வாழ்வாதாரமாசேதாரமா...126 | தினகரன் வாரமஞ்சரி

வாழ்வாதாரமாசேதாரமா...126

வாழ்க்கை முறையை இப்படி புரட்டிப்போட்ட காலத்துக்கு நாம் நன்றி சொல்லவா? அல்லது பகை கொள்ளவா எதுவும் புரியவில்லை. பாருங்கள் கோப்ரேட் கம்பனிகளின் நலனையே முக்கியமாக கொண்டு எமது வாழ்க்கை முறை மாறியிருந்தது. ஆனாலும் சிலர் இன்னமும் இயற்கையை நேசித்து வந்தார்கள். இரண்டிலுமே நன்மையும் தீமையும் கலந்தே இருந்ததாக நாம் இப்போது ஏற்றுக்கொள்ள வேண்டியதாகிவிட்டது.

ஆயிரத்துதொள்ளாயிரத்து ஐம்பத்து எட்டாம் ஆண்டு ஊரடங்கு போடப்பட்டபோது மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் நொந்துபோய் இருந்தார்கள். தொடர்ந்து ஆயிரத்து தொளாயிரத்து எழுபத்தேழு எண்பத்து மூன்றாம் ஆண்டுகளிலும் இதேநிலை தொடர்ந்தது. இப்போது உலகம் முழுவதையும் பீடித்துள்ள பெருநோய்க் கெதிராக ஊரடங்கு வந்துள்ளது. ஆனாலும் என்ன பொருளாதாரரீதியாக இந்த உலகம் மிகமோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது.

சுய பொருளாதாரத்தை எந்தநாடும் வளர்க்கவில்லை. எப்போதும் ஏதோ ஒன்றுக்கென்றாலும் அது தேவையோ தேவையில்லையோ இன்னுமொரு நாட்டை சார்ந்தே வாழ்ந்து வருகிறோம் வந்திருக்கிறோம். இன்றுதான் உண்மை தெரிகிறது. எமது மண்ணில் என்னவெல்லாம் இல்லையோ அதெல்லாம் உருவாக்கக் கூடியவல்லமை எங்களுக்கு இருந்தது. ஆனால் நாம் அவற்றை பொருட்படுத்தவில்லை. என்பது.

கத்தரி முதல். சகல காய்கறிகளும் எமது மண்ணில் விளைந்தது அதில் விதை சேகரிப்பையும் மீள் உருவாக்கத்தையும் நாமே செய்தோம், ஆனால் அண்மைக்காலங்களில் நமது கத்தரி விதைகள்’ முளைக்கவில்லை முளைத்தாலும் காய்க்கவில்லை. காரணம் அவற்றின் மரபுவழி உரிமையை பெற்று கோப்பிரேட் நிறுவனங்கள் விதைகள் இல்லாத மரக்கறிகளையும் பழங்களையும் எமக்கு தந்து அவற்றின் அமோக விளைச்சலை எமக்கு அறிமுகப்படுத்தின. அதுமட்டுமா இவற்றுடன் புதியபுதிய நோய்களும் இந்தப் பயிர்களில் உருவாகின. அவற்றுக்கும் மருந்துகளை அவர்களே அனுப்பினார்கள். எமதுமண்ணில் கால்நடைகளின் சாணமும் பயிர்களுக்கு எருவான பசுந்தாட்களும் கவனிப்பாரற்று காடுகளில் வீசப்பட்டன. இராசயன உரங்களை வாங்கி எமது நிலங்களில் கொட்டி அவற்றை நாமே கெடுத்தோம்.

இப்போது வீட்டுத் தோட்டங்களை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளை பொதுநிறுவனங்கள் பல எடுத்துவருகின்றன. தின்றுவிட்டு தூக்கியெறிந்தால் விழுகிற இடத்தில் முளைக்கிற பப்பாசி விதைகள் இன்னும் எமது மண்ணில் இருக்கின்றன.

அதேபோல மாதுளை இருக்கிறதா இல்லை. விதையில்லாத முந்திரி விதையில்லாத பூசினி விதையில்லாத வெண்டைக்காய் என்று விரும்பி வாங்கிச் சாப்பிடுகிற எங்கள் மக்கள் மாறிவிட்டார்களா. இல்லவே இல்லை. பயற்றங்காய், வெண்டிக்காய், கத்தரிக்காய். வல்லாரை, புதினா, பப்பாசி என உள்ளூர் உற்பத்திகளை வைத்து சீவியம் நடத்திய சிறுதோட்ட விவசாயி சொன்னார் சனம் அதுகள வாங்கினாத்தானே அவைக்கு இங்கிலீசு மரக்கறியள்  வேணுமாம் கோவா லீக்ஸ் கரட், பீட்ருட் எண்டுதானே அலையுதுகள்’.
உங்களுக்கு தெரியுமா கோவா பயிருக்கு ஒன்று விட்டொரு நாள் கிருமிநாசினி அடித்தே ஆகவேண்டும் இல்லையேல் பூச்சி அரித்துவிடும். லீக்ஸ், கரட் போன்றவையும் வாரம் ஒருமுறை கிருமிநாசினி பாவித்தே ஆகவேண்டும. நான் ஒரு விவசாயியாக சொல்கிறேன்;. இதை எந்த விவசாயியும் மறுக்கமாட்டான். அதைவிடுங்க.

எல்லா கிருமிநாசினி போத்தலிலும்; எழுதப்பட்டிருக்கும். அதை பாவித்த பதினைந்து நாட்களுக்கு அறுவடை செய்யக்கூடாது என்று.  காய்த்துக் கொண்டிருக்கும் பயிருக்கு இந்த விதிமுறை ஒத்துக் கொள்ளுமா பாருங்கள் கத்தரிக்காய் ஐந்து நாட்களுக்கொருமுறை ஆயவேண்டும் அப்படியில்லா விட்டால் அது முற்றிப் பழுத்துவிடும். வெண்டைக்காய் ஒன்றுவிட்டொருநாள் அறுவடை நடக்கும். பயற்றங்காய் இரண்டுவிட்டொரு நாள் அறுவடை நடக்கும். தக்காளி தினம் பறிக்கவேண்டும். இப்ப சொல்லுங்க எமதுஉணவில் எவ்வளவு நஞ்சு கலந்திருக்கிறது.

இயற்கை விவசாயம் என்னென்ன வழிகளிலெல்லாம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்பதை நாமறிவோம். பணத்தை எண்ணுவதற்காக பயிர் செய்தகாலம் போய் உடல் நலத்தை எண்ணி பயிர் செய்யும் காலம் மீண்டும் வந்திருக்கிறது.

ஊரில் உற்பத்தியாகும் துணிவகைகளில் எமது மனம் ஈடுபடுவதில்லை அது சிங்கப்பூர் இந்தியா என வெளியிலிருந்து வருவதே தகுதியானதாக கொள்கிறோம் ஆனால் நான் இந்தியாவில் துணிவாங்கும் போது அவர்கள் தமது துணிகளை சிறீலங்கா துணி பயமில்லாம வாங்குங்க என கூறிவிற்றதை பலரிடம் சொல்லி வியந்திருக்கிறேன். எப்படியோ ஒரு பற்றாக்குறை பட்ஜெட்டையும் துணிகளே இல்லாத துணிக்கடைகளையும் வெற்று ராக்கைகளுடனான பலசரக்கு கடைகளையும் அடிக்கடி இடம்பெயர்ந்தலையும் பார்த்தவர்கள் நாங்கள்.

அப்பவும் லொத்தர் சீட்டில் புடவை வாங்கவும் தபாலில் பார்சலில் புடவை வாங்கவும் எமக்கு வழியிருந்தது.

சுய பொருளாதாரம் எமது விவசாயத்தில் கையாளப்பட்டிருந்தது. அட அவ்வளவு அனுபவங்களிருந்தும் காஞ்சமாடு கம்பில விழுந்த மாதிரி கடந்த பத்து வருடங்களில் எப்படி மாறிவிட்டோம்.

இப்போதுதான் நவீன கண்டு பிடிப்புகளால் இந்த மூடியுள்ள இருண்டகாலத்தில் கொஞ்சம்கூட அலட்டிக்கொள்ளாமல் இணையத்துக்குள் புகுந்து உலகம் முழுக்க ஓடித்திரிகிறோமே அது மகிழ்ச்சியில்லையா? ஐம்பத்தெட்டு கலவரநேரம் இதேபோன்ற ஊரடங்கு நேரம் எமது கிராமத்தில் ஒரேயொரு வானொலிப் பெட்டியில் செய்தி கேட்பதற்கு ஊரே திரண்டு நிற்கும்.

பத்திரிகை வரவேயில்லை. எழுபத்தேழிலும் வானொலிதான் அப்போது கிராமத்தில் மூன்று வீடுகளுக்கொரு வானொலி வந்துவிட்டது. நானே இருநூற்றைம்பது ரூபாவுக்கு ஒரு டரான்ஸிஸ்டர் வாங்கிவிட்டேன்.

அதுதான் எமது ஊருக்கு வந்த முதல் கையிலெடுத்துச் செல்லும் வானொலி.

என்ன லாபமென்றால் வயல் வரப்பில் கிடந்துபாடும். இப்போது உலகம் முழுதும் ஊரடங்கு வீட்டுக்குள்தான் உலகம் வந்துவிட்டதே பார்க்கலாம் இன்னும் என்னென்ன இருக்கிறதோ.

தமிழ்கவி

Comments