பொறுப்புள்ள பதவியில் இருப்பவர் தனிப்பட்ட கருத்துக்களை கூறமுடியாது | தினகரன் வாரமஞ்சரி

பொறுப்புள்ள பதவியில் இருப்பவர் தனிப்பட்ட கருத்துக்களை கூறமுடியாது

ஒரு தேர்தலை ஜனநாயக ரீதியாக நீதியாகவும் சுயாதீனமாகவும் நடத்த வேண்டிய ஒருவர் கட்சி ஒன்றுக்கு வாக்களிக்கக் கூடாதென கூறுவதென்பது மிகவும் பாரதூரமான உரிமை மீறல் என்கிறார் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.தவநாதன். தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணலில் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரான இரட்ணஜீவன் ஹூல் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஏன் தயங்குகின்றார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். நேர்காணலின் முழு விபரம்...

கே: நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பாக உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்: பொறுப்பற்ற சில அரசியல் கட்சிகள் இந்தத் தேர்தலை நடாத்தக்கூடாது என்று  நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து பல்வேறு இடையூறுகளை விளைவிக்க முயற்சித்தன.

தேர்தல் நடாத்தக்கூடாதென ஜனநாயக நாடொன்றில் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தியதென்பது மிகவும் புதுமையான ஒரு விடயம். இவ்வாறான சதித்திட்டங்கள் எதிர்ப்புக்கள் குழிபறிப்புக்களை மீறி ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இது இலங்கையின் ஜனநாயகத்திற்கும் ஜனநாயக கட்டமைப்பிற்கும் கிடைத்த வெற்றி என தான் நான் கருதுகின்றேன்.

இந்தத் தேர்தலும் மிகவும் நீதியாகவும் சுயாதீனமாகவும் நடக்கும். இலங்கை குடிமக்கள் அனைவரும் பெருமைப்படக்கூடியவாறு இந்தத் தேர்தல் நடைபெறும்.  அதை நான் வரவேற்கின்றேன். எமது கட்சி ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் வரவேற்கின்றது.

கே: கொவிட் -19பிரச்சினை நிலவும் இந்தக் காலப்பகுதியில் நடாத்தப்படவுள்ள இந்த தேர்தல் நீங்கள் கூறிதைப்போல நீதியாகவும் சுயாதீனமாகவும் நடைபெறும் சாத்தியங்கள் உள்ளனவா?

பதில்: சில வேளைகளில் வாக்களிப்பு வீதம் குறையலாம். அதாவது மக்கள் நோய்த் தொற்றின் அச்சம் காரணமாக வாக்களிக்கும் சந்தர்ப்பத்தை தவிர்க்கலாமே தவிர தேர்தலில் வேறு விதமான முறைகேடுகளோ சட்ட மீறல்களோ இடம்பெறுவதற்கான வாய்ப்பும் இல்லை.

கே: தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஹூல் பொதுஜன பெரமுன கட்சிக்கு வாக்களிக்கக்கூடாது எனக் கூறியமையை அவரின் தனிப்பட்ட கருத்தாக பார்க்கின்றீர்களா?

பதில்: அவரின் கருத்தை தனிப்பட்ட கருத்தாக நான் பார்க்கவில்லை. ஏனெனில் அவர் சுயாதீன ஆணைக்குழுவின் உறுப்பினர் பொறுப்புள்ள ஒரு பதவியில் இருப்பவர் தனிப்பட்ட கருத்துக்களை கூற முடியாது. உண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனும் ஆயுதப் போராட்டம் தொடர்பான ஒரு கருத்தைக் கூற அக்கட்சியினர் அவரின் தனிப்பட்ட கருத்து என கூறினார்கள். அதையும் கூட ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் ஒரு கட்சியின் அதிகாரம் அளிக்கப்பட்ட ஒரு பேச்சாளர் ஒரு ஆணைக்குழுவில் இருப்பவர் உயர் அதிகாரியாக இருப்பவர் கட்சியின் தலைவராக இருப்பவர் கூறும் கருத்துக்களை தனிப்பட்ட கருத்து என கூற முடியாது. அவ்வாறு கூறக் கூடியவர்கள். அந்தந்தப் பதவிகளில் இருந்து விலகுவதுதான் பொருத்தமானது.

இங்கு தேர்தல் சட்டங்கள் மிக இறுக்கமாக இருக்கின்றன. அரச அதிகாரி தேர்தலில் கட்சி சார்பாக பக்கச் சார்பாக நடக்கக் கூடாது என்பதைக் கண்காணிக்க  எத்தனையோ அமைப்புக்கள் உள்ளன.. தேர்தல் பிரசாரத்தில் அரச உத்தியோகத்தர்கள் பங்குபற்றக்கூடாதென்பதற்கு எத்தனையோ கட்டுப்பாடுகள் உள்ளன.

ஒரு தேர்தலை ஜனநாயக ரீதியாக நீதியாகவும் சுயாதீனமாகவும் நடத்த வேண்டிய ஒருவர் கட்சி ஒன்றுக்கு வாக்களிக்கக் கூடாதென கூறுவதென்பது மிகவும் பாரதூரமான உரிமை மீறல். அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கோ அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கோ ஏன் தாமதிக்கின்றார்கள் எனத் தெரியவில்லை.

கே: தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரின் கருத்து  தேர்தல் ஆணைக்குழுவின் மீதான நம்பிக்கையைச் சிதைத்து விடுமா?

பதில்: அரசியல் கட்சியினர் பொது மக்கள் மற்றும் ஜனநாயகத்தை விரும்புபவர்கள் இதனை பாராதூரமான கருத்தாகவே பாரப்பர். மற்றுமொரு விசித்திரம் என்னவென்றால் சின்னசின்ன விடயங்களில் கூட மூக்கை நுழைக்கும்  இலங்கையில் உள்ள தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் உட்பட அரசசார்பற்ற நிறுவனங்கள் அனைத்தும் ஆணைக்குழுவின் உறுப்பினரின் பாரதூரமான கருத்துக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதுதான்.  இவ்வாறான நிறுவனங்களின் பக்கச்சார்பைத் தான் இது காட்டுகின்றது.

கே: தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரின் அந்த கருத்தால்  அக்கட்சியின் வாக்கு வீழ்ச்சியடையுமென நினைக்கின்றீர்களா?

பதில்: இல்லை இது பொதுஜன பெரமுனவின் வெற்றியைப் பாதிக்காது. மாறாக இப்படியானவர்களின் கருத்துக்கள்; பெரும்பான்மை மக்களின் வாக்குகளை அக்கட்சிக்கு அதிகமாக கிடைக்கச் செய்யவே வழிவகுக்கும்.

கே:  சிறுபான்மை மக்கள் மத்தியில் பெரமுன கட்சி பற்றிய நிலைப்பாடு தற்போது எவ்வாறுள்ளது?

பதில்: கடந்த 30வருட யுத்தத்தை முடித்து வைத்தவர் மீதுதான் 30வருட யுத்தக் குற்றங்களையும் சிறுபான்மை மக்கள் சுமத்துகிறார்கள். குறிப்பாக தமிழ் மக்கள். அந்தவகையில் அக்கட்சிக்கு ஆதரவு மிக குறைவாகவே இருக்கின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் கூட அது வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனால் இந்த நாட்டில் சிறுபான்மை இனத்தவர் என்பது 40அல்லது 50வீதமானவர்கள் அல்ல. சுமார் 25வீதமானவர்கள் தான். இவர்களின் வாக்குகள் இலங்கை அரசியலை தீர்மானிப்பதில்லை என்பது கடந்த தேர்தலில் வெட்டவெளிச்சமானது. எனினும் சிறுபான்மை மக்கள் மிகவும் புத்திசாதுரியமாக தமது கட்சிகளை தெரிவு செய்வதன் மூலம் தான் இந்த நிலைமையை மாற்ற முடியும். சிறுபான்மைக் கட்சிகளிடையே இனவாதத்தைக் கக்கும் கட்சிகள் செயற்திறன் அற்ற கட்சிகள் ஊழல் மிகுந்த கட்சிகள் என ஒவ்வொன்றையும் நிராகரிப்பதன் மூலம் தான் நாட்டில் மாற்றம் ஏற்படுத்தப்படும்.

கே: நடைபெறவுள்ள தேர்தல் பற்றி அரசியல்வாதிகள் ஆர்வம் காட்டியளவிற்கு பொது மக்கள் ஆர்வம் காட்டவில்லை. அந்தவகையில் தமிழ் அரசியல் கட்சிகள் தேர்தலில் அமோக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இருக்குமென எண்ணுகின்றீர்களா?

பதில்: தமிழ் பிரதேசங்களில் தமிழ் கட்சிகள் வெற்றி பெறும். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு இம்முறை பாரிய தோல்வியைச் சந்திக்கும். எமது ஈழ மக்கள் ஜனநாயக கட்சி கணிசமான வாக்குகளைப் பெற்று வெற்றியைப் பெறக்கூடிய நிலமை காணப்படுகின்றது. தமிழ் பிரதேசங்களை பொறுத்தவரையில் தமிழ் கட்சிகள் தான் வெல்லக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. கடந்த காலங்களைப் போன்று 22பாராளுமன்ற உறுப்பினர்கள்  அதற்குப் பிறகு 16உறுப்பினர்கள் என்று இம்முறை அவர்களால் வெல்ல இயலாது.  இம்முறை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பாராளுமன்ற உறுப்பினர்களே இருக்க மாட்டார்கள்.

கே: ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மக்களுக்கு பல்வேறு உதவித்திட்டங்களை முன்னெடுத்த போதிலும் வாக்குகள் எதிர்பார்த்தளவில் கிடைப்பதில்லையே. அந்தவகையில் ஈ.பி.டி.பி அமோக வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உண்டா?

பதில்: வெற்றி வாய்ப்பு இருக்கின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலை வைத்துக்கொண்டு பொதுத் தேர்தலை கணிக்க முடியாது. கடந்த உள்ளுராட்சி தேர்தலில் ஈ.பி.டி.பி க்கு 85ஆயிரம் வாக்குகள் கிடைத்துள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகள் 50ஆயிரத்தால் குறைவடைந்துள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கான வாக்குகள் குறைவடைவதற்கான சம்பவங்கள் அதிகளவில் நடந்துள்ளன. அதற்கு சிகரம் வைத்தது போன்று அமைந்தது அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரன் கூறிய கருத்து.

தமிழ் மக்கள் அனைவரின் இதயங்களிலும் கனத்துக்கொண்டிருக்கின்ற ஒரு விடயம் ஆயுதப் போராட்டம். அந்தக் காலத்தில் ஆயுதப் போராட்டம் தான் தமிழர்களின் தீர்வாக இருந்தது. தீர்வென்று நம்பப்பட்டது.

ஆயுதப் போராட்டத்தை எந்தவொரு தமிழ் அரசியல் கட்சியும் நிராகரிக்கவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரன் ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறியது ஒவ்வொரு தமிழ் மக்களின் இதயத்திலும் ஆழமாகப் பதிந்திருக்கின்றது. மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு சரியான பாடத்தை தேர்தலில் புகட்டுவார்கள்.

அவர்கள் கடந்த காலத்தில் செய்த திருகுதாளங்களை காலத்திற்கு காலம் நாங்கள் அம்பலப்படுத்தியிருந்தாலும் அது பெருமளவில் பொது மக்களினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தற்போது அவர்களது அரசியல் வங்குரோத்துத் தனத்தை மக்கள் அறிந்துள்ளனர்.

அந்தவகையில் இம்முறை மக்கள் சரியான பாடத்தைக் கற்பிற்பார்கள். கூட்டமைப்பின் மீதான அதிருப்தி வாக்குகள் ஈ.பி.டி.பிக்கு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. அபிவிருத்தி வேலைவாய்ப்பு அரசியல் உரிமை விடயங்களில் ஈ.பி.டி.பி காத்திரமாக பங்காற்றியிருக்கின்றது. மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

எமது தலைவர் அமைச்சராகவும் மக்களுக்காக சிறந்த சேவையாற்றி வருகின்றார். தமிழ் தேசிய கூட்டமைப்பினால் அவமானப்பட்ட மக்கள் ஏமாற்றப்பட்ட மக்கள் இம்முறை ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு வாக்களிக்கக்கூடிய சந்தர்ப்பம் தான் இருக்கின்றது.

கே: மக்களுக்கு எதைச் சொல்ல விரும்புகின்றீர்கள்?

பதில்: எமது மக்கள் மிகவும் தெளிவானவர்கள். தேர்தலில் அக்கறை இல்லாதவர்கள் போன்று தோன்றினாலும் தேர்தல் தினத்தன்று தமது ஜனநாயக கடமையினை நிறைவேற்றுவார்கள். பாராளுமன்றமாக இருக்கலாம் மாகாண சபையாக இருக்கலாம் அவர்கள் ஏகோபித்து அனுப்பிய பிரதிநிகள் மக்களது எந்தவொரு தேவைகளையும் நிறைவேற்றவில்லை. மாறாக தங்களை தாங்களே வளப்படுத்திக்கொண்டார்கள். தங்களது பிள்ளைகளுக்குப் பதவிகளைப் பெற்றுக்கொண்டார்கள். தங்களுடைய உறவினர்களுக்குப் பதவிகளைப் பெற்றுக்கொண்டார்கள். கோடிக் கணக்கான பணத்தைப் பின்கதவுகளால் பெற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக் காலத்தில் கிடைத்த வாய்ப்புக்களை உதறினார்கள்;. கம்பரெலிய திட்டத்தில் அதிகளவான ஊழல் நடந்துள்ளது. எதிர்காலத்தில் அகராதிகளில் கூட (டிக்செனறி) கம்பரெலிய என்றால் ஊழல் என்ற சொல் வரக்கூடிய வகையில் அந்தச் சொல் மக்கள் மத்தியில் குறிப்பாக வடபகுதி மக்கள் மத்தியில் பதிந்திருக்கின்றது.

அரசியல்வாதிகளால் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள். ஆனால் 1990ஆம் ஆண்டு முதல் ஈ.பி.டி.பி சொல்லி வந்த திட்டங்கள் தான் இன்று நடைமுறைக்குச் சாத்தியமாக இருக்கின்றது. பலர் அதைத் தான் ஏற்றுக்கொள்கின்ற நிலைமையும் காணப்படுவதுடன் பல அரசியல் கட்சிகளும் எமது நிலைக்குத் தான் வந்திருக்கினறன.  இதை ஊடகங்களும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

மக்களின் அன்றாட பிரச்சினை அபிவிருத்தி அரசியல் தீர்வு என எதுவானாலும் செய்து தரக்கூடிய , கடந்த காலத்தில் செய்து காட்டிய,  செய்து தருவதற்கு ஆற்றலும் விருப்பமும் அக்கறைம் உள்ள ஈ.பி.டி.பியையும் , அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவையும் பலப்படுத்துவதற்கு ஊடகங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் மக்களுக்கு எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்பதை உறுதி கூறலாம்.

கே: பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள நிலையில் குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையானவர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகுவதற்கான வாய்ப்புக்கள் ஈ.பி.டி.பிக்கு இருக்கின்றதா?

பதில்: நிச்சயமாக வடமாகாணத்தில் குறிப்பாக 2தேர்தல் மாவட்டத்திலும் இருந்து குறைந்தது 5பாராளுமன்ற உறுப்பினர்கள் எமது கட்சியில் இருந்து தெரிவு செய்யப்படக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. அதிக வாக்குகளைப் பெற்ற கட்சிகள் அந்த மக்களை ஏமாற்றியதன் காரணமாக இம்முறை மக்கள் மிகவும் தெளிவாக வாக்களிக்கக்கூடிய நிலைமை இருக்கின்றது. மாற்றம் தெரிகின்றது. புத்திஜீவிகள் பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்கள் எனப் பலரும் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின்  வழிமுறைதான் சாத்தியமானது என்று ஏற்றுக்கொண்டுள்ளனர்.

சுமித்தி தங்கராசா

Comments