மீள்வோம் நாளை நாமாக! | தினகரன் வாரமஞ்சரி

மீள்வோம் நாளை நாமாக!

கொரோனா எனும் வைரஸ் தொற்று அச்சம் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சவாலாக கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து நாம் நாமாகவே மீளவேண்டும். இந்த மீட்சி என்பது நோய் மற்றும் பொருளாதாரம் இரண்டையும் வெல்வதில் தங்கியுள்ளது.

கொரோனா உலக நாடுகளையே  தனது  கட்டுப்பாட்டில்  கொண்டுவந்து  மூன்று மாதங்களை கடந்துள்ள நிலையில் இதனால் கிட்டத்தட்ட 180 நாடுகள் பொருளாதார ரீதியாக பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளன. இதற்கு இலங்கை மட்டும் என்ன விதிவிலக்காகவா முடியும். அபிவிருத்தி அடைந்த மற்றும் வல்லரசு நாடுகளுக்கே இந்த  வைரஸ்  பொருளாதார  வீழ்ச்சியை

ஏற்படுத்திய நிலையில்  வளர்ந்துவரும்  நாடான  இலங்கை  இதன் தாக்கத்தினால்  பொருளாதார  நெருக்கடியை  சந்தித்துள்ளமை  வியப்பல்ல. இருந்தும் விழுந்த பொருளாதாரத்தை மட்டுமல்ல அதற்கு மேலாக புதியதோர் மைல்கல்லை நோக்கி பயணிக்கவேண்டிய கடமை நாட்டு மக்களிடத்தும் அதனை செயற்படுத்தவேண்டிய  பொறுப்பு தலைமையிடமும் உள்ளது.

இலங்கையில் இன்றளவில் இந்த வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 936ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 09ஆகவும் காணப்படுகிறது.

கொரோனா வைரஸானது முதலில் எங்கிருந்து பரவியது? யார் பரப்பினார்கள்? வைரஸ் பரப்பட்டதா அல்லது பரவியதா? இவ்வாறான கேள்விகளுக்கு பதில் தேடும் படலம் தற்போது தணிந்து இவ்வாறு நடந்து விட்டது இதில் இருந்து மீள என்ன வழி? என்ற கேள்விக்கு பதில் தேடும் படலமே தற்போது ஆரம்பமாகியுள்ளது. அந்தளவிற்கு நாள்தோறும் வைரஸ் தொற்று சார்ந்த செய்திகள் மக்களை சலிப்படையச் செய்துவிட்டன என்பதே உண்மை.

 வைரஸ் என்பதற்கு பின்னால் பாரிய உலக அரசியல் மற்றும் வணிக எண்ணம் மறைந்திருக்கலாம் இல்லாமலும் போகலாம் ஆனால் இதனால் ஏற்பட்டுள்ள இழப்பு, பாதிப்பு என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இந்த வைரஸ்  என்ன செய்யும் என்பதை விட இழப்பை எவ்வாறு ஈடுசெய்வது என்பதிலேயே தற்போது அனைவரது எண்ணங்களும் ஓடுகின்றன.

இலங்கையில் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு பின்னர் பகுதியவில் தளர்த்தப்பட்டு அரச பணிகள் மற்றும் வணிக செயற்பாடுகள் கட்டுப்பாட்டுடன் மீள இயங்க ஆரம்பித்துள்ள போதும் நாடு பொருளாதார ரீதியில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. என்பதே தற்போ​ைதய நிலைமை.

இந்த வைரஸ் தொற்றின் நிலைமை தற்போது ஓரளவிற்கு கட்டுப்பாட்டில் உள்ளது என்ற நிலைபாட்டை எடுத்துள்ள அரசு  11 ஆம் திகதி முதல் நாடு வழமைக்கு திரும்பும் எனவும் போக்குவரத்து சேவைகள் மற்றும் அனைத்து  அரச நிறுவனங்களும்  கட்டுப்பாடுகளுடன்  மெல்ல மெல்ல  இயங்கும் என அறிவித்தது.

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியினை கையாள்வது என்பது நாட்டில் நாடாளுமன்ற ஒன்று கூடல் மற்றும் துறைசார் பிரதிநிதிகள் அற்ற நிலையில் ஜனாதிபதிக்கு சவாலான விடயமே!.

நாட்டின் பொருளாதார பின்னடைவு நாட்டின் பிரஜையான ஒவ்வொரு தனிமனிதனையும் பதிப்பதைப்போல், நாட்டின் ஒவ்வொரு தனிமனிதனின் தன்னிறைவு முயற்சியும் நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தும் என்பதில் ஐயம் இல்லை.

நாடு சந்தித்துள்ள தற்போ​ைதய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அரசின் முயற்சி மட்டும் போதாது. இந்த முயற்சிக்கு மக்களின் ஒத்துழைப்பே உந்துசக்தியாக இருக்கவேண்டும் அப்போதுதான் பொருளாதாரம் மெல்ல மேலோங்குகிறது என்பதை அனைவரும் உணரமுடியும்.

மே மாதம் 06ஆம் திகதி  வெளியாகிய  ஜனாதிபதி கோட்டபாய  ராஜபக்ஷவின்    ஊடக அறிக்கையில் கொவிட் - 19 நோய்த்தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை  மீண்டும் கட்டியெழுப்ப  முடியுமெனவும்,  இதற்காக சுற்றுலா  கைத்தொழில் ஊக்குவிப்பு பல்வேறு வழிகளில் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் உயர் கல்விக்காக நாட்டிலிருந்து அந்நிய செலாவணி வெளிச்செல்வதை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் உள்நாட்டில் மருந்துப்பொருள் உற்பத்திக்கான திட்டம். பற்றியும்  பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்ய கடன் வாங்குவதற்கு பதிலாக முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இதற்காக புதிய பொருளாதார மாதிரியொன்றை தயாரிக்கும் பொறுப்பு பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளது. செயலணி விடயத் துறைகளுக்கு ஏற்ப பகுதியாக பிரிந்து இலக்குமயப்பட்ட புதிய பொருளாதார திட்டங்களை தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை செயற்படுத்துவதற்காக தனது அதிகாரிகளுக்கு ஜனாதிபதி எவ்வகையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார் என்பது தொடர்பிலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களாக கூறப்பட்டுள்ளதாவது, கொவிட் -19 வைரஸை ஒழித்து மீண்டுள்ள நாடுகளை இலக்காகக் கொண்டு சுற்றுலா பயணிகளை அழைத்து வர முடியும் என்றும், 

கொவிட் -19 ஒழிப்புக்கு இலங்கை மேற்கொண்ட முறையான நடவடிக்கைகளை ஏனைய நாடுகளுக்கு எடுத்துக்கூறி சுதேச மற்றும் மேலைத்தேய சிகிச்சைக்காக சுற்றுலா பயணிகளை கவர முடியும்.

சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சுகாதார சான்றிதழுடன் வீசாக்களை வழங்கி அதிகம் செலவிடக்கூடிய இயலுமையுள்ள சுற்றுலா பயணிகளை அழைத்துவர திட்டமிட வேண்டும்.

சில நாடுகளில் சுற்றுலா பயணிகள் குளிர் காலத்தில் நீண்ட காலத்திற்கு வேறு நாடுகளுக்கு செல்கின்றனர். அத்தகைய சுற்றுலா பயணிகளை இலக்காகக் கொண்டு நீண்ட கால சுற்றுலா பயணிகளை அழைத்து வந்து சுற்றுலா கைத்தொழிலை விரைவாக கட்டியெழுப்ப முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை தீவானது சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்கும் நாடு என்பது அனைவரும் ஏற்கும் ஒரு விடயம்.

இயற்கை எழில் கொஞ்சும் இந்து சமுத்திரத்தின் முத்தான இலங்கையை  பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீட்பதற்கு ஜனாதிபதியின் இந்த முதல் முயற்சி ஏற்புடையது  மட்டுமல்ல சாத்தியமானதும் கூட!

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி முன்வைத்துள்ள அடுத்த யோசனையாக, துறைமுக நகரம் மற்றும் ஹம்பந்தோட்டை கைத்தொழில் வலயம் ஆகியவற்றை குறிப்பிடலாம். இவற்றை மையப்படுத்தி வெளிநாட்டு முதலீட்டாளர்களை கொண்டுவருவதற்கான  வாய்ப்புகள் குறித்து ஆராயப்பட்டுள்ளதோடு வெளிநாட்டு கடனுக்கு பதிலாக முதலீட்டு வாய்ப்புகளுக்கு திட்டமிடும் பொறுப்பு அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதிகளில் கவனம் செலுத்துதல், புதியவற்றை கண்டறிந்து அதனை சர்வதேச சந்தைகளுக்கு எடுத்துச் செல்லல், ஆகிய முயற்சிகளை மேற்கொள்வற்கும் ஜனாதிபதி தனது செயலகத்துக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

மே 11 முதல் தனியார் நிறுவனங்களின் அலுவலகங்களை மு.ப 10.00 மணிக்கு ஆரம்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதும் கைத்தொழில் நடவடிக்கைகளை தமது தேவையின் படி நடத்திச் செல்ல முடியும். எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. அரசின் இவ்வாறான அறிவித்தல்கள் நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் சென்றடைவதில்லை என்பது எந்தளவிற்கு உண்மையோ அந்தளவிற்கு அனைத்து அதிகாரிகளும் இதனை செயற்படுத்துவதில்லை என்பதும் உண்மை. 

அனைவரும் ஒன்றிணைந்து  செயற்பட்டால் மாத்திரமே ஜனாதிபதியின் இந்த எண்ணங்கள் அனைத்தும் செயல்வடிவம் பெறும். செயல்வடிவமே நாட்டை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து தடுத்து நிறுத்தும். 

மேலும் ஓவ்வொரு வருடமும் மருந்துப்பொருள் இறக்குமதிக்காக பெருமளவு அந்நியச் செலாவணி செலவிடப்படுகிறது.

இவற்றில் பெரும்பாலான மருந்துகளை நாட்டில் உற்பத்தி செய்ய முடியும். அதற்குத் தேவையான பின்புலத்தை விரைவில் உருவாக்கும் பொறுப்பும் ஜனாதிபதி செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மற்றும், விவசாயத் துறைக்கு தேவையான பல விதை வகைகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இவ்வாறு ஜனாதிபதியின் கடந்த கால  அறிவித்தல்கள் பல நிறுவன மேல்தரப்பினரால் நடைமுறைப்படுத்தப்படவில்லை குறிப்பாக லீசிங் கடன் வசூல் மற்றும் கடன் வசூல் போன்றன தொடர்ந்தும் நடைமுறைப் படுத்தப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன.

எனவே  அறிவித்தல்கள் நடைமுறைப் படுத்தப்படுவதை கண்காணிப்பதும் அவசிம் அவ்வாறு  செயல்படுத்தினால் நிச்சயமாக இலக்கை இலகுவாக அடையமுடியும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இலங்கையை பொறுத்தவரையில் கடந்த சில ஆண்டுகளாக பொருளாதாரம் என்பது மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகிறது. இதனை சரி செய்வதற்கு அரசாங்கம் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தினாலும் இவ்வாறான இடரினால்  நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்தும் பின்னடைவையே சந்தித்து வருகிறது.

நாட்டின் பொருளாதார வீழ்ச்சியில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பொறுப்பு உள்ளது. 

பொருளாதார வீழ்ச்சியில் பாதிக்கப்படுவது நாமே என்ற எண்ணத்தை ஒவ்வொருவரும் மனதில் கொண்டு நமக்கு தேவையானதை நாமே உருவாக்குவோம் மீள்வோம் நாளை நாமாக.

எஸ். சொரூபன்  

Comments