மண் சரிவினால் பாதிப்புக்குள்ளான மத்துகம வோகன் தோட்ட வீட்டுத்திட்டம் பூர்த்தி | தினகரன் வாரமஞ்சரி

மண் சரிவினால் பாதிப்புக்குள்ளான மத்துகம வோகன் தோட்ட வீட்டுத்திட்டம் பூர்த்தி

களுத்துறை மாவட்டத்தின் மத்துகம, வோகன் தோட்ட கீழ்ப்பிரிவில் கடந்த காலங்களில் பல தடவைகள் ஏற்பட்ட மண்சரிவு ஆபத்துக்கு முகங்கொடுத்த 36குடும்பங்களுக்கென ஆரம்பிக்கப்பட்ட தனி வீட்டுத்திட்டம் பூர்த்தியடையும் நிலையிலுள்ளது.

மண்சரிவு ஆபத்துக்கு முகங்கொடுத்து பல இன்னல்களையும், துயரங்களையும், இழப்புகளையும் அனுபவிக்க நேரிட்ட இவர்களின் நிலை குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டது.

பல போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியதன் விளைவாக இவர்கள் எதிர்நோக்கிவந்த பிரச்சினைக்குத் தீர்வு கிட்டியுள்ளது.  நீண்ட இழுபறிக்கு மத்தியில் தோட்ட நிர்வாகத்தினால் காணி ஒதுக்கப்பட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ஏழு பேர்ச் காணி அளந்து அடையாளமிடப்பட்டு கடந்த ஆட்சியின் மலைநாட்டு புதிய கிராமம் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் ஒவ்வொரு வீடும் 10லட்சம் ரூபா செலவில் இலவசமாக அமைத்துக் கொடுக்கும் நோக்குடன் வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

வீட்டுத் திட்டத்துக்கான நிதி அமைச்சினால் மத்துகம பிரதேச செயலகத்துக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டு பிரதேச செயலகத்தினால் பயனாளிகளுக்கு கட்டம் கட்டமாக நிதி பகிர்ந்தளிக்கப்பட்டு பிரதேச செயலகத்தின் மேற்பார்வையிலும் ஆலோசனையின்படியும் பயனாளிகளின் விருப்புக்கு ஏற்றவாறு தத்தமது வீடுகளை தாம் விரும்பிய வடிவில் மேலதிகமாகப் பணம் செலவழித்து தாமே அமைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டு தற்பொழுது  பூர்த்தியடையும் நிலையில் உள்ளது. 

தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த நிலையில் வாழ்ந்து வருகின்ற போதிலும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் வழியவந்து அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுத்ததில்லை.

போக வேண்டிய இடங்களுக்கெல்லாம்  ஒன்றுக்கு பல தடவைகள் ஏறி இறங்கி பல போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியே பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளனர்.

அதேவேளை இத் தோட்டத்தின் இந்தகொட பிரிவில் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள 19குடும்பங்களுக்கு பாதுகாப்பான இடத்தில் வீடு அமைத்துக் கொடுப்பதற்கு தேவையான பொருத்தமான காணியை ஒதுக்கீடு செய்வதில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக  இழுபறி நிலையில் இருந்துவந்த காணிப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்துள்ளது.

களுத்துறை மாவட்ட செயலகம், மத்துகம பிரதேச செயலகம், தோட்ட நிர்வாகம் மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய தோட்ட நிர்வாகத்தினால் வோகன் தோட்ட கீழ்பிரிவில் இரண்டு ஏக்கர் காணி தெரிவு செய்யப்பட்டு அங்கு வீடு அமைப்பதற்கு பொருத்தம் என்பது உறுதி செய்யப்பட்டு தலா ஏழு பேர்ச் காணி பகிர்ந்தளிப்பதற்கான  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியின் மலைநாட்டு புதிய கிராமம் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் ஒவ்வொரு வீடும் 10இலட்சம் ரூபா செலவில் குடிநீர், மின்சாரம் மற்றும் பாதை வசதி அடங்கலாக அமைக்கப்பட்டு பயனாளிகளுக்கு இலவசமாகவே கையளிப்பதென தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் காணியை ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்டு வந்த தாமதம் காரணமாகவே வீட்டுத்திட்டத்தை ஆரம்பிப்பதில்  தடையேற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளையில் 2017ம் ஆண்டு ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் இந்த மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளான கொபொவெல, கோவின்னகந்த, கீகியனகந்த, வெஸ்ட் டிவிசன், நியூச்செட்டல் ஹோம் டிவிசன், டெம்போ, அரப்பொலகந்த, வொகன் கீழ்ப்பிரிவு, டெல்கித் பிரின்ஸ்லேன் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கென ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களில் அரப்பொலகந்த லிஸ்க்லேன் மற்றும் கோவின்னகந்த ஆகிய இரு தோட்டங்களின்  வீட்டுத் திட்டங்களே பயனாளிகளிடம் முறையாகக் கையளிக்கப்பட்டன.

ஏனைய வீட்டுத்திட்டங்கள் ஆமை வேகத்திலேயே இடம்பெற்று வருவதுடன் அதிகாரிகளோ, தொழிற்சங்கவாதிகளோ இது குறித்து ஆராய்ந்து பார்க்கவோ, குறைபாடுகள் குறித்து கண்டறியவோ முன்வராமை குறித்து தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க இயற்கை அனர்த்தத்தினால் மிகமோசமான பாதிப்புக்குள்ளான புளத்சிங்கள பிரதேச செயலகத்தின் கல்லுமலை, குடாதொல, குடாகங்கை, குயில்கா, ஹிரிகீகெலே ஆகிய தனியார் தோட்டங்களில் பாதிப்புக்குள்ளான பல குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டங்கள் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. தனியார் தோட்டங்களைச் சேர்ந்த இவர்களுக்கான காணியைப் பெற்றுக்கொடுப்பதில் இருந்துவரும் சிக்கல் காரணமாகவே வீட்டுத்திட்டம் இதுவரையில் தடைபட்ட நிலையில்  இருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிரிய மூர்த்தி

Comments