பெருந்தோட்ட மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தோட்ட மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான வேலைத்திட்டங்கள்

உலகத்திலுள்ள இருநூறு நாடுகளுக்கு மேல் கொவிட் 19 வைரஸ் தொற்று நாளாந்தம் பரவிக் கொண்டிருப்பதை அவதானிக்கலாம். ஒரு நாளையில் 800 இற்கு மேற்பட்ட மரணங்கள் கூட ஏற்பட்டிருந்ததை அவதானிக்கலாம். நோய்த் தொற்று பரவும் வேகம் சிலநாடுகளில் இலட்சங்களை தாண்டிவிட்டது. இன்று இந்த வைரஸ் தொற்று பிரித்தானிய பிரதமரையும், அரச குடும்பத்தைச் சேர்ந்த சார்லஸையும் தொற்றியிருப்பதாக அண்மையில் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் ஸ்பெயின் நாட்டின் இளவரசி தெராசா மேரி (வயது 86) இந்நோய் தொற்றியிருந்ததுடன் அவருக்கான சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார். இதுவரையும் 60 இற்கு மேற்பட்ட வைத்தியர்கள் இறந்துள்ளார்கள். தாதியர்கள், முதியோர்கள் சிறுவர்கள் என தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளார்கள். தற்போது உலக நாடுகள் அனைத்தும் இந்நோயிற்கான மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்ருக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்று மக்களிடையே பரவுவதை தடுப்பதற்காக நாடுகள் அனைத்தம் பல்வேறு வகையிலும் முடக்கபட்டுள்ளதுடன் பல்வேறு சட்டதிட்டங்களையும் நாளுக்கு நாள் அமுல்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தினமும் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் உயிரிழப்புக்களை பட்டியல் போட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றதை தடுத்து நிறுத்த முடியாமல் சினாவைத் தவிர ஏனைய நாடுகள் திணறுவதைக் காணலாம்.

ஒவ்வொரு நாட்டு மக்களும் வீடுகளில் அடைக்கப்பட்டுக் கிடக்கும் இந்த வேளையில் தங்களுடைய நாட்டு பாரம்பரிய உணவுகளைப்பற்றி பேசவும், தங்களுடைய பண்பாட்டு, பாரம்பரிய விழுமியங்களைப் பற்றி பெருமை பேசவும் தொடங்கியிருப்பதைக் காணலாம். பாரம்பரிய மருத்துவ முறைகள், கலை கலாசார பண்பாட்டு விழுமிய முறைகள், உணவு முறைகள், நோயாளர்களுக்கான உணவு, கர்ப்பிணித் தாய்மார், பாலூட்டும் தாய்மார்களுக்கான உணவு முறைகள், குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள், முதியோர்களுக்கான உணவு முறைகள் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றன.  வீடுகளிலேயும், தாங்கள் வாழ்ந்த சூழலிலும் கிடைத்த, அல்லது உற்பத்தி செய்த உணவு வகைகளை உண்டு வளர்ந்த சமூகங்கள் வீட்டில் சமைத்து உண்ட காலங்கள் போய் இன்று உடனடி உணவுகளைத் தேடி ஓடுகின்றன. தங்களுடைய உணவு முறைகளை மக்கள் மாற்றிக் கொண்டுள்ளார்கள். குறிப்பாக பிட்ஷா, பேகர், டேக் எவே, மற்றும் ஹோட்டல்களில் சாப்பிட தொடங்கியுள்ளதை அவதானிக்கலாம். இச்சமூகத்திற்கு இன்றொரு பலத்தடி கிடைத்திருப்பதடன் காலமும் தக்க வகையில் பதில் சொல்வியுள்ளதை அவதானிக்கலாம்.  

விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், டிஜிடல் தொழில்நுட்ப அறிவு வளர்ச்சிக்கும், போர் தளபாடங்கள் உற்பத்திற்கும், ஆயுத உற்பத்திறகும், அணுவாயுத உற்பத்திற்கும், போர் விமானங்கள், போர்க் கப்பல்கள், ஏவுகனை உற்பத்திற்கும், அணுகுண்டு, இரசாயன வாயு தயாரிக்கும் நிலைகளை கடந்து இன்று உயிரியல் போரின் ஊடாக  மூன்றாம் உலகப் போரை நடாத்த முடியுமா? என்ற ஒரு ஒத்திகையை உலக நாடுகள் மக்கள் மேல் நடாத்துகின்றதா? என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுhமல் இல்லை.  

எது எப்படி இருப்பினும் இறுதியில் உயிர் இழக்கப்போவது அப்பாவிப் பொது மக்களே என்பதை உணர்ந்து செயற்படும் காலம் வராமல் போகாது என்பது மட்டும் உண்மையாகும். உலகத்தில் பணம், பலம், அதிகாரம், சர்வதிகாரம், நாசிசம், பாசிசம், மக்களுக்கெதிரான ஆட்சி முறைகள், சட்டங்கள், கொள்கைகள், இராஜதந்திரங்கள், அடக்கு முறைகள், ஒடுக்கு முறைகள், அடிமைத்தனங்கள் எல்லாம்  ஏதோவொரு வகையில் ஒழிந்து விட்டதை உலக வரலாறு எடுத்துக் கூறுகின்றன. நானே பெரியவன் என்ற வாதம் உலகத்தில் இருக்கும் வரைக்கும் இவ்வாறான போட்டிகள் தொடந்து கொண்டிருக்கும் என்பது மட்டும் உறுதியாகும்.

இன்று இலங்கையிலும் பல மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மலையகத்தில் கடந்த மாதத்தில் நோர்வூட் பிரதேசத்தில் ஒரு சாரதியும் (வெளிநாட்டு வழிகாட்டி)  தற்போது டிக்கோயா பிரதேசத்தில் மதபோதகர்களுடன் 14 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.

மலையக மக்கள் என்பவர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு கூட்டமாக வாழ்ந்து பழகியவர்கள். மலையகப் பெருந்தோட்டச்  சமூகம் இப்பிரதேசங்களில் சுகாதாரம், சௌக்கியம், அடிப்படை சுகாதார பழக்கவழக்கங்கள் போன்றன பின்தங்கிய நிலையிலையே காணப்படுகின்றன. இன்றுவரையும் மலையகப் பெருந்தோட்டப் பிரதேசத்தின் சுகாதார, சௌக்கிய  சேவைகள் இலங்கையின் தேசிய சுகாதார, சௌக்கிய நீரோட்டத்தி;ல் இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் தோட்டங்களில் EMA (தோட்ட மருத்துவ உதவியாளர்) முறையும், தோட்டங்கள் தோறும் சிறு மருந்தகங்களுமே உள்ளன. வைத்தியர்கள் இல்லை. முறையாகப் பயிற்றப்பட்ட தாதிகள் இல்லை, தோட்ட சுகாதார தாதிகள் உள்ளார்கள். தோட்டங்களில் அம்புலன்ஸ் வசதிகள் இல்லை. போதிய மருந்துகள் இல்லை. நோயாளர் பரிசோதனை முறைகள் இல்லை. நோயாளருக்கான வார்ட் வசதிகள் இல்லை. இது ஒரு சில தோட்டங்களில் காணப்பட்டாலும் முறையான செயற்படுகின்றதா? என்பது தெரியவில்லை.

தோட்டங்களுக்கும் பிரதேச ஆதார வைத்தியசாலைக்கும் இடையிலான தூரம் அதிகமாக உள்ளது. போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ளது. தோட்டங்களுக்கான பாதை வசதிகள் செப்பனிடப்படாமல் குண்டும்; குழியுமாக காணப்படுகின்றன. பெருந்தோட்ட மக்களுடைய மாதாந்த வருமானம் மிக்க குறைவாக இருப்பதாலும் இம் மக்களின் சுகாதார சௌக்கிய வசதிகள் வெகுவாகப் பாதிக்ப்பட்டுள்ளன.

இவ்வாறான சூழ்நிலையில் வாழுகின்ற மலையகப் பெருந்தோட்ட மக்களை கொவிட் 19 வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், மக்களின் கல்வியறிவு, வாழும் சூழல், தொடர்புசாதனங்களின் பயன்பாடு, சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, சுய சிந்தனை, கட்டளைகளையும், ஆலோசனைகளையும் பின்பற்றும் தன்மை, சுயபாதுகாப்பு, சுய சுகாதாரம், சுயசுத்தம், அடிப்படை சுகாதார பழக்கவழக்கங்களை சிறு வயது முதலே கடைப்பிடிக்கும் பழக்கம் (வழக்கம்), சுகாதார விளக்கம், பழக்கம், சிறுவர் பராமரிப்பு, நோயாளர் பாதுகாப்பு, குழந்தைகள் பராமரிப்பு, உணவு கொள்வனவு செய்யும் முறை, உணவு சமைக்கும் முறை, உணவு உண்ணும் முறை, தன்னைப்பற்றிய சுய கவனிப்பு, வீடமைப்பு முறை (லயத்து வாழ்க்கை), உட்டகட்டமைப்பு வசதிகள் ( வடிகால் அமைப்பு, கழிவகற்றல் முறை ), மலசல கூட வசதி, சுத்தமான குடி நீர் வசதிகள், சுகாதார பாதுகாப்பு மற்றும் சுகாதார தடுப்பு முறைகள், முகக் கவசம் அணிதல், அதன் பயன்பாடு பற்றிய விளக்கம், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், அடிக்கடி சவர்க்காரம் இட்டு கைகளை கழுவுதல், வெளியில் சென்று வந்தால் குளித்தல், உடைகளை மாற்றுதல், தும்மும் போதும், இருமும் போதும் கைக்குட்டையைப் பயன்படுத்தல், தொற்று காணப்பட்டால் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளல் போன்ற பல்வேறான நடவடிக்கைகளுக்கு தயார்படுத்திக் கொள்வதோடு மலையகப் பெருந்தோட்டச் சமூகத்தையும் தயார்படுத்த வேண்டியது காலத்தின் கடமையும் பொறுப்பும் ஆகும்.

மலையகப் பெருந்தோட்ட மக்கள் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வாழப்பழகி இருந்தாலும், கொவிட் 19 வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்கு அரசாங்கம் கூறுகின்ற சட்டதிட்டங்களை மதித்து நடக்க வேண்டும். உணவு பொருள்களையும், நீரையும் அளவுக்கு அதிகமாக வீண்விரயம் செய்யக்கூடாது. பொது மலசலக் கூடங்களை தவிர்த்தல் அல்லது சுத்தமாகப் பயன்படுத்தல், குடிநீர் பெறும் இடங்களை மிகவும் சுத்தமாக வைத்திருத்தல்;. பாதுகாப்பானதும் சுத்தமானதுமான உடைகளை அணிதல் வேண்டும். போன்ற விடயங்களில் மக்கள் கூடிய கவனமெடுக்க வேண்டும். மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ணுதல, சூழலில் கிடைக்கும் உணவுகளை பயன்படுத்தல், மரக்கறிவகைகளை அதிகமாக உண்ணுதல், பழங்களை உண்ணுதல், சூடான நீரை அடிக்கடி பருகுதல்.

மலையகப் பெருந்தோட்டப் பிரதேசங்களில் மந்த போசனை, அனிமியா, போன்ற பிரச்சினைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. அத்துடன் மதுபாவனை, போதைவஸ்து பயன்பாடு கூட அதிகரித்துள்ளதாக செய்திகள் உலாவுகின்றன. இத்தகைய சூழ்நிலைகளில் இரண்டு இலட்சத் தோட்டத் தொழிலாளர்களையும், பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட மலையக மக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசாங்கத்திடம் இருந்தாலும் கூட ஒவ்வொரு  தனிமனிதர்களும் தங்களை தாங்களாகவே சுயமாகப் பாதுகாத்து கொள்ளாவிட்டால்; இதன் விளைவு பாரதூரமாக மாறுவதுடன் இந்த கொவிட் 19 வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தவும் முடியாது. எனவே மலையகப் பெருந்தோட்ட மக்களின் பூரண ஒத்துழைப்போடும், சுய ஒழுக்கம், சுய கட்டப்பாடு, சமூக இடைவெளியையும், மருத்துவ ஆலோசனைகளையும் முறையாக கடைப்பிடித்தால் இந்நோய் தொற்றலிலிருந்து மலையகப் பெருந்தோட்ட மக்களை காப்பாற்ற முடியும். எமக்கு எமது பெற்றோர்கள் வேண்டும், முதியோர்கள் ( தாத்தா, பாட்டி) வேண்டும்.

சிறுவர்கள், எமது பிள்ளைகள் வேண்டும். எமது உறவினர்கள் வேண்டும். எமது சமூகம் வேண்டும், எமது நாடு வேண்டும். இந்த மனித பிறவியை அனுபவிப்பதற்கு நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எல்வாவற்றையும் விட மக்கள் உயிரோடு இருக்க வேண்டும். இறுதியாக வெள்ளம் வந்த பின்பு அனைக்கட்டுவதை விட வெள்ளம் வருமுன்னே காப்பதுதான் சிறந்த முறையாகும் கொரோனா வைரஸ்க்கு சாதி, மதம், ஏழை பணக்காரன், நாடுகள், பிரதேசங்கள், சிறுவர்கள், முதியோர்கள் என்ற பாகுபாடு இல்லை என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயற்பட வேண்டும். நாட்டை பாதுகாப்பதற்காக வீட்டில் இருப்போம்.

இரா. சிவலிங்கம்  

Comments