படுத்த அந்த சேவையுடன் தொடர்புடைய அதிகாரிக்கு பணம் வழங்குதல் அல்லது வேறு பொருள் அல்லது உடல் ரீதியான சேவைகளை வழங்குதல் இதில் அடங்கும். அதாவது ஒருவர் தனது கடமையை செய்வதற்காக வழங்கும் பணம்.

02. கூட்டு ஊழல் (Collusive Corruption)

ஒரு பொருள் கடத்தப்படும்போது அதிகாரி கண்டு கொள்ளாமல் விடல், வரிகள் ஏய்க்கப்படல், வருமானம், சொத்துகளை குறைத்து மதிப்பீடு செய்து காட்டுதல் போன்றன இதற்கு உதாரணம்.

ஊழல் என்பதன் சட்ட ரீதியான வரையறைகள் நாட்டிற்கு நாடு வேறுபடும் உதாரணமாக அமெரிக்காவில் கொள்கைகளையும் சட்டத்திட்டங்களையும் தமக்கு சாதகமாக அமைத்துக்கொள்ள அரசியல்வாதிகளுக்கு பணத்தைப் பயன்படுத்துவது சட்டரீதியாக தவறானதல்ல. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் கொள்கைகளை வளைத்துப்போட அரசியல்வாதிகளுக்கு பணம் வழங்குவது சட்டரீதியான ஒரு நடைமுறையல்ல. எனவேதான் அமெரிக்காவில் சட்டங்களை உருவாக்குவதில் ஊழல் இடம்பெறுகிறது. இந்தியாவில் சட்டங்களை மீறுவதில் ஊழல் இடம்பெறுகிறது என்று கூறுகின்றனர்.

ஊழல் இடம்பெறுவதற்கான காரணம் ஒருவரிடம் அதிகாரம் குவிந்திருப்பதும் சிக்கலான நிர்வாக நடைமுறைகளும் வெளிப்படைத்தன்மையற்ற அரசு நிர்வாக இயந்திரமும் தான் என்று பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால் மேலே கூறிய அதிகாரத்தை குறைப்பதனால் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதால் மட்டும் ஊழல் குறைந்துவிடும் என்று எதிர்பார்க்க முடியாது.

உதாரணமாக, 1990களில் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் பொருளாதாரங்கள் திறந்துவிடப்பட்டு நிர்வாக நடைமுறைகள் தளர்த்தப்பட்டு சந்தைகளின் ஆதிக்கம் விரிவாக்கம் பெற்ற போதிலும் ஊழல் குறைந்ததாகத் தெரியவில்லை இதற்கு பல காரணங்கள் உண்டு.

01. பொருளாதார வளர்ச்சியுடன் பொது வளங்களின் சந்தைப் பெறுமதி அதிகரித்ததால் அவற்றை ஒதுக்கீடு செய்வதில் முன்னரை விட அரசியல் ஊழல் அதிகரித்தது.

02. உள்ளூரில் இடம்பெறும் தேர்தல்கள் செலவு கூடியதாக மாறின. அரசியல் ரீதியாக பரப்புரைகளை செய்யவும் அரசியல் செய்யவும் அதிக பணம் தேவைப்பட்டது. இதனால் நிதி வழங்கும் அழுத்தக் குழுக்களின் செல்வாக்கும் அதிகரித்தது.

03. தனியார் துறையின் பங்களிப்பு அதிகரித்ததுடன் அரசுதுறை தனியார் துறை இணைந்த தொழில் முயற்சிகளும் அதிகாரத்தை இவற்றை கண்காணிக்கும் நிர்வாகக் கட்டுப்பாட்டு நிறுவனங்களின் முக்கியத்துவமும் அதிகரித்தது. இக்கட்டுப்பாட்டு நிறுவனங்களின் பலவீனமான வெளிப்படைத்தன்மையற்ற நிர்வாக நடைமுறைகளும் ஊழலுக்கு வாய்ப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

04. உலகளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்ட வறுமை தனிப்புத் திட்டங்கள் வழியே நாட்டுக்குள் வரும் பாரியளவு நிதியுதவிகள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படும் சூழல் விரிவாகியது. குறிப்பாக தொலைதூரப் பிரதேசங்களில் பலவீனமான நிர்வாக கட்டமைப்புகள் இவற்றில் ஊழல் தலைவிரித்தாட வாய்ப்பளித்தது.

05. அரசியலில் இனரீதியான துருவமயப்படுத்தல்கள் அதிகரித்த காரணத்தினால் இன, மொழி, மத ரீதியாக பிளவுபட்டு அரசியல் செய்யும்போது ஊழலுக்கு வாய்ப்பான புறச்சூழல் விரிவாகியது.

06. அதிகாரப்பரவலாக்கத்தின் மூலமும் நிதி பன்முகப்படுத்தப்படுவதன் மூலமாகவும் மத்திய அரசாங்கத்தின் நிதிகள் உள்ளூர் மட்டத்திற்கு கொண்டு செல்லப்படும் போது கூட்டுக் களவாணிகள் ஒன்று சேர்ந்து அவற்றை முறையற்ற விதத்தில் கையாளும் வாய்ப்பு அதிகரிக்கிறது. உள்ளூர் மட்டத்தில் செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகள் அவற்றில் பெரும் பகுதியை கபளீகரம் செய்வது புதிதான ஒன்றல்ல.

ஊழல் மேலே சொல்லப்பட்டவாறு பல்வேறு மட்டங்களில் இடம்பெற்ற போதும் சட்டத்தின் பிடியில் சிக்குவது சிற்றூழல் மட்டும் தான். இலங்கையிலும் கூட சிற்றளவு ஊழல்கள் மட்டுமே வெளிச்சத்திற்கு வருகின்றன. பேரளவு மற்றும் அரசியல் ரீதியான ஊழல்கள் சந்தைக்கு வருவது குறைவு சந்தைக்கு வந்தாலும் தண்டனைக்குள்ளாக்கப்படும் சந்தர்ப்பங்கள் மிகவும் அரிதாகவே பதியப்பட்டுள்ளன.

ஊழலை கண்டுபிடிப்பதும் அதனை நிரூபிப்பதும் கடினம் என்பது இதற்கான  ஒரு காரணம். உதாரணமாக, நிறுவனமொன்றில் இலஞ்சம் பெறப்படும் நடைமுறையின் போது இலஞ்சத்தை பெறுபவர் அதனை சேகரிப்பதில்லை. இடைத்தரகர்களும் ஆள்பிடித்துக் கொடுப்பவர்களும் அவற்றை சேகரிக்கின்றனர். பின்னர் அது நிலைக்குத்து அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் பகிரப்படுகிறது. இவ்வாறு கூட்டுக்களவாளிகளாகச் செயற்படுவதால் இவற்றை கண்டுபிடிப்பதும் தண்டிப்பதும் கடினம். எவ்வளவு இலஞ்சம் யாருக்கு தரவேண்டும் என்பதில் நிச்சயமற்ற தன்மை இருக்காது. பிடிபடும் தன்மையும் குறையும். இதனால் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது கடினம். இவற்றை தண்டனைகள் மூலம் மட்டும் கட்டுப்படுத்த முடியாது. தண்டனை அதிகரிக்க, இலஞ்சப் பணத்தின் அளவும் அதிகரித்துச் செல்வதை அவதானிக்கலாம்.

உண்மையில் ஒரு நிறுவனம் இலஞ்சம் வாங்காதவர்களை பெரும்பான்மையாகக் கொண்டிருந்தாலும் எல்லோரும் இலஞ்சம் வாங்குபவர்கள் என்ற வதந்தியை பரப்புவதன் மூலம் அந்நிறுவனத்தில் உள்ள இலஞ்சம் வாங்குபவர்கள் அதிக பணம் உழைக்கலாம்.

இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுடன் பிரபலமான ஒரு பொருளியல் அறிஞரான குன்னர் மிர்டால் (Gunner Myrdal) மேற்கொண்ட நேர்காணலின் போது “வீட்டுக்கூரையின் மீது ஏறி நின்று எல்லோரும் ஊழல்வாதிகள் என்று கூவினால் அது ஊழல் புரிவதற்கான ஒரு சாதகமான சூழலை உருவாக்கும். தாம் ஊழல் மிக்க சூழலில் வாழ்வதாக உணர்ந்தால் தாமும் அதனையே செய்ய முயல்வார்கள்” என்று நேரு குறிப்பிட்டதாக பதிவு செய்துள்ளார்.

எனவே எல்லோரும் ஊழல்வாதிகள் என்று நாமே கருதிக்கொண்டு அதற்கு அடங்கிப்போவது ஊழலை மேலும் அதிகரிக்குமே ஒழிய குறைக்காது. அதற்கு எதிராக ஒவ்வொருவரும் செயற்பட வேண்டியது அவசியம்.

கலாநிதி எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை, கொழும்பு பல்கலைக்கழகம்

Comments