ஏ. ரகுநாதன் என்ற கலைக் கோபுரம் சாய்ந்தது | தினகரன் வாரமஞ்சரி

ஏ. ரகுநாதன் என்ற கலைக் கோபுரம் சாய்ந்தது

கல்லூரியில் எனது ஆசானாகிய ஏ. ஜே. எம். சத்தார்  ஒரு நாள் “இந்தா எனக்கொரு நாடக டிக்கட் கெடைச்சுது. இ தை நீ போய் பார்”  என மேற்படி நாடகத்துக்கு அவர் நண்பர் ஒருவர் மூலம் அவருக்கு கிடைத்த நாடக டிக்கட் ஒன்றை நான் பாடசாலை நாடகங்களில் ஈடுபாடுடையதால் அதனை எனக்குத் தந்தார். 

அதைப் பார்த்து “உலகம் சிரிக்கிறது”    என நாடகத்தின் பெயரை நான் வாசித்த போது  “இவன்கள பார்த்து உலகம் சிரிக்காம  வேற என்னடா செய்யும்? ஒரு காலத்துல உன்னையும் பார்த்து உலகம் சிரிக்கத் தான் போவுது ”   என்று சிரித்தவாறே அவர் சொன்னது இன்றும் என் மனதில் பசுமையாக இருக்கிறது.

காரணம் அந்த நாடகத்தின் மூலமே முதன் முதலாக நான் ஏ. (அப்பாத்துரை) ரகுநாதன் என்ற மாபெரும் கலைஞனைச் சந்தித்தேன்.

நாடகத்தைப் பார்க்க கணடி புஷ்பதான மண்டபத்துக்கு மாலை ஐந்து மணியளவில் நான் சென்ற போது நாடகம் ஆரம்பமாக ஒரு மணித்தியாலமளவில் இருந்தது. என் கல்லூரி ஆசான்களாகிய ஐ. சின்னமணி, க. ஆறுமுகம் இருவரும் மண்டபத்தின் வாசலில் ஆஜானுபாகுவான ஒருவருடன் அளவளாவிக் கொண்டிருந்தார்.

அந்த ஆசிரியர்கள் அளவளாவிக் கொண்டிருந்த அந்த ஆஜானுபாகுவான நபருக்கு “இவர் தான் எங்கள் பள்ளிக்கூட நாடக ஆசிரியர்” என என்னை அறிமுகம் செய்து வைத்ததோடு “இவர் தான் ஏ. ரகுநாதன்” என அவரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.

அது கண்டி புஷ்பதான கல்லூரி மண்டபத்தில் அவரது “உலகம் சிரிக்கிறது”  நாடகம் மேடை ஏறிய போது 10. 07 1965 இல் எனக்கு அறிமுகமானவர்.

அப்போது ஏ. ரகுநாதனைப் பற்றிய தகவல்கள் ஏதும் நான் அறிந்திருக்க வில்லை.

‘நான் பேராதனை விவசாய திணைக்களத்தில் தான் வேலை செய்கிறேன். வசதிபட்டா வாருமேன் நிறைய கதைக்கலாம்’ என்றார். அடுத்த வாரமே நான் அவரைச் அவரது காரியாலயத்தில் சந்தித்தேன்

அன்று முதல் கடந்த 22. 04. 2020 வரை சுமார் ஐம்பத்தைந்து வருடங்களாக வளர்ந்திருந்த நட்பு ஏ. ரகுநாதன் என்ற மாபெரும் கலைக் கோபுரம் சாய்ந்து விட்டதால் அந்த நட்பும் ஓய்ந்து விட்டது.

ஏ. ரகுநாதன் யாழ்ப்பாணம் மானிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அப்பா அப்பாத்துரை, அம்மா தையல்நாயகி.

ரகுநாதன் ஒருவர் தான் இந் நாட்டில் இனம் மதம் குலம் கோத்திரம் பாராமல் அகில இலங்கை ரீதியாக தமிழ் பேசும் சகல நாடகக் கலைஞர் களையும் ஒன்று சேர்த்தவராவார். 

அதன் பின் அவர் தலைவராகவும் நான் செயலாளராகவும் இணைந்து உருவாக்கியது தான் “ நிழல் ” நாடக மன்றம். பின்னாளில் இந்த நாடக மன்றம்.

மூலம் நம் நாட்டில்  தமிழ் நாடக இயக்குனர் மேதையாக விளங்கிய சுஹைர் ஹமீத் இயக்கி கொழும்பில் மேடையேறிய  எம். பௌசுல் அமீரின் தமிழாக்கத்தில் ரஷ்ய எழுத்தாளர்   மெக்ஷிம் கோர்க்கியின் “ நகரத்துக் கோமாளிகள் ” நாடகம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சுஹேர் ஹமீத் இயக்கிய நாடகங்களுக்கு மண்டபவாயிலில் பெருமளவில் ரிக்கட்டுகளை நாம் விற்றோம். சுஹேர் ஹமீத் காலமே கொழும்பில் நாடகங்களுக்கான பொற் காலமென நான் இன்றும் உறுதியாக நம்புகிறேன்.

கண்டி, கொழும்பு, மாத்தளை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் எமது நிழல் நாடக மன்றம் மூலம் ஏ. ரகுநாதனும் நானும் தயாரித்து சுஹைர் ஹமீத் இயக்கி மேடையேறிய துறையூர் கே. மூர்த்தியின் “தேரோட்டி மகன்”  “இலங்கேஸ்வரன்”   ”கொழும்பிலும் மாத்தளையிலும் மேடையேறிய நாடகங்களாகிய கவிஞர் “அம்பி” யின் “வேதாளம் சொன்ன கதை” கவிதை நாடகம் எஸ். பொ. வின் “வலை” புலவர் தெட்சினா மூர்த்தியின் “ரகுபதி ராகவ ராஜாராம்”   (கண்ணாடி வார்ப்புகள்”  க. பாலேந்திரா அறிமுகம்) கே. எம். சுபியானின் “கொலைக்காரன்“ வாடகைக்கு அறை”  எஸ். ஏ. அழகேசனின்  “பாவிகள்” பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்திலும் யாழ். வீரசிங்கம் மண்டபத்திலும் ஏழு நாடக மன்றங்களை ஒன்றிணைத்து ஏழு தமிழ் நாடகங்களை இலவசமாக மேடை ஏற்றி நடாத்தினோம். இத்தனை நாடகங்களிலும் ஏ. ரகுநாதன் நடித்தார். “ஒரு வார நாடக விழா” என்பனவற்றை நினைக்கும் போது நாம் பிறந்தோம், இறந்தோம் என்றில்லாமல் நாம் ஏனையவர்களைவிட ஏதோ சாதித்தோம் என இன்றும் மனம் குளிர்கிறது.

இதே ‘நிழல்” நாடக மன்றம் முலம் மாதம் ஒரு இலவச நாடகம் திட்டத்தையும்  நாம் 2000 ஆம் ஆண்டு நடாத்தினோம்.

இவ்வாறு ஒருமித்து ஒரு துறையில் ஒருவராக இருந்த நாம் இதைவிட விரிவான இன்னொரு துறைக்கு பரிணாமம் பெறும்போது இருவராக விரிவடைந்தோம். அந்த துறை சினிமா ! ஏ. ரகுநாதன் “கடமையின் எல்லை” திரைப்படத்தைத் தயாரித்த  கலாபவன பிலிம்ஸாரின் இரண்டாவது தயாரிப்பாகிய “நிர்மலா”  திரைப்பட தயாரிப்புக்குத் தயாரானார்.

சுண்டிக்குளி சோமசேகரன் உடன் இணைந்து நான் கதை திரைக் கதை வசனம் எழுதிய ‘நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தில் தென் இந்திய நடிகர் ஸ்ரீகாந்துடன் அவருடைய அண்ணனாக ஏ. ரகுநாதன் நடித்தார்.

ஏ. ரகுநாதன் ‘கடமையின்  எல்லை” “நிர்மலா”  (இணைத் தயாரிப்பாளர்).என்னுடைய ‘நெஞ்சுக்கு நீதி’ வி. பி. கணேசனின் ‘புதிய காற்று’ போன்ற ஈழத்து திரைப் படங்களில் நடித்துள்ளார்.

பேராதனை ஜுனைதீன்

Comments